ஜேகேவின் சில குறிப்புகள்: மூணார் குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, June 24, 2008

மூணார் குறிப்புகள்

- சன்னமான குளிர், அடர்த்தியான பசுமை, மெலிதான மழை, குளிர் காய வெயில் என பரவசமான சூழலுடன் இருந்தது மூணார். சென்னையின் அலுப்படிக்கும் எல்லாவிதமான பெயரெச்சங்களிலிருந்தும் சில மணிநேரம் தப்பியோட வெகு நாட்களாக திட்டமிட்டிருந்தாலும், எந்த திட்டமும் இல்லாமல் கடைசி நேரத்தில் கைகூடி வந்தது இப்பயணம்.

- மூணாருக்கு இரண்டாவது முறை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி தோழர்களுடன் சென்ற மகிழ்சியான அனுபவத்தை தொட்டு எனக்கு மூணார் மீது தனி பாசம். எனவே மூணார் எனக்கு மிகப் பிடிக்கும் எனச் சொல்ல தேவையே இல்லை. அந்த பயணத்தினதைப் போல முதலில் மாட்டுப்பட்டி அணைக்குச் சென்றோம். எந்த திட்டமும் இல்லாததால் அவசரமின்றி பசுமையையும் குளிர் காற்றையும் அனுபவித்தோம்.

- மாட்டுபட்டி தேக்கத்தின் நீர் விளிம்பையொட்டி சில நேரம் உலாத்திவிட்டு, அங்கிருந்து 20கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் உச்சி நிலையம்(Top Station) எனும் இடத்திற்கு சென்றோம். இப்பாதையின் ஒரு பகுதி சாலை மட்டும் மிக மோசமாக இருந்தது. என்னவென்று விசாரித்ததில் அப்பகுதி தமிழகத்தின் எல்லைக்குள் வருகிறது என்று தெரிவித்தார்கள். :-(

- உச்சி நிலையத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. எனவே கொஞ்சம் ஏமாற்றம். தேயிலைத் தோட்டத்தின் அலுவல் தொடர்பான இடம் போலும்(சாலை ஓரத்தில் பறிக்கப்பட்ட தேயிலைகளை அளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்). ஆனால் உச்சி நிலையத்தையொட்டி "பாம்பாடும் சோலை தேசிய வனச் சரணாலயம்(Pampadum shola national park)" இருக்கிறதென்று சொன்னார்கள் (Shola ஒரு விதமான காடு வகை. Shola என்ற ஆங்கிலச் சொல் தமிழின் "சோலை"யில் இருந்து வந்ததாம்). அங்கு மனோஜ் எனும் நன்றாக தமிழ் பேசும் வழிகாட்டியினுடன் காட்டிற்குள் நடந்து சென்றோம். ஒரு பெரிய காட்டெருமையும், 5 கிலோ எடையுள்ள அணிலும்(முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் இருந்தனவா எனக் கவனிக்கவில்லை) வரவேற்றன.

- கேரள வனத்துறையினரும், சுற்றுலாத்துறையினரும் புத்தி சாலிகள். எப்படி சுற்றுலா பயணிகளை கவர்வது என்பதை அவர்களிடம் கற்றுக்கொள்ளலாம். காட்டின் சில பகுதிகளில் Log Houses எனும் காட்டு வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கட்டிவைத்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவை திறக்கப்படுமாம். இரவில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக வீடுகளைச் சுற்றி அகழி தோண்டியிருக்கிறார்கள். ஒரு இரவு ஒரு குடும்பம் தங்க ~1500ரூ என மனோஜ் சொன்னார். அடுத்தமுறை வாய்ப்பு கிடைப்பின் இங்குதான் டேரா போட வேண்டும்.

- உச்சி நிலையத்திலிருந்து கொடைக்கானல் செல்ல வெள்ளைக்காரன் சாலை போட்டிருந்தானாம். "கொடைக்கானல் - 60கிமி" என ஒரு மைல் கல்லைக்கூட பார்த்தோம். அந்த சாலை இப்பொழுது மூடப்பட்டுள்ளது. சமீபமாக அச்சாலை மீண்டும் புதுப்பிக்கப் படுகிறதாம்.

- சாயுங்காலம் முற்றிய நிலையில் அன்றைய நடை பயணத்தை அத்துடன் முடித்துவிட்டோம். ஆனால் "பாம்பாடும் சோலை" அட்டகாசமாக இருந்ததால், மறுநாள் காலையிலும் அங்கே ஒரு நெடிய நடை பயணம் செல்லலாம் எனத் திட்டமிட்டோம். மனோஜ் ஒரு மூன்று மணி நேரப் பயணத்திற்கான திட்டத்தை கூறினார். காலையில் மீண்டும் சந்திக்கலாம் எனச்சொல்லிவிட்டு திரும்பினோம்.

- இரவு ஒரு காட்டேஜில் தங்கியிருந்தோம். எலோருக்கும் சாப்பாடு பார்சல். நான் ஒரு காரியத்தில் மும்முரமாக இருந்தேன். 11 மணி அளவில் சாப்பிட எத்தனித்த பொழுதுதான் கவனித்தேன், கொஞ்சம் "மயக்கத்தில்" இருந்த எனது நண்பர் என் சாப்பாட்டையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாரென்பதை. 'என் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட்ட நீர் இனிமேல் நண்பர் அல்ல எதிரி' என அவரை வைதுவிட்டு நல்லிரவில் மூணார் நகருக்குவந்து கையேந்திபவனத்தில் சாப்பிட்டேன்(அவர் செய்த காரியத்திற்கு என்னை வைதுகொண்டே "பாதி மயக்கம் தெளிந்த" நிலையில் அந்த எதிரியும் கூடவந்தார்).

- காலையில் அலுப்பாக இருந்ததாலும், இரவில் கொஞ்சம் மழை பெய்திருந்ததாலும், பாம்பாடும் சோலை செல்லும் திட்டத்தை கைவிட்டு அறையிலேயெ மதியம் வரை பொழுதைக் கழித்தோம். மதியம் போல ஸ்டீபன் எனும் இன்னொரு வழிகாட்டி அன்பருடன் மூனாரிலிருந்து தேனி செல்லும் வழியில் உள்ள இன்னொரு இடத்தில்(இடம் பெயர் மறந்து விட்டது) மலையேறச் சென்றோம்.

- சில அடி உயரம் ஏறியவுடனேயே மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது. மலையேறுவது எவ்வளவு பெரிய அகங்காரத்தையும் அடக்கிவிடும். இயற்கையிடம் சரணாகதி அடைந்து அதன் கருணைக்காக கெஞ்ச வேண்டியதுதான். அப்படி பலமுறை மன்றாடி, தொடர்ந்து ஏறியதில் நல்ல உயரத்தைத் தொட்டுவிட்டோம். மேகங்கள் எங்களைத் தழுவிச் சென்றன. அப்புறம் என்ன, பசுமைப் பரவசம்தான்.

- 6000 அடி உயரத்திற்கு மேல் மலை முகடுகளில் வாழும் அருகிவரும் வரையாடுகளைக்(Nilgiri Tahr) கண்டது மகிழ்சியை கூட்டியது. தற்சமயம் இவற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதிலும் சில ஆயிரங்களில்தான் இருக்கின்றனவாம்.

- மலையேறுவதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு செருப்புடன்தான் நான் சென்றிருந்தேன். அதனால் இறங்கும் பொழுது மிகக் கவனமாக இருந்தும் ஒரு இடத்தில் கால் பிசகி கீழே விழுந்தேன். சரியான சுளுக்கு. ஒற்றைக் கால் வலியுடன் கீழெ வந்து சேர்ந்தேன். அன்று இரவு சுத்தமாக நடக்க முடியவில்லை.

- மறுநாள் வலி கொஞ்சம் தேவலாம் போலிருந்தது. ஆனாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை. அன்றைய காலையையும் சோம்பலுடன் அறையிலேயே கழித்துவிட்டு, மதியம் போல ஊர் திரும்பினோம். வழியில் லக்கோம் நீர்வீழ்ச்சியில் குளியல்(யப்பா எவ்வளவு குளிரான தண்ணீர்!!).


பிகு: மூணாரில் 75% தமிழர்கள்தான் என்று ஒருவர் சொன்னார். அப்புறம் ஏன் கேரளாவிடம் விட்டார்கள் என்று தெரியவில்லை.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 7

At Fri Jun 27, 05:37:00 AM GMT-6, Blogger baarathisubbaiyah சொன்னது

J.K,YR MUNAR KURIPPUGAL VERY FINE. ARIVU

 
At Fri Jun 27, 10:19:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அறிவு,

மிக்க நன்றி.

 
At Fri Jun 27, 06:36:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

JK,
Your post rekindled the memories of our first trip to Munnar.
Nice to know that your friend boozed but you did not. :))
Satheesh

 
At Fri Jun 27, 06:36:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

JK,
Your post rekindled the memories of our first trip to Munnar.
Nice to know that your friend boozed but you did not. :))
Satheesh

 
At Fri Jun 27, 09:06:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

Satheesh,
Thanks for dropping by. Yes. It was very nostalgic.
On the second point, thanks for your generous and undeserved kudos :-)

 
At Sat Jun 28, 11:50:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

viraivil varugiren.. vaathi

 
At Sun Jun 29, 12:34:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

வாதி,

"வருகிறேன்", "வருகிறேன்"னு சொல்லிகிட்ருந்த தசாவதாரமே வந்துடுச்சி.

நீங்க சீக்கிரம் வாங்க. ஒரு கை பாத்துருவோம்

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல