ஜேகேவின் சில குறிப்புகள்: திராவிட கொள்கையாளர்கள் ஏன் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க வேண்டும்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, December 20, 2013

திராவிட கொள்கையாளர்கள் ஏன் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க வேண்டும்

தமிழகம் பெரும்பாலும் தேசிய அரசியலை விட்டு விலகி பெரியாரின் தாக்கத்தின் காரணமாக திராவிட அடையாளத்துடன் முற்போக்கு அரசியலை முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. தேசிய கட்சிகள் மொழி, பண்பாடு, அரசியல் சக்தி ஆகியவற்றில்  ஒருமைத்தன்மை கொண்ட இந்தியாவை நிர்மாணிக்க முயன்ற சமயத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்தியதிலும் நிச்சயப்படுத்தியதிலும் திராவிட அரசியலின் பங்கு அளப்பரியது.


ஆனால் தற்போதய முக்கிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தமது முன்னோடிகளின் கொள்கைகளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, பணம் முதலீடு செய்து தேர்தலில் வெற்றி பெருவது, பின்னர் அதிகாரதைக்கொண்டு அதிக பணம் சம்பாதிப்பது என தனியார் நிறுவனங்கள் போல செயல்படுகின்றன. இக்கட்சிகள் அனைத்தும் தமிழக மக்களின் நலன்களை முற்றிலும் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டன.  தமிழகம் இதுவரை சமூக நீதியிலும், மக்களின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால் தொடர்ந்து வரும் நேர்மையற்ற தலைவர்களின் ஊழல் மலிந்த ஆட்சிகளால் தமிழகம் பின் தேங்க ஆரம்பித்திருக்கிறது. இது தமிழகம் பின் திராவிட(Post Dravidian) அரசியலுக்கு தயாராகிவிட்ட ஒரு நிலையை எடுத்துச் சொல்கிறது.

திராவிடக்கட்சிகளின் சில முக்கிய குற்றங்கள்...

  1. திராவிட அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் யாவும் கொள்கைகளையும், மக்கள் நலன்களையும் புறக்கணித்து, அரசியல் அதிகாரம் பெருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதிகாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனங்களாகி விட்டன.
  2. தமிழ் ஈழத்தில் பல்லாயிரம் சகோதர்கள் கொல்லப்பட்ட மிக அவசரமான காலத்தில் கூட தமது சுயநலன் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டன.
  3. திராவிட முன்னோடிகள் சமூக நீதிக்காக தொடர்ந்து போரிட்டனர். ஆனால் தற்போதய திராவிடக்கட்சிகள் சாதி உணர்வை துண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வளர்த்துவிட்டுள்ளனர். கொடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்த பொழுதும்கூட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதியை பெற்றுத்தர தவறிவிட்டனர்.
  4. தமிழ்ச்சமூகத்தை பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல அடிப்படையாகிய தரமான பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை எல்லா மக்களுக்கும் தரத்தவறிவிட்டு, செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் பணம் சம்பாதிக்க இன்னொரு வழியாக மடைதிறந்துவிட்டனர். இதனால் கல்விக்கு முக்கிய பங்களிக்கும் சாமன்ய தமிழக மக்கள் பெரும் பொருட்செலவில் தமது குழந்தைகளை ஒன்றுக்கும் உதவாத தனியார் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி கடன் பட்டு நிற்கின்றனர். மேலும் தரமற்ற கல்வியால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அதேசமயத்தில் கல்வி எனும் பெயரில் பகல்கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
  5. திராவிட கட்சிகள் ஓட்டு வாங்குதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு குறுகிய நோக்கத்துடன் கூடிய இலவச திட்டங்களை நிறைவேற்றி வந்ததால், நெடுநோக்குடன் கூடிய மக்கள்நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத்தவறிவிட்டன. பொது சுகாதாரம், பள்ளி மற்றும் உயர் கல்வி, உள்கட்டுமானம், வீட்டுவசதி, மின்சாரத்துறை, சட்டம் & ஒழுங்கு மற்றும் உள்ளாட்சி போன்ற அரசாங்கத்தின் முக்கியமான கடமைகளில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் வளச்சி பெரும் சேதமடைந்திருக்கிறது.
  6. தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல என்பதால், ஊழல் ஒரு பெரிய அரசியல் பிரச்சனையாக பேசப்படுவதுகூட இல்லை. பிற மாநிலங்களில் எல்லம் இருக்கும் லோக் ஆயுக்தா மற்றும் சேவை பெரும் உரிமைச் சட்டங்கள் தமிழத்தில் இல்லை. அவற்றை கொண்டுவரக் கோரி எதிர்கட்சிகள் கூட போராட்டங்கள் நடத்துவதில்லை.
  7. திராவிட இயக்கத்தின் முக்கிய கோரிக்கையான மாநிலங்களுக்கான, தன்னாட்சி அதிகாரத்தை இரண்டு கட்சிகளும் முற்றிலுமாகவே கைவிட்டுவிட்டனர். புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவ்வப்போது இதைப்பற்றி பேசும்பொழுதும் கூட, இது சிதம்பரம், மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனையாக தோன்றுகிறதே தவிர மக்களுக்கு அதிகாரம் செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுப்பப்படுவதாகத் தெரியவில்லை. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என முழங்கிய கலைஞர் அவர்கள் இப்பொழுது அதை முழுவதும் மறந்துவிட்டார்.இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக இருக்கும் பிற தேசிய மற்றும் தமிழக கட்சிகள் அனைத்துமே, தமிழர்களுக்கு எதிரான அல்லது பாசிச கொள்கை நிலைப்பாட்டுடனோ அல்லது ஊழல் மலிந்த கட்சிகளாகவோ இருக்கின்றன. இந்த கட்சிகளின் அழுக்கு அரசியலுக்கு முற்றிலும் எதிராக ஆனால் திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கையான சமூக நீதியை உள்வாங்கிய அரசியலை ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கிறது.


ஆரம்பித்து ஒரே வருடத்தில் தில்லி தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்று தாம் வெறும் “லெட்டர் பேட்” கட்சியல்ல என்பதையும், களத்தில் காலூன்றி மக்களின் நம்பிக்கையை பெறமுடிந்த கட்சி என்பதையும் நிரூபித்துள்ளது ஆம் ஆத்மி  கட்சி. தமிழகத்தில் தேசியக்கட்சிகள் மக்கள் ஆதரவை பெருவது இதுவரை குதிரைகொம்பாக இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் முறையும், கொள்கைகளும் தமிழகம் இதுவரை ஆதரித்து வந்தவற்றுடன் ஒத்து வருவதுடன் அதில் நேர்மை, நல்லாட்சி என்ற முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தமிழக அரசியலை முற்போக்குப் பாதையின் அடுத்து கட்டத்திற்கு எடுத்செல்ல உதவும். எனவே திராவிடவியலாலர்களும் பிறரும் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது தற்போதய காலகட்டத்தின் தேவை.

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Fri Dec 20, 05:38:00 AM GMT-6, Blogger நந்தா சொன்னது

கட்டுரை அருமை. லோக் சத்தாவை குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது

 
At Fri Dec 20, 10:19:00 AM GMT-6, Blogger Jayakumar Palanivel சொன்னது

நந்தா, மன்னித்துக்கொள்ளுங்கள். லோக் ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமை போன்ற சட்டங்கள் குறித்து லோக் சத்தா கட்சியின் பணியை குறிப்பிடாதது எனது தவறுதான்.

பிரதான அரசியல் கட்சிகளின் பிழைகள், அவற்றிற்கான வலிமையான மாற்று அரசியலைப் பற்றி கூற முயன்றதில் அவை விடுபட்டுப் போய்விட்டன.

இது ஒருபுறமிருக்க, உங்கள் நிலைப்பாடு என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப் பொருத்தவரை லோக் சத்தா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை ஒன்றாகவேத்தான் பார்க்கிறேன். இரண்டும் ஒன்றுசேர்ந்து இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவ்வாறு நடப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத சமயத்தில் இரண்டில் வலிமையான இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியிருக்கிறது, அவ்வளவுதான்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல