ஜேகேவின் சில குறிப்புகள்: "பயம்"கரவாதம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, July 27, 2008

"பயம்"கரவாதம்

பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அஹமதாபாத் தொடர் வெடிப்பு மிகுந்த பீதியை உண்டாக்கியது. சென்னையில்கூட இரயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வலிபாட்டுத்தலங்கள், திரையரங்கங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாககங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அச்சுறுத்தல் இருக்கலாம் என தமிழக உயர் போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.

என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. நண்பரின் வீட்டிற்கு சென்றபொழுது முழு நேரச் செய்தி சானல்களில் முழு நேரச் செய்தியாக தொடர் வெடிப்பு ஆகிப்போயிருந்தது, எரிகின்ற பீதியில் எண்ணையை ஊற்றுவதாக இருந்தது. இந்த வன்முறைகளை முற்றிலும் கண்டிக்கிறேன். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களும், காயமுற்றவர்களும் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்பதை வெறும் எண்ணிக்கைகளை பார்த்து சொல்லவே முடியாது. "பாதிக்கப்பட்டவர்கள் நாமாயிருந்தால்!" என்றெண்ணும் போது ஏற்படும் கிலியே அதை நமக்கு உணர்த்தும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நமது ஆறுதல்களும், அனுதாபங்களும்.

அதே சமயத்தில், நாம் வாழும் இந்த சம காலத்தில், தனி மனிதராக இது போன்ற நிகழ்வுகளுக்காக நம்மை எப்படி தயார்செய்து கொள்வது(அதீதமாக பீதியடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்றெனக்கு தெரியவில்லை) என சிந்திக்கும் பொழுது நாம் தேவைக்கதிகமாக எதிர்வினை செய்கிறோமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அது போன்ற எதிர்வினை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களே முக்கிய காரணம்.

தொடர் வெடிப்பு பற்றிய செய்திகளை திரும்பத் திரும்ப முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கும் எந்த நபரும் மிக விரைவாக முன்முடிவுகளுக்கு வருவது தவிர்க்க முடியாதது. பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு இசுலாமிய தீவிரவாதம் காரணமாக இருப்பதால், மக்களின் கோபம் பொதுப்படையாக இசுலாமியருக்கு எதிராக வெளிப்படுகிறது. அது ஒரு முடிவற்ற சுழற்சியில் கொண்டு போய்விடும். இருபக்கங்களிலும் உள்ள தீவிர வலதுசாரிகளால் அது எளிதில் அரசியலாக்கப் படுகிறது. அவர்களது அரசியலுக்கு சிறந்த ஊக்க மருந்தல்லவா இது?

  • கோத்ரா-இந்து பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.
  • குஜராத் படுகொலைகள்-இசுலாமிய பயங்கர வாதிகளுக்கு ஆயுதம்.

மக்களின் பயத்தையும், அதன் மூலம் மாற்று மதத்தினருக்கெதிரான கோபத்தை துண்டிவிடுவதிலும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ பங்காற்றுகின்றன. இந்தியாவில் உள்ள பலவிதமான பயங்கரவாதங்களினால் என் உயிருக்கு தனிப்பட்ட முறையில் எந்த அளவிற்கு பாதிப்பு என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் சில தகவல்களை வைத்து தோராயமாக ஒரு கணக்குப் போட்டேன்.

எச்சரிக்கை: கீழ்காணும் அட்டவனையில் காணப்படும் தகவல்கள் தோராயமானவையே.



பயங்கரவாத தாக்குதலினால் ஒருவர் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவைவிட, சாலை விபத்தில் பாதிக்கப் படுவதற்கான நிகழ்தகவு பல மடங்குகள் அதிகம். நாம் பயப்படுவதாக இருந்தால் சாலை விபத்தைப் பற்றியே அதிகம் பயப்படவேண்டும்.

பிகு 1: நீங்கள் இந்த பதிவு தவறான நேரத்தில் பதியப்பட்டுள்ளது என எண்ணலாம். இத்தனை பேர் இறந்துள்ள நிலையில், மேலும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் இது தேவையா என நினைக்கலாம். முன்னர் குறிப்பிட்டது போல பாதிக்கப்பட்டவர்களின் துயரம் மிகப் பெரியது. அவற்றை வெறும் எண்ணிக்கைகளாக குறைக்க முடியவே முடியாது. அதே சமயத்தில் மக்கள் ஊடகங்களினால் அதிக அளவிற்கு பயமுறுத்தப்படுகிறார்கள். இது ஒரு reality check.

பிகு 2: பயங்கரவாத தாக்குதலினாலான இழப்புகளின் நிகழ்தகவு குறைவென்பதால் பயங்கரவாதத்தை சும்மா விடலாமா என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை கிடைக்க வேண்டும். அரசு இந்த கொடும்பிரச்சனையை முற்றிலும் அகற்ற அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் வேறு பல பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லாமே சம அளவில் அரசியல் படுத்தப்படவேண்டும். ஆனால் நமது விதி அது நடப்பதில்லை. சாலை விபத்தை குறைப்போம் என எந்த கட்சியும் தேர்தல் வாக்குறுதி கொடுக்கப் போவதில்லை. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் வெல்லப்போதில்லை. பயங்கரவாதம் ஒரு நல்ல அரசியல் ஆயுதம். எல்லோருக்கும்.

பிகு 3: மேலே குறிப்பிட்ட அதே காரணத்திற்காக தனிப்பட்ட முறையில் அஜாக்கிரதையாக இருந்து விடலாமா என்றாலும் இல்லையென்றுதான் சொல்வேன். தற்போதைய நிலவரப்படி அடுத்த வெடிப்பு எங்கே நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் முடிந்த அளவில் கவனமாக இருக்க வேண்டியதுதான். அதே சமயத்தில் வண்டி ஓட்டி செல்லும் போதும் கவனமாகவே போங்கள்.

தகவல்களுக்கான மூலச்சுட்டிகள்.

Terrorism in India

Road Accidents in India, 1970-2005

மக்கள் தொகை பற்றிய தகவல்கள்

சி ஐ ஏ தகவல்கள்

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 4

At Sun Jul 27, 02:37:00 PM GMT-6, Blogger rapp சொன்னது

மிக நன்றாக அலசியுள்ளீர்கள், நன்றி. அப்பாவிகளின் உயிரை எடுக்க எப்படித்தான் மனம் வருகிறதோ??

 
At Sun Jul 27, 05:12:00 PM GMT-6, Blogger சுந்தரவடிவேல் சொன்னது

//பயங்கரவாதம் ஒரு நல்ல அரசியல் ஆயுதம்.//
மக்களைத் தொடர்ந்து பீதியில் வைத்திருப்பதன் மூலம், தமக்குச் சாதகமான அரசியல் சூழலை உண்டாக்கிக் கொள்வது அமெரிக்க அரசியலிலிருந்து இந்திய ஆட்சியாளர்கள் வரை எல்லோரும் கைக்கொள்வது.

 
At Sun Jul 27, 07:26:00 PM GMT-6, Blogger அறிவகம் சொன்னது

ஆதங்கப்படுகிறோம். அப்புறம்...? 60 வருட சுதந்திரத்தில் நீங்களும் நானும் இன்னும் பல நல்லெண்ணவாதிகளும் சாதித்தது வெற்று விமர்சனம் மட்டுமே. அரசியலை களை எடுக்க ஆண்டவன் தான் உதித்துவரவேண்டும் என எதிர்பார்கிறார்களோ நல்லெண்ணவாதிகள். ஜெ.கே உங்களின் இதே ஆதங்கத்தை தான் யார் இந்த தீவிரவாதி என்ற பதிவில் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது அறிவகத்தை பார்வையிடுங்கள்.

 
At Sun Jul 27, 08:33:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

raap, சுந்தரவடிவேல், உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அறிவகம், உங்கள் பதிவைப் படித்து எனது கருத்தை தெரிவிக்கிறேன். உங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல