3500 அடி உயரத்திலிருந்து குதித்தால்....எப்டியிருக்கும்
"யாராவது ஒழுங்காக பறக்கும் விமானத்திலிருந்து குதிப்பார்களா? நீ ஒரு பயித்திய கேசாய் இருக்க வேண்டும்" என்றார் நண்பர் ஒருவர். இவ்விதம் அவர் கேட்குமுன்னர் அவரிடம் நான் "நாளைக்கு ஸ்கை டைவிங்(Skydiving) செய்யப்போறேன்" என்று கூறியிருந்தேன்.
அதற்கப்புறம் யோசித்துப் பார்த்தால் எனக்கும் அதே கேள்விதான் தோன்றியது. ஆனால் பதில் மட்டும் ரெண்டுங்கெட்டானாய் வந்தது. ரொம்ப நேரம் மண்டையப் போட்டு உடைத்ததில், கடைசியாய் என்னதான் ஆகிவிடபோகிறது, குதித்துதான் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
வானத்திலிருந்து குதிப்பது என்றால் உங்களுக்கெல்லாம் புரியாமலிருக்கப் போவது இல்லை. இருந்தாலும் நம்முடைய "பட்ட" அறிவை காண்பிப்பதற்காக....அதப்பத்தி ஒரு வரி...பாராச்சூட்(Parachute) கட்டிக்கொண்டு வெகு உயரத்தில் பறக்கும் விமாணத்திலிருந்து குதிப்பது நவீன காலத்தில் ஒரு விளையாட்டாகிவிட்டது. உண்மையிலதாங்க, அது ஒரு சாகச விளையாட்டு (Adventure Sport க்கு இது சரியான மொழி பெயர்ப்பா?).
"ஆ ஆ ன்னு சும்மா பறக்காதடா" என்று பெற்றவர்களும் மற்றவர்களும் அவ்வப்போது என்னை கண்டிப்பதுண்டு. அதனாலோ என்னவோ எனக்கு பறக்கறது மற்றும் அது சம்பந்தப்பட்ட விசயங்கள் மேல எப்போதும் ஒரு ஆர்வம்.
வான்குதியல் பத்தி கேள்விப்பட்ட உடனே நாமலும் அத செய்துடனும்னு ஒர் அடக்கமுடியாத ஆவள் ஏற்பட்டது. எங்க ஊர்லேருந்து ஒரு மணி நேர தூரத்தில் உள்ள ஒரு வான்குதியல் இடத்துக்கு நேற்று நானும் என் நண்பரும் சென்றோம். மொத மொத குதிக்கிறவங்க ரெண்டு வகையில குதிக்கலாம். கொஞ்சம் பயம் அதிகமா இருக்கிறவங்க டாந்தம்(Tandem) முறையில் குதிப்பார்கள். இன்னொருமுறை "நிலை கயிறு" (Static Line). டாந்தம் முறையில், ஒரு அனுபவமிக்க குதிப்பர், கத்துக்குட்டி குதிப்பரை தன்னுடன் கட்டிக்கொண்டு 12000 அடி உயரத்தில் இருந்து குதிப்பார். ஒரு 35லிருந்து 50 விணாடிகளுக்கு ஈர்ப்பு விசையால் மட்டும் (Freefall) விழலாம் அப்பறம் ஒரு 5 நிமிஷத்துக்கு
பாராசூட்டில் இறங்கலாம். நிலை கயிறு முறையில், கத்துக்குட்டி 3500 அடியில் இருந்து தனியாக குதிப்பார். அவருடைய பாரச்சூட்டில் இருந்து ஒரு நிலை கயிறு விமாணத்தில் இணைக்கப்பட்டிருக்கும். குதிப்பர் ஒரு 200 அடி விழுந்தவுடன், நிலை கயிறு அறுபட்டு பாராச்சூட்டை விரித்துவிடும். பின்னர் அவர் பாராச்சூட்டை தரை இறங்குமிடத்துக்கு வழிநடத்தி சென்று அங்கு இறங்கவேண்டும்.
நானும் நண்பரும், நிலை கயிறு முறையில் குதிக்க முடிவு செய்தோம். நிலை கயிறு முறையில் முதன் முதலாய் குதிப்பவர்கள் ஆறு மணி நேரம் தியரி மற்றும் simulated செய்முறை வகுப்பு செல்லவேண்டும். ஆரம்பத்திலேயே, "வான்குதியல் மிக ஆபத்தானது, கை கால் உடையலாம், கோமாவிற்கு போகலாம், நரகத்திற்கு போகலாம், சொர்க்கத்திற்கு போகலாம்" என்றெல்லாம் பயமுறுத்தும் கொட்டை எழுத்தில் எழுதி "அப்படியெல்லாம் நடந்தால் அதற்கு நாங்கள் பொருப்பல்ல" என்று எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். அடிமனதில் பீதியும்,
அடிவயிற்றில் கலக்கலும் லேசாக ஏற்பட்டது. அதை ரொம்ப வெளிக்காட்டிக் கொள்ளாமல் வகுப்பிற்கு சென்றோம். அங்கே சாதாரணமாய் குதிப்பதை பற்றி 10%ம் ஆபத்தான நிலைமைகளைப்பற்றி மீதமும் சொல்லி மார்டாலிட்டியை
ஓயாமல் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். எனக்கு எப்படா குதிப்போம் என்றாகிவிட்டது. ஒரு வழியாக கடைசியில் பாராச்சூட்டை முதுகில் கட்டிவிட்டு விமாணத்தில் ஏற்றிவிட்டார்கள்.
அந்த, வான்குதியலுக்காக மாற்றப்பட்ட செஸ்னா 182 ரக, விமானத்தில் தளத்தை இரண்டு சுத்து சுத்தி 3500 அடி உயரத்தை அடைந்தவுடன், முதலில் என் நண்பர் குதித்தார். அவருடைய பாராச்சூட் ஒழுங்காக விரிந்தது என்பதை கேட்டவுடன் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தது என் முறை. கதவைத்திறந்தவுடன் சில்லென்று முகத்திலடித்த காற்று அற்புதமாக இருந்தாலும், என் அடிமனது பீதியை சற்று அதிகப்படுத்தியது. நான் குனிந்து தறையை பார்க்கவே இல்லை. விமான இறக்கையை தாங்கும் சாய்ந்த கம்பத்தில் தொங்கி, அப்புறம் கையை விட்டுக் குதிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அந்த கம்பத்தில் தொங்க ஆரம்பித்த போது, 80மைல் வேகத்தில் அடிக்கும் காற்றின் விசை என் மனதையும் உடலையும் சற்று நிலை குலைய செய்தது. சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அப்பறம் கையைவிட்டேன்....
கையை விட்டவுடன், ஒரு ஐந்து விணாடிகள் கழித்து, (நீள்)சதுர வடிவ மெயின் பாராச்சூட் விரிந்ததா என்று பார்க்கவேண்டும். இல்லையென்றால், ரிசர்வ் பாராச்சூட்டிற்கான பிடியை இழுத்துவிட வேண்டும். ஆனால் முதல் ஐந்து
விணாடிகளில் எனக்கு சுய பிரக்ஞை இருந்ததாக ஞாபகம் இல்லை. திடீரென்று நான் அன்னார்ந்து பார்த்தபோது பாராச்சூட் விரிந்துகொண்டிருந்தது. கொஞ்சம் நிம்மதியாகவும், விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்பறம் ஓரிரு நிமிடங்கள் பாராச்சூட்டை நடத்திக்கொண்டு தரையிறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தேன். தரையிறங்கியது எதிர்பார்த்ததைவிட மெதுவாகத்தான் இருந்தது. கிழே விழாமல், தரையில் கால் பாவித்தவுடன் இரண்டடி ஓடி நின்றுவிட்டேன்.
அடுத்து எப்பொ குதிக்கறது என்பது தான் இப்போ என் மனதில் ஒடும் ஒரே யோசனை. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் வான்குதித்து பார்க்கவேண்டும். அந்த அனுபவத்தை நிச்சயமாக முழுமையாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஜேகே
படித்தவர்களின் கருத்துகள் - 3
அனைவரும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டியது! முதல் முறையே 'டாண்டெம்' எல்லாம் செய்து பார்க்காமல்... கலக்குங்க!!!
பாலா சார்,
டாண்டெமில் குதித்து அப்றம் "நிலை கயிறு" வைத்து குதிக்க பட்ஜெட் எகிறியிருக்கும்...அதுவொறு காரணம்.
வந்து, வாசித்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நண்றி!
Rombathan thunichal! ratnathula 4 sutha vanthala vairu kalangudu...., கலக்குங்க!!!
Neengal sathika pirandavar :)
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல