ஜேகேவின் சில குறிப்புகள்: உதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, January 06, 2009

உதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவு மக்களிடையே மிகப் பரவலாகவும் பெருவாரியாகவும் இருக்கிறதென்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அதன் அரசியல் குரல் பெரிய அரசியல் கட்சிகளாலும் கூட்டணிகளாலும் எதிரொலிக்கப் படவேயில்லை. திமுக பதவியை தக்கவைத்துக் கொள்வதை முதன்மையாகக் கருதுவதால், ஈழத்திற்கான ஆதரவு நிலையை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறது. மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளே தொடர்ந்து ஈழ ஆதரவிற்கு குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவையும் பிற அரசியல் காரணங்களுக்காக வெவ்வேறு அணிகளில் எதிரும் புதிருமாக இருந்து செயல்படுகின்றன. எனவே அரசியல் பல் இல்லாத தமிழர்களின் ஈழ ஆதரவுக்குரல் மத்திய அரசிற்கும், வட நாட்டு ஊடகங்களுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் நகைச்சுவை விருந்தாக அமைந்து விடுகிறது.

இப்பொழுது ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பும் சிங்கள அரசின் கொண்டாட்டக் கொக்கரிப்பும் உச்ச கட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், ஈழ ஆதரவு என்பது சூறாவளி போல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. எந்தக் கூட்டணி ஈழ அதரவை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலில் இறங்குகிறதோ அது மிகப் பெரிய வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக கூட விடுதலை புலிகளின் மீதான தடை நீக்கப் படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பாமக தலைவர் இராமதாஸ், மத்திய அரசு தமிழர்களை அவமானப் படுத்திவிட்டது எனவும் கூட்டணி அரசிலிருந்து விலக நேரிடலாம் என்றும் அறிக்கை விட்டுள்ளார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமா ஈழ ஆதரவுக் கூட்டணி அமைப்பதற்காக வைகோ, இராமதாஸ், பழ நெடுமாறன், வீரமணி மற்றும் தா பாண்டியன் போன்றோரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் ஈழத்தமிழர்களின் நலன் முன்னிட்டு "சரியான" முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இவரது முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் திமுக+பாமக+மதிமுக+விசி ஆகிய கட்சிகளை முன்னிறுத்தி ஒரு வலிமையான கூட்டணி அமையலாம். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது பாரதிய ஜனதாக் கட்சியோ சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்விரு கட்சிகளும் ஈழ ஆதவரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்த சமயத்தில் ஜெயலலிதா என்ன செய்வார் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. திமுக/அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் என்பதைவிட தேர்தலில் வெற்றி என்பதே முக்கியமான நிலைப்பாடு. எனவே, தமிழகத்தின் ஈழ ஆதரவு அலையை சாதகமாகப் பயன்படுத்த எண்ணி அதிமுகவும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வளவு களேபரத்திலும் திமுக கூட ஈழத்தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடவில்லை. ஜெயலலிதாதான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, அதிமுக ஈழ அதரவுக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக அமைவதற்கு வாய்பே இல்லை என்றும் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் எந்தக் கட்சி உருப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் இன்றைய நாதியற்ற நிலையை நிவர்த்தி செய்து, அவர்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்பது இப்பொழுது இந்தியத் தமிழர்களின் தார்மீகக் கடமை. ஏனெனில், ஈழப்போரில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் பின்னடைவை இப்போது சந்தித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் போராட்டத்தில் வலிமை இல்லாமை அல்ல. மாறாக அவர்கள் தேசமற்ற, உரிமையற்ற, பணபலமற்ற சட்ட அங்கீகாரமற்ற, அநாதைகளாக இருந்து கொண்டு உரிமைக்காக இராணுவ, பண பலம் வாய்ந்த அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வதேசங்களையும் அவர்களின் கைத்தடி பேரினவாத இலங்கையையும் எதிர்த்துப் போராடுவதுதான் சிங்களர்களின் இந்த கொக்கரிப்புக்குக் காரணம். இந்த சர்வதேச சுயநலவாத கூட்டணியை எதிர்த்து எந்த போராளி அமைப்பு இவ்வளவு நாட்களுக்குப் போராட முடியும்?

எது எப்படி இருப்பினும், போராளித் தமிழர்களுக்கு இப்பொழுது வலிமையாக குரல் கொடுப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமை. இந்த கடமையிலிருந்து வழுவினால், ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 5

At Tue Jan 06, 02:40:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

வணக்கம் ஜேகே உங்கள் பதிவை ஏன் தளத்தில் புப்ளிஷ் பண்ண ஆனுமதி கிடய்க்குமா
உங்கள் ப்லோக் முகவரியுடன்

 
At Tue Jan 06, 02:58:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

அன்பரே...

தாராளமாக எடுத்து பதிந்துகொள்ளுங்கள்.

 
At Tue Jan 06, 03:27:00 AM GMT-6, Blogger தம்பி சொன்னது

நன்றி ஜேகே
http://www.ponmaalai.com/2009/01/blog-post_06.html

 
At Wed Jan 07, 03:42:00 AM GMT-6, Blogger வினோத் முத்துச்சாமி சொன்னது

Comments in my new post

 
At Mon Jan 26, 02:18:00 PM GMT-6, Anonymous வெண்காட்டான் சொன்னது

//// ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.///

சத்தியமான வார்த்தைகள்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல