ஜேகேவின் சில குறிப்புகள்: May 2007

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, May 30, 2007

நீ என் காதலியாயிருந்திருக்கலாம் தான்

விவரம் தெரிந்தது முதல்
எனக்கு உன்னைப் பிடிக்கும்
இரத்தத்தின் குருதியென
நீ என்னை விழிக்கும்போது
கொஞ்சம் போதையாக இருக்கும்
உன் கவிதைகளைக் கேட்கும்போது
தமிழுக்கும் எனக்கும்
முடிவிலி விடியலென்று களிநடனமிடுவேன்
நீ அரியணையில் இருக்கும்போது
நான் பூரிப்பேன்
அரியணைகள் உனை மறுத்தபோது
நான் எல்லோரையும் நிராகரிப்பேன்
ஏனெனில் உன்னை மட்டும்தான் நிரந்தரித்தேன்.

தொடும் தொலைவில் நீ
இருந்தபோது தான்
உன்னை அதிகாரனில்
மயங்கியவளாய்க் கண்டேன்
அப்போதும் என் கண்ணின்
சிறு குறையென
சமாதானம் கொண்டேன்

உன் ஒட்டுண்ணிகள்
என் குருதியை குடிக்கும்போது
என்னால் அடித்துப் பேச முடியவில்லை
நமக்கிடையே வரும் உன்
சொந்தங்கள்
தீப்பந்தங்களாய் என்னைச்
சுடுவது உனக்கேன் எரியவில்லை

முன்னொரு முறை
சித்தாந்தத்தை சில்லரைகளுக்கு
உன் பந்தங்களிடம் விற்றாய்
இன்னொருமுறை
சில்லரைச் சித்தாந்தங்களுக்காக
என்னை அடகு வைத்தாய்
இப்போது பந்தங்களுக்காக
உன்னையே அடகு வைக்கிறாய்

உதய சூரியனில் பனியாய்
விலகுகிறது என் மாயை
நீ என் காதலியாயிருந்திருக்கலாம் தான்
ஆனால் நீ என்னை
காதலித்திருக்கவும் போவதில்லை
நான் உன்னை
அனுமதித்திருக்கவும் போவதில்லை