ஜேகேவின் சில குறிப்புகள்: July 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, July 30, 2008

காதலற்ற கவிதை

நீ வன்முறை
தெரிந்திருக்க நியாயமில்லை
எனக்கும்தான்
முதலில்

மழையின் நகக் கீறல்களுக்கு
இறகற்ற சிறகுகள்
ஆறுதல் அளித்த மற்றொரு
சாதாரண நாளில்
உன்னிடம் நான் தூதுவிட்ட
மௌனச் சிதறள்களின்
முகத்தில் அறைந்தது
உன் வன்முறை

விளிம்பில் நின்ற
பிரளயம் நிரம்பிய
மனதின் தாங்கவொன்னா
உறுத்தல்
உன்னிடம் அனுப்பிய
சொற் சிதறள்களை
வெற்றிடத்தில் தெளித்த
கனமெனக்கு உணர்த்திவிட்டது
உன் பயங்கரம்

என் மீது காட்டிய
எந்த வித வருத்தமுமற்ற
வெறுப்பை
திருபித்தர
யத்தனிக்கும் ஒவ்வொரு கனமும்,
கோபம் நிறைந்த
எண்ணங்களில் எரித்திட
முனையும் ஒவ்வொரு பொழுதும்
கலவரமூட்டுமுன்
பெயர் மட்டுமென்னை
இனித்தே வதைப்பதேன்.

Labels:

Monday, July 28, 2008

உடைந்த பாலம், அடையாறு, சென்னை : விளிம்பு நிலை குறிப்புகள்

வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக ஞாயிறு அதிகாலை எழுந்து சூரிய உதயம் பார்ப்பதற்காக பெசண்ட் நகர் கடற்கரையின் வடக்கேயுள்ள உடைந்த பாலத்திற்கு சென்றோம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் சூரியன் கடைசிவரை வெளியே வரவில்லை. இருப்பினும் கடற்கரையில் காலை அருமையாகவே இருந்தது.

  • பெசண்ட் நகர் ஆல்காட் குப்பம் பகுதியையும், பட்டினப் பாக்கத்தையும் இணைக்குமாறு அடையாற்றின் முகத்துவாரத்தில் ஒரு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. குறுகிய பாலம். இருவர் நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் அளவிற்கே அகலம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அது புயலின்பொழுது கடல் அலைகளின் சீற்றத்தால் பகுதி இடிந்து விழுந்து விட்டது. மீதமுள்ள பகுதி அடையாறின் தென் கரையிலிருந்து ஆற்றுக்குள் சென்று பாதியில் நின்று விடுகிறது. அங்கிருந்து கடலும், அடையாறின் முகத்துவாரத்தின் மருங்குகளில் காணப்படும் பசுமையும் அருமை.


  • ஆல்காட் குப்பத்தை தாண்டி ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருப்பதாலும் இந்த இடத்தைப்பற்றி பலர் அறிந்திராததாலும் இங்கு நிறைய பேர் வருவதில்லை ஆனால் இப்பொழுது இவ்விடத்திலும் சுமாரான கூட்டம் காணப்படுகிறது.



  • கொஞ்சம் தனிமையான பசுமையான இடம். ஆனாலும் அடையாற்று நீர் சென்னையின் சாக்கடை சூப்பாக கருத்திருந்தது. நீர் விளிம்பகள் முழுவதும் கண்ணை உருத்தும் குப்பை.




  • குப்பத்தை தாண்டி, தியோசாபிகல் சொசைட்டி வரும். மிகப் பரந்த இடத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து சில கனவான்களும் சீமாட்டிகலும் கடற்கரையில் நடை பயில வந்திருந்தார்கள்.


  • தியோசாபிகல் சொசைட்டியை ஒட்டிய கடற்கரையில் ஒரு ஏழ்மையான முதியவர் குப்பைகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சுக் கொடுத்த பொழுது "சாமி கும்பிட்ற இடம். அதனால் குப்பைய பொருக்கிறேன்" என்றார். மேற்படி கனவான்கள் தியானம் செய்வதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டேன்.


  • சென்னை படகு குழாமைச் சேர்ந்தவர்கள் அடையாறில் துடுப்பு போட்டுக்கொண்டு இந்த உடைந்த பாலம் இருக்கும் இடம் வரை வந்து பயிற்சி எடுக்கிறார்கள்.

  • குப்பத்தை தாண்டிச் செல்லும் போது தர்மசங்கடமான நிலை. காலை நேரம் என்பதால் ஆண்கள் கடற்கரையிலும், பெண்கள் தியோசாபிகல் சொசைட்டியின் சுற்றுச் சுவருக்கருகில் மண்டியிருக்கும் புதர்களிடத்தும் காலைக்கடன் கழிக்கிறார்கள். எனனைப்போன்ற பொழுது போக்கிற்காகவும் இயற்கையை ரசிக்கவும் செல்பவர்களுக்கு "என்னடா இது காலைக்கடன் கழிக்க வேறிடம் இல்லையா. இப்படி கூச்சமில்லாமல் திறந்து வெளியில் போய் கடுப்பேற்றுகிறார்களே" எனத் தோன்றும். அந்த குப்பத்தினருக்கோ "பொறம்போக்குப் பசங்க, பணத்திமிரு, காலங்காத்தால வண்டிய ஓட்டிகிட்டு கடலப்பாக்க வந்துர்றாய்ங்க. பொண்டு பிள்ளைகள் நிம்மதியாக வெளிய தெருவக் கூட போக முடியவில்லை" என்று திட்டிக்கொண்டிருப்பார்கள். மிக மிக அடிப்படைத் தேவைகளான "மானமோடு கடன் கழித்தல்" போன்ற வசதிகள் எப்போது எல்லோருக்கும் கிடைக்கும்?


Labels: , ,

Sunday, July 27, 2008

"பயம்"கரவாதம்

பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அஹமதாபாத் தொடர் வெடிப்பு மிகுந்த பீதியை உண்டாக்கியது. சென்னையில்கூட இரயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வலிபாட்டுத்தலங்கள், திரையரங்கங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாககங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அச்சுறுத்தல் இருக்கலாம் என தமிழக உயர் போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.

என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. நண்பரின் வீட்டிற்கு சென்றபொழுது முழு நேரச் செய்தி சானல்களில் முழு நேரச் செய்தியாக தொடர் வெடிப்பு ஆகிப்போயிருந்தது, எரிகின்ற பீதியில் எண்ணையை ஊற்றுவதாக இருந்தது. இந்த வன்முறைகளை முற்றிலும் கண்டிக்கிறேன். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களும், காயமுற்றவர்களும் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை வெறும் எண்ணிக்கைகளை பார்த்து சொல்லவே முடியாது. "பாதிக்கப்பட்டவர்கள் நாமாயிருந்தால்!" என்றெண்ணும் போது ஏற்படும் கிலியே அதை நமக்கு உணர்த்தும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நமது ஆறுதல்களும், அனுதாபங்களும்.

அதே சமயத்தில், நாம் வாழும் இந்த சம காலத்தில், தனி மனிதராக இது போன்ற நிகழ்வுகளுக்காக நம்மை எப்படி தயார்செய்து கொள்வது(அதீதமாக பீதியடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்றெனக்கு தெரியவில்லை) என சிந்திக்கும் பொழுது நாம் தேவைக்கதிகமாக எதிர்வினை செய்கிறோமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அது போன்ற எதிர்வினை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களே முக்கிய காரணம்.

தொடர் வெடிப்பு பற்றிய செய்திகளை திரும்பத் திரும்ப முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கும் எந்த நபரும் மிக விரைவாக முன்முடிவுகளுக்கு வருவது தவிர்க்க முடியாதது. பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு இசுலாமிய தீவிரவாதம் காரணமாக இருப்பதால், மக்களின் கோபம் பொதுப்படையாக இசுலாமியருக்கு எதிராக வெளிப்படுகிறது. அது ஒரு முடிவற்ற சுழற்சியில் கொண்டு போய்விடும். இருபக்கங்களிலும் உள்ள தீவிர வலதுசாரிகளால் அது எளிதில் அரசியலாக்கப் படுகிறது. அவர்களது அரசியலுக்கு சிறந்த ஊக்க மருந்தல்லவா இது?

  • கோத்ரா-இந்து பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.
  • குஜராத் படுகொலைகள்-இசுலாமிய பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.

மக்களின் பயத்தையும், அதன் மூலம் மாற்று மதத்தினருக்கெதிரான கோபத்தை துண்டிவிடுவதிலும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ பங்காற்றுகின்றன. இந்தியாவில் உள்ள பலவிதமான பயங்கரவாதங்களினால் என் உயிருக்கு தனிப்பட்ட முறையில் எந்த அளவிற்கு பாதிப்பு என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் சில தகவல்களை வைத்து தோராயமாக ஒரு கணக்குப் போட்டேன்.

எச்சரிக்கை: கீழ்காணும் அட்டவனையில் காணப்படும் தகவல்கள் தோராயமானவையே.



பயங்கரவாத தாக்குதலினால் ஒருவர் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவைவிட, சாலை விபத்தில் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவு பல மடங்குகள் அதிகம். நாம் பயப்படுவதாக இருந்தால் சாலை விபத்தைப் பற்றியே அதிகம் பயப்படவேண்டும்.

பிகு 1: நீங்கள் இந்த பதிவு தவறான நேரத்தில் பதியப்பட்டுள்ளது என எண்ணலாம். இத்தனை பேர் இறந்துள்ள நிலையில், மேலும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் இது தேவையா என நினைக்கலாம். முன்னர் குறிப்பிட்டது போல பாதிக்கப்பட்டவர்களின் துயரம் மிகப் பெரியது. அவற்றை வெறும் எண்ணிக்கைகளாக குறைக்க முடியவே முடியாது. அதே சமயத்தில் மக்கள் ஊடகங்களினால் அதிக அளவிற்கு பயமுறுத்தப்படுகிறார்கள். இது ஒரு reality check.

பிகு 2: பயங்கரவாத தாக்குதலினாலான இழப்புகளின் நிகழ்தகவு குறைவென்பதால் பயங்கரவாதத்தை சும்மா விடலாமா என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை கிடைக்க வேண்டும். அரசு இந்த கொடும்பிரச்சனையை முற்றிலும் அகற்ற அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் வேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லாமே சம அளவில் அரசியல் படுத்தப்படவேண்டும். ஆனால் நமது விதி அது நடப்பதில்லை. சாலை விபத்தை குறைப்போம் என எந்த கட்சியும் தேர்தல் வாக்குறுதி கொடுக்கப் போவதில்லை. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் வெல்லப்போதில்லை. பயங்கரவாதம் ஒரு நல்ல அரசியல் ஆயுதம். எல்லோருக்கும்.

பிகு 3: மேலே குறிப்பிட்ட அதே காரணத்திற்காக தனிப்பட்ட முறையில் அஜாக்கிரதையாக இருந்து விடலாமா என்றாலும் இல்லையென்றுதான் சொல்வேன். தற்போதைய நிலவரப்படி அடுத்த வெடிப்பு எங்கே நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் முடிந்த அளவில் கவனமாக இருக்க வேண்டியதுதான். அதே சமயத்தில் வண்டி ஓட்டி செல்லும் போதும் கவனமாகவே போங்கள்.

தகவல்களுக்கான மூலச்சுட்டிகள்.

Terrorism in India

Road Accidents in India, 1970-2005

மக்கள் தொகை பற்றிய தகவல்கள்

சி ஐ ஏ தகவல்கள்

Labels: ,

Thursday, July 17, 2008

வன்முறை மிக்க மௌனம்

நெரிசல் மிகுந்த நம் தனிமையை
நிறைத்திருக்கிறது
வன்முறை மிக்க மௌனம்

அடர் கிளை மரங்களுதிர்க்கும்
சருகுகளாய் மிதக்கும்
சில சொற்பிணங்கள்

தட்டிடத் தட்டிடக் கொட்டிய
உண்டியல் பிளவினை உற்றுப் பார்க்கிறேன்
இன்னும் இருக்கிறதா நாணயமென்று

சென்ற மழைக் குட்டையில் முட்டையிட்டு
குஞ்சு பொறித்த கொசுக்களின்
குருதிகள் நொதித்து நாற்றமடிக்கின்றன

உன் வன்முறை வலிப்பதைவிட
அயர்ச்சியாய் இருக்கிறது
வலிகளையும், அயர்ச்சியையும் கழுவிடக்
காத்திருக்கிறேன் அடுத்த மழைக்காக

Labels:

Wednesday, July 16, 2008

இடையில் இரு புதிர்கள்: அரட்டை

puǝıɹɟ ʎɯ: உன் பதிவு பார்த்தேன்..
ǝɯ: எப்படி இருந்தது?
puǝıɹɟ ʎɯ: எனக்கு அவ்வளவாக புரியலை
ǝɯ: ஹ்ம்ம்ம்...எனக்கும் அப்படித்தான் தோன்றியது. யாருக்கும் புரியாதென்று. எதுவுமே புரியலையா...இல்லை கொஞ்ச கொஞ்சம் புரியலையா?
puǝıɹɟ ʎɯ: விளக்கி சொல்லுடா.. நான் ரொம்ப படிக்கறதில்லை.. இபபோ.. எல்லாம்.. சோ எனக்கு புரியலை. இது எதாவது எழுத்து உத்தி-யா
ǝɯ: அப்படியெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. சும்மா எழுதினேன்...நான் நினைத்தது எழுத்தில் வரவில்லை போல...படிப்பதற்காவது எளிதாக இருந்ததா இல்லை அதுவும் அயற்சியாக இருந்ததா?
puǝıɹɟ ʎɯ: உன்னோட... கனவு பத்தியா? இல்ல.. நலலா இருந்தது..மயக்க நிலை... பயம்... கனவு ---
ǝɯ: கனவு பற்றினு இல்ல....கனவு நனவு பற்றிய குழப்பம் பற்றியது...
puǝıɹɟ ʎɯ: ம்ம்...இந்த எண்ணம் ... எப்போ தோணியது.. அதிகாலைலயா
ǝɯ: எனக்கு பொதுவாவே.. இப்பொழுது நடப்பது கனவா இல்லை நனவா...அது கனவில்லைனு எப்படி உறுதியா சொல்ல முடியும் போன்ற கேள்விகள் அடிக்கடி வரும்
அதன் விளைவுதான்
Sent at 00:05 on Thursday
ǝɯ: ...இது ஒரு பயங்கர கனவை விவரிப்பது போல இருக்கும் என்று எனக்கும் தோன்றியது...அது மாதிரி இல்லாமல்தான் எழுத முயன்றேன்...ஆனா சரியாக வரவில்லை
puǝıɹɟ ʎɯ: ம்ம்ம்..கனவு மாதிரி இருந்தது...
Sent at 00:08 on Thursday
puǝıɹɟ ʎɯ: இன்னும்... நல்லா...மொழி-ஐ கையாண்டால்.. நீ சொல்லற மயக்க நிலை-யை கொண்டு வர முடியும்-னு தான் தோணுது..ஜெயமோகன் எழுதறார் இல்ல?
ǝɯ: கதையை விபரிப்பனைப் பொருத்தவரையில் எல்லாம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. ஆனால் அதுவே முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுவும் அவனுக்குத் தெரிகிறது. அப்படிங்கிற பட்சத்தில ஒரு மூண்றாவது நபர் இந்த விபரிப்பை எப்படி புரிந்து கொள்வார்...
Sent at 00:10 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு தெரியலை.. எனக்கு தெரிந்து அதிகாலை.. நேரம் .. இப்படி .. கனவும், நனவும்.... சேர்ந்து வரும்.... மதியம்... தூங்கும்போதும்... வெளித்தூண்டல்களும் கலவையாகி வரும.கனவோடு. மச்சி... நான் உன லெவல்-ல இல்ல-ன்னு தோனுது..நீ... வேற மக்கள்-கூட பேசு..
ǝɯ: ஹா ஹா ஹா....நல்ல ஜோக். நான் இப்ப இலக்கியவாதியா ஆயிட்டேன்....ஏன்னா நான் எழுதுறது அடுத்தவங்களுக்கு புரியல....:)))
Sent at 00:18 on Thursday
puǝıɹɟ ʎɯ: நிறைய ... பிரதி, வாசகன்... அப்படி எல்லாம் படித்து...எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..எனக்கு ஒன்னும் புரியரதில்லை..
ǝɯ: ஆமாம்....எல்லாரும் ஒரே நேரத்தில் பின் நவீனவியாதிகளாகிட்டாங்க
puǝıɹɟ ʎɯ: தெரியலை... இதுக்கு நான் தயார் செய்துக்கனும்-னு தோனுது.
ǝɯ: வேண்டவே வேண்டாம்...
Sent at 00:20 on Thursday
puǝıɹɟ ʎɯ: உனக்கு.. வரும்.. பின்னூட்டத்துக்கு காத்திட்டு இருக்கேன்...
ǝɯ: யார் போடப்போறா...??
puǝıɹɟ ʎɯ: மக்கள் என்ன சொல்லறாங்கன்னு..வரும் பாரு..
ǝɯ: யாராவது படிச்சாதானே...
Sent at 00:24 on Thursday
puǝıɹɟ ʎɯ: வெய்ட் செய்வோம்..
Sent at 00:25 on Thursday
puǝıɹɟ ʎɯ: நீ... ************-கிட்ட விமர்சனம் கேளு..
ǝɯ: போடா...நீ ஒரு ஆளு....அவய்ங்களுக்கெல்லாம்...ஏற்கனவே நாலு கொம்பு...
puǝıɹɟ ʎɯ: அப்படியா..
Sent at 00:27 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்போ...உனக்கு பதிவுலக நண்பர்கள் -- இருக்காங்க இல்ல..அவங்க கிட்ட கேளு..எனக்கு தெரியலை..
ǝɯ: நான் யாருடனும் வைத்துக் கொள்வதில்லை...
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வைத்துக்கொண்டால்தானே.... வந்து பின்னூட்டம் போடுவாங்க
ǝɯ: ரொம்ப நாளாச்சே பதிவெழுதி...ன்னுட்டு இதப் போட்டேன்
puǝıɹɟ ʎɯ: நீஒரு குழு-ல இருக்கனும் இல்ல..
ǝɯ: பின்னூட்டம் யாரும் போடனும்னு எல்லாம் எதிர்பார்ப்பதில்லைடா. நான் எழுதுவது என் முதுகை நான் சொறிந்துகொள்ள மட்டுமே...
puǝıɹɟ ʎɯ: :-) அது சரி.
ǝɯ: யாருமே படிக்காட்டுனாகோட எனக்கொன்னும் பிரச்சனயில்ல. நாம பார்க்கிற வேலையயே ஒழுங்கா பாக்கிறதுல்ல...இதுல நாம கதையெழுது வேற வந்துட்டோம்ம்...அதுல எதிர்பார்ப்பு வேற இருந்தா....எனக்கே ஜாஸ்தியா படும்...
puǝıɹɟ ʎɯ: இல்லடா.. நீ... ஒரு ஒத்த கருத்து உடைய மக்கள்-- வைத்து ஒரு குழு உருவாக்கு..
ǝɯ: ஹா ஹா....
puǝıɹɟ ʎɯ: நிஜமா சொல்லறேன்..
ǝɯ: என்னோட ஒத்த கருத்துள்ளவர்கள் என்னை உட்பட யாருமே இருக்க மாட்டார்கள்.....
puǝıɹɟ ʎɯ: எல்லாமும் இல்ல..
ǝɯ: I have MPD...don't you know
puǝıɹɟ ʎɯ: ஒன்னு இருந்தால் போதும்..:-)..அன்னியன் மாதிரி-யா?
ǝɯ: :)..it's not a big deal da...we'll write...always...not for the sake of achieving anything...just for the sake of writing....its as meaningless as we are...and our lives are....
Sent at 00:37 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு என்னதோனுதுன்னா.... உன்னோட வாழ்க்கை... குறிக்கோள் இல்லாமல் ..... ஒரு routene-aa போய்ட்டு இருக்கு... and you dont know what to do for that.
ǝɯ: அப்படி வா...இப்ப நீ ஒரு பின்னவீனத்துவ வாசகன் மாதிரி பேசுற....
puǝıɹɟ ʎɯ: அப்போ... நிஜமாகவே.. எனக்கு பின்னவீனத்தும் புரிந்து விட்டதா?? சூப்பர்..
ǝɯ: ஹா ஹா ஹா....
Sent at 00:52 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்புறம்... நீ வைத்த... வானவில்-- பேரு... நல்லா இருக்கு..
ǝɯ: :)
puǝıɹɟ ʎɯ: ஓகே..
ǝɯ: முதல்ல அது பெண் கேரக்டர் மாதிரி தோனிச்சா? இல்லையா?
puǝıɹɟ ʎɯ: ஆமாம். பையனுக்கு ... பொருந்தலை--ன்னு தோனுது.
ǝɯ: வானவில்லன் னு வச்சர்லாமா....:)
puǝıɹɟ ʎɯ: கேரக்டர்-ஐ பொண்ணா மாத்திடலாம்..
ǝɯ: கிளிஷே வாகிடுமே...பசங்க பொம்பளைப்புள்ளைங்கள சைட் அடிக்கிறது சகஜம் இல்லயா?
puǝıɹɟ ʎɯ: அட பாவி...
ǝɯ: அப்புறம் ஏன் வானவில் பெண் பெயர்னு நினைக்கிற...அது வளைந்து கொடுப்பதாலா...இதிலிருந்து உன் ஆணாதிக்கக் கூறுகள் வெளிப்படலயா?
puǝıɹɟ ʎɯ: அய்யா...சாமி... ஆளை விடு... . நீ என்கேயோ போய்ட்டெ
ǝɯ: :D
puǝıɹɟ ʎɯ: பெரிய ஆட்கள் கிட்ட பேசறப்பொ... பார்த்து பேசனும். ம்ம்..
ǝɯ: அப்பா....கொஞ்சம் படத்த போட்டாச்சி....
puǝıɹɟ ʎɯ: வானவில்--- பையனை யோசிக்க முடியுதா. உன்னால. என்னால் முடியல
ǝɯ: வை நாட்....
Sent at 01:02 on Thursday
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வை நாட்? நல்லாதான் இருக்கு... யோசிச்து இல்ல.
puǝıɹɟ ʎɯ: அப்பாடி தப்பிச்சாச்சு..

இடையில் இரு புதிர்கள்

Labels:

Tuesday, July 15, 2008

இடையில் இரு புதிர்கள்

புத்தம் புது காரின் கதவில் விழுந்த கீறலைப் போல வெளிர் நீல நிறம் கொண்ட மேகங்கள் இல்லாத வானத்தில் நேர் கோடுகளைக் கிழித்துக் கொண்டு சென்ற இரண்டு ஜெட் விமானங்களை அன்னாந்து பார்த்ததில் வலித்த கழுத்தை மெதுவாக கீழே திருப்பும் பொழுது கண்ணில் பட்டவை

  1. எங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தின் பசுமையான வீராப்புடன் நிமிர்ந்து நிற்கும் குருத்துகளும், காற்றின் தாலாட்டிற்கு மெல்ல தலையசைக்கும் மட்டைகளும், திரட்சியான இளநீர் காய்களும், சிறிய குரும்பைகளும்.

  2. அடுத்த வீட்டின் மொட்டை மாடியில் நடப்பட்டிருந்த கம்பங்களும், கம்பங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றில் காய்ந்த துணிகளும், துணிகளுக்கிடையே கிடந்த சில வெள்ளாடைகளும்.

  3. நடுவில் தணிந்திருந்த துணிக்கயிற்றிற்கு மேலாக முளைத்திருந்து அங்கும் இங்கும் நடந்து படித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு வானவில்லும்

  4. கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டின் பலகனியில் இருந்து வனவில்லையே பார்த்துக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மலர்வண்ணனும்

இப்படியாகத் தொடங்கிய இந்த காலை எப்படி தொடருமென்ற திடீர் பயம் மனதின் ஓரத்தில் சிறு புள்ளியாகத் தோன்றி வெகு வேகமாக என் உடல் முழுதும் பரவியது. மேற்கொண்டு என் கண்ணில் பட்டவை எதுவும் என் மனதில் பதியவில்லை. இது போன்ற சமயங்களில் எனது பயம் என்னை விழுங்கிவிடத் தொடங்கும். தன்னுணர்வு தப்பி மயக்க நிலையை அடைவேன். நினைவில் நிற்காத கொடூரமான கனவுகள் என் மனதை பாராங்கல் கொண்டு நசுக்கும். என் சுவாசத்துளைகள் நெறிக்கப்பட்டு மூச்சு முட்டி கண்கள் பிதுங்கும். அது போன்றதொரு மயக்க நிலை என்னைத் தழுவிக் கொண்டிருக்கும் பொழுதுதான் கேட்டது அந்தச் சத்தம்.

மீண்டும் அன்னாந்து பார்த்தேன். வானைக் கீறிக் கொண்டிருந்த இரண்டு விமானங்களும் தீப்பிழம்புகளாக கீழெ விழுந்து கொண்டிருந்தன. என்னை எழுப்பிய அந்தச் சத்தம் அவை மோதி வெடித்ததாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று அவதானிப்பதற்குள் விமானத்தின் சில பாகங்கள் என் தலையை நோக்கி வீழ்வதுபோலத் தோன்றியது. மிகுந்த வேகத்துடன் அதிலிருந்து தப்பிக்க நகர முயற்சித்த சில கனங்களுக்குள் அவை வானவில்லின் மாடியில் நாராசமான சத்தத்துடனும் சுட்டெரிக்கும் நெருப்புடனும் விழுந்தன. நானும் மலரும் ஏக காலத்தில் "அய்யோ" என்று கத்தினோம்.

“ஏ உனக்கு என்னாச்சு" சத்தமிட்டுக்கொண்டே வானவில்லை நோக்கி ஓடினேன்.

அதே கணத்தில் “ஏ உனக்கு என்னாச்சு" என்று வானவில்லின் குரல் சன்னமாகவும், பயங்கரமாகவும் எனக்கு கேட்டது. இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வேகமாக துடிக்க வானவில்லை நோக்கி நகர்வதை நிறுத்தி விட்டு அவதானித்த பொழுது வானவில் நலமாகத்தானிருந்தான். அவனது மாடியில், மேலிருந்து விழுந்த விமானத்தின் பாகங்கள் இல்லை, நெருப்பில்லை, புகையில்லை. அவன் மட்டும் மிகுந்த மிரட்சியுடன் என்னை நோக்கி இரண்டு கைகளை நீட்டியவாறு வாயடைத்து நின்றிருந்தான்.

“என்ன இழவு நடக்கிறது இங்கே" என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்த பொழுதே தெரிந்தது, மொட்டை மாடியிலிருந்து கீழே விழ நான் எடுத்து வைக்க வேண்டியது இன்னும் ஒரு அடி என்று. வானவில்லைப்பற்றிய கவலை போய், உயிர் பயம் என்னைக் கவ்விக்கொண்டது. உடல் நடுக்கமாகவும் சில கேவல்களுடன் கூடிய அழுகையாகவும் என் பயம் வெளிப்பட்டது. "தட்"டென்று தரையில் அமர்ந்து தவழ்ந்தபடியே நகர்ந்து சென்றேன்.

பாதுகாப்பான இடத்திற்கு வந்த நிலையில் உயிர்பயம் சற்று விலகியிருந்தாலும் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. அழுகையையும் நிறுத்த முடியவில்லை. அப்படியே உடலைச் சாய்த்து மால்லாந்து படுத்து மேலே பார்த்த பொழுது, பளிச்சென்ற நீல நிற வானம் இருந்தது, வெளிர் நிற கோடுகளைக் காணவில்லை, ஜெட் விமானங்களைக் காணவில்லை, 9ம் வகுப்பு வானவில்லைக் காணவில்லை, 11ம் வகுப்பு மலர் வண்ணனைக் காணவில்லை.

என் கண்ணில் பட்டவை அங்கே குருதியும், தசையுமாகச் சிதறிக்கிடந்த மிகுந்த அயற்சியையும் சோகத்தையும் தரும் இரண்டு கேள்விகள்.
  • காலை நடந்தவற்றில் எவை உண்மை? எவை கனவு?
  • எனக்கு இப்பொழுது உயிர் இருக்கிறதா? இல்லையா?

Labels:

Tuesday, July 01, 2008

என்ன நடக்கிறது இங்கே

ஒரே நாளில் இவ்வளவு மோசமான செய்திகளா...என்ன நடக்கிறது இங்கே. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் பெருமக்களே! ஏதாவது செய்யுங்கள். சீக்கிரம்.

1) தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. : என் வண்டியில் எண்ணை காலி. இன்று போட முடியவில்லை. நாளை அலுவலகம் செல்வது கேள்விக்குறிதான்

2) நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக். இன்று நள்ளிரவு ஆரம்பம். காய்கறி விலை உயரும் அபாயம். : அப்போ சாப்பாடும் கஸ்டமா?

3) Oil Prices Return To Near-Record Highs : இன்னும் எவ்வளவுப்பா ஏத்த போறீங்க

5) ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் : வீட்டுக் கடன் வட்டி விகிதம் 13.5 சதவீதமாக ஏற்றம். ஐயோ! வட்டி கட்டியே காலியாயிடுவோம் போலிருக்கே...

6) எங்கே போகிறது சென்னை? 30 நாளில் 24 கொலை : தினகரன் செய்தி. - உயிருக்காவது உத்திரவாதம் உண்டா.

7) 7 மாநிலங்களில் அபாய அளவில் ஊழல். தமிழகத்தில் மிக அதிகம் : இது ஒரு செய்தியான்னு நீங்க கேக்றது எனக்கு கேக்குது.

Labels: