ஜேகேவின் சில குறிப்புகள்: மயன் கலாச்சாரம்:ஒரு பார்வை

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, November 09, 2005

மயன் கலாச்சாரம்:ஒரு பார்வை

ஐரோப்பிய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்குத் தப்பிய வட மற்றும் தென் அமெரிக்க பூர்வகுடியினங்கள் வெகு சிலவே. இம்மக்களின் கலாச்சாரமும் வரலாறும் நான்கைந்து நூற்றாண்டுகளில் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் அழிக்கப்பட்டுவிட்டன. பல இனங்களுக்கெதிரான இவ்வன்முறைகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்களோ. அந்த அழிந்துபோன கலாச்சாரத்திற்கு எமது சமர்ப்பனங்கள்.

"த மோட்டார் சைக்கிள் டையரி" எனும் படத்தில் "மயன்" அமெரிக்கப் பூர்வகுடியினரின் அழிந்துபோன பிரம்மாண்டமான நகரங்களையும் பெரும் பெரும் கட்டிடங்களையும் கண்பிப்பார்கள். மயன் இனத்தவரைப்பற்றி பின் நான் படித்த மேலதிகத் தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாதிமாலா, ஹூந்துராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கிமு 2600 வாக்கில் மயன் நாகரிகம் தோன்றியது. மயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மயன்இனத்தவரின் சிறப்பாகும். 150AD வாக்கில் மயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது.ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில்சுமார் 6 இலட்சம் மயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்திமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

மயன் கணிதம்

20 அடிமான எண் முறையை மயன்கள் பயன்படுத்தினர். மயன்களின் கணிதத்திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையை கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

கீழ்க்காணும் படத்தில் மயன் குறியீட்டு முறையில் எண்களைக் காணலாம்.



பெரிய எண்களைக் குறிப்பிடும் முறை



கூட்டல் முறை


மயன் கட்டிடக் கலை

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக் கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மயன் காலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.



மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுனுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.

மயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்ப்டுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சட்ங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மயன் நம்பிக்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மயன்கள் பல்வேறு வினோதமான மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர். இச் சடங்கின் போது அரசன் தன் ஆண்குறியை கீறி அதில் வரும் இரத்தத்தை எடுத்து கூடியிருக்கும் மக்களிடம் காணிபித்து பின் கடவுளிடம் பேசி அதன் அலோசனையை மக்களிடம் கூறுவானாம். அதன் பின் அவனது அடிமைகளில் ஒருவரை பலியிடுவார்களாம். அந்த அடிமைகள் பெரும்பாலும் போரில் தோற்ற அண்டை நாட்டு அரசர்களாக இருப்பார்களாம்.

இலக்கியம்/நூல்கள்
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகதிபத்தியத்துடன் வந்த அடிப்படை வாத கிருத்துவர்கள் பல மயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

கோடெக்ஸ் என்ற மயன் நூலில் இருந்து ஒரு பக்கம்


வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல் பூண்டில்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அருதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த் அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் நிலை நம்மூர் பழங்குடியினரைப் போலத்தானாம்.

மயனும் தமிழரும்
மயன் காலாச்சரத்தைப் பற்றி அறியத்தொடங்கிய போது இரு விசயங்கள் என்னைப் பாதித்தன. இவ்வளவு சிறந்து விளங்கிய கலாச்சாரம் ஏன் அழிந்து போனது என்ற கேள்வி அவற்றில் ஒன்று. "மெல்லத் தமிழினிச் சாகும்" என பாரதி வரிகளில் நம் காலாச்சார மொழி மார்டாலிட்டியை அடிக்கடி விவாதிக்கிறோம். அதற்கு ஒரு பாடப்புத்தக கேஸ் போல ஒரு மிகப் பெரிய வளர்ந்த கலாச்சாரமும் அதன் அழிவும் அது தரும் பாடங்களும். மயன் காலாச்சாரத்தின் அழிவிற்கான காரணங்களாகக் கருதப்படும் விசயங்களைப் படிதீர்களானால் தமிழ் அல்லது இந்தியக் கலாச்சாரங்கள் மனதிற்கு வருவதை தடுக்க முடியாது. இரண்டாவது விசயம், இவ்வளவு பெரிய கலாச்சாரத்தைப் பற்றி நான் இவ்வளவு காலம் அறியாமல் இருந்திருந்ததே. "மயன்" என்ற பெயரையே வெகு சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். நம் பள்ளி வரலாற்று பாடத்தில் இதைப்பற்றி ஒரு வரி இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சியையும் பிரஞ்சுப் புரட்சியையும் உலக வரலாற்றில் படிக்கச் சொன்னவர்கள் ஏன் மயன் கலாச்சாரங்களையெல்லாம் பாடத்திட்டதில் வைக்கவில்லை என்று எனக்குத் தெரியவும் புரியவும் இல்லை.

இந்தப் பதிவில் காணும் படங்கள், கீழ்க்காணும் இனைய தளங்களில் இருந்து காண்பிக்கப் படுகின்றன. படங்களின் காப்புரிமைகள் இத்தளங்களில் குறிப்பிட்ட படியே.
1) http://www.hanksville.org/yucatan/toc.html
2) http://www.snowcrest.net/goehring/maya/
3) http://www.spanishome.com/activities/mayas/1.htm

தகவல்களுக்காக

http://www.civilization.ca/civil/maya/mminteng.html என்ற தளத்தையும் மேலும் சிலவற்றையும் பயன்படுதினேன்.

படித்தவர்களின் கருத்துகள் - 6

At Sun Nov 20, 11:18:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

பதிவை முழுமையாக முடிக்கும் முன்னரே , சேமித்து வைப்பதற்காக ctrl+s ஐ தட்ட, ப்ளாக்கர் பதிந்துவிட்டது.

விடுபட்ட மற்றும் முடியாத பகுதிகளை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.

மன்னிக்கவும்

 
At Mon Nov 21, 06:13:00 AM GMT-6, Blogger குசும்பன் சொன்னது

தகவலுக்கு நன்றி JK!

//பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். //

அப்ப பூஜ்யத்தை நம்ம கண்டுபிடிக்கலியா? எவ்ளோ பெருமையா இவ்வளவு நாளா சொல்லிட்டு வந்தேனே :-) ஒரு வேளை அரேபியர்கள் நம்ம கிட்ட இருந்து சுட்டுட்டுப் போயி அவா பேரிலே பேடண்ட் போட்டுட்டாளா?

 
At Mon Nov 21, 10:05:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

//சுட்டுட்டுப் போயி அவா பேரிலே பேடண்ட் போட்டுட்டாளா?//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி குசும்பரே.

 
At Sat Mar 03, 12:29:00 AM GMT-6, Blogger supersubra சொன்னது

மயன் கட்டிடக்கலை பற்றி என்னுடைய ஊகத்தகவல். மகாபாரதத்தில் இந்திரப்ரஸ்தா என்னும் இடத்தில் கட்டப்பட்ட மாளிகை மயன் மாளிகை என்று குறிப்பிடப்படுவதாக என் நினைவு. மேலும் அது பாதாள உலகத்தை சேந்த விஸ்வகர்மா என்னும் கட்டிடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது என்பார்கள். இன்றும் தமிழரிடையே விஸ்வகர்மா என்று ஒரு இனம் அறியப்படுகிறது. பாதாள உலகம் என்பதை நேர் கீழே உள்ள உலகம் என்று கருத்து கொண்டால் இந்தியாவுக்கு பெரும்பாலும் நேர் கீழில் மெக்ஸிகோ (சுமார் 180 டிகிரி கீழே) வரும். இது பற்றி மற்ற தகவல் தெரிந்தவர்கள் சொல்ல்லாம்

 
At Mon Mar 26, 12:05:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சூப்பர்சுப்ரா,

கருத்துக்கு நன்றி.

மகாபாரத்துக்கும் மயன் கலாச்சாரத்துக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

 
At Sun Apr 01, 10:42:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

தகவல்களுக்கு நன்றி. சமீபத்தில் மயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு மாநாடு நடைபெற்றது.

அன்புடன்
ச.திருமலை

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல