ஜேகேவின் சில குறிப்புகள்: June 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, June 27, 2008

அதிபுது கூகிள் டாய்லெட்

கூகிள் நிறுவனம் எதைச் செய்தாலும் அது செய்தியாகிறது. காரணம் அது மற்றவர்களைத் தாண்டி ஒரு படி மேலே சென்று எல்லோரையும் "வாவ்" என சொல்ல வைப்பதே. அது போலத்தான் இதுவும் என்றாலும், கொஞ்சம் ஓவர். இருந்தாலும் பாருங்கள், "நம்ம முதலாளிகள் எல்லாம் ஏன் இப்படி யோசிக்க மாட்டங்கறங்க" என்ற வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கூகிளின் தலைமை அலுவலகத்தில் உள்ள கழிவறை பற்றிதான் மேட்டர். அதுலயும் டெக்னாலஜிய ஏகத்துக்கு காட்டி அமர்க்களப் படுத்தி இருக்கிறார்களாம்.கூகிளர்கள் வெளியேற்றிய பிறகு காகிதத்தை வைத்துக்கொண்டு சிரமப்பட வேண்டியதில்லை. பொத்தானைத் தட்டினால், முன்னால், பின்னால் என தானியங்கி தண்ணீர் அடித்து கழுவி விட்டு காயவைத்தும் விடுமாம். ஹ்ம்ம்ம்ம்

Behold the Google Office Toilet


Google Employees Even Get Japanese Space Toilets

Labels:

Tuesday, June 24, 2008

மூணார் குறிப்புகள்

- சன்னமான குளிர், அடர்த்தியான பசுமை, மெலிதான மழை, குளிர் காய வெயில் என பரவசமான சூழலுடன் இருந்தது மூணார். சென்னையின் அலுப்படிக்கும் எல்லாவிதமான பெயரெச்சங்களிலிருந்தும் சில மணிநேரம் தப்பியோட வெகு நாட்களாக திட்டமிட்டிருந்தாலும், எந்த திட்டமும் இல்லாமல் கடைசி நேரத்தில் கைகூடி வந்தது இப்பயணம்.

- மூணாருக்கு இரண்டாவது முறை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி தோழர்களுடன் சென்ற மகிழ்சியான அனுபவத்தை தொட்டு எனக்கு மூணார் மீது தனி பாசம். எனவே மூணார் எனக்கு மிகப் பிடிக்கும் எனச் சொல்ல தேவையே இல்லை. அந்த பயணத்தினதைப் போல முதலில் மாட்டுப்பட்டி அணைக்குச் சென்றோம். எந்த திட்டமும் இல்லாததால் அவசரமின்றி பசுமையையும் குளிர் காற்றையும் அனுபவித்தோம்.

- மாட்டுபட்டி தேக்கத்தின் நீர் விளிம்பையொட்டி சில நேரம் உலாத்திவிட்டு, அங்கிருந்து 20கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் உச்சி நிலையம்(Top Station) எனும் இடத்திற்கு சென்றோம். இப்பாதையின் ஒரு பகுதி சாலை மட்டும் மிக மோசமாக இருந்தது. என்னவென்று விசாரித்ததில் அப்பகுதி தமிழகத்தின் எல்லைக்குள் வருகிறது என்று தெரிவித்தார்கள். :-(

- உச்சி நிலையத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. எனவே கொஞ்சம் ஏமாற்றம். தேயிலைத் தோட்டத்தின் அலுவல் தொடர்பான இடம் போலும்(சாலை ஓரத்தில் பறிக்கப்பட்ட தேயிலைகளை அளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்). ஆனால் உச்சி நிலையத்தையொட்டி "பாம்பாடும் சோலை தேசிய வனச் சரணாலயம்(Pampadum shola national park)" இருக்கிறதென்று சொன்னார்கள் (Shola ஒரு விதமான காடு வகை. Shola என்ற ஆங்கிலச் சொல் தமிழின் "சோலை"யில் இருந்து வந்ததாம்). அங்கு மனோஜ் எனும் நன்றாக தமிழ் பேசும் வழிகாட்டியினுடன் காட்டிற்குள் நடந்து சென்றோம். ஒரு பெரிய காட்டெருமையும், 5 கிலோ எடையுள்ள அணிலும்(முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் இருந்தனவா எனக் கவனிக்கவில்லை) வரவேற்றன.

- கேரள வனத்துறையினரும், சுற்றுலாத்துறையினரும் புத்தி சாலிகள். எப்படி சுற்றுலா பயணிகளை கவர்வது என்பதை அவர்களிடம் கற்றுக்கொள்ளலாம். காட்டின் சில பகுதிகளில் Log Houses எனும் காட்டு வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கட்டிவைத்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவை திறக்கப்படுமாம். இரவில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக வீடுகளைச் சுற்றி அகழி தோண்டியிருக்கிறார்கள். ஒரு இரவு ஒரு குடும்பம் தங்க ~1500ரூ என மனோஜ் சொன்னார். அடுத்தமுறை வாய்ப்பு கிடைப்பின் இங்குதான் டேரா போட வேண்டும்.

- உச்சி நிலையத்திலிருந்து கொடைக்கானல் செல்ல வெள்ளைக்காரன் சாலை போட்டிருந்தானாம். "கொடைக்கானல் - 60கிமி" என ஒரு மைல் கல்லைக்கூட பார்த்தோம். அந்த சாலை இப்பொழுது மூடப்பட்டுள்ளது. சமீபமாக அச்சாலை மீண்டும் புதுப்பிக்கப் படுகிறதாம்.

- சாயுங்காலம் முற்றிய நிலையில் அன்றைய நடை பயணத்தை அத்துடன் முடித்துவிட்டோம். ஆனால் "பாம்பாடும் சோலை" அட்டகாசமாக இருந்ததால், மறுநாள் காலையிலும் அங்கே ஒரு நெடிய நடை பயணம் செல்லலாம் எனத் திட்டமிட்டோம். மனோஜ் ஒரு மூன்று மணி நேரப் பயணத்திற்கான திட்டத்தை கூறினார். காலையில் மீண்டும் சந்திக்கலாம் எனச்சொல்லிவிட்டு திரும்பினோம்.

- இரவு ஒரு காட்டேஜில் தங்கியிருந்தோம். எலோருக்கும் சாப்பாடு பார்சல். நான் ஒரு காரியத்தில் மும்முரமாக இருந்தேன். 11 மணி அளவில் சாப்பிட எத்தனித்த பொழுதுதான் கவனித்தேன், கொஞ்சம் "மயக்கத்தில்" இருந்த எனது நண்பர் என் சாப்பாட்டையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாரென்பதை. 'என் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட்ட நீர் இனிமேல் நண்பர் அல்ல எதிரி' என அவரை வைதுவிட்டு நல்லிரவில் மூணார் நகருக்குவந்து கையேந்திபவனத்தில் சாப்பிட்டேன்(அவர் செய்த காரியத்திற்கு என்னை வைதுகொண்டே "பாதி மயக்கம் தெளிந்த" நிலையில் அந்த எதிரியும் கூடவந்தார்).

- காலையில் அலுப்பாக இருந்ததாலும், இரவில் கொஞ்சம் மழை பெய்திருந்ததாலும், பாம்பாடும் சோலை செல்லும் திட்டத்தை கைவிட்டு அறையிலேயெ மதியம் வரை பொழுதைக் கழித்தோம். மதியம் போல ஸ்டீபன் எனும் இன்னொரு வழிகாட்டி அன்பருடன் மூனாரிலிருந்து தேனி செல்லும் வழியில் உள்ள இன்னொரு இடத்தில்(இடம் பெயர் மறந்து விட்டது) மலையேறச் சென்றோம்.

- சில அடி உயரம் ஏறியவுடனேயே மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது. மலையேறுவது எவ்வளவு பெரிய அகங்காரத்தையும் அடக்கிவிடும். இயற்கையிடம் சரணாகதி அடைந்து அதன் கருணைக்காக கெஞ்ச வேண்டியதுதான். அப்படி பலமுறை மன்றாடி, தொடர்ந்து ஏறியதில் நல்ல உயரத்தைத் தொட்டுவிட்டோம். மேகங்கள் எங்களைத் தழுவிச் சென்றன. அப்புறம் என்ன, பசுமைப் பரவசம்தான்.

- 6000 அடி உயரத்திற்கு மேல் மலை முகடுகளில் வாழும் அருகிவரும் வரையாடுகளைக்(Nilgiri Tahr) கண்டது மகிழ்சியை கூட்டியது. தற்சமயம் இவற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதிலும் சில ஆயிரங்களில்தான் இருக்கின்றனவாம்.

- மலையேறுவதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு செருப்புடன்தான் நான் சென்றிருந்தேன். அதனால் இறங்கும் பொழுது மிகக் கவனமாக இருந்தும் ஒரு இடத்தில் கால் பிசகி கீழே விழுந்தேன். சரியான சுளுக்கு. ஒற்றைக் கால் வலியுடன் கீழெ வந்து சேர்ந்தேன். அன்று இரவு சுத்தமாக நடக்க முடியவில்லை.

- மறுநாள் வலி கொஞ்சம் தேவலாம் போலிருந்தது. ஆனாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை. அன்றைய காலையையும் சோம்பலுடன் அறையிலேயே கழித்துவிட்டு, மதியம் போல ஊர் திரும்பினோம். வழியில் லக்கோம் நீர்வீழ்ச்சியில் குளியல்(யப்பா எவ்வளவு குளிரான தண்ணீர்!!).


பிகு: மூணாரில் 75% தமிழர்கள்தான் என்று ஒருவர் சொன்னார். அப்புறம் ஏன் கேரளாவிடம் விட்டார்கள் என்று தெரியவில்லை.

Labels: ,

Thursday, June 19, 2008

என். ராம் பற்றி பி. ராமன் - மறுபடியும்

பி இராமன், "த ஹிந்து" என். ராமை மறுபடி ஒரு பிடி பிடித்துள்ளார். காரணம் சில மாதங்களுக்கு முன் நடந்த திபெத் கொந்தளிப்பின் பொழுது, ராம் எழுதிய ஒரு கருத்துப் பத்தி. இந்த கருத்துப் பத்தியை கண்டு உள்ளம் குளிர்ந்த சீன காம்ரேடுகள் அதை பல மொழிகளில் பெயர்த்து தமது உள்/வெளி நாட்டு பிரச்சாரத்துக்கும் "நாட்டுப் பற்று" போதனைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்களாம்.

பி ராமன் எல்லோரையும் "த ஹிந்து"வை புறக்கனியுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்.

SHRI N.RAM, THE TOAST OF CHINA


//As you move around Chennai, you see thousands of advertisements inviting you to buy "The Hindu". When you see those advertisements,think of Shri Ram and his writings in support of the Chinese and in demonisation of the Dalai Lama and the Tibetans and ask yourself thequestion:" Does such a newspaper deserve my continued support?". The choice is yours. Fortunately, despite Shri Ram and his ilk, India isnot China. We have a wide choice and we are not captive readers of Hsinhua. We don't have to worry that if we stop buying and reading"The Hindu", we may end in patriotic re-education classes.(18-6-08) //

தொடர்புடைய மற்றொரு பதிவு : திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்

பிகு: மனிதர்களின் "நல்வழி திசைகாட்டி(moral compass)" எத்தனை திசைகளைத்தான் காட்டுகிறது. என்னமோ போங்க எல்லாம் நல்லா நடந்தா சரிதான்.

Labels: , ,

Sunday, June 15, 2008

எதிர்பார்ப்புகள் + ஏமாற்றங்கள் = பொதுமன்னிப்புகள்

மனிதர்களின் சடத்துவத்தை தாண்டி அவர்களை இயக்குவது மிக சிரமம் பிடித்த காரியம். அது நியூட்டனின் இயக்க விதிகளையும், சமன்பாடுகளையும் தாண்டியது. அவர்களுக்கு எதை செய்ய வேண்டியிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையாவது செய்வதே எளிது. அப்படிப்பட்டவர்களில் முதலில் இருப்பது நானாகத்தானிருக்கும். எழுத நினைக்கும் பொழுது ஏற்படும் ஆற்றல் பிரவாகம் எழுத யத்தனிக்கும் பொழுது காணாமல் போய்விடுகிறது. சில நாட்களுக்கு முன் தமிழ் விக்கியில் பொறியியல் கட்டுரைகளை வடிக்கவேண்டுமென "விக்கி பொறியியல் திட்டத்தை" படாடோபமாக தொடங்கினேன். ஒருகட்டுரையில் கால்வாசி எழுதுவதற்கு முன்னரே கண்ணை கட்டிவிட்டது. சில நாட்களாக விக்கி பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை,

எவ்வளவோ விடயங்களைப் பற்றி பதிவுகள் எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். அவை அத்துடனேயே முடிந்து விடுகின்றன. இதற்கிடையில் எப்படி "சில குறிப்புகளை" நட்சத்திரப் பதிவாக முன்நிறுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர் என்ற வினா எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் குழப்பத்தையும்(பேர் மாற்றி நமக்கு அனுப்பிவிட்டார்களா?) ஏற்படுத்தியது. இருப்பினும் தத்து பித்து என்று ஓரிரு பதிவுகளை தட்டி வலையேற்றி ஒரு வாரத்தை நியூட்டனின் சமன்பாடுகளின்படி இல்லா விட்டாலும், மர்பியின் விதிப்படி(If some thing can go wrong, it will) தள்ளியாயிற்று.

நட்சத்திரப் பதிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரிகிறது. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் இந்த வாரம் பெரும்பாலும் அவை ஏமாற்றங்களிலேயே முடிந்திருக்கும். எனவேதான் பொதுமன்னிப்பு கோரல் படலம்.

இருப்பினும், ஏராளமான அன்பர்கள் பதிவை படித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். மிகுந்த மகிழ்சியாய் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் நன்றி. தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு மீண்டுமொருமுறை நன்றி.

பிகு 1: நட்சத்திர வாரத்திலேயே சாதாரணமாக பதியும் "நான்"கள் ஒருபுறமிருக்க, சாதாரண நாட்களிலேயே நட்சத்திரங்களாக மின்னும் பல பதிவர்கள் எப்படி தினம் தினம் அல்லது அடிக்கடி நேர்த்தியான பதிவுகளை எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராகவும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கும்.

பிகு 2: சரி அப்படிப்பட்ட தாரகைகளை நேரிலேயே சந்தித்துவிடலாம் என்றெண்ணி இன்றைய வலைப்பதிவர் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்கள் எல்லோரிடமும் அறிமுகமும், Inspirationம் பெற்றுக்கொண்டேன். கூட்டத்தை அருமையாக ஏற்பாடு செய்திருந்த பாலபாரதி குழுவினருக்கும், வந்திருந்த சக பதிவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் நிரம்ப மகிழ்ச்சி.

பிகு 3: அடுத்த வார நட்சத்திரப்பதிவருக்கு எனது வாழ்த்துகள்.

Labels: , ,

Saturday, June 14, 2008

ப்ளாட்டோவின் குடியரசும், மனுவின் ஸ்மிருதியும்

ப்ளாடோவின் உரையாடல்களின் பிரபலமானது "குடியரசு". ஒரு யுடோபியன் குடியரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கருதினாரோ அதை குடியரசில் விளக்கியிருப்பார். ப்ளாட்டோ காலத்தய கிரேக்கம் பல பெரிய பெரிய தன்னாட்சி உரிமையுடைய நகரங்களின் கூட்டமைப்பாக இருந்தது. ஏதன்ஸ், ஸ்பர்ர்டா போன்றவை சில பிரபலமான நகரங்கள். ஒவ்வொரு நகரமும் ஏதாவது ஒரு பிளாட்டோ போன்ற தத்துவ அறிஞர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பை பெற்றிருக்கும்.

இதனால் பல அரசியல் அமைப்பு முறைகளை அவர்கள் பின்பற்ற முயற்சித்தார்கள். அது போலவே ப்ளாடோ தனது குடியரசு அரசியலமைப்பை முன்வைக்கிறார். ப்ளாட்டோவின் குடியரசில் மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்படுவர். அவற்றில் அறிவாளிகளும், திறன் படைத்தவர்களும் முதலிடத்தில் இருப்பார்கள்(தங்க வகையறா). இவர்கள் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்கே குடியரசை ஆளும் தகுதி இருக்கும். இவர்களுக்கு அடுத்து நல்ல உடல் திறன் உடையவர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பார்கள்(வெள்ளி). இவர்கள் குடியரசை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் இராணுவ பொறுப்பை பெற்றிருப்பார்கள். கடைசியாக சாதாரண குடிமக்கள் இருப்பார்கள்(பித்தளைகள்). இவர்களது கடமை விவசாயம் மற்றும் பிற வேலைகளை செய்வார்கள். தமது குடியரசின் எல்லா கூறுகளையும் பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கும் ப்ளாட்டோ, மக்களை மூன்று வகுப்பாக பிரிப்பதை மட்டும் ஒரு அவசியாமான பொய் என்று ஒப்புக்கொள்கிறார். "குடியரசின் முதல் சில தலைமுறைகளை இந்த பொய்யை சற்ற சிரமத்துடன்தான் நம்பவைக்கவேண்டும். பின் வரும் தலைமுறைகள் இதையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்" என்கிறார்.

ஒரு பிரிவினில் உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும், பெரும்பாலும் அதே பிரிவை சேர்வர். குழந்தைகள் அந்த பிரிவிற்குறியதைவிட மிக அதிகமான திறமையோ அல்லது மிக குறைவான திறமையோ பெற்றிருந்தால் அதற்கேற்ப மேல் வகுப்பிற்கோ அல்லது கீழ் வகுப்பிற்கோ அனுமதிக்கப்படுவர் (தள்ளப்படுவர்). பிளாட்டோவின் இந்த கொள்கை பிறப்பின்( அல்லது இனத்தின்) அடிப்படையிலேயே ஒருவரது திறமையும் தகுதியும் அமைகிறது என்ற கருத்தமைவில் ஏற்பட்டது.

ப்ளாட்டோவின் குடியரசு கருத்தாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது, ப்ளாட்டோவற்கு முன்புருந்த ஸ்பார்டா என்ற நகரமாகும், சுமார் 800BC-300BC வரையில் ஸ்பார்டா நகரம் நிலையாகவும், போரில் பல வெற்றிகள் பெற்றும் மற்ற கிரேக்க நகரங்களுக்கு முன்மாதிரியாய் விளங்கியது. அதன் அரசியலமைப்பை அமைத்தவர் லிகர்கஸ் எனும் அறிஞர் எனக் கருதப்படுகிறார். ஸ்பார்டாவின் அரசமைப்பிலும், மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர். அவை 1) ஆளும் மக்கள், 2) ஸ்பார்டாவின் குடிமக்கள் (ஸ்பார்டன் / பெரியோசி), வேலைக்காரர்கள் (ஹெலாட்). ஆட்சி புரிபவர்களின் கடமை சட்டத்திற்குட்பட்டு ஆள்வது. குடிமக்களின் ஒரே கடமை சிறந்த போர்வீரர்களாக இருப்பதுதான். விவசாயம் முதலான மற்ற எல்லா வேலைகளும் மூன்றாவது பிரிவினராலேயே செய்யப்படும். ஏனெனில் உடல் உழைப்பு கீழ்த்தரமானதாக/தேவையற்றதாக கருதப்பட்டது. ஸ்பார்டாவின் இந்த "வெற்றிகரமான" அமைப்பே ப்ளாட்டோவின் கருத்தமைவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்பார்ட்டாவும், ப்ளாட்டோவின் குடியரசும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் பிரிவிற்கும் அதன் தொடர்ச்சியாக நாஜிக்களின் சிந்தனைக்கும் அடிகோலியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. அதைத்தவிர, இடைப்பட்ட 2000 ஆண்டுகளில் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" முறை சிந்தனை அடிப்படையில் பரவலாக இருந்தாலும் நிகழ்வில் எந்த ஐரோப்பாவின் எந்த அரசாலும் பின்பற்றப் படவில்லை.

குடி மக்களை நான்கு பிரிவாக பிரிக்கும் மனுவின் ஸ்மிருதியும், பிளாட்டோவின் குடியரசிற்கும் உள்ள ஒற்றுமைகளை தனியாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எலோருக்கும் எளிதில் புரிந்திருக்கும். எனக்கிருக்கும் ஓரிரண்டு கேள்விகள்...

1) ப்ளாட்டோவின், ஸ்பார்ட்டாவின் சிந்தனைகளும், மனுவின் வர்ண பிரிவும் ஏதாவது ஒரு பொது மூலக் கருத்தமைவில் இருந்து தோன்றியிருக்குமா. இரண்டும் ஏறக்குறைய சமகாலத்தவையாக தோன்றுகின்றன. இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு ஒரு மூல மொழியிருந்திருக்கலாம் என்ற மொழி வரலாற்றின் கூற்றுப்படியும் இது சாதகமாகவே தோன்றுகிறது.

2) 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ப்ளாட்டோவின் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" எனும் அநியாயமான அமைப்பை அவர்கள் எளிதில் கடந்து வந்து விட்டார்கள். இந்தியர்களுக்கு என்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்?

இணைப்புகள்

1) ஸ்பார்டா
2) ப்ளாட்டோவின் குடியரசு
3) பெரும்பாலான தகவல்கள் கருத்துகள் பெர்ட்ரந்த் ரஸ்ஸலின் History of Western Philosophyயிலிருந்த எடுத்தாளப்பட்டுள்ளன.

Labels: , , ,

Thursday, June 12, 2008

இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்

என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.

யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.

எனது முந்தைய பதிவிலிருந்து

//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//

இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.

ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.

ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...

தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.

நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்

1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான். "சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"
2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.

இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு.... சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

இதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு... My Vote For Free Tamil Eelam

மேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.

பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?

பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?

பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?

Labels: , , ,

Tuesday, June 10, 2008

போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்

ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of Anne Frank" எனும் 16 வயது சிறுமி இரண்டாண்டுகள் குடும்பத்துடன் நாஜிக்களிடமிருந்து ஒளிந்திருந்த பொழுது எழுதிய டயரிகுறிப்புகளையும், NCBH பதிப்பித்த "இரண்டாம் உலகப்போர்" புத்தகத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருந்தேன். எனினும் அப்பொழுதெல்லாம் நாஜிக்களின் பயங்கரம் முற்றிலும் உறைக்கவேயில்லை.

ஆனால் இந்த படங்கள் மிக மிக ஆழமாக யூதர்கள் மீதான நாசிக்களின் வன்முறையை மனதில் பதிய வைத்தது. இந்த இன அழிப்பின் முக்கிய குறியீடாக விளங்குவது 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்ட ஆஷ்ச்விட்ச் வதை முகாம். நான் வெகுநாட்களாக போகவேண்டும் என்று எண்ணியிருந்த இடங்களில் இதுவும் ஒன்று.

கேடோவைஸ்(Katowice): மே 25ம் தேதி வேலை தொடர்பாக போலந்தின் தென் பகுதியில் உள்ள காட்டோவைஸ் சென்றேன். போலந்திலும் கோடை காலம் தானே என்று நினைத்துக்கொண்டு குளிர்தாங்கும் ஆடைகள் எதுவும் இல்லாமல் சென்றுவிட்டேன். நான் கிளம்பிய அன்று சென்னையில் 36/38டிகிரி செல்சியஸ் இருந்தது. கேடோவைஸில் 6டிகிரி. நான் அங்கு இருந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களில் மழை வேறு. மொத்ததில் எழும்பை கிள்ளும் குளிர். உச்சமான கோடைக்கே இந்த நிலைமை என்றால், குளிர் காலத்தில் எப்படி என்று நினைத்துக் கொண்டேன். -20 ரேஞ்சில் இருக்குமாம்.

கேடோவைஸில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஆஷ்ச்விட்ச் இருக்கிறது. ஆஷ்ச்விட்சில் பிரதான முகாமும், அதை ஒட்டிய பீர்கானவ் என்ற பரந்த இடத்தில் இரண்டாவது முகாமும் உள்ளன. உச்ச கோடையிலேயே 8டிகிரி வெப்பநிலையே உள்ள இந்த உறையவைக்கும் குளிரான இடத்தில்தான் வெறும் மரப்பலகைகளைக் கொண்டு அடைக்கப்பட்டு அணி அணியாக கட்டப்பட்ட எண்ணற்ற கொட்டகைகளில், பல்லாயிரக் கணக்கான யூதர்கள் அடிமை வேலைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஐரோப்பாவின் எல்லா மூலைகளிலிருந்தும் யூதர்கள் இரயிலில் ஆஷ்ச்விட்சிற்கு கொணரப்பட்டனர். ஆஷ்ச்விட்ச் நரக வதை முகாமிற்கு வரும் கைதிகள் வந்து இறங்கிய இரயில் மேடையிலேயெ இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நல்ல உடல் வாகுள்ள ஆரோக்கியமான, வேலை செய்யத் திறன் படைத்தவர்களை முகாமின் சிறைக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை, அதாவது, குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நேரடியாக வாயுக்கூடத்திற்கு அனுப்பி அவர்களின் கதையை உடனடியாக முடித்துவிடுவார்கள்.

வாயுக்கூடத்திற்கு செல்லாமல் தப்பி சிறைக்கூடத்திற்கு வந்தவர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரம் தான். கடுமையான வேலை, பசி, குளிர், நோய் போன்ற நரக வதைகளினால் பெரும்பாலானோர் இறந்துவிடுவார்கள்.

1940ல் தொடங்கப்பட்ட இந்த வதை முகாமில் 5 ஆண்டுகளில் 11 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர். ஆஷ்ச்விட்ச்-பீர்கானவ் முகாம்களில் மொத்தம் ஐந்து வாயுக்கூடமும், பினங்களை எரிக்கும் அறையும் இருந்தன. இவை அனைத்திலும் ஒருநாளைக்கு 10,000 பேரை கொலைசெய்து எரிக்க முடியும். ஆனாலும் கூட 1943, 1944ல் சில சமயங்களில் அதை விட அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். பின எரிப்பறையில் அனைத்து பிரேதங்களையும் எரிக்க முடியாததால் வெறும் குழிகளைத் தோண்டி அவற்றில் பினத்தைபோட்டு எரித்தார்களாம். அப்படிப்பட்ட ஆஷ்ச்விட்ச் முகாமிமை சுற்றி வந்த பொழுது மனதில் ஏற்பட்ட அழுத்தங்களையும் உணர்வுகளையும் என்னால் எளிதில் விவரிக்க முடியவில்லை.

மனிதன் சக மனிதன் மீது காட்டும் வெறுப்பு எப்படி அவனை மிருகமாக்கும் சக்தி உடையது என்பதற்கு இந்த முகாம் ஒரு சான்று. நாஜிக்களின் "யூதப் பிரச்சனைக்கான இறுதித்தீர்வு(Final Solution to Jewish Problem)" ஆக "இனப்படுகொலை" எப்படி முழு உருவம் பெற்றது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வளவு அநீதிகளுக்கும் ஹிட்லர் என்ற ஒருவர்தான் காரணம் என்பது பொதுப்படையான கருத்தமைவு. ஆனால் உண்மை அதைத் தாண்டியது. இப்படிச் சொல்வது, ஹிட்லரின் குற்றங்களை குறைத்து மதிப்பிடவல்ல. நாஜிக்களின் அட்டகாசத்தில் சாமான்யர்களின் பங்கையும் வெளிப் படுத்துவதற்காகவே. விளிம்பு நிலைச் சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்வோம் என்பதை எளிதில் அனுமானிக்க முடிவதில்லை.

"இறுதித்தீர்வு" ஹிட்லரால் திடீரென முன்மொழியப்படவில்லை. யூதர்கள் "கிறிஸ்துவை கொன்றவர்கள்" என்ற மத வெறி, சிறுபான்மையினரான யூதர்கள் "பொருளாதாரம், கல்வி, வேலை போன்றவற்றில் முன்னேறியிருக்கிறார்கள்" என்ற பொறாமை கலந்த வெறுப்பு ஆகியவற்றின் பின்னனியில் யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் பரவலாகக் காணப்பட்ட ஒன்று.

முதல் உலகப்போரில் தோல்வியின் பின் தனது பாசிசக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஹிட்லர், யூதர்கள் ஜெர்மனியை காட்டிக் கொடுத்ததுதான் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என்ற அறைகூவினார். தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.

ஏறக்குறைய பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த சம்பவங்களில் சாமான்யர்களின் பங்கு? சாதாரண ஜெர்மனிய குடிமக்கள், அரசு அலுவலர்கள், ஜெர்மனிய இரகசிய போலிசார்(SS), ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பிற நாட்டு அரசாங்கங்கள், அவற்றின் போலிசார், அந்நாட்டு குடிமக்கள், இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இறுதித்தீர்விற்கு பங்களித்திருக்கிறார்கள். அவர்களின் காரணம் பெரும்பாலும் "என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை" அல்லது "மேலிடத்து உத்தரவைத்தான் நிறைவேற்றினேன்" என்பதாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் பல்வேறு காலகட்டங்களில் வேறுமாதிரியான முடிவெடுத்திருக்கலாம். அப்படி எடுக்கவில்லை அதன் விலைதான் பல இலட்சம் உயிர்கள்.

இறுதித்தீர்வை நிகழ்த்திக் காட்ட நாஜிக்களுக்கு ஏராளமானோரின் உதவி தேவைப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்கங்களின் போலீஸ், கெட்டோக்களில் இருந்த யூத போலீசார்(??!!!) போன்றோரின் உதவியால்தான் பல இலட்சக் கணக்கிலான மக்கள் ஐரோப்பாவின் எல்லா மூலைகளில் இருந்தும் சுற்றி வலைக்கப்பட்டு இரயிலில் ஏற்றப்பட்டார்கள். வதை முகாம்களில் வந்திறங்கும் கைதிகளில் யார்

வாயுக்கூடத்திற்கு செல்வது, யார் அடிமை-வேலை சிறைக்கூடத்திற்கு செல்வது என்பதை மருத்துவர்கள்தான் தீர்மானித்தார்கள். மிகக் கச்சிதமான முறையில் அதிவேகமாக கொலைசெய்யும் வாயுக்கூடங்களையும், பின எரிப்பறைகளையும் பொறியாளர்கள்தான் வடிவமைத்தார்கள். யூதர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை, வீடுகளை, ஆபரணங்களை, சொல்வங்களை பல சாதாரண குடிமக்கள் எடுத்துக்கொண்ட பொழுது அவர்களுக்கு அது சரியெனப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை பல காரணிகள். அவற்றில் முக்கியமானவையாக எனக்குத் தோன்றுவது, சக மனிதர்களின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு(நியாயமானதோ, அநியாயமானதோ), அநீதிகளை தமக்கு நிகழவில்லை என்பதற்காக சகித்துக் கொள்வது, மேலிடத்து உத்தரவு, நாட்டுப் பற்று என்ற போர்வைகளின் கீழ் பிறர்மீது இழைக்கப்படும் குற்றங்களுக்கு உடன்படுதல்.

நாம் எல்லோராலும் சந்தர்ப்பம் அமைந்தால் நாஜிக்களைப்போல கொடூரமாக நடந்துகொள்ள முடியும், யூதர்களைப்போல பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க முடியும், இரண்டிற்கும் நடுவில் நின்று இந்தக் கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நின்ற பல யூதரல்லாத ஐரோப்பிய குடிமக்களைபோல நமது அன்றாட வாழ்வைத்தொடர்ந்திருக்கு முடியும். நம்மால் எல்லாம் செய்ய இயலும். இந்த நிலைகளில் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அதனால்தான் நடந்து முடிந்த இந்த வரலாற்றின் பின்னனியில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிக முக்கியம். இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பாடங்கள். எனவேதான் என்னில் இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதுகிறேன்.

பதிவின் முடிவில் ஜெர்மானிய பாதிரியார் மார்ட்டின் நீமோல்லர் கவிதை. இவர் முதலில் நாஜிக்களை ஆதரித்தவர், பின்னர் எதிர்க்கத் தொடங்கினார். அதனால் இவரை மியூனிக் அருகிலுள்ள டகாவ் வதை முகாமில் அடைத்து வைத்தனர். யுத்த முடிவில் இவர் நாஜிக்களிடுமிருந்து தப்பியவர். கீழ்காணும் இவரது கவிதை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அழகாகத் தருகிறது...

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.


பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை


பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை


பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

பிகு 1: ஹிட்லரின் நாஜிக்கொடூரங்கள் பற்றிய அறிதல்/புரிதல் நம் மக்களிடையே மிகக் குறைவு என்று கருதுகிறேன். எங்க ஊரில் மட்டும் இரண்டு நபர்களின் பெயர்கள் "ஹிட்லர்".

பிகு 2: ஆஷ்ச்விட்ச் முகாம் சென்ற பொழுது கீழ்கண்ட இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இந்தப்பதிவில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை. இப்புத்தகங்களைப் பற்றி எழுத பல தனிப் பதிவுகள் வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்
  1. Auschwitz: A New History by Laurence Rees
  2. Hope Is the Last to Die by Halina Birenbaum

பிகு 3: "The Diary of Anne Frank" என்ற புத்தகத்தின் மூலம் அறியப்பட்ட "ஆன் ஃப்ராங்க்" இந்த முகாமில்தான் சிறைவைக்கப் பட்டிருந்தார். யுத்தம் முடியும் தருவாயில் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கே உயிர் துறந்தார்.

பிகு 4: "Schindlers List" படத்தில் வரும் ஷிண்ட்லரின் தொழிற்சாலை அமைந்திருக்கும் க்ராகோ(krakow) நகரமும் இங்கிருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது.

Labels: , , , ,

ஷாங்காய் குறிப்புகள் II

- சீனாவில் எண்ணற்ற கார் வகைகள். அதில் ஒரு இந்திய காரை பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய "மாருதி 800"ஐ சுசுகி நிறுவனம் "ஆல்டோ" என பெயர் மாற்றி சீனாவில் விற்று வருகிறது.

- முன்னர் சொன்னது போல சாப்பாடு பெரும்பாடு என்பதால், என்னை "இந்தியா கிச்சன்" எனும் ஒரு இந்திய உணவகத்திற்கு நண்பர் அழைத்துச் சென்றார். உணவகத்தின் வெளியே கழுத்தில் பாம்பு, கையில் உடுக்கையென அட்டகாசமான கெட்டப்பில் ஒரு பிரம்மாண்டமான சிவன் சிலை வைக்கப்பட்டிருந்தது. நம்ம ஊர் ஆட்கள் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன். அப்படியே. "இந்தியா கிச்சன்" சீனாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகளை உடைய இந்திய உணவக நிறுவனமாம். முதலாளி, முன்னாள் காரைக்குடி வாசியாம். இப்ப ஒரு சீனப்பெண்ணை மணந்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். உணவகம் அட்டகாசமாயிருந்தது. விலைதான் சென்னையில் உள்ள 5 நட்சத்திர உணவகங்களின் விலையை மிஞ்சுவதாக இருந்தது.

- சீனாவின் வலைத்தனிக்கை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்னவெல்லாம் தனிக்கை செய்யப்படுகின்றன எனத் தெரிந்தால் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக" தளம் கூடத் தனிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒரு "நேச" நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத் தளத்தினால் அப்படியென்ன குந்தகம் சீனாவிற்கு
விளைந்துவிடுமென நினைத்தார்களோ தெரியவில்லை.

- ஷாங்காய் நகரை இரண்டாக பிரித்து "வுவாங்பூ" நதி ஓடிகொண்டிருக்கிறது. எப்பொழுதும் சரக்கு, மற்றும் சொகுசுக் கப்பல்கள் சென்றவன்னம் இருந்தன. நதிமுகப்பில் இருக்கும் வானளாவிய கட்டிடங்கள் மாலையில் மின்னொளியில் மிக அட்டகாசமாக இருக்குமாம்(நான் சென்ற சமயத்தில் மின்சார சேமிப்பிற்காக அவை பெரும்பாலும் எரியவில்லை). நதியின் மேற்குப்புறம் பழமை வாய்ந்த "புக்சி" பகுதியும், கிழக்கில் புதிதாக வளர்ந்து வரும் புதோங் பகுதியும் இருக்கின்றன. புதோங் பகுதியில்தான் ஷாங்காயின் மிக உயரமான "ஜின் மாவோ" கட்டிடமும், அதை விட உயரமாகக் கட்டப்படும் புதிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

- அதிவேகமாகப் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஷாங்காய் நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான் புதிய கார்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். எனவே கார் எண்களை ஏலத்தில் விடுகிறார்கள். இந்த எண்களை வாங்குவதற்கு பல நேரங்களில் காரின் விலையளவிற்கு செலவிட வேண்டியிருக்கிறதாம். :(

- ஒரு அதி முக்கியமான விசயமென்ன தெரியுமா? நான் இதுவரை சென்ற நாடுகளில் பியர் விலை குறைவாக இருப்பது சீனாவில்தான்(பாண்டிச்சேரியை விட குறைவென்றுதான் நினைக்கிறேன்). ஒரு 650ml Tsingtao பியர் 5.5RMB தான்(சுமார் 30ரூபாய்). நீங்கள் இருக்கும் இடத்தில் இதற்கு குறைவாக பியர் விற்கப்பட்டால் தவறாமல் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!

ஷாங்காயின் வெனிஸ் : ஷொ ஜியா ஜியாவ் (Zhou Jia Jiao)
- சீனக்கட்டிட அமைப்பின் முக்கிய குறியீடான வளைந்த கூறைகளை உடைய ஒரு கட்டிடத்தைக் கூட ஷாங்காயில் என்னால் பார்க்க முடியவில்லை. அசுர வேகத்தில் வளரும் இப்பிந்தியத்தின் பழைய கலாச்சார சுவடுகளை அருங்காட்சியகத்தில்தான் காணவேண்டும் என நினைக்கிறேன். அதற்கேற்றார்போல ஷாங்காயிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 150 சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள ஷொ ஜியா ஜியாவ் நகரத்தின் 2.4சதுர கிலோ மீட்டர் பகுதியை ஒரு "புராதானமான நகரம்" என அருங்காட்சியகம் போல பாதுகாத்து வருகிறார்கள்.

- பொதுவாகவே, கீழைச் சீன கடலையொட்டிய பகுதிகளில் நீர் நிலைகள் அதிகம். அங்குதான் மிகப்பெரிய யாங்ட்சி ஆற்றின் 100 கிலோ மீட்டர் அகலமுள்ள முகத்துவாரமும் உள்ளது. அதுபோலவே, இந்த ஊரும் ஒரு ஏரி மற்றும் பல ஆறுகளின் அண்மையில் அமைந்துள்ளது. ஏரி மற்றும் ஆற்றின் காரைகளில் அமைந்துள்ள நகரவீதிகளால், அப்பகுதியை ஷாங்காயின் வெனிஸ் என்று உள்ளூர்வாசிகள் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.

- சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்நகரில் பழைமையான கட்டிடங்கள், ட்ராகன் கட்டியது என்று அவர்கள் கருதும் பாலங்கள், நம்மூர் ஐயனார் போல உள்ளூர் கடவுளுக்கான கோயில், புத்த விகார், சீனாவிலேயே பழைமையான அஞ்சலகம் எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களது உள்ளூர் காவல் தெய்வத்திற்கான கோவிலில் எக்கச்சக்க கூட்டம். ஒரு நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புத்த விகாரில் யாருமே இல்லை.

புத்த விகார்


உள்ளூர் சாமிக்கான கோயிலில் நாடகம்
- தெருக்களில் விற்கப்படும், மசால் டோஃபு, ஊறவைத்து வறுக்கப்பட்ட டோஃபு(Stinky Tofu), முக்கோணமாக மடிக்கப்பட்ட பனையோலை(அல்லது அதுபோன்றது)யில் மசாலா சேர்க்கப்பட்ட சோறு என விதவிதமான பாராம்பரிய சீன உணவுவகைகளை வெளுத்துக்கட்டினோம்(முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பழகிய பின் ஓகே).

Labels: ,

Monday, June 09, 2008

ஷாங்காய் குறிப்புகள்.

ஷாங்காய் வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது(வளர்கிறது). இங்கு வரும் யாரும் தவறிப்போய் தாம் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ உள்ள ஒரு பெரு நகருக்கு வந்துவிட்டதாக நினைக்க நிறைய வாய்ப்பு. நாம் சீனாவின் ஒரு நகரத்தில் இருக்கிறோம் என்பதை ஆங்காங்கே தெரியும் சீன எழுத்துக்களாலும், எதிரில் வரும் சீன முகங்களாலும் மட்டுமே உணர வேண்டியிருக்கிறது. அதுவும் பெரும்பாலான சீனார்கள் மேலைநாட்டவர்கள் போலவே உடையும் அணிந்துகொள்கிறார்கள். கட்டிடங்கள் முழுவதும் அதிபுதுக்கால வடிவமைப்புகள். பளிச்சென்றும், நல்ல அகலமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் பல்வழிச்சாலைகளும், அவற்றில் பவனிவரும் பள-பளா கார்களும் முன்னேறிய நாட்டவர்களைக்கூட கொஞ்சம் பொறாமை படவைக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஷாங்காய் பயனமாயினும் இப்பொழுதுதான் எழுதக்கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு கடுப்பான நிகழ்வு. ஷாங்காயில், அதற்கு முன் கோலாலம்பூரில், இடையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அனது கேமராவின் SD நினைவட்டையிலேயே இருந்தன. சில நாட்களுக்கு முன் மடிக்கணினிக்கு மாற்ற முயற்சிக்கையில் ஒரு வைரஸ் எல்லா படங்களையும் சுவாஹா செய்து அதீத கடுப்பேற்றிவிட்டது. இப்பதிவில் இருக்கும் ஓரிரு படங்கள் என் உடன் வந்த சீன நண்பரால் எடுக்கப்பட்டவை.

- சீனாவில் உணவு ஒரு பெரிய பாடு. காரணம் சீன உணவு பிடிக்காமையல்ல.
பொதுவாக சீன உணவு வகைகளை வெளுத்துக் கட்டுவேன். பிரச்சனை சைவ சீன உணவை கண்டுபிடிப்பதுதான். சீனர்கள் pure-அசைவம் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஷாங்காயில் ஒரு "சுத்த சைவ" உணவகம் ஒன்று இருந்தது. நனும் நண்பரும் உள்ளே சென்று "சுறா முள் சூப்", "வறுத்த பன்றி கறி", "அவித்த இறால்" என ஒரு கட்டு கட்டினோம். "சுத்த சைவ" உணவகத்தில் "வறுத்த பன்றி கறி"யா என யோசிக்க வேண்டாம், பன்றி கறி போல இருக்கும் சைவக் கறிதான் (பெரும்பாலும் டோஃபுவைக் கொண்டு செய்திருந்தார்கள்). சாப்பிட்டுவிட்டு எங்களுக்கு பரிமாறிய ஊழியருக்கு டிப்ஸ் கொடுத்தேன் அதை வாங்க மறுத்துவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

- அந்த சமயத்தில் தான் திபெத் பிரச்சனை வெடித்திருந்தது. என் நண்பரிடம் அதைப்பற்றிக் கேட்க யத்தனித்தபொழுது, அது காதிலேயே விழாத மாதிரி காட்டிக்கொண்டு அந்த மேட்டரையே தவிர்த்துவிட்டார். நானும் ஒழுங்காக ஊர் வந்து சேரவேண்டும் என்ற அவாவில் வேறு யாரிடம் அந்த மேட்டரை பின்னர் எடுக்கவில்லை.

- ஷாங்காயின் புதிய புதோங் விமான நிலையம் நகரின் மையத்திலிருந்து ~30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புத்தம் புதிதாக ஒரு இரண்டாவது டெர்மினலை அப்போதுதான் திறந்திருந்தார்கள். எம்மாம் பெருசு...

- நகரிலிருந்து விமான நிலையம் சென்றுவர "காந்த மிதவை" இரயில் விட்டிருக்கிறார்கள். 8 நிமிடத்தில் நகரிலிருந்து விமான நிலையம் செல்கிறது.

- சென்னையில் ஓடும் இன்போசிஸ் பணியாளர் பேருந்துகள் எல்லாம் சாதரணமானவையாக இருந்தே பார்த்திருக்கிறேன். ஷாங்காய் இன்போசிஸ் பணியாளர்களுக்கு A/C பேருந்துகள். ஹ்ம்ம்ம்ம்...

-நம்மூரில் மட்டும்தான் பெட்ரோல் டீசல் பிரச்சனை என்றில்லை. சீனாவிலும் இவை சகாய விலையில் அரசு நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. குருட்டாம் போக்கில் குருடாயில் விலை ஏறியிருக்கிறதல்லவா. அதனால் பலத்த நட்டத்தில் இயங்கிய அரசு எண்ணை நிறுவனங்களால் போதுமான அளவு டீசல் தரமுடியாததால், பல கனரக வாகனங்கள் பல எண்ணைக் கடைகளில் வெகு தொலைவிற்கு வரிசை கட்டி நின்றிருந்தன. சீனாவில் டீசல் தட்டுப்பாடா...ஆச்சரியமாயிருந்தது..யானைக்கும் அடி சருக்கும்போல.

- திரும்பும் பொழுது இரண்டு தமிழ் அன்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. வின்சென்ட் மனப்பாறையில் கதவு, சாளரம் போன்றவற்றில் மர வேலைப்பாடுகளைச் செய்யும் கலைஞர். 30 வயது இளைஞர். பன்னிரண்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். ஆனால் நவீன நுட்பங்களைப் கையாளுவதில் முன்னோடியாக இருக்கிறார். கணினிகளை பயன்படுத்துவதில் வல்லுணர். CNC இயந்திரங்களைக் கொண்டு மரவேலைகளை துரிதமாக முடிக்கும் ஒரு தொழிற்சாலையை மனப்பாறையில் தொடங்கியிருக்கிறார். மேலும் பல புதிய இரக CNC இயந்திரங்களை வாங்குவதற்காக தனியாக ஷங்காய் வந்திருந்தார். தென்னிந்தியாவில் மர வேலைகளுக்கு CNC இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தான் ஒரு முன்னோடி எனத் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையும் தொழில் முனைப்பும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரது நிறுவனத்தின் வலைத்தளம் http://wood3dart.com/cus.htm

- இன்னொரு அன்பரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்தித்தோம்(நானும் வின்சென்டும்). பெரம்பலூரைச் சேர்ந்த அவருக்கு திருமணமாகி மூன்று பெண்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வேலைக்காக மலேசியா வந்தவர், சட்டப்பூர்வமான வேலை கிடைக்காமலும், செய்த வேலைக்கு சம்பளம் கிடைக்காமலும் தொடர்ந்து பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். கடைசியில் எப்படியாவது ஊருக்க வரவேண்டும் என்று கொஞ்சம் இருந்த பணத்தையும் ஒரு முகவரிடம் கொடுத்து ஒரு போலி பாஸ்போர்ட்/விசா/டிக்கெட் பெற்று இந்தியாவிற்கு திரும்பவிருந்தார். மலேசிய சோதனைகளைத் தாண்டி விமானத்தில் ஏறிவிட்டார். வழி நெடுக கவலையாகவே இருந்தவரை சென்னையில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அவர் செய்த ஒரே பாவம் இந்தியாவில் பிறந்ததுதானோ என்று நினைத்துக் கொண்டேன். மற்ற நாடுகளில் யாரும் ஒரு நல்ல கூலி வேலை கிடைப்பதற்காக இவ்வளவு சிரமப்படுவதில்லை.

- என் வழக்கமான குட்டிப் பதிவுகளைவிட இது இரண்டு மடங்கு நீண்டு விட்டதாலும். நீளமாய் எழுதி உங்களை இம்சை படுத்த விரும்பாததாலும்(அதாவது நீளமாய் எழுதனால் நீங்கள் யாரும் படிக்கமாட்டீர்கள் என்பதாலும்) இப்போதைக்கு ஒரு "தொடரும்" என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

பிகு: தொடராவிட்டாலும் "பொளந்து கட்டிவிடமாட்டீர்கள்" என்ற நம்பிக்கைதான்

Labels: ,

Sunday, June 08, 2008

எல்லோருக்கும் வணக்கம்.

மாதத்திற்கு ஒரு பதிவு, சில நேரங்களில் வருடத்திற்கு ஒரு பதிவு என எப்போதாவது எழுதும் நான் தினசரி ஒன்று எழுதுவது எப்படி என்று தெரியவில்லை. பார்க்கலாம். என் வலைப்பதிவை இந்தவார நட்சத்திரப்பதிவாக முன்னிறுத்தியிருக்கும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.

பொதுவாக எனது பதிவுகள் "இதை"ப்பற்றித்தான் என்று இருந்ததில்லை. என்ன தோன்றுகிறதோ அல்லது எதைப்பற்றியெல்லாம் எழுத முடிகிறதோ அல்லது எழுத நேரம்கிடைக்கிறதோ அதைப்பற்றியெல்லாம் எழுதுவேன். யாரும் படித்து பாராட்ட வேண்டும், பின்னூட்டமிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு "சிலகுறிப்புகளில்" ஒன்றும் இருந்ததில்லை. எழுதவேண்டும் என்ற ஒரு itchற்காகவே நான் பெரும்பாலும் எழுதுவது. எப்போதாவது யாராவது எட்டிப்பார்த்து பின்னூட்டமிட்டால் நிச்சயம் மகிழ்ச்சிதான். அது போலவே இந்த வாரமும் போகும் என்று நினைக்கிறேன்.

எனது ஆர்வக் கோளாறுகள் பல களங்களைத் தொடுபவை. நான் ஆழ உழுவதை விட அகல உழும் டைப். அன்றாடம் படிக்கும், கேட்கும், சந்திக்கும் பல விடயங்களை பதிவில் எழுத வேண்டும் என்று நினைப்பேன். வெகு அரிதான நேரங்களிலேயே அது நடக்கும். எப்பொழுதாவது எழுதத்தோன்றும் பொழுது சரக்கு ஒன்றும் இருக்காது. இப்போதும் அப்படியே. மிக ஆர்வத்துடன் எழுத யத்தனித்தாலும் ஏழெட்டு பதிவுகளுக்கு சரக்கு எங்கிருந்து தேற்றுவது என்பதே எனக்குள்ளிருக்கும் இப்போதைய முக்கிய கேள்விக்குறி.

சொற்குற்றம், பொருட்குற்றமெல்லாம் என் பதிவில் விரவிக்கிடக்கும். தவறாமல் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், அவற்றை எப்பொழுதும் வரவேற்பேன்.

Labels:

வலைப்பதிவு எழுதுவது ஆரோக்கியமானதாம்.

ஓயாமல் வலைப் பதிவுகள் எழுதுவதும், படிப்பதும், பின்னூட்டமிடுவதும் ஒரு வகையான OCD வியாதியாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். SCIAM சஞ்சிகையின் ஜூன் மாத இதழ் கட்டுரையில் வலைப்பதிவு எழுதுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கலாம் என்கிறார்கள்(Blogging--It's Good for You). ஒருவர் உணர்வுகளையும் எண்ணங்களையும் எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது பல சுகாதார பலன்களைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு எழுதுபவர்கள் குறைந்த மன அழுத்தம், நல்ல தூக்கம், நினைவாற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பலன்களைப் பெறுகிறார்களாம்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் தமது எண்ணங்களை எழுத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு சிலர், மற்றவர்களை விட மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருந்ததாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இதுபோலவே வலைப்பதிவுகள் எழுதுவதும் உடல் ஆரோக்யத்திற்கு வழிகோளும் என்கிறார்கள்.

கட்டுரையிலிருந்து...

"Scientists now hope to explore the neurological underpinnings at play, especially considering the explosion of blogs. According to Alice Flaherty, a neuroscientist at Harvard University and Massachusetts General Hospital, the placebo theory of suffering is one window through which to view blogging. As social creatures, humans have a range of pain-related behaviors, such as complaining, which acts as a “placebo for getting satisfied,” Flaherty says. Blogging about stressful experiences might work similarly."

வலைப்பதிவு எழுதும் பொழுது டோப்பமைன்(dopamine) என்ற வேதிப்பொருள் குருதியில் அதிகம் காணப்படலாம் என்றும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள் இசை, ஓவியம் போன்றவற்றை அனுபவிக்கும் பொழுதும் குருதியில் அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஆய்வுகள் எல்லாம் ஆரம்ப நிலையில் உள்ளவை. இன்னும் திட்டவட்டமாக எதையும் கூறுவதற்கில்லையாம். இதைப்பற்றி மேலும் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

ஆகவே நண்பர்களே, எல்லோரும் தொடர்ந்து பதிவுகள் எழுதி சுகாதாரமான வாழ்க்கையை பெறுங்கள் என்று வாழ்த்திவிடலாம் தான்...ஆனால் இந்த கட்டுரையை படித்துப்பாருங்கள்...


In Web World of 24/7 Stress, Writers Blog Till They Drop


வலைப்பதிவு எழுதுவதையே முழுநேரப்பணியாக கருதும் சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகிறார்கள் என்று கூறுகிறது இக்கட்டுரை.

இந்த கட்டுரையிலிருந்து...

Other bloggers complain of weight loss or gain, sleep disorders, exhaustion and other maladies born of the nonstop strain of producing for a news and information cycle that is as always-on as the Internet.

எனவே...என்ன செய்றதுன்றத நீங்களே முடிவு பன்னிக்கோங்க....

Labels:

நான்

சென்னையில்
ஒரு மென்பொருள்
நிறுவனத்தில்
பணியாற்றிக் கொண்டிருக்கும்
நான், என் எழுத்தைப்போலவே,
சாதாரணமானது.
பிழைகள் நிறைந்தது.
திரை படர்ந்தது.
நோக்கமற்றது.
பொருளற்றது.
தான் தோன்றி.
நிலையற்றது.
மாறுவது.
நளினமற்றது.
வறண்டது.
பரந்தது.
ஆழமற்றது.
கோபமுற்றது.
பொறுமையற்றது.
பல ஏமாற்றங்களை சகித்துக்கொண்டது.
சில வெற்றிகளை சுகித்துக்கொண்டது.
கேள்விகள் நிறைந்தது.
அவ்வப்போது பதில் தேடுவது.
மற்ற நேரங்களில் சும்மாயிருப்பது.
எப்பொழுதும் இருப்பது.
எப்பொழுதாவது இயங்குவது.

Labels: ,

Monday, June 02, 2008

தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை(எங்க ஊருதாங்க) கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ரபியா பேகம், 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தன்னிகரற்ற சாதனை படைத்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத் தொழில் செய்வதற்காக தாமரன்கோட்டையில் குடியேறினர். இவரது தகப்பனார் முதலில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறான ஒரு சாதரண பின்னனியைக் கொண்ட செல்வி ரபியா பேகம், ஒரு சாதரண அரசு பள்ளியில் படித்து மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்வாசிகளுக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

அரசு பள்ளிகளும், சரியாக நிர்வாகம் செய்தால், நல்ல கல்வியைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். செல்வி ரபிகா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7550
Girl finishes State third

Labels: ,