சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
சமீபத்தில் நந்திகிராமில் நடந்த உயிரிழப்புகள் மிக வருந்தத்தக்கது. ஆனால் ஏன் இந்த நிலைக்குச் சென்றது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை என்பதே என் கருத்து. மேவ முதல்வரே நந்திகிராமில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துவிட்டதாக சில அதிகாரிகளையும் குறை சொல்லியிருந்தார். கடைசியில் எப்படி பிரச்சனை கைமீறிப்போனது என்று விளங்கவில்லை. விவசாயிகளின் சிரமங்கள் ஒரு புறம் இருக்க, இடையே அரசியல் இலாபம் பார்க்கும் கூட்டம் குட்டையை குழப்பிவிட்டிருப்பது நிச்சயம்.
நந்திகிராம் நிகழ்ச்சியின் அடிப்படையில், சிபொம சட்டத்தை ஒழிக்கக் கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நாம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டியது அவசியம். சுதந்திர நாடாக இருந்தாலும், பெரும்பான்மை இந்தியா இன்னும் பொருளாதார அடிமையாகத்தான் இருக்கிறது. 3000 ரூபாய் மாத சம்பளத்துடன் உள்ள வேலைக்குக்கூட அடிதடி நடக்கிறது. அந்த வேலைகளும் அதிகம் இல்லை. படித்தவர்களின் நிலையே இப்படி என்றால் படிக்காதவர்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் நிலை என்ன? மக்களை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து மீட்க வேண்டியது அவசரமும் அவசியமுமானது.
70% இந்தியர்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். இது மிக மிக அதிகம். நெல் விலை 10 மடங்காக உயர்ந்தாலே ஒழிய, இன்றைய விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனென்றால் விவசாயத்தில் கிடைக்கும் இலாபமும் கூலியும்(ஆண் 75ரூ, பெண் 50ரூ) அவ்வளவு குறைவு.எப்பொழுதும் ஏழைகளாகவே இருப்பார்கள். விவசாயிகளை மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்தி பெரும்பான்மையான கூலித் தொழிலாளிகள் விவசாயத்தை நம்பி இருப்பதை மாற்ற வேண்டும். அதற்கு உற்பத்தித் துறையில் துரிதமான மற்றும் வெகுவாவான வளர்ச்சிவேண்டும். அதற்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒரு வாய்ப்பு. சீனாவில் ஷென்சென்(Shenzhen) 20 வருடஙக்களுக்கு முன் சிபொம வாக உருவாக்கப் பட்டது. இன்று அசுர வளர்ச்சியடைந்திருப்பதை நேரடியாக பார்க்கும் அணுபவம் எனக்கு கிடைத்தது. சீனா மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உருவக்கியிருக்கும் வேலைவாய்ப்புகளும், உயர் கல்வி வளர்ச்சியும், வறுமை ஒழிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஷென்செனில் குறைந்தபட்ச ஊதியம் இந்திய மதிப்பில் ஏறக்குறைய 7500 ரூபாய். இங்கு மெத்த படித்தவர்களுக்கே அவ்வளவு கிடைப்பது சந்தேகம்தான். சீனாவை விட 30/40 ஆண்டுகள் இந்தியா பின்தங்கி இருக்கிறது.
சிபொம சட்டத்திலும் அதை நடைமுறைப் படுத்துவதிலும் நிறைய குறைபாடுகள் இருக்கலாம் அதற்காக சிபொம சட்டத்தை முற்றாக ஒழிக்கக் கோருபவர்கள், அடிமட்டத்தில் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மக்களுக்கும், படித்துவிட்டு நல்ல வேலைக்காக அலையும் இளைஞர்களுக்கும் முதலில் ஒரு வழி சொல்ல வேண்டும்.
"Imminent Domain" அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்துவது சர்ச்சைக்குறிய விசயம்தான். ஒரு விவசாயி என்ற முறையில், நிச்சயம் அரசாங்க அதிகாரம் எங்கள் நிலத்தை கையகப் படுத்த வந்தால் நானும் எதிர்ப்பேன். அதே நேரத்தில் விவசாயம் இலாபகரமற்ற தொழிலாகிவிட்டது என்பதை மறுப்பது முழுப்ப்பூசனியை சோற்றில் மறைப்பது போல. இலாபகரமான நில மதிப்பையும் மாற்று வாழவழி(Livelyhood)யும், கிடைக்கச்செய்தால் இது எல்லா தரப்பாருக்கும் சுமுகமாக முடியும். உதாரணத்திற்கு சிபொமக்களில் நிலம் கொடுத்தவர்களை பங்காளிகளாக்கிக் கொள்ளலாம் அல்லது, புதிதாக உருவாக்கப் படும் நகரத்தின் முக்கியப் பகுதிகளில், நிலங்கொடுத்தவர்களுக்கு மாற்று நிலம் ஒதுக்கலாம். இதுபோன்று ஒரு "non-zero-sum" திட்டங்களை உருவாக நல்ல அரசியல் தலைமை வேண்டும். அதற்கு இங்கே எப்பொழுதும் பஞ்சம்தானே. அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் கிட்டப் பார்வையுடன் கூடிய "Politically Correct" முடிவுகளையே எடுக்க விரும்புகின்றன.
Status quo is not acceptable. Indians deserve better.
Labels: SEZ Nandigram சிபொம
படித்தவர்களின் கருத்துகள் - 0
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல