சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு
ஒரு அண்டை நாட்டில் நடக்கும் சுய உரிமைப்போரில் ஒரு இனம் அழிந்தொழிவதை வேறு எந்த நாடும் இவ்வளவு காலம் சும்மா பார்த்துக் கொண்டிராது. பாலஸ்தீனத்திலும், டார்ஃபூரிலும் அப்பாவிகள் வஞ்சிக்கப் படுவதை கண்டிக்கும் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை எளிதில் புறக்கணித்துவிடுகின்றன.
தமிழகத் தமிழர்களில் பலர் தமிழ் ஈழத்தில் நடக்கும் ஆயுதப் போராட்டத்தைப் பற்றி இரு வேறு நிலைப்பாடுகள் கொண்டிருந்தாலும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது எனது கருத்து. தமிழீழ விடுதலையை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் தமிழீழ விடுதலையை எதிர்ப்பவர்களாக இருப்பது மிக அரிது. ஆனாலும் இந்திய அரசாங்கம் "இலங்கையின் ஒருமைப்பாட்டையே" தமது முக்கிய நிலைப்பாடாக காலகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலைப்பாட்டை யாரும், எப்போதும் மக்கள் முன் எடுத்துச்சென்று அவர்களின் ஆதரவை பெறவில்லை. இந்த ஜனநாயகமற்ற நிலைப்பாட்டால் ஈழப்பிரச்சனை பல ஆண்டுகளாக ஒரு தீர்விழியாக இருக்கிறது. இந்திய அதிகார வர்க்கத்தாலும் ஊடகங்களாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் சாமான்யர்களின் சிந்தனையிலிருந்தும் ஈழப்பிரச்சனை ஓரங் கட்டப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள் தமக்கு ஆதாயம் இல்லாத விசயத்தில் அதிகம் தலையிடுவதில்லை, எனவே ஈழப் பிரச்சனை ஒரு ஊறுகாய் போலாகிவிட்டது. எப்பொழுதாவது கொஞ்சம் தொட்டுக்கொள்ள மட்டுமே அது பயன்படுகிறது. மக்களின் நிலைப்பாடு இவர்களின் செவிகளில் விழ வேண்டுமெனில் இன்றைய நிலையில் மக்கள் அதை மிக ஆணித்தரமாகவும் மிகச் சத்தமாகவும் இவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும். அதாவது நமது வாக்குகள்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களிலிருந்து ஓராண்டிற்குள் நடைபெறலாம். நாம் இத்தேர்தலில் சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும், அதற்கான நடவடிக்கைகளை முன்மொழியும் கூட்டணிக்கே ஆதரவு தருவதாக உறுதிமொழி எடுக்கவேண்டும். ஆர்வமுள்ளவர்களை ஒன்று சேர்த்து இதற்காக ஒரு பிரச்சாரக்குழுவை அமைக்க வேண்டும். மக்களிடம் சுதந்திர தமிழீழத்துக்கான காரணங்களை விளக்கவும், சுதந்திர தமிழீழம் பற்றிய தவறான புரிதல்களை(இந்திய இறையாண்மைக்கு குந்தகம் போன்ற) குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும் கூட்டணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.
இது தொடர்பாக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Labels: ஈழம்
படித்தவர்களின் கருத்துகள் - 8
யாருக்கு தெளிவு உள்ளது?
1) மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் முடிவு எனக் கலைஞர் திரும்பத் திரும்பக் கூறவது
2) இலங்கை நெருக்கடியை மிக உன்னிப்பாக அவதானிக்கின்றோம். இது 1983 இல் இருந்து
இந்திய மத்திய அரசின் பல்லவி.
3. புலிகளை எதிர்க்கும் காங்கிரஸ். ஜெயலலிதா என்றாவது ஒரு நாளாவது ஈழத் தமிழருக்காக
சாதமான அறிக்கை விட்டார்களா?
4. தமிழ்ச்செல்வன் இறந்தால் கவிதை பாடுவார். தமிழ்ச்செல்வனுக்காக கூட்டம் போட்டால்
கைது செய்வார் கலைஞர்.
புள்ளிராஜா
அன்புள்ள நண்பரே, கலைஞர் உட்பட அதிகார வர்க்கத்தில் யாருக்கும் தெளிவு இல்லை. தெளிவு இருந்தாலும் அதை வெளியே சொல்ல அவசியம் இல்லை. முடிந்தவரை தள்ளிப்போடுவதே அவர்கள் செய்யக்கூடியது.
இனி நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும். அதைச் சத்தமாக சொல்ல வேண்டும்.
சுதந்திர ஈழத்தை நீண்ட கால இலக்காக வைத்துக்கொண்டு, உடனடியாக உயிர்கள் பலி ஆவதைத் தடுக்கும் வழியில் தமிழ்ப் பகுதிகளை முதலில் ஐ. நா. ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும். காசவோ (சிலர் எழுதுவது போல் 'கொசாவா' அல்ல)இப்படித்தான் 10 ஆண்டு காலம் இருந்தது. ஆனால் இதற்குப் புலிகள் சம்மதிப்பார்கள் என்று தோன்றவில்லை.
எப்படியாயினும் விமானம் மூலம் சிங்கள இராணுவம் குண்டு வீசுவதை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்று இந்தியா முதலில் ஆணித்தரமாகச் சொல்லவேண்டும். எங்கே, நம் மீனவர்களைச் சுடுவதைக் கேட்கவே வழியில்லையே!
இதற்கிடையே இலங்கை அரசு தன் உளவுத்துறை மூலம் தமிழ்நாட்டில் திடீர் பௌவுத்த ஆலயங்களைத் தோற்றுவித்து த்மிழ்கத்தின் மீதே ஒரு கலாசாரப் படை எடுப்பை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
கட்சத்தீவு ராணுவ நடவடிக்கை மூலம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது ஆக்கிரமிப்பு ஆகாது என்று உலகிற்குப் பறை சாற்ற வேண்டும். கொஞ்சமாவது இலங்கை அரசுக்குப் பயம் வரும்.
ஆனால் இதைத் தேர்தல் பிரச்சினை ஆக்குவது மக்களிடம் எடுபடாது என்பதே என் கருத்து. மக்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஒட்டியே வாக்களிப்பார்கள்.
இன்னொன்று செய்யலாம்: புலிகள் இயக்கம்தானே தடை செய்யப்பட்டுள்ளது? 'தமிழ் ஈழம்' அல்லவே! ஊர் தோரும் மேடை போட்டு தனி ஈழத்துக்கு ஆதரவாக நூற்றுக்கனகானோர் பேச வேண்டும் - புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல். இதற்கு நிச்சயம் கருத்து சுதந்திரம் உள்ளது.
இதற்கே கூட முதல்படியாக, சுதந்தர காசவோவை வரவேற்றுக் கூட்டங்கள், விழாக்கள் என நடத்தி அதில் போகிற போக்கில் ஈழத்தைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கலாம். பின்னர் நேரடியாக ஈழ ஆதரவுக் கூட்டங்கள் நடத்தலாம். நெடுமாறன் போன்றவர்கள் இந்தந் திசையில் யோசிப்பது (அவர்களது புலிகள் ஆதரவு நிலைப்பாட்டைக் கைவிடாமல்) பலன் தரும் என்று தோன்றுகிறது.
சரவணன், உங்களுடைய கருத்துக்களை ஆமோதிக்கிறேன். ஈழப்பிரச்சினையை மதிமுக போல ஒரு சிறிய கட்சி முன்னெடுத்துச் செல்வதால் மட்டும் பெரிய விளைவை ஏற்படுத்த முடியாது
1) இது கட்சி சார்பற்ற தமிழீழ ஆதரவு நிலைப்பாடுள்ள(குறிப்பிட்ட எந்த போராளி/அரசியல் குழுவிற்குமான ஆதவு நிலைப்பாடல்ல) மக்கள் இயக்கமாக மட்டும் இருக்கவேண்டும்.
2) உள்நாட்டு பிரச்சனைகள் இருப்பினும், ஒரு இனம் அழிவதைக் கருதி, இப்பிரச்சனைக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பலர் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
3) மற்றவர்களுக்கு இந்த நிலைப்பாட்டின் தேவையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
4) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த மக்கள் இயக்கம் வளர்ந்த பின்னர், அரசியல் கூட்டணிகளை(அது எந்த கூட்டணியாக இருந்தாலும்)தமிழீழ ஆதரவு நிலைப்பாடு எடுக்க கோரவேண்டும். அவ்வாறு ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் கூட்டணிக்கு வாக்களிப்பதாக நாம் உறுதி கூறவேண்டும்
5) அவ்வாறு நிலைப்பாடு எடுக்கும் கூட்டணிக்கு பிற மக்களிடமிருந்தும் ஆதரவு கோர வேண்டும்
6) அக்கூட்டணி வெற்றி பெறும் நிலையில், இந்தியாவின் இலங்கைப் பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டை உடனடியாக அவர்கள் மாற்ற முயற்சிக்கவேண்டும்(முதல் 30 நாட்களில்).
நாம் நமது கவனத்தையும்/செயல்பாடுகளையும் சிதறவிடாமல் லேசர் போல இறுதி நோக்கத்தில்மட்டும் ஒருங்கிணைத்து செலுத்த வேண்டும்.
//அவ்வாறு ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் கூட்டணிக்கு வாக்களிப்பதாக நாம் உறுதி கூறவேண்டும்//
என்னளவில் இவ்வாறு நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்காக ஒரு மதவாத கட்சி அல்லது கூட்டணிக்கு ஓட்டளிக்க இயலாது; இதுபோலவே ஒவ்வொருவருக்கும் கொள்கை அல்லது கட்சி சார்பு இருக்கும் அல்லவா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்க முடியாது என்பது என் கருத்து.
பதிலாக, எல்லா முக்கிய கட்சி அல்லது கூட்டணியும் இதே நிலைப்பாட்டை எடுக்கும்படி செய்ய முயல்வது சரியான செயலாக இருக்கும்.
சரவணன்,
//எல்லா முக்கிய கட்சி அல்லது கூட்டணியும் இதே நிலைப்பாட்டை எடுக்கும்படி செய்ய முயல்வது சரியான செயலாக இருக்கும்.//
அதற்கான முயற்சிதானே இது.
முக்கிய அரசியல் கட்சிகள் என நீங்கள் நினைக்கும் கட்சிகட்கு "சுதந்திர ஈழம்" என்ற நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை இருகாது என்பதே எனது கருத்து.
ஆனால் மக்கள் அதை வலியுறுத்தவில்லை என்பதாலும் பிரச்சனை ஓரங்கட்டப்பட்டு இருப்பதாலும், அக்கட்சிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள்.
கட்சிகளைத்தாண்டிய ஒரு பெருவாரியான மக்கள் இயக்கம் "சுதந்திர ஈழம்" என்ற கோரிக்கையை முன்னுக்கு கொண்டுவரும் பொழுது அதை அவர்கள் புறக்கணிக்க முடியாது. இல்லையா?
JK,
Hats off for this post that discusses solutions.
I have a request for you. Most of the normal people read the popular newspapers / magazines which do not provide real news or blackout news about Srilankan Tamil cause. When I think of it, I can relate it only to Tigers and not much beyond that. Why dont you put a post that provides the history and details of the struggle? Post 1991, there has not been much focus on the struggle in the media.
அன்புள்ள சதீஷ். கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது மிகச்சரி. ஊடகங்களின் புறக்கணிப்பினால் ஈழப்பிரச்சனை பற்றிய புரிதல் படித்தவர்களுக்குக்கூட மிகக்குறைவு. ஈழத்திற்கு ஆதரவென்றால்கூடா "பயங்கரவாதத்திற்கு ஆதரவு" என்ற அளவிலேயே பலரின் புரிதல் உள்ளது.
என்னைவிட ஈழம் பற்றிய ஆழமான புரிதலுடையவர்களும் அழகாக எழுதுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஈழம் பற்றி பாமரர்களுக்கும் புரியும்படி ஒரு FAQ தயாரிக்கவேண்டும் என்பது என்னுடைய அவாவும்கூட. கூடியவிரைவில் ஊர் திரும்பிய பின் தொடங்கலாம்.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல