புவி சூடாதல் 2: வெங்காயம் / வெங்காயத் தோல் / பகுத்தறிவு
'Ignorance is bliss'. எவ்வளவு மெய்யான கூற்று. கார், மோட்டார் சைக்கிள் போன்ற பிரத்யோக வாகனங்களின் மீது பெரும்பாலானோருக்கு ஆசையிருக்கும். எனக்கும்தான். இந்தியாவில் இருக்கும் பொழுது ஸ்ப்லெண்டர் வாங்கியபோதும் வெளிநாடு சென்றபோது கார் வாங்கியபோதும் அதீத மகிழ்ச்சி. பின்விளைவுகளை பற்றி அறிந்திருக்கவில்லை. அதனால் எந்த கவலைக்கும் இடமில்லை. பின்
புவி சூடாதலைப்பற்றி படித்துக்கொண்டிருக்கும் பொழுது தோராயமாக கணக்கிட்டு பார்த்தேன். இதுவரை ஏறக்குறைய 30000 மைல்கள் காரிலும்
15000 கிமீ மோட்டார் சைக்கிளிலும் பயனித்திருப்பேன். ஏழு ஆண்டுகளில் மொத்த கரியமில வெளியீடு ஏறக்குறைய 11808 கிலோ.
இதே போல உலகத்தில் இருக்கும் அனைவரும் கரியமிலத்தை வெளியிட்டால் இந்நேரத்திற்கு உலகம் வீனசாயிறுக்கும் என்று நினனக்கிறேன். என்னைப் போன்றோர்கள் வங்கியில் இருந்து காசை மட்டுமல்ல ஏழைகளிடம் இருந்து காற்றையும் கடன்வாங்கித்தான் கார்/மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறோம் என்று உணரும்பொழுதெல்லாம் உள்மனது குத்திக்கொண்டே இருக்கிறது. Selfish Gene says "I wish you have not poked your itchy nose into this GW stuff"
சொந்தக்கதை ஒருபுறம் இருக்கட்டும். பதிவின் தலைப்பைப் பற்றி ஒருவரி. 12000 கிமி விட்டமுள்ள பூமியின் வளிமண்டலம் 100 கிமி தடிமனானது என்றால் அதற்கென்ன என்றுதான் எல்லோரும் கேட்போம். அது எவ்வளவு fragile ஆனது என்று உடன் கண்முன் வருவதில்லை. உலகம் வெங்காயம் என்றால் வெங்காயத் தோல்தான் வளிமண்டலம். அந்த வெங்காயத் தோல்தான் 50 கோடி ஆண்டுகளாக உலகில் உயிரினங்கள் இருப்பதற்கான மிக மிக மிக மிக மிக அடிப்படையான காரணி. அதைத்தான் கடந்த வெறும் 150 ஆண்டுகளில் அதிவேகமாக மனித இனம் சீர்குழைத்து வருகிறது.
பூமியில் மனிதர்கள் தோன்றி இலட்சத்திற்கும் மேலான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கடந்த 10000 ஆண்டுகளாகத்தான் தொடர்ச்சியாக
முன்னேற்றமடைந்து வருகிறோம். ஒரு முரணாகத்தோன்றினாலும் அதற்கு காரணமும் கரியமிலம் போன்ற பைங்குடில் வாயுக்கள்தான். பல
மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உறைபனிக் காலமும்(Ice Age) - வெதுப்பான காலமும்(warm periods) மாறி மாறி நிகழ்ந்து வந்திருக்கின்றன. இது மிலன்கோவிச் சைக்கிள் எனும் தேற்றத்தால் விளக்கப்படுகிறது. அதீத குளிரினால் மனித இனம் அதிகம் முன்னேற்றம் அடைய முடியவில்லை. மிலன்கோவிச் சுழற்சியின்படி சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் வரவேண்டியிருந்த உறைபனிக் காலம் வரவில்லை. அதற்கு காரணமாக இந்த கரியமிலம்தான் கூறப்படுகிறது. அதிக அளவில் ஏற்பட்ட கரியமிலத்தினால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகமாகவிருந்து உறைபனிக்காலத்தை தவிர்த்துவிட்டது. வெதுப்பான தட்பவெப்பநிலை மனிதர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட நாகரிகங்களின் வளர்ச்சியின் உச்சியில்தான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எல்லா உயிர்களின் இயக்கத்திற்கு மூலமான ஆற்றல் சூரியனிடமிருந்துதான் வருகின்றது. பச்சையங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு உணவையும்
விறகுகளையும் படைக்கின்றன. அவற்றைக் கொண்டுதான் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இயங்குகின்றன. சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் ஆற்றலுக்கான தேவை விறகுகளைத் தாண்டி அதிகரித்த பொழுது "வெளிச்சப் புதையல்(burried sunshine)" வெளியே வந்தது. 500 மில்லியன் ஆண்டுகளாக சூரிய ஆற்றலைத் தன்னுள் தேக்கிக் கொண்டு மண்ணுல் புதையுண்ட மரங்களும் கடலுயிரிகளும் நிலக்கரியாகவும் கச்சா எண்ணையாகவும் வெளிவந்து மனிதர்களின் ஆற்றல் தாகத்தை தீர்க்க முயல்கின்றன.
தனி ஒரு மனிதனின் ஆற்றலுக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே வெளையில் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 1986ம் ஆண்டு இதில் ஒரு முக்கியமானது. அந்த ஆண்டில்தான் மனித இனத்தின் மொத்த ஆற்றல் தேவை சூரியனில் இருந்து இயல்பாக கிடைக்கும் ஆற்றலை விட அதிகமானது. இன்றையளவில் நாம் கிடைப்பதைவிட 20 சதவீதம் அதிகம் உட்கொள்கிறோம். இந்த பற்றாக்குறையை சமன் செய்வது வெளிச்சப் புதையலான கரிம எரிபொருட்கள்தான். இது ஒருபுறமிருக்க, இப்போதைய அவசர பிரச்சனை என்னவென்றால் வெளிச்சப் புதையலுடன் வெளிவரும் கரியமிலம்தான். கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் ஆற்றல் பயன்பாடு ஏறக்குறைய 224 பில்லியன் டன்கள் கரியமிலத்தை வளியில் சேர்த்திருக்கிறது. உலக மக்கள்தொகை இன்னும் 50 ஆண்டுகளில் 9.5 பில்லியன்களாகும். மக்களின் நிலக்கரி/பெட்ரோலிய பயன்பாடும் அதிகரிக்குமாயின் கரியமில வெளியீடு பலமடங்காக உயரும். அளவிற்கு மீரினால் அமிழ்தும் நஞ்சு போல வளியில் கரியமிலத்தின் பங்கு மிக அதிகமாக இருப்பதால் அடுத்த 100 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1.1 லிருந்து 6.4°C வரை அதிகரிக்கலாம். இது மிக சிறிய மாற்றமாகத் தோன்றலாம். ஆனால் இதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாமென்றும் உயிரினங்களின் மொத்த அழிவிற்கே வழிகோளலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
வெங்காயம்+வெங்காய தோல்+மனிதன் = வெங்காய சாம்பாராகிவிடுமோ?
(தொடரும்)
Labels: சூழல், புவி சூடாதல்
படித்தவர்களின் கருத்துகள் - 0
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல