ஜேகேவின் சில குறிப்புகள்: புயலுக்குப் பின் கொரியாலிஸ் விசை.

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, October 03, 2005

புயலுக்குப் பின் கொரியாலிஸ் விசை.

பொறியியலில் "எந்திரங்கள்" பற்றிய பாடத்தில், பல புரியாத விசைகளையும், இணைகளையும்(Couple) பற்றி படித்தேன். மேல் நிலை வகுப்பு இயற்பியலில் படித்திருக்க வேண்டியதேயானாலும், புரிந்துகொள்ளாமல் கடம் அடித்ததில் அவை +2 முடித்தவுடன் மறந்து போயிருந்தன. கல்லூரியிலாவது புரிந்துகொள்ளலாம் என்றால், அங்கே வெறும் கடினமான கணக்குகளாகக் கொடுத்து விரிவுரைத்தார்கள் பேராசிரியர்கள். ஏதோ ஒரு மதிரி புரிந்தும் புரியாமலும் ஒப்பேத்திவிட்டேன். இப்ப, யாரோ சொன்ன மாதிரி,
"கொட்டிக் கொடுக்கிறார்கள் என்று கோடடிக்க" வந்து விட்டதால், கல்லூரியில் புரிந்தவையும் புரியாதவையும் பெரிய பாதிப்புகளை
ஏற்படுத்தவில்லை.

அப்படி அரை குறையாகப் படித்தவற்றில் ஒன்றுதான் கொரியாலிஸ்(Coriolis) விசை/விளைவு. ஸ்லாட்டர் எந்திரத்தில் பயன்படுத்தப் படும் எந்திர வினை முறையில்(mechanism) கொரியாலிஸ் விளைவு இருக்கும். அந்த எழவு விளைவின் அளவையும், திசையையும் சரியானபடி கணக்கிட்டுச் சொல்வதற்குள் மண்டை குழம்பிவிடும்.

நீங்கள் கூட பள்ளியிலோ, கல்லூரியிலோ, வானிலை அறிக்கையிலோ கொரியாலிஸைப் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். நானும் அப்படித்தான், சமிபத்தில் அடித்த புயல்களைப் பற்றிய அறிக்கைகளைப் படிக்கும் போது "கொரியாலிஸ்" வந்து மீண்டும் முகத்தில் "அறைந்தது". இம்முறை அதை எப்படியாவது புரிந்துகொள்வது என்று இனையத்தில் தோண்டினேன்.

-----

ஒரு சுழலும் அமைப்பில் இருந்துகொண்டு, அதைச்சார்ந்து நகரும் ஒரு உள்ளமைப்பு கொரியாலிஸ் விளைவால் பாதிக்கப்படும். நாம் தினசரி
வாழ்க்கையில் இதை பல இடங்களில் அவதானிக்கலாம். புயலில் கொரியாலிஸ் விசையின் பாதிப்பு ஒரு பிரபலமான உதாரணம். அது எப்படி
என்பதை பின்னால் காண்போம். அதற்கு முன் கொரியாலிசைப் பற்றி இன்னும் ஓரிரு வரிகள்.

ஆற்றால் மாறா விதி போல(அல்லது அதைச் சார்ந்து), சுழல் உந்தம் மாறா விதி ஒன்றும் உள்ளது. சுழலும் நாற்காலியில் இருந்துகொண்டு கையை
விரித்தால் நாற்காலி மெதுவாகச் சுற்றும்; கைகளை திரும்ப உடம்போடு சேர்த்துக் கொண்டால் நாற்காலி மீண்டும் வேகமாகச் சுற்றும். சுழல்
உந்த மாறாமையால்தான் இவ்வாறு வேகம் அதிகரிக்கவும் குறையவும் செய்கிறது. அதே சுழல் உந்த மாறாமைதான் கொரியாலிஸ் விளைவுக்கும் காரணம்.

பூமியின் வட துருவத்திலோ, தென் துருவத்திலோ இருக்கும் ஒரு பொருள், நில நடுக்கோட்டில் இருக்கும் ஒரு பொருளைவிடக் குறைந்த சுழல்
உந்தம் பெற்றிருக்கும். வட துருவத்திலிருக்கும் அப்பொருள், சரியாக தெற்கு நோக்கி நகர்வதாகக் கொள்ளுங்கள். அப்பொருளின் ஆரம்பச் சுழல்
உந்தம், புது இடத்தில் உள்ள மற்றொரு பொருளினுடையதை விடக் குறைவாக இருக்கும். எனவே அதைச் சமன் செய்ய, பூமியைவிட அது சற்று
மெதுவாகச் சுற்ற வேண்டும். இதனால், அதன் தெற்கு நோக்கிய நேர்ப்பாதையிலிருந்து சற்று வலது பக்கமாக விலகும்(பூமியின் தென் பாகத்தில் இடது
பக்கமாய் விலகும்). இதுதான் கொரியாலிஸ் விளைவு.

சரி, இதில் புயல் எங்கே வருகிறது?

சூடான கடல் காற்று மேலெழும்புவதால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படுகிறது, இல்லையா. அதைச் சுற்றிலும் உள்ள காற்று, தாழ்வு
மண்டலத்தை நோக்கி வேகமாக நகரும். அப்போது கொரியாலிசால் வலதுபுறமாக(பூமியின் தென் பாகத்தில் இடதுபுறமாக) விலகிச் செல்லும்.
இப்படி ஒவ்வொரு திசையிலிருந்து இருந்து வரும் காற்றும் வலது பக்கம் விலகிச்செல்வதால், அவை காற்றழுத்தத் தாழ்வுமண்டலத்தைச் சுற்றி சுழல ஆரம்பிக்கும்.
அப்புறம் இயற்பியலின் மற்ற விசைகளும்(மையவிலக்கு/நோக்கு) படத்திற்குள் வரும். இப்படித்தான் புயல் கொஞ்சம் கொஞ்சமாக முழு உருவம் பெறுகிறது.

நீங்கள் புயலின் சுழல் திசையை அவாதானித்தீர்களானால், பூமியின் வட பாகத்தில் உருவாகுபவை எப்போதும் கடிகாரத்திற்கு எதிர் திசையிலும்
தென் பாகத்தில் உருவாகுபவை கடிகாரத்தின் திசையிலும் சுழல்வதை காணலாம். இதற்கு காரணம் கொரியாலிஸ் விளைவுதான் (கொரியாலிஸ் சுழல்
திசையைத்தான் தீர்மானிக்கிறது. புயலையே அல்ல).

புயலைத்தவிர இன்னும் பல நேரங்களில் கொரியாலிஸ் அதன் விளையாட்டை காட்டும். அடுப்படியில் உள்ள சிங்க்கில்(sink) / குளியலறையில்
ஏற்படும் நீர்ச் சுழலின் திசை சில நேரங்களில் கொரியாலிசால் தீர்மானிக்கப் படலாம். கொரியாலிசால் ஆறுகளில் ஒரு கரை மட்டும் அதிக
தேய்மானத்திற்கு உட்படலாம். அதுபோல இரயில் பாதைகளில் ஒரு தண்டவாளம் மற்றதை விட சீக்கிரமாய் தேயலாம். (இவ்வமைப்புகள் எல்லாம்
பல்வேறு விதமான விசைகள், காரணிகளால் பாதிக்கப்படும். அவற்றில் கொரியாலிசும் ஒன்று. மற்ற விசைகள், காரணிகள் ஓங்கலாய் இருக்கும்
பட்சத்தில் கொரியாலிசின் பாச்சா எடுபடாது.)

கடைசியாக...பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Russel) சொல்வது போல, இந்த "உபயோகமற்ற அறிவைப்(useless knowledge*)" பெற்றவுடன் என் கை துரு துருவென்றது. உடனே
அடுப்படியில் உள்ள சின்க்கில்(sink) நீர் நிரப்பி, அலைகளெல்லாம் அடங்கிய பின், மேலும் அலைகளெழுப்பாமல் அதைத் திறந்து விட்டேன். நான்
எதிர்பார்த்தது போல கடிகாரத்தின் எதிர் திசையில் சுழலும் நீர்ச்சுழல் ஏற்பட்டது. மனதுக்குள் குதூகலம். அந்த புத்துணர்ச்சியில் மீண்டும்
கொரியாலிசைப் பத்தி படிக்க ஆரம்பித்தேன். அப்படி படித்ததில் ஒரு கட்டுரை என் புத்துணர்ச்சியில் மண்வாரியிறைத்து விட்டது. பெரும்பாலான
நேரங்களில் சிங்க்கில் ஏற்படும் நீர்ச்சுழல், கொரியாலிசால் இருக்காதாம். எனெனில் மிக வேகமாக, வெகுதூரம் நகரும் பொருட்களில்
தான் கொரியாலிசை அவதானிக்க முடியுமாம். சிங்கில் சாதாரணமாக ஏற்படும் நீர்ச்சுழலின் சுழல் திசை, சிங்குடைய வடிவமைப்பு மற்றும்
நீரோட்டத்தின் ஆரம்ப திசை இவற்றால்தான் தீர்மானிக்கப் படுகிறதாம்.

அது போவுது போங்க, சிங்கில் நீர் நிரப்பி விளையாட காசா பணமா? தண்ணி நான் நெனச்சமாதிரி சுத்தனதில எனக்கு ஒரு சந்தோசமே.
தென் துருவப் பகுதியில் இருக்கும் யாராவது இதுபோல சின்க்கிள் நீர் நிரப்பி சோதனை செய்து, நீர்ச்சுழல் கடிகார திசையில் இருந்ததென்று
சொன்னால் சந்த்தோசம் இரட்டிப்பாகும்.

இயற்பியல் புலிகளே, நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்
ஜேகே

பிகு.
* Chap 2 in "In Praise Of Idleness" of Bertrand Russel

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Sat Oct 08, 10:16:00 AM GMT-6, Blogger Sudhakar Kasturi சொன்னது

ஜேகே,
முதலில் என் பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றுதான் என் நண்பரொருவருடன் "வலைப்பதிவுகளில் அறிவியல் குறித்து எழுதப்படும் கட்டுரைகளில் அறிவியல் இருப்பதில்லை வெறும் ஜனரஞ்சகம் மட்டுமே மேலோங்கியிருக்கிறது" எனப் புலம்பினேன்.
ஆறுதலாக இந்தக் கோரியாலிஸ் கட்டுரை. ( கோரியாலி என்று சொல்லவேண்டுமோ?)
சிங்க்கில் இருக்கும் நீரின் சுழல் பலகாரணங்களால் பாதிக்கப்படுகிறது. அறையின் காற்றழுத்தம், தட்பவெப்பநிலை கூட ஒரு சுழலை நீரின் மேற்பரப்பில் ஏற்படுத்த முடியும். எதுக்கும் இந்தியாவில் செய்து பாருங்கள் - நிலநடுக்கோட்டினருகே சுழல் எப்படி மாறுகிறது எனப் பார்க்கலாம். தண்ணி இல்லா நேரத்தில இப்படி வீணாக்குகிறீர்களே? விளையாட்டா?
அன்புடன்
க.சுதாகர்

 
At Sat Oct 08, 10:25:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

நன்றி சுதாகர்.
கொரியாலிசா? இல்லை கோரியாலியா?
எனக்கும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் பல்கலைக்கலகத்தின் தமிழ் கலைச்சொல்லகராதியில் இதற்கான இணைச் சொல் இல்லை. எனவே உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதினேன்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல