ஜேகேவின் சில குறிப்புகள்: ஷாங்காய் குறிப்புகள் II

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, June 10, 2008

ஷாங்காய் குறிப்புகள் II

- சீனாவில் எண்ணற்ற கார் வகைகள். அதில் ஒரு இந்திய காரை பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய "மாருதி 800"ஐ சுசுகி நிறுவனம் "ஆல்டோ" என பெயர் மாற்றி சீனாவில் விற்று வருகிறது.

- முன்னர் சொன்னது போல சாப்பாடு பெரும்பாடு என்பதால், என்னை "இந்தியா கிச்சன்" எனும் ஒரு இந்திய உணவகத்திற்கு நண்பர் அழைத்துச் சென்றார். உணவகத்தின் வெளியே கழுத்தில் பாம்பு, கையில் உடுக்கையென அட்டகாசமான கெட்டப்பில் ஒரு பிரம்மாண்டமான சிவன் சிலை வைக்கப்பட்டிருந்தது. நம்ம ஊர் ஆட்கள் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன். அப்படியே. "இந்தியா கிச்சன்" சீனாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகளை உடைய இந்திய உணவக நிறுவனமாம். முதலாளி, முன்னாள் காரைக்குடி வாசியாம். இப்ப ஒரு சீனப்பெண்ணை மணந்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். உணவகம் அட்டகாசமாயிருந்தது. விலைதான் சென்னையில் உள்ள 5 நட்சத்திர உணவகங்களின் விலையை மிஞ்சுவதாக இருந்தது.

- சீனாவின் வலைத்தனிக்கை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்னவெல்லாம் தனிக்கை செய்யப்படுகின்றன எனத் தெரிந்தால் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக" தளம் கூடத் தனிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒரு "நேச" நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத் தளத்தினால் அப்படியென்ன குந்தகம் சீனாவிற்கு
விளைந்துவிடுமென நினைத்தார்களோ தெரியவில்லை.

- ஷாங்காய் நகரை இரண்டாக பிரித்து "வுவாங்பூ" நதி ஓடிகொண்டிருக்கிறது. எப்பொழுதும் சரக்கு, மற்றும் சொகுசுக் கப்பல்கள் சென்றவன்னம் இருந்தன. நதிமுகப்பில் இருக்கும் வானளாவிய கட்டிடங்கள் மாலையில் மின்னொளியில் மிக அட்டகாசமாக இருக்குமாம்(நான் சென்ற சமயத்தில் மின்சார சேமிப்பிற்காக அவை பெரும்பாலும் எரியவில்லை). நதியின் மேற்குப்புறம் பழமை வாய்ந்த "புக்சி" பகுதியும், கிழக்கில் புதிதாக வளர்ந்து வரும் புதோங் பகுதியும் இருக்கின்றன. புதோங் பகுதியில்தான் ஷாங்காயின் மிக உயரமான "ஜின் மாவோ" கட்டிடமும், அதை விட உயரமாகக் கட்டப்படும் புதிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

- அதிவேகமாகப் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஷாங்காய் நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான் புதிய கார்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். எனவே கார் எண்களை ஏலத்தில் விடுகிறார்கள். இந்த எண்களை வாங்குவதற்கு பல நேரங்களில் காரின் விலையளவிற்கு செலவிட வேண்டியிருக்கிறதாம். :(

- ஒரு அதி முக்கியமான விசயமென்ன தெரியுமா? நான் இதுவரை சென்ற நாடுகளில் பியர் விலை குறைவாக இருப்பது சீனாவில்தான்(பாண்டிச்சேரியை விட குறைவென்றுதான் நினைக்கிறேன்). ஒரு 650ml Tsingtao பியர் 5.5RMB தான்(சுமார் 30ரூபாய்). நீங்கள் இருக்கும் இடத்தில் இதற்கு குறைவாக பியர் விற்கப்பட்டால் தவறாமல் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!

ஷாங்காயின் வெனிஸ் : ஷொ ஜியா ஜியாவ் (Zhou Jia Jiao)




- சீனக்கட்டிட அமைப்பின் முக்கிய குறியீடான வளைந்த கூறைகளை உடைய ஒரு கட்டிடத்தைக் கூட ஷாங்காயில் என்னால் பார்க்க முடியவில்லை. அசுர வேகத்தில் வளரும் இப்பிந்தியத்தின் பழைய கலாச்சார சுவடுகளை அருங்காட்சியகத்தில்தான் காணவேண்டும் என நினைக்கிறேன். அதற்கேற்றார்போல ஷாங்காயிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 150 சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள ஷொ ஜியா ஜியாவ் நகரத்தின் 2.4சதுர கிலோ மீட்டர் பகுதியை ஒரு "புராதானமான நகரம்" என அருங்காட்சியகம் போல பாதுகாத்து வருகிறார்கள்.

- பொதுவாகவே, கீழைச் சீன கடலையொட்டிய பகுதிகளில் நீர் நிலைகள் அதிகம். அங்குதான் மிகப்பெரிய யாங்ட்சி ஆற்றின் 100 கிலோ மீட்டர் அகலமுள்ள முகத்துவாரமும் உள்ளது. அதுபோலவே, இந்த ஊரும் ஒரு ஏரி மற்றும் பல ஆறுகளின் அண்மையில் அமைந்துள்ளது. ஏரி மற்றும் ஆற்றின் காரைகளில் அமைந்துள்ள நகரவீதிகளால், அப்பகுதியை ஷாங்காயின் வெனிஸ் என்று உள்ளூர்வாசிகள் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.

- சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்நகரில் பழைமையான கட்டிடங்கள், ட்ராகன் கட்டியது என்று அவர்கள் கருதும் பாலங்கள், நம்மூர் ஐயனார் போல உள்ளூர் கடவுளுக்கான கோயில், புத்த விகார், சீனாவிலேயே பழைமையான அஞ்சலகம் எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களது உள்ளூர் காவல் தெய்வத்திற்கான கோவிலில் எக்கச்சக்க கூட்டம். ஒரு நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புத்த விகாரில் யாருமே இல்லை.

புத்த விகார்


உள்ளூர் சாமிக்கான கோயிலில் நாடகம்




- தெருக்களில் விற்கப்படும், மசால் டோஃபு, ஊறவைத்து வறுக்கப்பட்ட டோஃபு(Stinky Tofu), முக்கோணமாக மடிக்கப்பட்ட பனையோலை(அல்லது அதுபோன்றது)யில் மசாலா சேர்க்கப்பட்ட சோறு என விதவிதமான பாராம்பரிய சீன உணவுவகைகளை வெளுத்துக்கட்டினோம்(முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பழகிய பின் ஓகே).

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 14

At Tue Jun 10, 07:49:00 AM GMT-6, Blogger மங்களூர் சிவா சொன்னது

wow மிக அருமையான தகவல்கள்!!

 
At Tue Jun 10, 07:56:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

நன்றி சிவா.

 
At Tue Jun 10, 08:00:00 AM GMT-6, Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) சொன்னது

thanks

 
At Tue Jun 10, 08:17:00 AM GMT-6, Blogger சின்னப் பையன் சொன்னது

சீனா-ஷாங்காய் பற்றிய தகவல்கள் அருமை!!! நன்றி...

 
At Tue Jun 10, 09:16:00 AM GMT-6, Blogger ram சொன்னது

அன்பு நண்பர் ஜேகேயுக்கு
தங்களது சீனா குறிப்புகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது.

சீனர்களின் நல்ல பழக்கவழக்கங்களில் தமிழர்கள் என்னென்ன கற்று தமிழ் நாட்டில் பயன்படுத்தலாம் என்பதையும் குறிப்பிடுங்கள்

அதே மாதிரி அவர்களது அரசு
நல்ல காரியங்களை செய்து வருகிறது. அவைகளில் எவை தமிழக அரசு, மேலும் இந்திய அரசும் "காப்பியடித்து"
மக்களுக்கு நன்மை பயக்கலாம என்பதையும் எழுதுங்கள்.

வெளி நாடு சென்று வரும் அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் எல்லாம் மேற்கூறியவற்றை தங்கள் எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா

இண்டி ராம்

 
At Tue Jun 10, 10:12:00 AM GMT-6, Blogger பிரேம்ஜி சொன்னது

ஜெகே! சுவாரஸ்யமா இருக்கு உங்க சீன குறிப்புகள்

 
At Tue Jun 10, 12:04:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Excellent post. I enjoyed reading it. Keep posting. / நீங்கள் இருக்கும் இடத்தில் இதற்கு குறைவாக பியர் விற்கப்பட்டால் தவறாமல் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!/
I loved this.

Ravi

 
At Tue Jun 10, 12:44:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சாமான்யன்,
ச்சின்னப் பையன்,
பிரேம்ஜி,
ரவி,

உங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

 
At Tue Jun 10, 12:46:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

இண்டி ராம், உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். பிறரிடம் உள்ள நல்லவற்றை நாமும் பின்பற்றவேண்டும். எனது பதிவகளில் நான் அவ்வாறு அவதானிப்பவற்றை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

அன்புடன்
ஜேகே

 
At Wed Jun 11, 05:54:00 AM GMT-6, Blogger கதிர் சொன்னது

களைகட்டுது நட்சத்திர வாரம்.

 
At Wed Jun 11, 12:41:00 PM GMT-6, Blogger சுரேகா.. சொன்னது

www.handyrecovery.com போங்க!

சாப்ட்வேரை எடுங்க! போட்டோக்களை மீட்டெடுத்து பதிவில் போடுங்க!

 
At Wed Jun 11, 09:17:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சுரேகா. Handyrecovery சாப்ட்வேரை கணிணியில் ஏற்றியாச்சு. நினைவட்டைகளில் இருந்து படங்களை மீட்க முடியுதான்னு பார்க்கிறேன்.

உங்களின் டிப்ஸ்க்கு ரொம்ப நன்றி.

அன்புடன்
ஜேகே

 
At Fri Jun 13, 06:35:00 AM GMT-6, Blogger Sanjai Gandhi சொன்னது

சூப்பர் பதிவு..
//அதிவேகமாகப் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஷாங்காய் நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான் புதிய கார்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். எனவே கார் எண்களை ஏலத்தில் விடுகிறார்கள். இந்த எண்களை வாங்குவதற்கு பல நேரங்களில் காரின் விலையளவிற்கு செலவிட வேண்டியிருக்கிறதாம். :(//

நம்ம ஊரில் ஒரே எண்ணுக்கு ஒருவருக்கு மேல் விண்ணப்பித்தால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பரிந்துரைப்பவருக்கு தருவார்களாம். 2 பேரும் சமஉ பரிந்துரை வைத்திருந்தால் பிறகு அமைச்சர் பரிந்துரை தேவை படுமாம். அதுவும் 2 பேரிடம் இருந்தால் போக்குவரத்து துறை அரசாணை அனுப்புமாம் யாருக்கு அந்த எண் வழங்க வேண்டும் என்று. :)))

 
At Fri Jun 13, 06:47:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

நம்ம ஊரில் ஒரே எண்ணுக்கு ஒருவருக்கு மேல் விண்ணப்பித்தால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பரிந்துரைப்பவருக்கு தருவார்களாம். 2 பேரும் சமஉ பரிந்துரை வைத்திருந்தால் பிறகு அமைச்சர் பரிந்துரை தேவை படுமாம். அதுவும் 2 பேரிடம் இருந்தால் போக்குவரத்து துறை அரசாணை அனுப்புமாம் யாருக்கு அந்த எண் வழங்க வேண்டும் என்று. :)))

நல்லா இருக்கே இந்த டெக்னாலஜி...

நன்றி SanJay.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல