ஜேகேவின் சில குறிப்புகள்: May 2009

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, May 20, 2009

இருத்தலெனும் சாபம்

மரணங்களின் நிழல்கள்
கட்டி இழுக்கின்றன
என் கால்களை
படுகொலையின் ஓலங்கள்
தேடியலைகின்றன செவிப்பறைகளை
ஊடக வாய்க்கால்களில் ஓடும்
தேசியச் சாக்கடைகள் தெறிக்கின்றன
மனிதத்தின் முகத்தில்
எனக்கும் ஆசைதான்
அப்பழுக்கற்ற இருத்தலைத் தேடுவதில்
ஆனால் இன்றெனக்கு
இருப்பதற்கு பொருமையில்லை
இருக்கவும் தெரியவில்லை
பெருவெளியை நிறைத்திருக்கும் விசும்பில்
சாவின் சுவடுகளில் படிந்திருக்கும்
துரோகப் புண்களில் வடியும்
சீழ் துடைக்க
என்னிடம் இல்லை
மயிலிறகோ, விரல்களோ, கரங்களோ
கோபங்கள் என்னைச்
சிறிது சிறிதாக சிதைக்கின்றன
கவிதைச் சுயமைதுனம் செய்து
காயங்களில் களிம்பு தடவுகிறேன்
எல்லாம் குமட்டுகிறது
இக் கவிதை உட்பட

Labels: , ,

இதுவும் ஊரா இவரும் மனிதரா

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இதுவும் ஊரா இவரும் மனிதரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே - மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Labels: ,

Sunday, May 17, 2009

உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச வாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்னரே, அவர்களை தமது உடைகளை முற்றிலும் கழற்றி விடுமாறு நாஜிக்கள் அவர்களிடம் சொல்வார்கள். தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தும் எந்தவிதமான சிறு எதிர்ப்பும் இன்றி தமது உடைகளைக் கழற்றிவிட்டு விச வாயு அறைகளுக்குள் சென்று ஈசல் போல செத்து மடிந்தார்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள். அப்பொழுது உலகம் கேட்டது, ”எப்படி ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் இவர்கள் தமது அழிவை ஏற்றுக்கொண்டார்கள்?” என்று. அதே உலகம் சொன்னது ”இனிமேல் இது போல ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் நடக்க விட மாட்டோம்” என்று.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரை நூற்றாண்டாக அநீதிகள் நடைபெற்றுவருவதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். தமிழர்களின் மனித உரிமைகள் சில கோடி முறைகளாவது மீறப்பட்டிருக்கும். ஆனால் யூதர்களைப்போல தமிழர்கள் சாகவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் அதே உலகம் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி தமது புனித பிம்பங்களை தமக்குத்தாமே நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் தாண்டி, அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிற்காகவே, பல ஆயிரம் தமிழர்கள் ஈசல் போல கொல்லப்பட்டனர். இது போல வேறு எங்கும் நடைபெற விட மாட்டோம் என்று சூளுரைத்த உலகம் கொலைகாரர்களை தட்டிக்கொடுத்தது. கொலை செய்யப்படுபவர்களை கண்டித்தது. அவர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த இனப் படுகொலை நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் வருவார்கள் சாரி சாரியாக. ”நாம் தவறு செய்துவிட்டோம், இனிமேல் இது போல மற்றொரு இனப்படுகொலை நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என சூளுரைப்பார்கள். திரைப்படங்கள் எடுத்து/பார்த்து கண்ணீர் சிந்தி ஆஸ்கர் பரிசுகொடுத்து தமது தூய்மையை நினைவூட்டிக்கொள்வார்கள். கட்டுரைகள் எழுதி புலிட்சர் பரிசுவாங்குவார்கள். ஏன் இலங்கையில் அமைதி கொண்டுவந்ததற்காக இந்திய இலங்கை ஏகாதிபத்தியங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது.

இங்கே யாருமே பரிசுத்தமில்லை. புலிகளும்தான். அவர்களின் முரட்டுத்தனங்களாலும், முட்டாள்தனங்களாலும் தமிழர்கள் அடைந்ததைவிட இழந்தது அதிகமாக இருக்கலாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு முன்னும் பின்னும் நின்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் தெரியும்.

இதோ அந்த புலிகள் முப்பதாண்டுகளில் முதன் முதலாக தாம் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஒரு போராட்டம் இப்படி முடிந்து விட்டதென்று வருத்தமாக இருக்கிறது. புலிகளின் மீது கோபமாகக்கூட இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் நிச்சயமாக புலிகளின் பேரில் பெருமையடைகிறேன். அவர்கள் தோல்வியில் ஒன்றும் அவமானமில்லை. அதீதமான பெருமைதான் மிச்சமிருக்கமுடியும். புலிகளே! புலிகளின் பின்னின்ற ஈழத் தமிழ் மக்களே! உங்களின் மன உறுதியும் வீரமும் வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு புலியின் தியாகமும் ஒரு சகாப்தம். உங்களுக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட முடியாத எமது கையாலாகாமையை எண்ணி வெட்கப்படும் அதே நேரம், நீங்கள் பேசிய மொழியை நானும் பேசுகிறேன் என்பதற்காக நான் பெருமை அடைகிறேன். அந்த மொழிக்காக நீங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்தீர்கள் என்பதை நினைக்கும் ஓவ்வொரு பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது. எங்களை உங்களது தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் அழைப்பீர்களே அதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும். உங்களது வீரத்தை நாங்கள் ஒரு காலத்திலும் மறக்கமாட்டோம். சர்வ தேசங்களின் துரோகத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தையும் நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

முப்பதாண்டு போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்து விட்டதென்று துக்கமுற வேண்டாம். இலட்சம் மக்களின் தியாகத்தினால் எதுவும் நடக்கவில்லையே என்று அழுது புலம்ப வேண்டாம். முப்பது இலட்சம் தமிழர்கள் அன்றாடம் பட்ட அவதிகளுக்கு ஒரு முடிவில்லையா என வருந்த வேண்டாம். உங்களது தொப்புள் கொடி உறவுகள் உங்களை கைவிட்டு விட்டார்களே என்று துயரமடைய வேண்டாம். நீங்கள் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போராடி களைத்துப்போய் இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து போராட்டச் சுடரை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். அமைதியான முறையில் நமது இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுகிறோம். இது ஓரிரு வருடங்களில் முடியலாம் இல்லை பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்.

Labels:

Monday, May 04, 2009

தமிழனுக்கு உணவில்லை எனினும் சும்மா இருந்திடுவோம்

இனிமேல் சாப்பிட எதுவுமே இல்லை எனும் அவலக்குரல் கொடுக்கிறர்கள் வன்னியில் உலகத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் சபிக்கப்பட்ட ஏழை மக்கள். அறிக்கைத் துண்டுகளின் மூலம் கூட ஆறுதல் அளிக்கத் தவறிய இவர்களா ”ஸோற்றுப் பார்சலை” விமானம் மூலம் போடப் போகிறார்கள். கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை எப்படி ஜீரணிப்பது என்று தெரியவில்லை. அதற்குத் தேவையில்லாமல் முத்துக்குமார் போன்ற தைரியசாலிகள் முன்னரே செத்துப் போய்விட்டார்கள். எனக்கு அந்த அளவிற்கு தைரியமும் இல்லை, வேறெதையும் செய்ய வக்குமில்லை. இனிமேல் புலம்புவதற்கு கூட அருகதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் அதைச் சுட்டிக்காட்டினான். “நீ இதைப்பற்றி பேசி என்ன கிழித்தாய்” என்று. அவன் சொல்வதும் சரிதானே.
----
என் சிற்றறிவிற்கு எட்டிய எந்த சித்தாந்தங்களின் மீதும் திடமான நம்பிக்கை எனக்கு இல்லை(மதங்களிலிருந்து, கம்யூனிசம் வரை). தனிப்பட்ட முறையில் இந்த உலகத்தையும் சமூகத்தையும் அதில் என்னுடைய இடத்தையும் நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டிருந்தேன். அந்த புரிதலின் அடிப்படையில் ”எனக்கு நேர்மையாக நான் நடந்து கொள்ளவேண்டும்” என்பதே எனது கொள்கை. அதுதான் எனது சரிகளையும், தவறுகளையும் தீர்மானித்தது. யாருக்கும்(விலங்குகளுக்குக் கூட) நம்மால் துன்பம் விளையக்கூடாது என்பதற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தது மட்டுமல்லாமல்; பால், முட்டை மற்றும் தோல் பொருட்கள் போன்ற விலங்குப் பொருட்களைக்கூட தவிர்த்து வருகிறேன். குளோபல் வார்மிங்கிற்கு நான் பங்களிக்கக் கூடாது என்பதற்காக கொஞ்ச நாள் சைக்கிள் ஓட்டினேன்(பின்னர் சவுகரியப் படாததால், கொள்கைச் சமரம் செய்துகொண்டு தானுந்திக்கு மாறிவிட்டேன் என்பது வேறு விசயம்). ஆனால் இதுபோன்ற கொள்கைச் சூரத்தனங்கள் எல்லாம் இப்போது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றுகிறது. சமூகம் மற்றும் சமூகத்தில் என் இடம் பற்றிய எனது கேள்விகளும் எனது புரிதல்களும் கூட பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது.

பிகு: தற்போது, குளோபல் வார்மிங் சீக்கிரம் வந்து உலகம் முழுவதையும் இப்போதே கபளீகரம் செய்து விடாதா என லேசாக ஒரு ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது என்பதையும் நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன்.
----
தேர்தல் என்ற ஒரு மயிரு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடப்பது போலத்தான் இதுவும். கண்ணெதிரே நடக்கும் கேனத்தனங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஒரத்தில் நின்று புலம்ப மட்டுமே முடிகிறது. இவர்கள் எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று தெரியும் ஆனால் தமிழர்களின் குருதி நிரம்பிய குளத்தில் இறங்கி ஓட்டு பிடித்து விளையாடுவார்கள் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சாமான்ய மக்களிடம் பேசினால் பித்தே பிடித்துவிடுகிறது. காவேரி டெல்டா பகுதிகளில் ஈழத்திற்கு ஆழமான ஆதரவு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் சாவதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கேட்டு வருபவர்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நினைத்தேன். கூச்சமே இல்லாமல் எல்லோரும் திமுக கொடியை பைக்கில் கட்டிக்கொண்டு ஜாலி பன்னிக் கொண்டிருக்கிறார்கள்(பைக்கில் கொடியுடன் மாஸ் காட்டினால் இருநூறோ ஐநூறோ தருகிறார்களாம்).

மக்களிடம் தேர்தல் பற்றி கேட்டால், “அந்த ஊர்ல TV கொடுத்துட்டய்ங்க அவங்க எல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க. எங்க ஊர்ல இன்னும் TV கொடுக்கல அதனால அம்மா கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவாய்ங்க” என்று சர்வ சாதரணமாக அரசியல் சமன்பாட்டை விளக்குகிறார்கள். ஈழம் பற்றிய தெரிதலும் சுத்தமாக இல்லை, புரிதலும் சுத்தமாக இல்லை.
----
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் நலக்கூட்டணி அமைய முயற்சிக்கவும், அப்படி அமையும் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவும் http://voteforeelam.in என்ற தள முகவரியையும், PHP/MySQl வசதியுடன் கூடிய serverக்கும் பணம் கட்டி பதிந்து வைத்திருந்தேன். பின்னர் நடந்த நாடங்களைக் கண்டு மனதுடைந்ததில் அதை அப்படியே விட்டு விட்டேன். யாருக்காவது அந்த தளத்தை அமைத்து எழுது விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். அதற்கான உரிமையயையும், எனது சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Labels: , ,