இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம்
என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.
யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.
எனது முந்தைய பதிவிலிருந்து
//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//
இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.
ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.
ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...
தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.
நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான். "சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"
2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.
இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு.... சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு
இதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு... My Vote For Free Tamil Eelam
மேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.
பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?
பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?
பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?
படித்தவர்களின் கருத்துகள் - 28
எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
நம்முடைய ஓட்டு இப்போதைக்கு உடனடியாக எதையும் சாதிக்கும் என்று எனக்குத்தோன்றவில்லை. ஈழத்தவரின் சுயநிர்ணய உரிமையை நாம் மதிக்க வேண்டும். நாம் என்றால் தமிழ்நாட்டுத்தமிழர்கள் மட்டுமல்ல. அனைத்து இந்தியர்களும். சுயநிர்ணய உரிமை என்றவுடன் உடனடியாக வரும் பிரிவினைவாதம் என்ற சொல்லாடல் நிறுத்தப்படவேண்டும். அதற்கு இப்போது இருப்பதைவிட அதிகமான கருத்துரிமை இருக்க வேண்டும். அதிகமான விவாதங்கள் வேண்டும். அதன் மூலமே சரியான பொதுக்கருத்துக்கள் உருவாக முடியும். இதை செய்வதற்கு ஊடகங்கள் முனைய வேண்டும்.
ஊடகங்களின் போக்கு கொஞ்சம் மாறியிருப்பது போலத்தான் தெரிகிறது. ஆனால் மிகவும் மந்த கதியில் இருக்கிறது. ஓரளவு வலைபதிவுகள் இதை செய்கின்றன.
உங்கள் சிறப்பான பதிவிற்கு நன்றி.
//நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல//
வன்முறை இல்லா உலகம் இதுவரை கனவாக உள்ளது. உலகம் முழுவது பல குழு மக்கள் தங்களது இனம், மொழி, கொள்கைகளுக்காக மற்றொரு குழுவினரால் வன்முறையால் துன்பப்படுத்த படுகிறார்கள். அவர்களை எதிர்த்து போராடுவது என்பது தவிர்க்க இயலாது. விடுதலை புலிகள் அமைதியில் எவ்வளவு நாட்டம் உடையவர்கள் - அவர்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டர்கள் என்பதை பற்றி படித்து அறியவும்.
இன்றைய சூழலில் விடுதலை புலிகள் இல்லாமல் ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்பது இல்லவே இல்லை.
கடைசியாக இருந்த சமாதான உடன்படிக்கையை புதுபிக்காதவர் யார் என்பது தெரிந்தால், யாருக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை, யார் தீவிரவாதி என்பது விளங்கும் .
நன்றி
ஸ்ரீஷிவ்...
டொன் லீ, உங்களது வருகைக்கு நன்றி.
உமையணன். தனிப்பட்ட அல்லது சிறு குழுக்களின் ஓட்டுகள் எதையும் எப்பொழுதும் சாதிப்பதில்லை என்றே நானும் கருதுகிறேன். ஆனால் இதன் மூலம் நமது நிலைப்பாட்டை அரசியல்வாதிகளுக்கும் பிறருக்கும் எப்பொழுதும் வெளிப்படுத்தலாம். நமது வாதத்தில் சரக்கிருப்பின் பிறரையும் அதை ஏற்கச்செய்யலாம். எனது நம்பிக்கை, பெரும்பாலான இந்தியர்கள், சரியான கள நிலவரம் தெரிந்தால் "சுதந்திர தமிழீழம்/ஈழத்தின் சுய நிர்ணய உரிமை" என்ற நிலைப்பாட்டை ஆதரிப்பார்கள் என்பதே.
ஊடகங்களும், தலைவர்களும் அதை முன்னெடுக்காத நிலையில் நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும். மிகச் சிறிய அளவிலாயினும். பின்னர் பெரிதாக வளரும் என்ற நம்பிக்கையில்.
களப்பிரர்,
மனிதர்கள் இருக்கும் வரை வன்முறைகள் இருக்கும். அதுபோல வன்முறையற்ற உலகம் கனவாயிருக்கலாம். இருப்பினும், நாம் பின்னதைத்தான் ஆதரிக்கவேண்டும்.
நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன் எனக்குறிப்பிட்டது, அரசாங்க வன்முறைகள், போராளிகளினது, பேரினவாதம், மொழி, கலாச்சாரம் ஆகிய எல்லா ஊற்றுகளிலிருந்தும் வரும் வன்முறைகளையும் தான்.
போராளிகளின் வன்முறை, அரசு வன்முறைக்கு பதிலானதுதான் என்பதே என் நிலைப்பாடும். அதனால்தான், அரசு வன்முறை முதலில் நிறுத்தப் பட வேண்டும் என்று கருதுகிறேன்.
ஈழத் தமிழர் பிரச்சனை எப்படி தீர்க்கப்பட வேண்டும் என்பது அடுத்தகட்ட பிரச்சனை.முதலில் அவர்களது சுய நிர்ணய உரிமை இந்தியாவால் அங்கீகரிக்கப் படவேண்டும். பின் எல்லா காய்களும் சரியான இடத்தில் விழும்.
//பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.//
மிக சரியான நிலைப்பாடு. பெரும்பாலானோர் ஈழத் தமிழர் அதரவையும் விடுதலை புலிகளுக்கான ஆதரவையும் குழப்பிக் கொள்கிறார்கள். பள்ளிகளின் மீதும் குடியிருப்புகளின் மீதும் குண்டு போடும் சிங்கள இனவாத ராணுவத்திற்கும் பேருந்திலும் சந்தை பகுதிகளிலும் குண்டு வைத்து பொது மக்களை கொல்லும் விடுதலை புலிகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
//பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?//
நிச்சயம் உள்ளது. ஈழத் தமிழர் என்று இல்லை...உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அந்த உரிமை உள்ளது... அதை பறிக்கும் அல்லது தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
//பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?//
முதலில் விடுதலை புலிகள் தான் ஈழத் தமிழர்கள் என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும்... விடுதலை புலிகளின் குண்டு வைப்பு மற்றும் அரசியல் படுகொலை சம்பவங்களை சிங்கள அரசு உலகிற்கு தெரியபடுத்தி அவர்கள் மீது வெறுப்பை வர வைக்கிறது. ஆகவே அந்த வெறுப்பு ஈழத் தமிழர்களின் மீதும் ஏர்பட வைக்கிறது. முதலில் இதை மாற்ற வேண்டும். விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்கள் இல்லை.. அவர்களை தாண்டி அமைதியான வழியில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்... பிறகு ஈழத் தமிழ் மக்களுக்காக உலகம் முழுதும் குரல் கொடுக்கும். வேறு வழியே இல்லாமல் சிங்கள அரசாங்கம் வழிக்கு வரும்...
உலகம் முழுதும் ஈழத் தமிழர்கள் பரவி இருந்தும் இணையம் போன்றவற்றை பயன்படுத்தி சிங்கள அரசாங்கத்தின் அடக்கு முறைகளை உலகிற்கு அம்பல படுத்துவதில் ஏன் வெற்றி அடைய முடியவில்லை என்பதை ஆராய வேண்டும்... இதற்கு காரணம் ஈழத் தமிழர்களை விடுதலை புலிகளாக உலகம் பார்ப்பதால் தான்...
//கடைசியாக இருந்த சமாதான உடன்படிக்கையை புதுபிக்காதவர் யார் என்பது தெரிந்தால், யாருக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை, யார் தீவிரவாதி என்பது விளங்கும் .//
//கடைசியாக இருந்த சமாதான உடன்படிக்கையை புதுபிக்காதவர் யார் என்பது தெரிந்தால், யாருக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை, யார் தீவிரவாதி என்பது விளங்கும் .//
ஏன் எப்போதும் புதிராகவே பேசறிங்க. இதான் உங்க ப்ரச்சனை. யார் புதுபிக்கவில்லை ஏன் புதுப்பிக்க விரும்பவில்லை என தெளிவாக எழுதினால் அதில் உள்ள உண்மை பலருக்கும் புரியுமே. இதை இணையத்தில் எழுதி உலக நாடுகள் அறிய செய்யலாமே...
//இன்றைய சூழலில் விடுதலை புலிகள் இல்லாமல் ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்பது இல்லவே இல்லை. //
சில நாடுகளால் தடை செய்யப் பட்ட அமைப்பு என்ற வகையில் இதற்கு உலக நாடுகளிடையே தவறான பெயர் தான் இருக்கிறது. ஆகவே புலிகள் அடையாளத்தை தாண்டி வந்து ஒரு சாதாரன ஈழத் தமிழனாக உங்கள் கருத்துகளை, சிங்கள அரசின் அடக்கு முறைகளை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.
SanJai,
உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்களது வலைப்பதிவின் மூலம், நீங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது அனுதாபி என்று அனுமானிக்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்.
ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிய உங்களது பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில், காங்கிரஸோ அல்லது வேறு எந்த மத்திய அரசோ இதுவரை அவ்வுரிமையை அங்கீகரித்ததில்லை. இந்த நிலைப்பாட்டை இந்தியா எடுத்து, இலங்கை அரசை வழிக்கு கொண்டுவந்தால் போதும். பிரச்சனை பாதி தீர்ந்து விடும். அமைதியான, நேர்மையான முறையில் ஈழப் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய தேர்தலை பக்கச்சார்பற்ற முறையில் அம்மக்களிடம் நடத்தினால் அவர்கள் தங்களுக்கு (தனித்தமிழீழம், கூட்டாட்சி ஆகிய இரண்டில்) என்ன உகந்தது என்று தீர்மானித்து விடுவார்கள். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கான தேவையே பின் இருக்குப் போவதில்லை. வெளியில் இருந்து கொண்டு அரசியல் தீர்வு இந்த கோடுகளுக்குள்தான் இருக்கு வேண்டும் என்று சர்வ தேசங்கள் சொல்வதால்தான் பிரச்சனை வள-வள என இழுத்துக் கொண்டு போகிறது.
//உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்களது வலைப்பதிவின் மூலம், நீங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது அனுதாபி என்று அனுமானிக்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்//
தவறில்லை ஜேகே அவர்களே. நான் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவன் தான்.. காங்கிரஸ் அல்லது இந்திய அரசு ஈழ தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட உதவ தயார் தான். ஆனால் அதற்கு பிறகு அம்மக்கள் விடுதலைபுலிகளால் சர்வாதிகார ஆட்சி முறையின் கீழ் வந்துவிடுவார்கள். ஆகவே அவர்கள் முதலில் விடுதலை புலிகளிடம் இருந்து விலகி தங்கள் உரிமைக்காக போராட வேண்டும்.ஈழத் தமிழ் தலைவர்களை இந்திய மண்ணில் வைத்து கொன்றிருக்கிறார்கள். இந்திய அமைதிப் படை செய்த தவறுகளுக்கு ராஜிவ்காந்தியை கொன்றதை ஏற்று கொள்ள முடியாது...ஆகவே விடுதலை புலிகள் இல்லாத அகிம்சை வழியில் போராடட்டும். இந்தியா நிச்சயம் உதவும்.
போதை பொருட்கள் சமுதாயத்தையே சீரழிக்கும் விஷயம். ஆனால் அந்த போதை பொருட்களுடன் விடுதலைபுலிகள் பல முறை பிடிபட்டிருக்கிறார்கள். இதற்கு பிரபாகரன் பொறுப்பேற்பாரா? இதை போலத் தான் இந்திய ராணுவம் செய்த தவறுக்கு ராஜிவ்காந்தியை கொன்றதும்...
ஆகவே ஈழத் தமிழர்கள் விடுதலை புலிகளின் பிடியில் இருக்கும் வரை உணர்வு பூர்வமாக குரல் கொடுக்கலாமே ஒழிய அரசியல் ரீதியாக உதவ முடியாது...
// அதற்கு பிறகு அம்மக்கள் விடுதலைபுலிகளால் சர்வாதிகார ஆட்சி முறையின் கீழ் வந்துவிடுவார்கள். //
ஆமாம்... சுதந்திர இந்தியாவில் நாப்பது ஆண்டு 'ஜனநாயக ஆட்சி' செஞ்ச காங்கிரஸ் நாட்ட முன்னேதிடுச்சு ... முப்பது கோடிக்கு மேல வறுமை கோட்டுக்கு கீழே.. கோடிகணக்கான மக்களுக்கு வேலை இல்ல, சாப்பாடு இல்லை, தண்ணி இல்லை .. இவர் விடுதலை புலிகள் இனிமேல் நடத்தபோர ஆட்சிக்கு குறி சொல்லுறாரு ...
//அரசியல் ரீதியாக உதவ முடியாது..//
அமாம் அஸ்ஸாம் ல ஆயுதம் ஏந்திய போரளிகடோ பேச்சுவார்த்தை நடத்தும், திரிபுராவ்ல நடத்தும், ஜம்மு காச்மீர்ல நடத்தும், பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்கும், கிழக்கு மேற்கு பாகிஸ்தான்ல நடக்கும் சண்டைக்கு இராணுவம் அனுப்பும், ஈழ பிரச்சனைக்குனு வந்தா தமிழர்களுக்கு எதிரா நடக்கும் ...
ஆமாம், இந்திய இராணுவம் பாகிஸ்தான் பிரதமர் கைஎழுத்து போட்டதால தான் இலங்கைக்கு போச்சு .இது ஒண்ணுதான் நீங்க சொல்லாம விட்டது ..
SanJay,
//போதை பொருட்கள் சமுதாயத்தையே சீரழிக்கும் விஷயம். ஆனால் அந்த போதை பொருட்களுடன் விடுதலைபுலிகள் பல முறை பிடிபட்டிருக்கிறார்கள். இதற்கு பிரபாகரன் பொறுப்பேற்பாரா? //
இந்த குற்றச்சாட்டு தொடர்பான சுட்டிகள்/ஆதாரம் காட்ட முடியமா?
நன்றி
ஆமாம், 'விடுதலை புலி' ஒருத்தர் செஞ்ச தவறுக்கு 'பிரபாகரன் பொறுப்பு ஏற்பார். அப்படியே போபர்ஸ் ஊழல், செயின்ட் கிட்ஸ் மோசடி, ஊறுகாய் வியாபாரி பேரம் இப்படி எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் பிரதமர் பொறுப்பேற்று மும்மாதிரியாக இருந்தார்கள் அல்லவா ...!!
இணையத்தில் நான் படித்ததில்லை ஜேகே. செய்தி தாள்களில் தான் படித்திருக்கிறேன். நீங்கள் கேட்டதற்காக இணையத்தில் தேடினேன். குழப்பமான செய்தியுடன் ஒரு சுட்டி இருக்கு. பாருங்க. இதை முழுமையாக படிக்கவும்... பெரும்பாலான சம்பவங்களில் விடுதலை புலிகளுக்கான தொடர்புக்கு ஆதாரம் இல்லை என்றும் சிலவற்றிற்கு ஆதாரம் உள்ளது என்றும் இருக்கு. வேறு சுட்டிகள் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.
விடுதலைபுலிகளை பற்றி அவதூறு பரப்பவது என் நோக்கம் இல்லை... எனக்கு தெரிந்த செய்திகளை சொல்கிறேன். அதில் தவறு இருப்பது தெரிந்தால் திருத்திக் கொள்ளவும் தாயார் தான். வீம்புக்கு விவாதம் செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை.
//http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991103/ige03033.html//
http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19991103/ige03033.html
SanJay, சுட்டிக்கு நன்றி. நானும் இது போன்ற குற்றச்சாட்டுகளை படித்திருக்கிறேன். பெரும்பாலும் அவை அவதூறுகளாகவே இருக்கின்றன. இந்திய, இலங்கை அரசுகள் இந்த குற்றச் சாட்டு தொடர்பான ஆதாரம் தேட நிச்சயம் ஏராளமான ஆட்பலத்தை பயன்படுத்தியிருப்பார்கள். ஏனெனில் அவ்வாறு ஒரு நம்பகமான ஆதாரம் கிடைத்தால் விடுதலைப் புலிகளை அவர்கள் உலக அரங்கில் உண்டு இல்லை என்று செய்துவிடலாம். பல சர்வதேசங்களையும் ஊடகங்களையும் அவர்களுக்கு எதிராக எளிதில் திருப்பிவிடலாம். எனினும்கூட அவர்களால். அவ்வாறு ஒரு நம்பகமான ஆதாரம் தரவில்லை என்பதே இது ஒரு அவதூறு பிரச்சாரம் என்பதில் ஐயமில்லை.
இதில் இன்னும் கொடுமை என்ன தெரியுமா? சென்ற மாதம் இந்திய அரசு புலிகளின் மீதான தடையை நீட்டித்த பொழுது, அது காட்டிய காரணங்களில் இதுவும் ஒன்று.
:(
ஜேகே:
பதிவுக்கு நன்றி!
புலிகளுக்கு வெளியேயும் ஈழப்பிரச்சனையை கொண்டு செல்வது என்பது ஒரு புரிந்து கொள்ளக்கூடிய நிலைப்பாடு. அது பயன் தரக்கூடியது. இதன் பொருள் புலிகளை தவிர்க்கும் அல்லது ஒழித்து ஈழப்பிரச்சனையை அணுகுவது அல்ல. பெரும்பாலான புலி ஒழிப்பு - ஈழ ஆதரவு அணுகுமுறை இலங்கை/ இந்திய புலனாய்வு உத்தியே.
புலிகள் தவிர்த்த ஈழப்போராட்டம் இந்தியவை ஈடுபடச் செய்யும் என்பது ஒரு பொய்யான கற்பிதம். இந்தியத் தமிழர்கள் (மீனவர்கள்) கொல்லப்படுவதில் புலிகள் சம்பந்தப்படவில்லை ஆனால் ஈழத்தமிழர்களின் மேல் அடக்குமுறை செலுத்தும் அதே சிங்கள பேரினவாத மனநிலை தான் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இதையும் கூட பொறுப்பாக அணுகுவதாகத் தெரியவில்லையே. எனவே புலிகள் அற்ற சூழலில் தமிழர்கள் மேலான வன்முறையை இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக கையாளும் என்பது பொய்யான நம்பிக்கை அல்லது திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம். மீனவர்கள் கொல்லப்படும் சூழலே இதற்கு நடைமுறை சாட்சி.
நீங்கள் குறிப்பிட்ட, வாக்குவங்கியை கூர்மைப்படுத்துவது என்பது நல்ல அணுகுமுறை. ஓட்டுக்காக எதையும் செய்யும் சூழலில் இது பலனளிக்கலாம். ஆனால் நமது மக்களிடம் எழும் ஒரு அனுதாப அலையே ஓட்டு வங்கிகளை அசைக்கும் விதத்தில் திரள்கிறதே அன்றி மெல்ல மெல்லக் கிளந்தெழும் விழிப்புணர்வல்ல.
மாறாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்க/ ஐரோப்பிய மக்களிடம் தங்கள் பிரச்சனையை பரப்புவதன் மூலம் இலங்கை அரசுக்கான ஆதரவை குலைக்கவும், தங்களது சுய உரிமைப்போராட்டத்துக்கான நியாயத்தை உணர்த்தவும் செய்யலாம். மேலும் மாறிவரும் சூழலில் அமெரிக்க/ அய்ரோப்பிய அரசுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதந்திரத் தமிழீழம் எடுக்கும் என்கிற அணுகுமுறையின் கீழ் அவர்களை இதில் ஆர்வம் கொள்ளச்செய்யலாம். இவைகள் அதிக பலனளிக்கக்கூடியவை.
தங்கமணி,
உங்களது கருத்துகளுடன் பெரும்பாலும் உடன்படுகிறேன். இந்திய சமுதாயத்தில் "பொது விவாதங்களின் மையக்கருத்துகள்" மிகச் சிலராலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விவாதத்தின் போக்கையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். அதனாலேயே ஒவ்வொரு தேர்தல் முடிவும் ஏதாவது ஒரு "அலை"யினால் நிச்சயிக்கப் படுகிறது. இது ஒரு நம்பிக்கை தரும் நிலையல்லதான். அதே சமயத்தில் சரியான முறையில் அனுகப்பட்டால், "Grass Roots" அளவில் மக்களை ஒருங்கிணைப்பது சாத்தியப்படும் என்பதே என் நம்பிக்கை.
ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பிற்கு ஆட்படுவது என்ற பிரச்சனைக்கு பொதுவாக எல்லோரும்(அல்லது பெரும்பாலான மக்கள்) அது தவறு அது நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலையை எடுப்பார்கள் என்றே நம்புகிறேன். மற்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இது பின்னுக்கு தள்ளப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஈழபோராட்டம்/இன அழிப்பு சர்வதேசங்களின், ஊடகங்களின் கண்களில் தெரியத் தொடங்கியிருக்கும் தற்கால நிலையில் முக்கியமான வெளிநாடுகளின் மக்களிடம் அதற்கான ஆதரவு கோருவதும் நல்ல முயற்சிதான். இந்தியர்களைவிட அவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்வார்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன்.
உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி.
பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜேகே!
பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி ஜேகே!
JK,
பதிவுக்கு மிக்க நன்றி. இலட்சக்கணக்கான தமிழக உறவுகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது உங்களின் கட்டுரை.
பின்னூட்டமிட்ட நண்பர் சஞ்சேய் ஈழம் குறிச்ச சில தவறான புரிதல்களைக் கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அவரின் சில கருத்துக்களுக்கு விளக்கமாகவும் விரிவாகவும் பதிலளிக்க விரும்புகிறேன்.
அதன் மூலம் சஞ்சேய் போன்றவர்கள் ஈழப் போராட்ட வரலாற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்த பின்னூட்டத்தில் விரிவான பதிலுடன் வருகிறேன்.
மிக்க நன்றி.
//பின்னூட்டமிட்ட நண்பர் சஞ்சேய் ஈழம் குறிச்ச சில தவறான புரிதல்களைக் கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அவரின் சில கருத்துக்களுக்கு விளக்கமாகவும் விரிவாகவும் பதிலளிக்க விரும்புகிறேன்.//
இருக்கலாம் வெற்றி. உங்கள் பின்னூட்டத்தை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி.
தங்களின் பதிவிற்கு நன்றி.
திகிழ்மிளிர், உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
//ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.//
இது நிச்சயம் பலன் தரும். நான் செய்து கொண்டிருக்கிறேன்! உங்கள் ஆர்குட் குழுவிலும் சேர்ந்துள்ளேன்.
ஜேக்கே, இப்பத்தான் உங்க இந்தப் பதிவு படித்தேன். சென்னை வரும்போது சந்திக்கலாம்.
தஞ்சாவூரான், உங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி. சென்னை வந்தவுடன் தெரிவியுங்கள் நிச்சயம் சந்திக்கலாம்.
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல