ஜேகேவின் சில குறிப்புகள்: ஈழ ஆதரவு முன்னணி : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, March 03, 2009

ஈழ ஆதரவு முன்னணி : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம்

எமது மரியாதைக்குரிய தலைவர்களே,

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க தமிழகம் ஏதாவது செய்யும் என்று உலகில் வாழும் எல்லாத் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கதவுகளையும் தட்டிவிட்டோம், மனிதச் சங்கிலி அமைத்து மழையில் நனைந்தோம், உண்ணாதிருந்தோம், இரயில் மறித்தோம், கடையடைத்தோம், பேரணி சென்றோம், தீக் குளித்துச் செத்தும் போனோம். ஆனால் இனவெறிப்போரை நடத்துபவர்களையும், அதற்குத் துணை நிற்பவர்களையும் எங்கள் குரல் சென்றடையவேயில்லை. காரணம் தமிழனின் குரல் ஒன்றாக ஒலிக்கவில்லை. ஒரு கோடியாக ஒலித்தது. இப்போது எமது கடைசி நம்பிக்கையாக நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஆதரவு பரவலானது, ஆழமானது. இதை தொடர்ந்து வந்த பல நடுநிலைப் பத்திரிக்கைகளின் கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டியுள்ளன. ஆனால் உள்ளூர் அரசியலில் துண்டு துண்டாகச் சிதறிப்போன தமிழரின் தலைமை வெவ்வேறு கூட்டணிகளில் சேர்ந்ததன் மூலம், தமிழர்களின் ஈழ ஆதரவுக் குரல் அதிகார வர்க்கத்தை எதுவும் செய்வதில்லை.

நாஜிக்களின் பிடியில் யூதர்கள் பட்ட அவலத்திற்கும் மேலான அவலத்தை ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இன்னிலை தொடர்ந்தால், ஈழத்தில் இன்னும் சில நாட்களில் தமிழன் இருக்கமாட்டன். இந்த இன அழிப்பு நமது காலத்தில் நடைபெறுகிறது என்பதை மறவாதீர்கள். நாளைய வரலாறு இன அழிப்பு செய்தவர்களை மட்டும் தூற்றாது.அதற்குத் துணை போனவர்களையும், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தவறியவர்களையும் சேர்த்தே குற்றாவளிக் கூண்டில் நிறுத்தும். எனவே, எல்லா சுயநலன்களையும் களைந்து ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பை நிறுத்தவும், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை. அந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது உங்களின் கடமை.

தமிழர்களின் குரல் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகளின் சபைகளிலும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் நலன் கோரி எதிரொலிக்க வேண்டுமெனில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையை சிந்தாமல் சிதறாமல் தமிழர்களின் வெற்றியாக மாற்ற வேண்டும். அதற்காக உங்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஈழ ஆதரவு முன்னணியை அமைத்து போட்டியிட வேண்டுமென உரிமையுடன் வலியுறுத்துகிறோம். அம்முன்னணியின் முக்கிய வாக்குறுதிகளாக பின் வருபவை இருக்க வேண்டும்


மத்திய அரசில் பங்கேற்றால் அல்லது ஆதரவு தந்தால்,

1) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோருவோம். இலங்கை அதற்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம். விமான, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை துண்டிப்போம். இந்தியாவின் நேச நாடுகளையும் அவ்வாறு செய்யக் கோருவோம். ஐக்கிய நாடுகள் சபையில், காமன் வெல்த் சபையில் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வருவோம்.
2) நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களின் எல்லா மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவோம்.
3) இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு “ஒருங்கிணைந்த இலங்கை” என்ற வரையறைக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவோம். தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகியோரது விருப்பத்தைக் கோரி தேர்தல் நடத்தி அதன் படியான தீர்வை முதன்மைப் படுத்துவோம்.

எதிர்க் கட்சியாக இருக்கும் பட்சத்தில்

1) ஈழத்தில் போர் நிறுத்தம் அமலாகி ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.


இவ்வாறு ஒரு தெளிவான ஈழ நிலைப்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையில் உங்களது முன்னணி நாற்பது இடங்களையும் பிடிக்கும் என்பது உறுதி. அதற்காக சாமான்யர்களான நாங்கள் துணை நிற்போம். எங்களது வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு உங்களது வெற்றிக்கு வாக்குகள் சேகரிப்போம். இந்த இக்கட்டான நிலையில் நல்ல தலைமையை பரிதாபத்துடன் எதிர் நோக்கியிருக்கும் தமிழர்களைக் கைவிட்டு விடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
அனாதைத் தமிழன்

Labels: , , ,

படித்தவர்களின் கருத்துகள் - 6

At Sun Mar 08, 03:44:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

A nice positive post outlining a clear strategy. Let us hope and pray that our political parties will come out of coalition compulsions after the elections.

 
At Sun Mar 08, 04:20:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

Satheesh...

Thanks for your opinion. We always hope some thing positive turns out in this election.

 
At Fri Mar 13, 04:21:00 AM GMT-6, Blogger baarathisubbaiyah சொன்னது

super,super J.K.First time i am also like yr opinion. ARIVUKKARASAN

 
At Sun Mar 15, 11:32:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அறிவு...

நன்றி.

 
At Wed Mar 25, 01:48:00 AM GMT-6, Blogger வாதி சொன்னது

i support the lankan tamil cause and ian in line with you JK but read all your articles again .
Have you ever written anything about the atrocoties against SC & ST,cross-genders and other suppressed classes ?

Till now in tamil nadu more than 30k men and women are cleaning the human shit ...

If you are able to find the reason ,then you will get the answer for your cry.

any way thanks for supportng lankan tamil issue ..

s.saravanan

 
At Wed Mar 25, 11:54:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

வாதி சரவணன்,

வாங்க...எழவு வீட்டில வந்து ”ஏண்டா... பக்கத்து வீட்டுல ஒருத்தன் நோவு வந்து சாவக் கிடக்கறப்ப அதுக்கு அழுவாம இதுக்கு மட்டும் அழுவுறீங்க” ன்னு கேட்பது போல இருக்கு உங்களோட வாதம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தமிழர்களின் காட்டுமிராண்டித்தனத்தின் அறிகுறிகள்தான் அவை. அத்தகைய சமூக அநீதிகள் அனைத்தும் கலையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை நண்பரே. நான் வலைப்பதிவில் அவற்றைப்பற்றி எழுதாதற்கு காரணம் நான் இதற்கு முன் பொதுவாகவே அரசியல் பற்றி அதிகம் எழுதாமைதான் காரணம். ஆனால் இப்பொழுதைய பிரச்சனையின் ஆழமும், அகலமும், அதன் பின் விளைவுகளும், நமது கையாலாகாத் தனமும், அரசியல் தலைமைகளின் அவுசாரித்தனமும் தான் அடிபட்ட நாய் போல என்னை கத்த வைக்கிறது.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல