உத்திரமேரூர் சதிர்வேதி மங்கலத்து சோழர் கல்வெட்டுகள்
தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப்படிக்கும் பொழுதெல்லாம் புலகாங்கிதம் அடைந்தது உண்டு.
சமீபத்தில் சோழர் வரலாற்றை ஆழமாக படித்த போதுதான் உத்திரமேரூர் கல்வெட்டுகளின் முழுமையான பரிமாணம் புரிந்தது. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இந்த தேர்தல்களில் எந்த ஜனநாயகக் கூறுகளும் இல்லை. சாதியக்கூறுகள் மட்டுமே உள்ளன. 12 சேரிகளை பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுத்ததிலிருந்து, குடவோலை தேர்தல் முறை வரை ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன. இதை நினைத்து பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவமானப்படுவதே பொருத்தமாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் உத்திரமேரூர் சென்றபொழுதும் அவ்வாறே இருந்தது.
வைகுந்த பெருமாள் கோயில்
புகழ்பெற்ற கல்வெட்டுகள் நிரம்பிய பக்கச்சுவர்கள்
பக்கச்சுவற்றில் ஒரு பகுதி - ஒரு கல்வெட்டு
சோழர்கால உள்ளாட்சி தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டின் பிரதி - கல் 1
கல் 2
உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.
1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்
ஆறில் நான்கு சாதியைச் சார்ந்த தகுதிகள்(தானமாக கொடுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம்). இதிலேயே பல்லிளித்துவிட்டது உள்ளாட்சியில் மக்களாட்சியின் இலட்சனம்.
கல் 3
பக்கச்சுவர்றில் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்காணப்பட்டவை ஒரு சிறு பகுதிதான். மீதமுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைத்தாங்கிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனத்தெரியவில்லை
படித்தவர்களின் கருத்துகள் - 3
ஜயநாயகம் எஙகத்தான் இருந்தது??
1. ஜனநாயகத்தின் "பிறப்பிடம்" என சொல்லப்படும் ஏதென்ஸ் நகரத்தில், ஓட்டுரிமை அடிமைகளுக்கும், பெண்களுக்கும் இல்லை. ஆக 5% மக்களுக்குக்குத்தான் ஓட்டுரிமை இருந்தது.
2. அமெரிக்காவில் 1776ல் ஜனநாயக அரசியல் சட்டம் வந்தமபோது, பல்லோப லட்சம் கருப்பு அடிமைகள் இருந்தனர். மெலும் அமெரிக்க பழங்குடியினரை வெள்ளையர்கள் அயிரக்கனக்கில் வேட்டையாடி கொன்றனர்.
3. பல மேல்நாடுகளில் சமீபத்திய காலம் வரை ஓட்டுரிமை சொத்து வைத்துள்ளவர்க்குதான் கிடைத்தது.
3. 1920ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை மேலை நாடுகளில் கிடைத்தது.
அதையெல்லாம் ஒப்பிடும்போது, 12ம் நநூற்றாண்டில் உத்திரமேரூரில் ஜனநாயகம் இருந்தது என சொல்லலாம்.
பால், வயது, சொத்து, இனம்,, நிறம் பார்க்காமல் எல்லொருக்கும் ஓட்டுரிமை என்பது கடந்த 70-80 ஆண்டு காலங்களில்தான் ஏற்ப்பட்டது. தற்கால ஜனநாயக அளவுகோலில் பார்த்தால் 100 ஆண்டுகளுக்கு முன் எங்கேயும் ஜனநாயகம் இல்லை.
This comment has been removed by the author.
உங்கள் கருத்திற்கு நன்றி.
தற்கால அளவுகோலின்படி 100 ஆண்டுகளுக்கு முன் ஜனநாயகம் எங்கும் இல்லை என்பது மெய்யே. ஆனால் அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும், சமூக, அரசியல் அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பெரும்பான்மை கழைந்துவிட்டன. அங்கெல்லாம், அடிமை முறையோ, இனவெறியோ, ஆணாதிக்க தன்மையோ எந்த அளவிற்கு தீவிரமாக கடைபிடிக்கப்பாட்டதோ அதே அளவிற்கு குறுகிய காலத்தில் தீவிரமாக ஒழிக்கப்பட்டிருக்கின்றன. நம் சமுதாயத்தைப் பொருத்தமட்டில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சாதியக் கூறுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் நிலைத்துநிற்கின்றன. இந்த பின்னனியில்தான் உத்திரமேரூர் கல்வெட்டுகளை பெருமையின் சின்னங்களாக கருதுவதைவிட அவமானச்சின்னங்களாக கருதவேண்டியிருக்கிறது.
மேலும், பொதுவாகவே உத்திரமேரூர் பற்றிய வரலாற்றை எடுத்துரைக்கும்பொழுது அதன் முழுமையான பின்னனி சொல்லப்படுவதில்லை. இதுபோன்று பொறுக்கியெடுக்கப்பட்ட கருத்துகளை மட்டும் முன்வைக்கும் பொழுது தவறான வரலாற்று உணர்வுடைய ஒரு சமுதாயமே பரிணமிக்கிறது.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல