என்னுடைய முந்தைய யூதரின அழிப்பைப் பற்றிய பதிவின் பின்னூட்டத்தில் எவராவது நாசிசத்தை சம காலத்தில் ஈழத்தில் நடைபெறும் இன அழிப்புடன் ஒப்பிடுவார்களா என ஆவலுடன் எதிர் நோக்கினேன். வாசித்தவர்களில் பலருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். தங்கமணியும், தஞ்சாவூரானும் மட்டும் அதைக் கோடிட்டு இந்திய தமிழ் சமுதாயத்தின் மீதான எரிச்சலை எழுதியிருந்தார்கள்.
யூதர் இன அழிப்பு பற்றிய ஆக்கங்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு மனக்கண் முன் வருவது ஈழத் தமிழரின் அவல நிலைதான். நாஜிக்களின் கொடுமைக்கும் சிங்கள அரசின் கொடுமைக்கும் ஏராளமான ஒற்றுமைகள்.
எனது முந்தைய பதிவிலிருந்து
//....தொடர்ந்த அவரது யூத வெறுப்புக் கொள்கைகள் மூலம், ஜெர்மானிய யூதர்கள் குடியிரிமையை இழந்தார்கள், பின்னர் சில தொழில் செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் வேலை செய்யும் உரிமைகளை இழந்தார்கள், பின்னர் நகரில் நடமாடும் உரிமைகளை இழந்து கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். கடைசியாக வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.//இதில் யூதர்களுக்குப் பதில் தமிழர்கள் என மாற்றி எழுதினால் அது பெரும்பாலும் பொருந்தும். உள்நாட்டு அகதி முகாம்கள், சிறப்பு பாதுகாப்பு பகுதிகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அவசர நிலைப் பிரகடனத்தால் பறிக்கப்பட்ட எல்லாவிதமான சட்டப்பூர்வமான பாதுகாப்பு, ஆள்கடத்தல், கொலை, விமான குண்டு வீச்சு, கன்னி வெடித்தாக்குதல், உணவுப் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என கெட்டோக்களில் அடைக்கப்பட்ட யூதர்களைப் போலத்தான் ஈழத்தமிழர்களும் அன்றாடம் உயிருக்குப் பயந்து வாழவேண்டியிருக்கிறது.
ஆனால் நாமும் ஈழத்தமிழர்கள் படும் இன்னலுக்கு மௌன சாட்சியாகவே பெரும்பாலும் இருக்கிறோம். அவ்வளவு கொடுமைகள் நிறைந்த நாஜிக்களின் அட்டகாசம்கூட ஏறக்குறைய 10 ஆண்டுகள்தான் நீடித்தது. ஆனால் ஈழத்தமிழர்களின் மீதான அடக்குமுறை 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைவதற்குப் பதில் கூடிக்கொண்டே போகிறது.
ஹிட்லரைப் போல, மஹிந்தாவும் அவரது இனவெறிக் கூட்டத்தாரும் தமிழ் பிரச்சனைக்கான கடைசித் தீர்வை முன்னெடுத்திருக்கிறார்கள். என்ன விலை(அது தமிழர்களின் உயிரில் கணக்கிடப்படுகிறது) கொடுத்தாலும் அவர்களது சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது தான் அது. கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு. சமீபத்தில்தான் இந்தியா, மஹிந்தாவிற்கு 100 மில்லியன் டாலர் கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தது. எப்படியாவது தமிழ் பிரச்சனையை முடித்துவிடுங்கள் நாங்கள் வேறுதிசையில் பார்த்துக் கொள்கிறோம் என்பது போன்ற மனப்பான்மை...
தங்கமணி, தஞ்சாவூரான் சொல்வதைப்போல ஒவ்வொருமுறையும் கையாலாகாமையை மட்டுமே வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவுகளெல்லாம் இல்லை. ஆனால் எதுவுமே சொல்லாமல்/செய்யாமல் இருந்தால், பிற்காலத்தில் வரலாற்றின் முன் நிறுத்தப்பட்டு நாம் கேள்வி கேட்கப்படுவோம். நஜிக்களின் கைக்கூலிகளாக இருந்து இலட்சக் கணக்கான பிரஞ்சு-யூதர்களின் படுகொலைக்கு துணை நின்ற பிரஞ்சு-போலீசாரை வரலாறு காறித் துப்புவது போல் நம்மையும் துப்பும்.
நான் முழு/பகுதி நேர அரசியல்வாதியல்ல, போராளியல்ல, ஆக்டிவிஸ்ட் அல்ல. நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு சாமான்யன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
1) என் ஓட்டுக்களை கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதைச் சொல்வதுதான்.
"சுதந்திர தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆட்சிக்கு வந்தால் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வீர்களா? இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடான 'சிங்கள ஆதரவு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு' என்ற ஜனநாயகமற்ற கொள்கையை மாற்றுவீர்களா? அப்படியெனில் உங்களுக்கு என் ஓட்டு"2) என்னைப்போல ஈழத்தமிழின அழிப்பைக் கண்டு மனம் நொந்து இருப்பவர்களையும் மேற்கண்டதுபோல அரசியல் வாதிகளிடம் சொல்லச் சொல்வது.
3) ஈழத்தமிழ் பிரச்சனை பற்றிய தவறான புரிதல் கொண்ட சக இந்தியர்களிடம் அதைப் பற்றிய தெளிவான கருத்துகளை எடுத்துச் சொல்வது. அவர்களையும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கோருவது.
இவ்வாறு ஒரு நல்ல "ஓட்டு வங்கியை" ஏற்படுத்தினால் மத்தியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தியா நினைத்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
இதை யொட்டி நான் எழுதிய முந்தைய பதிவு....
சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டுஇதை யொட்டி நான் ஆர்குட்டில் ஏற்படுத்திய குழு...
My Vote For Free Tamil Eelamமேற் சொன்ன எனது கருத்துக்களை நீங்கள் ஆமோதித்தால் இந்த மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பிகு: ஈழத்தமிழருக்கு ஆதரவு என்ற உடன் "புலிப்பயங்கரவாதிகள்" ஆதரவு என்று பலருக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. நான் எல்லா வன்முறைகளுக்கும் எதிரானவன். இங்கு நான் தருவது/கோருவது விடுதலைப் புலிகளுக்கான ஆதரவல்ல. ஈழத்தமிழர் எனும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு.
பிகே: மிக அடிப்படையான ஒரு கேள்வி. ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா. இல்லையா?
பிதுகே அ: உள்ளது எனில் நீங்கள் நம்ம கட்சி. அந்த உரிமையை அவர்கள் எப்படி பெருவது. அதற்கு நாம்(எந்த கட்சியையும் சாராத தனி நபர்கள்) மேற்குறிப்பிட்ட வழியை அல்லாது எப்படி உதவலாம்?
பிதுகே ஆ: இல்லையெனில், ஏன்? நீங்கள் ஒரு ஈழத்தமிழராக கொழும்பிலோ, யாழ்பாணத்திலோ இருந்தாலும் இதே பதிலைத்தான் தருவீர்களா?
Labels: அரசியல், ஈழம், கோபம், நாஜி