ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Saturday, June 14, 2008

ப்ளாட்டோவின் குடியரசும், மனுவின் ஸ்மிருதியும்

ப்ளாடோவின் உரையாடல்களின் பிரபலமானது "குடியரசு". ஒரு யுடோபியன் குடியரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கருதினாரோ அதை குடியரசில் விளக்கியிருப்பார். ப்ளாட்டோ காலத்தய கிரேக்கம் பல பெரிய பெரிய தன்னாட்சி உரிமையுடைய நகரங்களின் கூட்டமைப்பாக இருந்தது. ஏதன்ஸ், ஸ்பர்ர்டா போன்றவை சில பிரபலமான நகரங்கள். ஒவ்வொரு நகரமும் ஏதாவது ஒரு பிளாட்டோ போன்ற தத்துவ அறிஞர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பை பெற்றிருக்கும்.

இதனால் பல அரசியல் அமைப்பு முறைகளை அவர்கள் பின்பற்ற முயற்சித்தார்கள். அது போலவே ப்ளாடோ தனது குடியரசு அரசியலமைப்பை முன்வைக்கிறார். ப்ளாட்டோவின் குடியரசில் மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்படுவர். அவற்றில் அறிவாளிகளும், திறன் படைத்தவர்களும் முதலிடத்தில் இருப்பார்கள்(தங்க வகையறா). இவர்கள் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்கே குடியரசை ஆளும் தகுதி இருக்கும். இவர்களுக்கு அடுத்து நல்ல உடல் திறன் உடையவர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பார்கள்(வெள்ளி). இவர்கள் குடியரசை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் இராணுவ பொறுப்பை பெற்றிருப்பார்கள். கடைசியாக சாதாரண குடிமக்கள் இருப்பார்கள்(பித்தளைகள்). இவர்களது கடமை விவசாயம் மற்றும் பிற வேலைகளை செய்வார்கள். தமது குடியரசின் எல்லா கூறுகளையும் பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கும் ப்ளாட்டோ, மக்களை மூன்று வகுப்பாக பிரிப்பதை மட்டும் ஒரு அவசியாமான பொய் என்று ஒப்புக்கொள்கிறார். "குடியரசின் முதல் சில தலைமுறைகளை இந்த பொய்யை சற்ற சிரமத்துடன்தான் நம்பவைக்கவேண்டும். பின் வரும் தலைமுறைகள் இதையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்" என்கிறார்.

ஒரு பிரிவினில் உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும், பெரும்பாலும் அதே பிரிவை சேர்வர். குழந்தைகள் அந்த பிரிவிற்குறியதைவிட மிக அதிகமான திறமையோ அல்லது மிக குறைவான திறமையோ பெற்றிருந்தால் அதற்கேற்ப மேல் வகுப்பிற்கோ அல்லது கீழ் வகுப்பிற்கோ அனுமதிக்கப்படுவர் (தள்ளப்படுவர்). பிளாட்டோவின் இந்த கொள்கை பிறப்பின்( அல்லது இனத்தின்) அடிப்படையிலேயே ஒருவரது திறமையும் தகுதியும் அமைகிறது என்ற கருத்தமைவில் ஏற்பட்டது.

ப்ளாட்டோவின் குடியரசு கருத்தாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது, ப்ளாட்டோவற்கு முன்புருந்த ஸ்பார்டா என்ற நகரமாகும், சுமார் 800BC-300BC வரையில் ஸ்பார்டா நகரம் நிலையாகவும், போரில் பல வெற்றிகள் பெற்றும் மற்ற கிரேக்க நகரங்களுக்கு முன்மாதிரியாய் விளங்கியது. அதன் அரசியலமைப்பை அமைத்தவர் லிகர்கஸ் எனும் அறிஞர் எனக் கருதப்படுகிறார். ஸ்பார்டாவின் அரசமைப்பிலும், மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர். அவை 1) ஆளும் மக்கள், 2) ஸ்பார்டாவின் குடிமக்கள் (ஸ்பார்டன் / பெரியோசி), வேலைக்காரர்கள் (ஹெலாட்). ஆட்சி புரிபவர்களின் கடமை சட்டத்திற்குட்பட்டு ஆள்வது. குடிமக்களின் ஒரே கடமை சிறந்த போர்வீரர்களாக இருப்பதுதான். விவசாயம் முதலான மற்ற எல்லா வேலைகளும் மூன்றாவது பிரிவினராலேயே செய்யப்படும். ஏனெனில் உடல் உழைப்பு கீழ்த்தரமானதாக/தேவையற்றதாக கருதப்பட்டது. ஸ்பார்டாவின் இந்த "வெற்றிகரமான" அமைப்பே ப்ளாட்டோவின் கருத்தமைவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்பார்ட்டாவும், ப்ளாட்டோவின் குடியரசும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் பிரிவிற்கும் அதன் தொடர்ச்சியாக நாஜிக்களின் சிந்தனைக்கும் அடிகோலியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. அதைத்தவிர, இடைப்பட்ட 2000 ஆண்டுகளில் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" முறை சிந்தனை அடிப்படையில் பரவலாக இருந்தாலும் நிகழ்வில் எந்த ஐரோப்பாவின் எந்த அரசாலும் பின்பற்றப் படவில்லை.

குடி மக்களை நான்கு பிரிவாக பிரிக்கும் மனுவின் ஸ்மிருதியும், பிளாட்டோவின் குடியரசிற்கும் உள்ள ஒற்றுமைகளை தனியாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எலோருக்கும் எளிதில் புரிந்திருக்கும். எனக்கிருக்கும் ஓரிரண்டு கேள்விகள்...

1) ப்ளாட்டோவின், ஸ்பார்ட்டாவின் சிந்தனைகளும், மனுவின் வர்ண பிரிவும் ஏதாவது ஒரு பொது மூலக் கருத்தமைவில் இருந்து தோன்றியிருக்குமா. இரண்டும் ஏறக்குறைய சமகாலத்தவையாக தோன்றுகின்றன. இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு ஒரு மூல மொழியிருந்திருக்கலாம் என்ற மொழி வரலாற்றின் கூற்றுப்படியும் இது சாதகமாகவே தோன்றுகிறது.

2) 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ப்ளாட்டோவின் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" எனும் அநியாயமான அமைப்பை அவர்கள் எளிதில் கடந்து வந்து விட்டார்கள். இந்தியர்களுக்கு என்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்?

இணைப்புகள்

1) ஸ்பார்டா
2) ப்ளாட்டோவின் குடியரசு
3) பெரும்பாலான தகவல்கள் கருத்துகள் பெர்ட்ரந்த் ரஸ்ஸலின் History of Western Philosophyயிலிருந்த எடுத்தாளப்பட்டுள்ளன.

Labels: , , ,

Thursday, June 12, 2008

இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்

என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.

யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.

எனது முந்தைய பதிவிலிருந்து

//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//

இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.

ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.

ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...

தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.

நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்

1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான். "சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"
2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.

இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு.... சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

இதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு... My Vote For Free Tamil Eelam

மேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.

பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?

பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?

பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?

Labels: , , ,

Tuesday, June 10, 2008

போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்

ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of Anne Frank" எனும் 16 வயது சிறுமி இரண்டாண்டுகள் குடும்பத்துடன் நாஜிக்களிடமிருந்து ஒளிந்திருந்த பொழுது எழுதிய டயரிகுறிப்புகளையும், NCBH பதிப்பித்த "இரண்டாம் உலகப்போர்" புத்தகத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருந்தேன். எனினும் அப்பொழுதெல்லாம் நாஜிக்களின் பயங்கரம் முற்றிலும் உறைக்கவேயில்லை.

ஆனால் இந்த படங்கள் மிக மிக ஆழமாக யூதர்கள் மீதான நாசிக்களின் வன்முறையை மனதில் பதிய வைத்தது. இந்த இன அழிப்பின் முக்கிய குறியீடாக விளங்குவது 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்ட ஆஷ்ச்விட்ச் வதை முகாம். நான் வெகுநாட்களாக போகவேண்டும் என்று எண்ணியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.

கேடோவைஸ்(Katowice): மே 25ம் தேதி வேலை தொடர்பாக போலந்தின் தென் பகுதியில் உள்ள காட்டோவைஸ் சென்றேன். போலந்திலும் கோடை காலம் தானே என்று நினைத்துக்கொண்டு குளிர்தாங்கும் ஆடைகள் எதுவும் இல்லாமல் சென்றுவிட்டேன். நான் கிளம்பிய அன்று சென்னையில் 36/38டிகிரி செல்சியஸ் இருந்தது. கேடோவைஸில் 6டிகிரி. நான் அங்கு இருந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களில் மழை வேறு. மொத்ததில் எழும்பை கிள்ளும் குளிர். உச்சமான கோடைக்கே இந்த நிலைமை என்றால், குளிர் காலத்தில் எப்படி என்று நினைத்துக் கொண்டேன். -20 ரேஞ்சில் இருக்குமாம்.

கேடோவைஸில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஆஷ்ச்விட்ச் இருக்கிறது. ஆஷ்ச்விட்சில் பிரதான முகாமும், அதை ஒட்டிய பீர்கானவ் என்ற பரந்த இடத்தில் இரண்டாவது முகாமும் உள்ளன. உச்ச கோடையிலேயே 8டிகிரி வெப்பநிலையே உள்ள இந்த உறையவைக்கும் குளிரான இடத்தில்தான் வெறும் மரப்பலகைகளைக் கொண்டு அடைக்கப்பட்டு அணி அணியாக கட்டப்பட்ட எண்ணற்ற கொட்டகைகளில், பல்லாயிரக் கணக்கான யூதர்கள் அடிமை வேலைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஐரோப்பாவின் எல்லா மூலைகளிலிருந்தும் யூதர்கள் இரயிலில் ஆஷ்ச்விட்சிற்கு கொணரப்பட்டனர். ஆஷ்ச்விட்ச் நரக வதை முகாமிற்கு வரும் கைதிகள் வந்து இறங்கிய இரயில் மேடையிலேயெ இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நல்ல உடல் வாகுள்ள ஆரோக்கியமான, வேலை செய்யத் திறன் படைத்தவர்களை முகாமின் சிறைக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை, அதாவது, குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நேரடியாக வாயுக்கூடத்திற்கு அனுப்பி அவர்களின் கதையை உடனடியாக முடித்துவிடுவார்கள்.

வாயுக்கூடத்திற்கு செல்லாமல் தப்பி சிறைக்கூடத்திற்கு வந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரம் தான். கடுமையான வேலை, பசி, குளிர், நோய் போன்ற நரக வதைகளினால் பெரும்பாலானோர் இறந்துவிடுவார்கள்.

1940ல் தொடங்கப்பட்ட இந்த வதை முகாமில் 5 ஆண்டுகளில் 11 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர். ஆஷ்ச்விட்ச்-பீர்கானவ் முகாம்களில் மொத்தம் ஐந்து வாயுக்கூடமும், பினங்களை எரிக்கும் அறையும் இருந்தன. இவை அனைத்திலும் ஒருநாளைக்கு 10,000 பேரை கொலைசெய்து எரிக்க முடியும். ஆனாலும் கூட 1943, 1944ல் சில சமயங்களில் அதை விட அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். பின எரிப்பறையில் அனைத்து பிரேதங்களையும் எரிக்க முடியாததால் வெறும் குழிகளைத் தோண்டி அவற்றில் பினத்தைபோட்டு எரித்தார்களாம். அப்படிப்பட்ட ஆஷ்ச்விட்ச் முகாமிமை சுற்றி வந்த பொழுது மனதில் ஏற்பட்ட அழுத்தங்களையும் உணர்வுகளையும் என்னால் எளிதில் விவரிக்க முடியவில்லை.

மனிதன் சக மனிதன் மீது காட்டும் வெறுப்பு எப்படி அவனை மிருகமாக்கும் சக்தி உடையது என்பதற்கு இந்த முகாம் ஒரு சான்று. நாஜிக்களின் "யூதப் பிரச்சனைக்கான இறுதித்தீர்வு(Final Solution to Jewish Problem)" ஆக "இனப்படுகொலை" எப்படி முழு உருவம் பெற்றது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வளவு அநீதிகளுக்கும் ஹிட்லர் என்ற ஒருவர்தான் காரணம் என்பது பொதுப்படையான கருத்தமைவு. ஆனால் உண்மை அதைத் தாண்டியது. இப்படிச் சொல்வது, ஹிட்லரின் குற்றங்களை குறைத்து மதிப்பிடவல்ல. நாஜிக்களின் அட்டகாசத்தில் சாமான்யர்களின் பங்கையும் வெளிப் படுத்துவதற்காகவே. விளிம்பு நிலைச் சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்வோம் என்பதை எளிதில் அனுமானிக்க முடிவதில்லை.

"இறுதித்தீர்வு" ஹிட்லரால் திடீரென முன்மொழியப்படவில்லை. யூதர்கள் "கிறிஸ்துவை கொன்றவர்கள்" என்ற மத வெறி, சிறுபான்மையினரான யூதர்கள் "பொருளாதாரம், கல்வி, வேலை போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்கள்" என்ற பொறாமை கலந்த வெறுப்பு ஆகியவற்றின் பின்னனியில் யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பரவலாகக் காணப்பட்ட ஒன்று.

முதல் உலகப்போரில் தோல்வியின் பின் தனது பாசிசக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஹிட்லர், யூதர்கள் ஜெர்மனியை காட்டிக் கொடுத்ததுதான் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என்ற அறைகூவினார். தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.

ஏறக்குறைய பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த சம்பவங்களில் சாமான்யர்களின் பங்கு? சாதாரண ஜெர்மனிய குடிமக்கள், அரசு அலுவலர்கள், ஜெர்மனிய இரகசிய போலிசார்(SS), ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பிற நாட்டு அரசாங்கங்கள், அவற்றின் போலிசார், அந்நாட்டு குடிமக்கள், இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இறுதித்தீர்விற்கு பங்களித்திருக்கிறார்கள். அவர்களின் காரணம் பெரும்பாலும் "என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை" அல்லது "மேலிடத்து உத்தரவைத்தான் நிறைவேற்றினேன்" என்பதாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் பல்வேறு காலகட்டங்களில் வேறுமாதிரியான முடிவெடுத்திருக்கலாம். அப்படி எடுக்கவில்லை அதன் விலைதான் பல இலட்சம் உயிர்கள்.

இறுதித்தீர்வை நிகழ்த்திக் காட்ட நாஜிக்களுக்கு ஏராளமானோரின் உதவி தேவைப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்கங்களின் போலீஸ், கெட்டோக்களில் இருந்த யூத போலீசார்(??!!!) போன்றோரின் உதவியால்தான் பல இலட்சக் கணக்கிலான மக்கள் ஐரோப்பாவின் எல்லா மூலைகளில் இருந்தும் சுற்றி வலைக்கப்பட்டு இரயிலில் ஏற்றப்பட்டார்கள். வதை முகாம்களில் வந்திறங்கும் கைதிகளில் யார்

வாயுக்கூடத்திற்கு செல்வது, யார் அடிமை-வேலை சிறைக்கூடத்திற்கு செல்வது என்பதை மருத்துவர்கள்தான் தீர்மானித்தார்கள். மிகக் கச்சிதமான முறையில் அதிவேகமாக கொலைசெய்யும் வாயுக்கூடங்களையும், பின எரிப்பறைகளையும் பொறியாளர்கள்தான் வடிவமைத்தார்கள். யூதர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை, வீடுகளை, ஆபரணங்களை, சொல்வங்களை பல சாதாரண குடிமக்கள் எடுத்துக்கொண்ட பொழுது அவர்களுக்கு அது சரியெனப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை பல காரணிகள். அவற்றில் முக்கியமானவையாக எனக்குத் தோன்றுவது, சக மனிதர்களின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு(நியாயமானதோ, அநியாயமானதோ), அநீதிகளை தமக்கு நிகழவில்லை என்பதற்காக சகித்துக் கொள்வது, மேலிடத்து உத்தரவு, நாட்டுப் பற்று என்ற போர்வைகளின் கீழ் பிறர்மீது இழைக்கப்படும் குற்றங்களுக்கு உடன்படுதல்.

நாம் எல்லோராலும் சந்தர்ப்பம் அமைந்தால் நாஜிக்களைப்போல கொடூரமாக நடந்துகொள்ள முடியும், யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அதனால்தான் நடந்து முடிந்த இந்த வரலாற்றின் பின்னனியில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிக முக்கியம். இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பாடங்கள். எனவேதான் என்னில் இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதுகிறேன்.

பதிவின் முடிவில் ஜெர்மானிய பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் கவிதை. இவர் முதலில் நாஜிக்களை ஆதரித்தவர், பின்னர் எதிர்க்கத் தொடங்கினார். அதனால் இவரை மியூனிக் அருகிலுள்ள டகாவ் வதை முகாமில் அடைத்து வைத்தனர். யுத்த முடிவில் இவர் நாஜிக்களிடுமிருந்து தப்பியவர். கீழ்காணும் இவரது கவிதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அழகாகத் தருகிறது...

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.


பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை


பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை


பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

பிகு 1: ஹிட்லரின் நாஜிக்கொடூரங்கள் பற்றிய அறிதல்/புரிதல் நம் மக்களிடையே மிகக் குறைவு என்று கருதுகிறேன். எங்க ஊரில் மட்டும் இரண்டு நபர்களின் பெயர்கள் "ஹிட்லர்".

பிகு 2: ஆஷ்ச்விட்ச் முகாம் சென்ற பொழுது கீழ்கண்ட இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இந்தப்பதிவில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை. இப்புத்தகங்களைப் பற்றி எழுத பல தனிப் பதிவுகள் வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்
  1. Auschwitz: A New History by Laurence Rees
  2. Hope Is the Last to Die by Halina Birenbaum

பிகு 3: "The Diary of Anne Frank" என்ற புத்தகத்தின் மூலம் அறியப்பட்ட "ஆன் ஃப்ராங்க்" இந்த முகாமில்தான் சிறைவைக்கப் பட்டிருந்தார். யுத்தம் முடியும் தருவாயில் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கே உயிர் துறந்தார்.

பிகு 4: "Schindlers List" படத்தில் வரும் ஷிண்ட்லரின் தொழிற்சாலை அமைந்திருக்கும் க்ராகோ(krakow) நகரமும் இங்கிருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது.

Labels: , , , ,

Friday, March 28, 2008

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.

பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை

பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை

பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

:(

- ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம்.

Labels: , ,