ஜேகேவின் சில குறிப்புகள்: புவி சூடாதல்: பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, September 14, 2007

புவி சூடாதல்: பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும்

பீகார், அசாம், வங்காளதேசம், கானா, உகாண்டா, ஓக்ளஹோமா, பிரிட்டன் ... இந்த பகுதிகள் எல்லாம் சமீபத்தில் ஒரே காரணத்திற்காக ஊடகங்களில் அடிபட்டன. அது "வெள்ளப் பெருக்கம்".

கூகுள் செய்திகளில் "flooding" ஐ தேடிப்பாருங்கள். வட இந்தியாவில் 35 இலட்சம் பேர் வெள்ளப்பெருக்கால் இடம் பெயர்ந்தனர். இலண்டனில் மக்கள் வெள்ளத்தால் கடுப்பு, நியுயார்க்கில் மக்கள் வெள்ளத்தால் எரிச்சல். வங்க தேசத்தில் 1000பேர் வெள்ளத்தில் உயிர் இழந்தனர். இதுபோல பல செய்திகள். தினசரி இதுபோல செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது. பலருள் தானாக எழும் கேள்வி இவை புவி சூடாதலால்(குளோபல் வார்மிங்) ஏற்படும் தட்பநிலை மாற்றங்களின்(Climate Change) விளைவுகளா என்பதே. புவி சூடாகுதல் மேநாடுகளில் ஒரு சூடான விவகாரம். இந்தியாவிலோ, தமிழ் தேசங்களிலோ இன்னும் இது தலைப்புச்செய்தியாகவில்லை. வெகு நாட்களாக இதைப்பற்றி விரிவாக எழுது நினைத்திருந்தேன். சமீபத்திய தொடர் வெள்ளங்கள் அதற்கான மற்றுமொரு உந்துதலைத் தருகின்றன.

புவி சூடாதல் பற்றி இனையத்தில்(பெரும்பாலும் ஆங்கிலத்தில்) மிக எளிமையானதிலிருந்து மிக தெளிவானது வரை என்னற்ற கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன. ஆனால் தமிழகத்தையும் இந்தியாவையும் மைய்யமாகக் கொண்ட தகவல்களோ, கட்டுரைகளோ விவாதங்களோ அதிகம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கட்டுரையின் நோக்கம் புவி சூடாதல் பற்றி இந்திய அரசியல்/அறிவியல்/சமூக/பொருளாதார நிலைப்பாடுகளைப்பற்றி ஒரு சில கருத்துகளை முன்வைப்பதே.

அதற்கு முன் ஒரு புவி சூடாதலைப் பற்றி ஓரு எளிமையான அறிமுகம்

பைங்குடில் விளைவு (Green House Effect) : குளிர் பிரதேசங்களில் விவசாயம் செய்ய பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பே பைங்குடில். இதன் கூறை கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்யப்பட்டிருக்கும். இந்த கூறையின் மற்றொரு பயன்பாடு, இதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியே விடாமல் தடுப்பது. இதனால் வெளியில் வெகுவாகு குளிரடித்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம். இதுபோன்று சூரிய சக்தியை தடுத்து வெப்பநிலையை அதிகரிப்பதை பைங்குடில் விளைவு என்பர்.

வளி மண்டலம்: சுமார் 12500கிமீ விட்டமுள்ள புவியைச் சுற்றி மென்மையாக படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 100 கிமீ(அதிலும் சுவாசிக்க்கத் தகுந்த வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 7-8 கிமீயே). இந்த வளிமண்டலத்தில் பெரும்பான்மையாக இருப்பது நைட்ரஜன்(78%), ஆக்சிஜன்(20%), நீராவி(0 to 3%), கரியமிலம்(0.038%) மற்றும் இதர வாயுக்கள். இவற்றில் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி தன்வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்ட வாயுக்கள் பைங்குடில் வாயுக்கள்(Greenhouse Gas) எனப்படும். கரியமிலம்(அல்லது கார்பன் டை ஆக்சைடு அல்லது CO2) மீத்தேன்,ஈத்தேன், நீராவி போன்றவற்றிற்கு இத்தன்மை உண்டு. இந்த வாயுக்கள் இவற்றின் பைங்குடில் விளைவை ஏற்படுத்தும் தன்மையால் புவியின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் முக்கியமானது கரியமிலம். காரணம் வளிமண்டலத்தில் இதன் பங்கு அதிகம்.

பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும்(Climate Change) : புவியின் வெப்பநிலைக்கும் கரியமிலத்திற்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிபாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனிஅடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த கற்றுக்குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமிலம் இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன்/ஆக்சிஜன் isotope களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வரையப்பட்ட படம் கீழே.







எப்பொழுதெல்லாம் வளியில் கரியமிலத்தின் பங்கு மிக குறைந்திருக்கிறதோ அப்பொழுது Ice Age எனப்படும் மிகக் குளிரான வெப்பநிலைய நிலவியிருக்கிறது.

பொதுவாக இயற்கையின் மறு சுழற்சி காரணமாக வளிமண்டலத்தில் கரியமிலத்தின் பங்கு ஓரளவிற்கு சீராக இருக்கும்(சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலாவது). அதாவது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் கரியமில வாயுவை சுவாசதின்போது வெளியிடுகின்றனர். மரங்கள் கரியமிலத்தை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது போல பல முறைகளால் கரியமிலம் உட்கொள்ளப்படுகிறது. இதனால் ஒரு சமநிலை நிலவுகிறது(நிலவி வந்தது எனச் சொல்ல வேண்டும்).

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த இந்த பைங்குடில் வாயுக்களின், முக்கியமாக கரியமிலத்தின், சீர்நிலை கடந்த 150 ஆண்டுகளாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. நிலக்கரியையும், பெட்ரோலிய எண்ணைகளையும் இயந்திரங்களின் எரிபொருளாக ஏறக்குறைய 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இவை எரியும்போது அதிகம் வெளிவருவது கரியமிலமும் நீராவியும். ஒரு கிலோ(1.3 லிட்டர்)பெட்ரோலை எரிக்கும் பொழுது ஏறக்குறைய 3.17 கிலோ கரியமில வாயு வெளிவருகிறது. இந்த கரிம எரிபொருள்களின் பயன்பாடும் அதன் விளைவாக வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவும் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இயந்திரமயமாக்கலுக்கு முன் சுமார் 270ppm ஆக இருந்த கரியமில்த்தின் பங்கு 1960 ல் 313ppm ஆகவும் 2005 ல் 375ppm ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புவியின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக (0.74 ± 0.18 °C ) பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.


கரியமிலத்தின் பங்கு இதேபோல தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் வரும் நூறு ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 1.1 லிருந்து 6.4 °C வரைஅதிகரிக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

இவ்வாறு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதன் பக்கவிளைவுகள் என்ன. அவற்றின் விலை என்ன. இதை தடுக்க முடியுமா அல்லது எப்படித் தடுப்பது, யார் தடுப்பது என்பதில்தான் எக்கச்சக்கமான கருத்துகளும் எதிர்கருத்துகளும் நிலவி வருகின்றன.

(தொடரும்)
படங்கள் உபயம் - http://www.globalwarmingart.com

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Wed Oct 31, 07:08:00 PM GMT-6, Blogger Vijay சொன்னது

Good article JK..There is a "Planet in Peril" show in CNN, which dealt with recent evidence of global warming - a fast glacier retreats in Ice Land, a sinking island in pacific Papua New Guinea. Our Himalayan glaciers will be gone when the prediction of 2 billion by 2100 happens...

 
At Sun Nov 04, 12:23:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

கூத்தன், நன்றி. சி என் என் நிகழ்ச்சி பற்றி கேள்விப் பட்டேன். இங்கு பார்க்க வாய்ப்பு கிடைக்காது( வீட்டில் டி. வி. இல்லை ஹி ஹி)
இந்த கட்டுரைகளில் உள்ள சில கருத்துக்கள் "Tim Flannery" யின் "The weather makers" யில் இருந்து உருவப்பட்டவை. முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல