ஜேகேவின் சில குறிப்புகள்: உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, May 17, 2009

உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச வாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்னரே, அவர்களை தமது உடைகளை முற்றிலும் கழற்றி விடுமாறு நாஜிக்கள் அவர்களிடம் சொல்வார்கள். தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தும் எந்தவிதமான சிறு எதிர்ப்பும் இன்றி தமது உடைகளைக் கழற்றிவிட்டு விச வாயு அறைகளுக்குள் சென்று ஈசல் போல செத்து மடிந்தார்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள். அப்பொழுது உலகம் கேட்டது, ”எப்படி ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் இவர்கள் தமது அழிவை ஏற்றுக்கொண்டார்கள்?” என்று. அதே உலகம் சொன்னது ”இனிமேல் இது போல ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் நடக்க விட மாட்டோம்” என்று.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரை நூற்றாண்டாக அநீதிகள் நடைபெற்றுவருவதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். தமிழர்களின் மனித உரிமைகள் சில கோடி முறைகளாவது மீறப்பட்டிருக்கும். ஆனால் யூதர்களைப்போல தமிழர்கள் சாகவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் அதே உலகம் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி தமது புனித பிம்பங்களை தமக்குத்தாமே நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் தாண்டி, அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிற்காகவே, பல ஆயிரம் தமிழர்கள் ஈசல் போல கொல்லப்பட்டனர். இது போல வேறு எங்கும் நடைபெற விட மாட்டோம் என்று சூளுரைத்த உலகம் கொலைகாரர்களை தட்டிக்கொடுத்தது. கொலை செய்யப்படுபவர்களை கண்டித்தது. அவர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த இனப் படுகொலை நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் வருவார்கள் சாரி சாரியாக. ”நாம் தவறு செய்துவிட்டோம், இனிமேல் இது போல மற்றொரு இனப்படுகொலை நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என சூளுரைப்பார்கள். திரைப்படங்கள் எடுத்து/பார்த்து கண்ணீர் சிந்தி ஆஸ்கர் பரிசுகொடுத்து தமது தூய்மையை நினைவூட்டிக்கொள்வார்கள். கட்டுரைகள் எழுதி புலிட்சர் பரிசுவாங்குவார்கள். ஏன் இலங்கையில் அமைதி கொண்டுவந்ததற்காக இந்திய இலங்கை ஏகாதிபத்தியங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது.

இங்கே யாருமே பரிசுத்தமில்லை. புலிகளும்தான். அவர்களின் முரட்டுத்தனங்களாலும், முட்டாள்தனங்களாலும் தமிழர்கள் அடைந்ததைவிட இழந்தது அதிகமாக இருக்கலாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு முன்னும் பின்னும் நின்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் தெரியும்.

இதோ அந்த புலிகள் முப்பதாண்டுகளில் முதன் முதலாக தாம் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஒரு போராட்டம் இப்படி முடிந்து விட்டதென்று வருத்தமாக இருக்கிறது. புலிகளின் மீது கோபமாகக்கூட இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் நிச்சயமாக புலிகளின் பேரில் பெருமையடைகிறேன். அவர்கள் தோல்வியில் ஒன்றும் அவமானமில்லை. அதீதமான பெருமைதான் மிச்சமிருக்கமுடியும். புலிகளே! புலிகளின் பின்னின்ற ஈழத் தமிழ் மக்களே! உங்களின் மன உறுதியும் வீரமும் வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு புலியின் தியாகமும் ஒரு சகாப்தம். உங்களுக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட முடியாத எமது கையாலாகாமையை எண்ணி வெட்கப்படும் அதே நேரம், நீங்கள் பேசிய மொழியை நானும் பேசுகிறேன் என்பதற்காக நான் பெருமை அடைகிறேன். அந்த மொழிக்காக நீங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்தீர்கள் என்பதை நினைக்கும் ஓவ்வொரு பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது. எங்களை உங்களது தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் அழைப்பீர்களே அதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும். உங்களது வீரத்தை நாங்கள் ஒரு காலத்திலும் மறக்கமாட்டோம். சர்வ தேசங்களின் துரோகத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தையும் நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

முப்பதாண்டு போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்து விட்டதென்று துக்கமுற வேண்டாம். இலட்சம் மக்களின் தியாகத்தினால் எதுவும் நடக்கவில்லையே என்று அழுது புலம்ப வேண்டாம். முப்பது இலட்சம் தமிழர்கள் அன்றாடம் பட்ட அவதிகளுக்கு ஒரு முடிவில்லையா என வருந்த வேண்டாம். உங்களது தொப்புள் கொடி உறவுகள் உங்களை கைவிட்டு விட்டார்களே என்று துயரமடைய வேண்டாம். நீங்கள் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போராடி களைத்துப்போய் இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து போராட்டச் சுடரை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். அமைதியான முறையில் நமது இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுகிறோம். இது ஓரிரு வருடங்களில் முடியலாம் இல்லை பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 3

At Sun May 17, 10:05:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

I am in Tears reading your post.

Yes, we will carry it forward till we get tamizh eelam

 
At Sun May 17, 10:26:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

எத்தனையோ வருடங்கள் எத்தனை உயிரிழ‌ப்புக்கள் எல்லாமே எந்தவித‌
பலனும் இல்லாமல் முடியப்போகிறது என்று நினைக்கும் போது
கதறி அழாமல் இருக்க முடியவில்லை.
நாம் படிக்கும் காலங்களில்
எத்தனையோ நண்பர்கள் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் எல்லோரும் தமிழ் மண், தனிழ் மக்கள் என்று மட்டும் தான் உச்சரித்தார்கள்.
எல்லோருமே எதிர்காலம் இழந்து நிற்கிறார்கள்.
அதுமட்டுமல்ல அவர்களது குடும்பங்கள் கூட நசுக்கப்பட்டுவிட்டது.
அவர்களுக்கு கிடைத்த பட்டம் பயங்கரவாதிகள் என்பது தான்.
நாம் எவ்வளவுக்கு சுயநலமாக எமது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறோமோ
அப்போது தான் நன்றாக‌ இருக்கலாம்.

 
At Mon May 18, 02:23:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

நேற்றய இலங்கை தமிழரின் நிலயை நினைத்தாள்., மிகவும் கொடுமை!
தமிழ் மொழி சநேல் தவிர பிற மொழி "சநேல் " ப்றேஅகிங்-நியூஸ் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவம்
கொன்றுவிடத யா ?
நமது சநேல் பாராளுமன்றத்தில் முதல் 3 சீட்
தன் (மகள், மகன், பேரன்) க்காக போராடும் நமது தலைவர்.

நாம் அடித்துக்கொண்டு அழுவது
தினம், தினம் சாகும் தமிழனுக்காக. அனால் பெரும் புள்ளிகள் சீட்டுக்காக !

"நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்" - முடிந்தது கதை !

பார்க்கலாம் என்ன தான் நடக்குமென்று?

வெட்கம் கெட்ட, மானம் கெட்ட.. ( No words). அரசியல்

கேவலமான வாழ்கை மட்டும் வாழ்கிறோமே! தமிழனே.

ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்யா மனிதர்களா நீ தமிழனே?

By,
தமிழன்.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல