பிச்சாவரம் & கங்கைகொண்டான் : ஒரு பயணம், சில மனிதர்கள்
பயணம்: ஓவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம். சமீபத்தில் நான் வாங்கிய புல்லட்டில் வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது இந்தப் பயணம்.
திட்டம்: சென்னையிலிருந்து கிளம்புவது. சென்னைக்கு வந்து சேர்வது. மற்றபடி எல்லாம் சந்தர்ப்பத்திற்கும் அப்போதய மனநிலைக்கும் ஏற்ப மாறலாம் என்பதே திட்டம்.
பாண்டிச்சேரி: உள்ளூர் காவலர்கள் சங்கம் அமைத்து அசட்டுத்தனமாக நீதித்துறையை எதிர்த்து போராடியதற்காக ரிசர்வ் போலீஸ் காரர்கள் SLR உடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அங்கே சாப்பிட்டுவிட்டு பாரதி பூங்காவில் படுத்து இளைப்பாறிவிட்டு பின்னர் பயனத்தை பிச்சாவரம் நோக்கி தொடர்ந்தோம்
தன்னிடமே படகு இருப்பதாகவும், தானே அழைத்துச் செல்வதாகவும் அவர் சொன்னார். அவர் பெயர் குப்புராஜ் என்றும் சொன்னார். பின்னர், சிதம்பரம் திரும்பி வண்டிகேட் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கினோம்.
குப்புராஜ்: இவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மீனவரான இவர் கடந்த நான்காண்டுகளாக சிங்கப்பூரில் வேலைபார்த்துவிட்டு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஊர் திரும்பியிருக்கிறார். எவ்வளவு ஆகும் எனக்கேட்டதற்கு, சும்மா நட்பிற்காகத்தான் அழைத்துபோகிறேன் நீங்க கொடுக்கறத கொடுங்க என்று நட்பு பாராட்டி அசத்தினார். ஒரு சிறு தோனியில் குப்புராஜ், அவரது நண்பர் ராஜு, எனது நண்பர் மற்றும் நான் என பிச்சாவரம் ஆற்றில் துடுப்பு போட்டு உள்ளே சென்றோம். கடந்த முறை காரைக்காலில் படகு கவிழ்ந்த அனுபவம் (அது ஒரு தனிக் கதை) ஞாபகத்திற்கு வந்து திகில் ஊட்டியது. இருந்தாலும் உற்சாகமாக இருந்தது. ஆறு பெரும்பாலான இடங்களில் ஆழம் மிகக் குறைவே, அதனால் பயமில்லை.
சின்ன வாய்க்கால்: துடுப்பு போட்டுக்கொண்டு சின்ன வாய்க்கால் என்ற ஒரு சிறிய திட்டை அடைந்தோம். சில ஏக்கர் பரப்பளவே உள்ள இது ஒரு தீவு போன்றது. கிழக்கே கடல் மேற்கே ஆறு. இந்த இடங்களில் தான் காவிரியின் சில கிளைகள் கடலில் கலக்கின்றன. இங்கிருந்து சூரிய உதயத்தையும் , அத்தமனத்தையும் பார்க்கலாமாம்.
சின்ன வாய்க்காலுக்கு ஒரு சோகம் நிறைந்த பின்கதை உண்டு. நாங்கள் அங்கிருந்த தினம் டிசம்பர்-26. சரியாக நான்காண்டுகளுக்கு முன்னார் ஆழிப்பேரலையால் மிகப்பெரிய தாக்குதலுக்குட்பட்ட இடம். அதற்கு முன், மீனவர்கள் சிலர் அங்கே தங்கியிருந்து மீன்பிடித்தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர். இருப்பிடங்கள் எல்லாம் மொத்தமாக கடலில் சென்றுவிட்டன. உயிர்பிழைத்தவர்கள் பிச்சாவரத்தில் வந்து தங்கிவிட்டார்கள். சின்ன வாய்க்காலில் இப்பொழுது யாரும் வசிக்கவில்லை. இதுபோன்று அருகில் உள்ள இன்னொரு இடம் எம்ஜியார் திட்டு. அந்த இடத்திற்கும் இதே நிலைதானாம்.
இவ்வளவு சோகங்களையும் தாண்டி அழகான, சுத்தமான, நீண்ட, ஆள் நடமாட்டமற்ற கடற்கரையும், பச்சைப் பசேலென்ற தென்னந்தோப்பும் சேர்ந்து அற்புதமான ஒரு இடமாக காட்சி தருகிறது சின்ன வாய்க்கால் திட்டு. வெகு நேரம் கடலில் விளையாடிவிட்டு மீண்டும் தோனியேறி சதுப்பு நிலக்காடுகளுக்குள் சென்றோம்.
சுரப்புன்னைக் காடுகள்: இருபுறங்களும் பச்சைப்பசேலென சுரப்புன்னை மரங்கள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் சூழ, தோனியில் செல்வது அற்புதம். தன்னீரில் மீன்கள் ஓடுவதை குப்புராஜ் அவதானித்துவிட்டு மீன்பிடிக்கலாம் என்றார். பின்னர் வலையை வீசிவிட்டு மீன்கள் படுவதற்காக குப்புராஜின் செல்பேசியிலிருந்து பின்னனி இசையுடன் காத்திருந்தோம். கில்லாடி மீன்கள் பகல் வெளிச்சத்தில் வலையைப் பார்த்து ஒதுங்கி சென்றுவிட்டன. ஒரு மீன்கூட அகப்படவில்லை. மீன்பிடித்து ஆற்றில் மீண்டும் விட முடியவில்லை. பின்னர் பிச்சாவரம் கரை நோக்கி தோனியை செலுத்தினோம். சிறிது நேரம் துடுப்பை நான் வலித்தேன். கை நன்றாக வலித்தது.
ஜெயங்கொண்டான்: புல்லட்டை எடுத்துக்கொண்டு சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று அங்கே சுகாதார ஆய்வாளராக இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு மீன்சுருட்டி வழியாக கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தோம். அங்கு தங்குவதற்கு ஏதும் இடமில்லை. எனவே ஜெயங்கொண்டானில் அறையெடுடுத்து தங்கினோம்.
மணிமாறன்: காலையில் புல்லட் ஸ்டார்ட் ஆகமாட்டேன் என சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. வெகு நேரம் முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஜெயங்கொண்டானில் நாங்கள் எங்கே பட்டறை தேடுவது? எனினும் தள்ளிக்கொண்டு சில மீட்டர் நடந்தபொழுது எதிரில் சைக்கிளில் ஒரு இளைஞர் வந்தார். அவரிடம் விசாரித்தோம். அவர் பெயர் மணிமாறன் என்றும், கொஞ்சம் தொலைவில் பட்டறை இருப்பதாகவும் கூறினார். பின்னர் அவரது மெக்கானிக் நண்பர் ஒருவருக்கு போனடித்து வரமுடியுமா எனக்கேட்டார். அவர் வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாம். கொஞ்சம் யோசித்துவிட்டு எங்கள் இருவரையும் புல்லட்டுடன் அங்கேயே நிற்கவைத்துவிட்டு அவரே சைக்கிளில் முஸ்தபா என்பவரின் பட்டறைக்கு சென்று அவரை நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வரவைத்து விட்டு சென்றார். இந்த காலத்திலும் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புல்லட்டின் சண்டித்தனத்தில் கடுப்பாக இருந்தாலும், மணிமாறனின் உதவி உற்சாகத்தை ஊட்டியது. முஸ்தபாவின் கைவண்ணத்தில் புல்லட் தம்ப் தம்ப் என உயிர்த்துக்கொண்டது
கங்கைகொண்ட சோழபுரம்: ஜெயங்கொண்டானில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் வழியில் பொன்னேரி எனும் பெரிய ஏரி இருந்தது. அந்த இடத்திலிருந்தே பெரிய கோவிலின் கோபுரம் அட்டகாசமாக தெரிந்தது. அந்த ஏரியும் இராஜேந்திரச் சோழன் காலத்தில் வெட்டப்பட்டதாம். அதற்கு சோழகங்கம் என்றொரு பெயரும் உண்டாம். கோவிலின் பிரம்மாண்டத்தையும் சிற்பங்களின் அழகையும் இதுவரை படித்திருக்கிறேன். இருந்தும் நேரில் அவை வியப்பூட்ட தவறவில்லை. பிரபலமான ஆடவல்லான் சிலை எந்த இடத்தில் இருக்கிறதென கொஞ்ச நேரம் தேட வேண்டியிருந்தது. அங்கு கற்பக்கிரகத்தில் இருந்த பூசாரியிடம் கேட்டேன். அவர்க்கு ஒன்றும் புரியவில்லை. யோசித்துவிட்டு இங்கு உள்ள எல்லா சிலைகளிலும் சிவன் ஆடுவது போலத்தான் இருக்கென்றார். ஹ்ம்ம்ம்... கோவிலைச் சுற்றிவரும்போது வடபுறம் பின்பகுதியில் அதை கண்டுபிடித்து, சிலையில் காரைக்கால் அம்மையாரை தேடிக் கண்டுபிடித்து எனது கொஞ்சுனூண்டு அறிவை நானே மெச்சிக்கொண்டேன்.
மாளிகை மேடு: அங்கிருந்து மாளிகைமேட்டிற்கு சென்றோம். அகழ்வாரய்ச்சி செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட அரண்மனையின் ஒருபகுதி இருந்த குழி மழைநீரில் கொஞ்சம் நிரம்பி இருந்தது. ஒரு அன்பர் அதில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியும் அந்த இடத்தின் வரலாறும் எனக்கு எதையோ சொல்வது போன்றிருந்தது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு ஒரு மிகப் பெரிய பலமான பேரரசின் தலைநகராக இருந்து கங்கைகொண்ட சோழபுரம் இன்று ஒரு சிற்றூராக மாறிவிட்டது. காலச்சக்கரத்தின் முன் பேரரசும் ஒன்றுதான் துணி துவைப்பரும் ஒன்றுதான்.
புல்லட்: அவ்வப்போது ஸ்டார்டாகாமல் சண்டித்தனம் செய்தாலும் சக்கரங்களின் ரப்பர் சாலையைத்தொட்டு உருள ஆரம்பித்து விட்டால் எல்லா சாலைகளும் இராஜபாட்டைதான். நெடுஞ்சாலைகளில் 80, 90லும் முக்கல் முனகல் இல்லாமல் ஓடுகிறது. என்ன ஒரே ஒரு விசயம், இந்த மாதிரி ஒரு தண்ணி வண்டியை பார்க்க முடியாதப்பா. ஊற்ற ஊற்ற குடிக்கிறது. லிட்டருக்கு 20 என்ற ரேஞ்சில் பர்சை நன்றாக பதம் பார்த்துவிட்டது.
Labels: பயணம்
படித்தவர்களின் கருத்துகள் - 3
கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்தில் அதிகம் சுற்றியிருந்தாலும் பிச்சாவரம் போகாதது பெரும் குறை எனக்கு! வாய்ப்பு கிடைத்தால் போகணும்ங்கற ஆசை இப்ப பதிவினை படிச்சதும் தொத்திக்கிச்சு! :)
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி கங்கை கொண்டசோழபுரம் பயணம் கிராமங்களினூடாக இருக்கும் - நிறைய விசயங்கள் விவரிக்க காட்சிகளாய் கண்ணுக்கு பட்டிருக்குமே!
ஏனோ ஒரு வித வேகம் பயணத்தில் தெரிகிறது! :)
நினைவுகள் மீட்டும் போது மீண்டும் நிறைய பகிர்ந்துக்கொள்ளுங்கள்
:))
நன்றி, ஆயில்யன்.
சிதம்பரத்திலிருந்து கிளம்பும் பொழுதே அந்தி சாய்ந்துவிட்டதால் கொஞ்சம் அவரமாகப் போக வேண்டியதாயிற்று. நீங்கள் கூறியது போல அந்த சாலையில் பயணம் நன்றாகவே இருந்தது. பெரும்பகுதி காவிரியின் ஏதோ ஒரு கிளைநதியின்(கால்வாயோ?) கரைமீதே சாலை.
மற்றபடி, பொதுவாகவே எந்த அவரமுமில்லாமல்தான் அமைந்தது பயணம். குறுகிய பதிவிற்குள் மூன்று நாட்களை அடக்க வேண்டியதால் நிறைய விடுபட்டு போயிருக்கும். மீண்டும் முடிந்தால் எழுதுகிறேன்.
j.k neengal mattum sentrigala,penthunaiyudana? matrapadi SUPER SUPER ARIVU
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல