போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்
ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of Anne Frank" எனும் 16 வயது சிறுமி இரண்டாண்டுகள் குடும்பத்துடன் நாஜிக்களிடமிருந்து ஒளிந்திருந்த பொழுது எழுதிய டயரிகுறிப்புகளையும், NCBH பதிப்பித்த "இரண்டாம் உலகப்போர்" புத்தகத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருந்தேன். எனினும் அப்பொழுதெல்லாம் நாஜிக்களின் பயங்கரம் முற்றிலும் உறைக்கவேயில்லை.
ஆனால் இந்த படங்கள் மிக மிக ஆழமாக யூதர்கள் மீதான நாசிக்களின் வன்முறையை மனதில் பதிய வைத்தது. இந்த இன அழிப்பின் முக்கிய குறியீடாக விளங்குவது 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்ட ஆஷ்ச்விட்ச் வதை முகாம். நான் வெகுநாட்களாக போகவேண்டும் என்று எண்ணியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.
கேடோவைஸ்(Katowice): மே 25ம் தேதி வேலை தொடர்பாக போலந்தின் தென் பகுதியில் உள்ள காட்டோவைஸ் சென்றேன். போலந்திலும் கோடை காலம் தானே என்று நினைத்துக்கொண்டு குளிர்தாங்கும் ஆடைகள் எதுவும் இல்லாமல் சென்றுவிட்டேன். நான் கிளம்பிய அன்று சென்னையில் 36/38டிகிரி செல்சியஸ் இருந்தது. கேடோவைஸில் 6டிகிரி. நான் அங்கு இருந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களில் மழை வேறு. மொத்ததில் எழும்பை கிள்ளும் குளிர். உச்சமான கோடைக்கே இந்த நிலைமை என்றால், குளிர் காலத்தில் எப்படி என்று நினைத்துக் கொண்டேன். -20 ரேஞ்சில் இருக்குமாம்.
கேடோவைஸில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஆஷ்ச்விட்ச் இருக்கிறது. ஆஷ்ச்விட்சில் பிரதான முகாமும், அதை ஒட்டிய பீர்கானவ் என்ற பரந்த இடத்தில் இரண்டாவது முகாமும் உள்ளன. உச்ச கோடையிலேயே 8டிகிரி வெப்பநிலையே உள்ள இந்த உறையவைக்கும் குளிரான இடத்தில்தான் வெறும் மரப்பலகைகளைக் கொண்டு அடைக்கப்பட்டு அணி அணியாக கட்டப்பட்ட எண்ணற்ற கொட்டகைகளில், பல்லாயிரக் கணக்கான யூதர்கள் அடிமை வேலைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஐரோப்பாவின் எல்லா மூலைகளிலிருந்தும் யூதர்கள் இரயிலில் ஆஷ்ச்விட்சிற்கு கொணரப்பட்டனர். ஆஷ்ச்விட்ச் நரக வதை முகாமிற்கு வரும் கைதிகள் வந்து இறங்கிய இரயில் மேடையிலேயெ இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நல்ல உடல் வாகுள்ள ஆரோக்கியமான, வேலை செய்யத் திறன் படைத்தவர்களை முகாமின் சிறைக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை, அதாவது, குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நேரடியாக வாயுக்கூடத்திற்கு அனுப்பி அவர்களின் கதையை உடனடியாக முடித்துவிடுவார்கள்.
வாயுக்கூடத்திற்கு செல்லாமல் தப்பி சிறைக்கூடத்திற்கு வந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரம் தான். கடுமையான வேலை, பசி, குளிர், நோய் போன்ற நரக வதைகளினால் பெரும்பாலானோர் இறந்துவிடுவார்கள்.
1940ல் தொடங்கப்பட்ட இந்த வதை முகாமில் 5 ஆண்டுகளில் 11 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர். ஆஷ்ச்விட்ச்-பீர்கானவ் முகாம்களில் மொத்தம் ஐந்து வாயுக்கூடமும், பினங்களை எரிக்கும் அறையும் இருந்தன. இவை அனைத்திலும் ஒருநாளைக்கு 10,000 பேரை கொலைசெய்து எரிக்க முடியும். ஆனாலும் கூட 1943, 1944ல் சில சமயங்களில் அதை விட அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். பின எரிப்பறையில் அனைத்து பிரேதங்களையும் எரிக்க முடியாததால் வெறும் குழிகளைத் தோண்டி அவற்றில் பினத்தைபோட்டு எரித்தார்களாம். அப்படிப்பட்ட ஆஷ்ச்விட்ச் முகாமிமை சுற்றி வந்த பொழுது மனதில் ஏற்பட்ட அழுத்தங்களையும் உணர்வுகளையும் என்னால் எளிதில் விவரிக்க முடியவில்லை.
மனிதன் சக மனிதன் மீது காட்டும் வெறுப்பு எப்படி அவனை மிருகமாக்கும் சக்தி உடையது என்பதற்கு இந்த முகாம் ஒரு சான்று. நாஜிக்களின் "யூதப் பிரச்சனைக்கான இறுதித்தீர்வு(Final Solution to Jewish Problem)" ஆக "இனப்படுகொலை" எப்படி முழு உருவம் பெற்றது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வளவு அநீதிகளுக்கும் ஹிட்லர் என்ற ஒருவர்தான் காரணம் என்பது பொதுப்படையான கருத்தமைவு. ஆனால் உண்மை அதைத் தாண்டியது. இப்படிச் சொல்வது, ஹிட்லரின் குற்றங்களை குறைத்து மதிப்பிடவல்ல. நாஜிக்களின் அட்டகாசத்தில் சாமான்யர்களின் பங்கையும் வெளிப் படுத்துவதற்காகவே. விளிம்பு நிலைச் சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்வோம் என்பதை எளிதில் அனுமானிக்க முடிவதில்லை.
"இறுதித்தீர்வு" ஹிட்லரால் திடீரென முன்மொழியப்படவில்லை. யூதர்கள் "கிறிஸ்துவை கொன்றவர்கள்" என்ற மத வெறி, சிறுபான்மையினரான யூதர்கள் "பொருளாதாரம், கல்வி, வேலை போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்கள்" என்ற பொறாமை கலந்த வெறுப்பு ஆகியவற்றின் பின்னனியில் யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பரவலாகக் காணப்பட்ட ஒன்று.
முதல் உலகப்போரில் தோல்வியின் பின் தனது பாசிசக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஹிட்லர், யூதர்கள் ஜெர்மனியை காட்டிக் கொடுத்ததுதான் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என்ற அறைகூவினார். தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.
ஏறக்குறைய பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த சம்பவங்களில் சாமான்யர்களின் பங்கு? சாதாரண ஜெர்மனிய குடிமக்கள், அரசு அலுவலர்கள், ஜெர்மனிய இரகசிய போலிசார்(SS), ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பிற நாட்டு அரசாங்கங்கள், அவற்றின் போலிசார், அந்நாட்டு குடிமக்கள், இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இறுதித்தீர்விற்கு பங்களித்திருக்கிறார்கள். அவர்களின் காரணம் பெரும்பாலும் "என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை" அல்லது "மேலிடத்து உத்தரவைத்தான் நிறைவேற்றினேன்" என்பதாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் பல்வேறு காலகட்டங்களில் வேறுமாதிரியான முடிவெடுத்திருக்கலாம். அப்படி எடுக்கவில்லை அதன் விலைதான் பல இலட்சம் உயிர்கள்.
இறுதித்தீர்வை நிகழ்த்திக் காட்ட நாஜிக்களுக்கு ஏராளமானோரின் உதவி தேவைப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்கங்களின் போலீஸ், கெட்டோக்களில் இருந்த யூத போலீசார்(??!!!) போன்றோரின் உதவியால்தான் பல இலட்சக் கணக்கிலான மக்கள் ஐரோப்பாவின் எல்லா மூலைகளில் இருந்தும் சுற்றி வலைக்கப்பட்டு இரயிலில் ஏற்றப்பட்டார்கள். வதை முகாம்களில் வந்திறங்கும் கைதிகளில் யார்
வாயுக்கூடத்திற்கு செல்வது, யார் அடிமை-வேலை சிறைக்கூடத்திற்கு செல்வது என்பதை மருத்துவர்கள்தான் தீர்மானித்தார்கள். மிகக் கச்சிதமான முறையில் அதிவேகமாக கொலைசெய்யும் வாயுக்கூடங்களையும், பின எரிப்பறைகளையும் பொறியாளர்கள்தான் வடிவமைத்தார்கள். யூதர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை, வீடுகளை, ஆபரணங்களை, சொல்வங்களை பல சாதாரண குடிமக்கள் எடுத்துக்கொண்ட பொழுது அவர்களுக்கு அது சரியெனப்பட்டிருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை பல காரணிகள். அவற்றில் முக்கியமானவையாக எனக்குத் தோன்றுவது, சக மனிதர்களின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு(நியாயமானதோ, அநியாயமானதோ), அநீதிகளை தமக்கு நிகழவில்லை என்பதற்காக சகித்துக் கொள்வது, மேலிடத்து உத்தரவு, நாட்டுப் பற்று என்ற போர்வைகளின் கீழ் பிறர்மீது இழைக்கப்படும் குற்றங்களுக்கு உடன்படுதல்.
நாம் எல்லோராலும் சந்தர்ப்பம் அமைந்தால் நாஜிக்களைப்போல கொடூரமாக நடந்துகொள்ள முடியும், யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அதனால்தான் நடந்து முடிந்த இந்த வரலாற்றின் பின்னனியில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிக முக்கியம். இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பாடங்கள். எனவேதான் என்னில் இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதுகிறேன்.
பதிவின் முடிவில் ஜெர்மானிய பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் கவிதை. இவர் முதலில் நாஜிக்களை ஆதரித்தவர், பின்னர் எதிர்க்கத் தொடங்கினார். அதனால் இவரை மியூனிக் அருகிலுள்ள டகாவ் வதை முகாமில் அடைத்து வைத்தனர். யுத்த முடிவில் இவர் நாஜிக்களிடுமிருந்து தப்பியவர். கீழ்காணும் இவரது கவிதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அழகாகத் தருகிறது...
முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.
பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை
பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை
பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.
பிகு 1: ஹிட்லரின் நாஜிக்கொடூரங்கள் பற்றிய அறிதல்/புரிதல் நம் மக்களிடையே மிகக் குறைவு என்று கருதுகிறேன். எங்க ஊரில் மட்டும் இரண்டு நபர்களின் பெயர்கள் "ஹிட்லர்".
பிகு 2: ஆஷ்ச்விட்ச் முகாம் சென்ற பொழுது கீழ்கண்ட இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இந்தப்பதிவில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை. இப்புத்தகங்களைப் பற்றி எழுத பல தனிப் பதிவுகள் வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்
பிகு 3: "The Diary of Anne Frank" என்ற புத்தகத்தின் மூலம் அறியப்பட்ட "ஆன் ஃப்ராங்க்" இந்த முகாமில்தான் சிறைவைக்கப் பட்டிருந்தார். யுத்தம் முடியும் தருவாயில் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கே உயிர் துறந்தார்.
பிகு 4: "Schindlers List" படத்தில் வரும் ஷிண்ட்லரின் தொழிற்சாலை அமைந்திருக்கும் க்ராகோ(krakow) நகரமும் இங்கிருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது.
Labels: ஆஷ்ச்விட்ச், கேடோவைஸ், நாஜி, போலந்து, யூதர்
படித்தவர்களின் கருத்துகள் - 13
//முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.
பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை
பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை
பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.//
புகழ்பெற்ற கவிதை. சாருநிவேதிதாவின் தப்புத்தாளங்களில் இந்த வதைமுகாம் பற்றியும் நாஜிக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.
அக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் இக்கவிதைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
நேர்த்தியான கட்டுரை.
தம்பி,
தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு எனது நன்றிக்கள்.
சாருவின் "தப்பு தாளங்களை" நானும் படித்திருக்கிறேன். அவர் குறிப்பிடும் வதை முகாம், ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் உள்ள ஒன்று(சான்சென்ஹாசன் என்று நினைக்கிறேன்).
நாஜிக்கள் எண்ணற்ற வதை/கொலை/கொத்தடிமை முகாம்களை வைத்திருந்தார்கள்.
:((((((((
மனதை ரொம்ப பாதிக்கும் பதிவு.
மிக நல்ல கட்டுரை ஜே கே விரிவாக பின்பு
மங்களூர் சிவா, அய்யனார்,
உங்களது வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்களுடைய விரிவான பின்னூட்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
ஜேகே
நண்பர் ஜேகே-வுக்கு,
யூதர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய நல்ல பதிவு. சம காலத்திலும் மனிதன் மனிதனுக்கெதிராக செய்யும் கொடுமைகள் கொஞ்சமல்ல.
நம் வாசகர்களுக்குப் பொதுவாக, உலக சரித்திர ஞானம் என்பது குறைவுதான். சினிமாவையும் தமிழ் அரசியலையும் விட்டு வெளியே வந்தாலல்லவா மற்றதற்கு வாய்ப்பு உண்டு?!
உங்கள் போலந்துப் பயணம் - முதன்முறையா? அலுவலக நிமித்தமா? வேறு எங்கு சென்றிருக்கிறீர்கள்? நிறைய எழுதுங்கள்.
Poznan போனீங்களா, போலந்தில் பார்க்க வேண்டிய இடம் என்று என் தோழி சொல்லுவாள்
vijay, அலுவல் தொடர்பாகத்தான் சென்றேன். போலந்திற்கு இதுவே முதல் முறை. ஒவ்வொரு புதிய இடத்திற்கும் செல்லும் பொழுதும் அதைப்பற்றி ஏதாவது எழுத முயற்சிப்பேன். சில நேரங்களிளேயே நடைபெறுகிறது. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
சின்ன அம்மிணி, நான் ஒரு வாரம்தான் போலந்தில் இருந்தேன் அதனால் வேறு எங்கும் செல்லமுடியவில்லை. அடுத்தமுறை வாய்புக் கிடைக்கும் பொழுது "Poznan"ஐயும் நினைவில் வைத்துக்கொள்கிறேன். உங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி.
//யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. //
உறுதியாகச் சொல்லமுடியும்; நாமும் மெளன சாட்சியாக, அமைதியாகத்தான் இருந்திருப்போம். அப்படித்தான் இருக்கிறோம். இதுவரை 200க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெளனமாகத்தான் இருந்தோம். இனிமேலும் இருப்போம். எனவே இது குறித்து அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன்.
// "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "The Diary of Anne Frank" //
மேற்சொன்ன படங்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன். அவற்றின் மூலம் உணரப்படும் வலிக்கு அளவில்லை.
சம காலத்தில் நடத்தப் படும் ஈழத் தமிழர் படுகொலையும், ஆஷ்விட்ச்சுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. மனித மனம் மரத்து வெகு நாட்களாகிவிட்டன. புகைப்படம் ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
தங்கமணி, தஞ்சாவூரான்,
உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இது தொடர்பாக நான் இன்னொரு பதிவு( இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்.) எழுதியுள்ளேன். நேரம் கிடைத்தால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
Victor Frankel படித்த போதும் மனது உருகியது... ஏன் இவ்வளவு கொடூரம் என்று கேள்விகள் எழுகின்றன.
சோகம் ... ஆறாத காயங்கள்..
உங்கள் பதிவுகள் சிந்திக்க வைக்கின்றன. நன்றி.
வெற்றிமகள்,
உங்களது வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. Victor Frankel பற்றி பகிர்ந்துகொள்ளுங்களேன்.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல