ஜேகேவின் சில குறிப்புகள்: October 2005

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, October 31, 2005

"The Corporation"

டாகுமெண்டரி படங்களை காசு கொடுத்து பார்ப்பவர்கள் எல்லாம் ஒன்னு கடவுளாக இருக்க வேண்டும் அல்லது கழண்ட கேசாக இருக்க வேண்டும் என்பதே வெகு நாட்கள் வரை எனது தாழ்மையான கருத்தாக இருந்தது. சமீபத்தில் வாடகை வீடியோ கடையில் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கீழே காணும் இந்தப் படத்துடன் ஒரு DVD என் கவனத்தை ஈர்த்தது.

DVDயின் பின்குறிப்பை படித்ததில் அது ஒரு ஆவணப் படம் என்றும் அதில் மைக் மூர், சோம்ஸ்கி போன்ற பெருந்தலைகள் கூட பங்கேற்றிருக்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் சரி இதைப் பார்த்தால்தான் என்ன எனத் தோன்றியது. அப்புறம் "சரி பார்த்துவிடலாம்" என முடிவெடுத்தேன். சமீபகாலத்தில் நான் எடுத்த, என்னில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்திய, முடிவுகளில் அதுவும் ஒன்று என்பதை நான் அப்போது உணரவில்லை.

இந்த படம் நிறுவனங்களின்(Corporations) சமீபகால வளர்ச்சியையும் அவை அரசாங்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் மீது மறைமுகமாகச் செலுத்தும் அதிகாரங்களையும் ஆராய்கிறது. சென்ற நூற்றாண்டில் பல நாடுகளில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள்
தனி ஒரு குடிமகனுக்குறிய எல்லா உரிமைகளையும் நிறுவனங்களுக்கும் தந்தன. மனிதர்களைப் போலல்லாமல் "இலாபம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட "நிறுவனங்கள்" எந்த மாதிரியான "குடிமகன்களாக" உருவெடுத்திருக்கின்றன என்பதை நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்முகங்களின் மூலம் விளக்குகிறது "த கார்ப்பரேஷன்".

சோம்ஸ்கி, மூர் தவிர பல நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் CEOக்கள், நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுணர் மற்றும் "மேலாண்மை பெரியசாமி" பீட்டர் ட்ரக்கர் போன்றோருடைய பேட்டிகளையும் இப்படத்தில் காணலாம். அவை எல்லாவற்றையும் விட எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது நம்மூர் Dr வந்தனா சிவா அவர்களின் பேட்டிதான். பாசுமதி, புளி, மஞ்சள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட பேடண்ட்களை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்காடிவரும் குழுக்களில் இவர் முக்கிய பங்காற்றியிருக்கிறாராம்.

படத்தில் சொல்லப்படும் தகவல்கள் பெரும்பாலும் முகத்தில் அறைவது போன்ற எண்ணத்தைத்தான் என்னில் ஏற்படுத்தின. மான்சாண்டோவின் பசுமாட்டிற்கான rBGH(Bovine Growth Harmone) ஊசியைப் பற்றிய தகவலை கேட்டதிலிருந்து நான் ஆர்கானிக்(Organic) பால் மற்றும் காய்கறிகளை மட்டுமே இயன்றவரை சாப்பிட முயற்சிக்கிறேன். என்னை ஓ வென
வாயைப் பிளக்கவைத்த மற்றொரு செய்தி IBM நிறுவனத்திற்கும் ஹிட்லரின் ஹோலோகாஸ்டிற்கும் உள்ள தொடர்பை விளக்கியது. இவைபோல பலப்பல செய்திகள்...

சோசலிச பொருளாதாரச் சித்தாந்தங்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கும் எனக்கு அந்த தத்துவங்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள தூரத்தைக் காண்பதில் அவ்வப்போது ஒரு மாதிரியான disillusionment ஏற்படும். நவீன-லிபரல் பொருளாதாரக் கொள்கைகளின் மனிதாபிமானற்ற வழிகளையும்,விளைவுகளையும் இந்த ஆவணப்படத்தில் காணும்போது இச்சித்தாந்தங்கள் மட்டும் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையப்போவதில்லை என்பது மட்டுமாவது தெளிவாகிறது.

நீங்கள் வலது சார்பியோ,இடது சார்பியோ அல்லது நடுநிலைவாதியோ கதை-திரைக்கதை இல்லாத ஒரு படத்தை மூன்று மணி நேரம் பார்க்க உங்களுக்கு தெம்பிருக்குமானால் இந்தப்படம் ஏதாவது ஒரு வகையில் உங்கள் பார்வையை விசாலமாக்கும் என நான் நம்புகிறேன்.

மேலதிகத்தகவல்களுக்கான சுட்டிகள்

1) http://www.thecorporation.com/
2)
வந்தனா சிவாவைப் பற்றி http://www.zmag.org/bios/homepage.cfm?authorID=90
3) வந்தனா சிவாவைப் பற்றி மேலும் http://www.google.com/search?q=Dr+Vandana+shiva

Sunday, October 30, 2005

மீண்டும் ஒரு முறை...

இன்னொரு முறை பயங்கரவாதம் இந்தியாவை உலுக்கியிருக்கிறது. இதைச் செய்தது யாராய் இருந்தாலும் அவர்கள் தேச விரோதிகள் மட்டும் அல்ல மனிதத்தின் விரோதிகளும் கூடத்தான். ஒரு தனி மனிதனின் அல்லத சமுதாயத்தின் எம்மாதிரியான இழப்போ, அநீதியோ இதுபோன்ற சக மனிதரின் மீதான வன்முறையை நியாயப் படுத்தாது. எந்தப் பிரச்சனையையும் இது தீர்த்து வைக்கப் போவதில்லை.

குடிமக்களின் பாதுகாப்பை பேனிக்காப்பது அரசின் தலையாய கடமை. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் கோடிகளில் வரிப் பணத்தை செலவழித்தும் ஒரு பாதுகாப்பான சமுதாயச் சூழலை மக்களுக்குத் தர முடியாமல் இருப்பது மத்திய மாநில அரசுகளின் மிகப்பெரிய தோல்வி. மும்பை குண்டு வெடிப்பு, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் போன்ற பல கொடூரமான பயங்கரவாத செயல்களுக்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதது நம் அரசாங்கத்தின் கையாலாகாமையையே காண்பிக்கிறது. "பயங்கரவாதக் கோழைகளை முறியடிப்போம்" என வாய்கிழியக் கத்துவதால் மட்டும் மக்கள் மனதில் அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இயந்திரம் இனியும் மெத்தனமாயில்லாமல் ஒழுங்கான உண்மையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

சிலர் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்கும் அதே நேரத்தில் அரசு வன்முறைகளைச் சுட்டிக்காட்டி அதுதான் இது போன்ற பயங்கரங்களுக்கு வழிகோள்கின்றன எனக் கூறுகிறார்கள். அது ஒரளவிற்கு உண்மையே. ஆனால் அரசு வன்முறையை எதிர்க்கவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பல நிறுவன/சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களை குறி வைக்கும் பயங்கரவாத இயக்கங்களிடமிருந்து தனி மனிதர்கள் எவ்வாறு தங்களைப் பதுகாத்துக் கொள்ள இயலும்.

தீவிரவாதம் தலை தூக்குவதற்கு அதிகார வர்க்கத்தின், அதிகார துஷ்பிரயோகமும், வன்முறைகளும், தனி மனித சுதந்திரத்தை தேவைக்கேற்ப காற்றில் பறக்க விட்டு விடுவதும், அடுத்தவர்களை அடக்கி ஆள நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதும் கூட சில காரணிகள். இவை பாதிக்கப் பட்டவர்களை மனிதத்தின் எல்லைக்கே இட்டுச்செல்வது ஒன்றும் நம்பத்தகாத விசயம் இல்லை. பயங்கரவாத செயல்களை கோழைகளின் செயல் என கண்டிக்கும் நாமும், நமது ஜனநாயக அரசும் மற்றவரின் சமுதாய, கலாச்சார மற்றும் பொருளாதார சுதந்திரத்தை ஒவ்வொரு கணமும் மதித்து நடக்கும் பொழுதுதான் ஒரு பயங்கரவாதமற்ற சமுதாயத்தை அடைவதற்கான பயனத்தில் பாதி தூரத்தை நாம் அடைவோம்.

Sunday, October 23, 2005

கோடுகள் சலனங்கள்

கோடுகள் நிதர்சனம்
சலனங்கள் நிதர்சனம்
கோடுகள் சலனங்களாவதும்
சலனங்கள் கோடுகளாவதும் கூட
நிதர்சனங்கள்தான்
நிதர்சனம் மட்டும்
நிதர்சனம் இல்லை

Thursday, October 06, 2005

"ஒரு உண்மையான இந்தியர்"

இரண்டு நண்பர்களிடமிருந்து கீழ்காணும் இந்த மின்னஞ்சல் வந்தது.
-------------
sub: Fwd: A mail sent by Dean IIT Madras, about a real Indian
Dear Friends,
Here is a personal experience, as well as a moment of national pride, which I want to share with you. Hope you find it worth the time you put in reading it :

"In the middle of 1965 India-Pakistan war, US govt - then a close friend of Pakistan - threatened India with stopping food-aid (remember "PL-480"?). For a food deficient India this threat was serious and humiliating. So much so that in the middle of war, Prime Minister (Late) Lal Bahadur Shastri went to Ram Leela Grounds in Delhi and appealed to each Indian to observe one-meal-fast every week to answer the American
threat. As a school boy, I joined those millions who responded to Shastriji's call. I continued the fast even when the war was over and India became self sufficient in food. Hurt deep by the national humiliation suffered at the hands of the US govt, I had vowed to stop my weekly fast only when India starts giving aid to USA.

It took just 40 years. Last week THE day arrived. When Indian ambassador in Washington DC handed over a cheque of US$ 50 million to the US govt, two plane loads of food, medical aid and other relief materials were waiting to fly to the USA. Time to break the fast? With no bad feeling about the USA, and good wishes for the Katrina victims, this humble Indian feels proud of the distance India has covered in 40 years. Let's celebrate a New India!"
- Vijay Kranti.
Dean - IIT Madras
----------------------

முதலில் இது எந்த அளவிற்கு ஒரு உண்மையானது என்று தெரியவில்லை. நான் வலையில் தேடிப்பார்த்த வரையில் இது சம்பந்தமாக எதையும் அறிய முடியவில்லை. IIT Madras வலைத்தளத்தில் தேடிப்பார்த்ததில் "Vijay Kranti" என ஒருவர் ஐஐடி யில் டீன் ஆக இருகீறார் என்பதற்கான எந்த அறிகுறியுமில்லை.

இந்த மடல் உண்மையோ, அல்லது வலையில் சாதாரணமாக உலாவும் புருடாக்களில் ஒன்றோ, அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ஆனால் இது போன்று "inspiration" கதைகளைச் சொல்லி நாட்டுப் பற்றை வழியுறுத்துவதுதான் jingoismஆகப் படுகிறது.

புயலில் பாதிக்கப்பட்ட அமெரிக்க அரசிற்கு (உண்மையில் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்திற்குத்தான் கொடுத்தார்கள்) சில்லரைகளை கொடையாகக் கொடுத்தை ஒரு சாதனையாகக் கருதுதலை சகிக்க முடியவில்லை.

பெருமைப்படுவதற்கு என்று ஒரு காரணம் தேவையில்லை. நாம் நாமாக இருப்பதற்கு நாம் பெருமைப்படா விட்டாலே அது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைதான். இப்படி சில்லரை விசயங்களுக்கு தாம் தூமென்று குதித்தல்
தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வெளிப்பாடு.

அமெரிக்காவில் புயல் பேரழிவில் நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்த அதே சமயத்தில் தான் உபியிலும்,மும்பையிலும்,ஆந்திராவிலும்
பல நூறுபேர் மூளைகாய்ச்சலாலும்,பெரு மழையாலும், புயலாலும் இறந்து போயினர். அதைப்பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்க நமக்கு எங்கே நேரம் கிடைக்கிறது.

CNN ல் என்ன தகவலென்று பாருங்கள். அமெரிக்காவில் யாருக்கோ வயித்து வலியாம்....

Monday, October 03, 2005

புயலுக்குப் பின் கொரியாலிஸ் விசை.

பொறியியலில் "எந்திரங்கள்" பற்றிய பாடத்தில், பல புரியாத விசைகளையும், இணைகளையும்(Couple) பற்றி படித்தேன். மேல் நிலை வகுப்பு இயற்பியலில் படித்திருக்க வேண்டியதேயானாலும், புரிந்துகொள்ளாமல் கடம் அடித்ததில் அவை +2 முடித்தவுடன் மறந்து போயிருந்தன. கல்லூரியிலாவது புரிந்துகொள்ளலாம் என்றால், அங்கே வெறும் கடினமான கணக்குகளாகக் கொடுத்து விரிவுரைத்தார்கள் பேராசிரியர்கள். ஏதோ ஒரு மதிரி புரிந்தும் புரியாமலும் ஒப்பேத்திவிட்டேன். இப்ப, யாரோ சொன்ன மாதிரி,
"கொட்டிக் கொடுக்கிறார்கள் என்று கோடடிக்க" வந்து விட்டதால், கல்லூரியில் புரிந்தவையும் புரியாதவையும் பெரிய பாதிப்புகளை
ஏற்படுத்தவில்லை.

அப்படி அரை குறையாகப் படித்தவற்றில் ஒன்றுதான் கொரியாலிஸ்(Coriolis) விசை/விளைவு. ஸ்லாட்டர் எந்திரத்தில் பயன்படுத்தப் படும் எந்திர வினை முறையில்(mechanism) கொரியாலிஸ் விளைவு இருக்கும். அந்த எழவு விளைவின் அளவையும், திசையையும் சரியானபடி கணக்கிட்டுச் சொல்வதற்குள் மண்டை குழம்பிவிடும்.

நீங்கள் கூட பள்ளியிலோ, கல்லூரியிலோ, வானிலை அறிக்கையிலோ கொரியாலிஸைப் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். நானும் அப்படித்தான், சமிபத்தில் அடித்த புயல்களைப் பற்றிய அறிக்கைகளைப் படிக்கும் போது "கொரியாலிஸ்" வந்து மீண்டும் முகத்தில் "அறைந்தது". இம்முறை அதை எப்படியாவது புரிந்துகொள்வது என்று இனையத்தில் தோண்டினேன்.

-----

ஒரு சுழலும் அமைப்பில் இருந்துகொண்டு, அதைச்சார்ந்து நகரும் ஒரு உள்ளமைப்பு கொரியாலிஸ் விளைவால் பாதிக்கப்படும். நாம் தினசரி
வாழ்க்கையில் இதை பல இடங்களில் அவதானிக்கலாம். புயலில் கொரியாலிஸ் விசையின் பாதிப்பு ஒரு பிரபலமான உதாரணம். அது எப்படி
என்பதை பின்னால் காண்போம். அதற்கு முன் கொரியாலிசைப் பற்றி இன்னும் ஓரிரு வரிகள்.

ஆற்றால் மாறா விதி போல(அல்லது அதைச் சார்ந்து), சுழல் உந்தம் மாறா விதி ஒன்றும் உள்ளது. சுழலும் நாற்காலியில் இருந்துகொண்டு கையை
விரித்தால் நாற்காலி மெதுவாகச் சுற்றும்; கைகளை திரும்ப உடம்போடு சேர்த்துக் கொண்டால் நாற்காலி மீண்டும் வேகமாகச் சுற்றும். சுழல்
உந்த மாறாமையால்தான் இவ்வாறு வேகம் அதிகரிக்கவும் குறையவும் செய்கிறது. அதே சுழல் உந்த மாறாமைதான் கொரியாலிஸ் விளைவுக்கும் காரணம்.

பூமியின் வட துருவத்திலோ, தென் துருவத்திலோ இருக்கும் ஒரு பொருள், நில நடுக்கோட்டில் இருக்கும் ஒரு பொருளைவிடக் குறைந்த சுழல்
உந்தம் பெற்றிருக்கும். வட துருவத்திலிருக்கும் அப்பொருள், சரியாக தெற்கு நோக்கி நகர்வதாகக் கொள்ளுங்கள். அப்பொருளின் ஆரம்பச் சுழல்
உந்தம், புது இடத்தில் உள்ள மற்றொரு பொருளினுடையதை விடக் குறைவாக இருக்கும். எனவே அதைச் சமன் செய்ய, பூமியைவிட அது சற்று
மெதுவாகச் சுற்ற வேண்டும். இதனால், அதன் தெற்கு நோக்கிய நேர்ப்பாதையிலிருந்து சற்று வலது பக்கமாக விலகும்(பூமியின் தென் பாகத்தில் இடது
பக்கமாய் விலகும்). இதுதான் கொரியாலிஸ் விளைவு.

சரி, இதில் புயல் எங்கே வருகிறது?

சூடான கடல் காற்று மேலெழும்புவதால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படுகிறது, இல்லையா. அதைச் சுற்றிலும் உள்ள காற்று, தாழ்வு
மண்டலத்தை நோக்கி வேகமாக நகரும். அப்போது கொரியாலிசால் வலதுபுறமாக(பூமியின் தென் பாகத்தில் இடதுபுறமாக) விலகிச் செல்லும்.
இப்படி ஒவ்வொரு திசையிலிருந்து இருந்து வரும் காற்றும் வலது பக்கம் விலகிச்செல்வதால், அவை காற்றழுத்தத் தாழ்வுமண்டலத்தைச் சுற்றி சுழல ஆரம்பிக்கும்.
அப்புறம் இயற்பியலின் மற்ற விசைகளும்(மையவிலக்கு/நோக்கு) படத்திற்குள் வரும். இப்படித்தான் புயல் கொஞ்சம் கொஞ்சமாக முழு உருவம் பெறுகிறது.

நீங்கள் புயலின் சுழல் திசையை அவாதானித்தீர்களானால், பூமியின் வட பாகத்தில் உருவாகுபவை எப்போதும் கடிகாரத்திற்கு எதிர் திசையிலும்
தென் பாகத்தில் உருவாகுபவை கடிகாரத்தின் திசையிலும் சுழல்வதை காணலாம். இதற்கு காரணம் கொரியாலிஸ் விளைவுதான் (கொரியாலிஸ் சுழல்
திசையைத்தான் தீர்மானிக்கிறது. புயலையே அல்ல).

புயலைத்தவிர இன்னும் பல நேரங்களில் கொரியாலிஸ் அதன் விளையாட்டை காட்டும். அடுப்படியில் உள்ள சிங்க்கில்(sink) / குளியலறையில்
ஏற்படும் நீர்ச் சுழலின் திசை சில நேரங்களில் கொரியாலிசால் தீர்மானிக்கப் படலாம். கொரியாலிசால் ஆறுகளில் ஒரு கரை மட்டும் அதிக
தேய்மானத்திற்கு உட்படலாம். அதுபோல இரயில் பாதைகளில் ஒரு தண்டவாளம் மற்றதை விட சீக்கிரமாய் தேயலாம். (இவ்வமைப்புகள் எல்லாம்
பல்வேறு விதமான விசைகள், காரணிகளால் பாதிக்கப்படும். அவற்றில் கொரியாலிசும் ஒன்று. மற்ற விசைகள், காரணிகள் ஓங்கலாய் இருக்கும்
பட்சத்தில் கொரியாலிசின் பாச்சா எடுபடாது.)

கடைசியாக...பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Russel) சொல்வது போல, இந்த "உபயோகமற்ற அறிவைப்(useless knowledge*)" பெற்றவுடன் என் கை துரு துருவென்றது. உடனே
அடுப்படியில் உள்ள சின்க்கில்(sink) நீர் நிரப்பி, அலைகளெல்லாம் அடங்கிய பின், மேலும் அலைகளெழுப்பாமல் அதைத் திறந்து விட்டேன். நான்
எதிர்பார்த்தது போல கடிகாரத்தின் எதிர் திசையில் சுழலும் நீர்ச்சுழல் ஏற்பட்டது. மனதுக்குள் குதூகலம். அந்த புத்துணர்ச்சியில் மீண்டும்
கொரியாலிசைப் பத்தி படிக்க ஆரம்பித்தேன். அப்படி படித்ததில் ஒரு கட்டுரை என் புத்துணர்ச்சியில் மண்வாரியிறைத்து விட்டது. பெரும்பாலான
நேரங்களில் சிங்க்கில் ஏற்படும் நீர்ச்சுழல், கொரியாலிசால் இருக்காதாம். எனெனில் மிக வேகமாக, வெகுதூரம் நகரும் பொருட்களில்
தான் கொரியாலிசை அவதானிக்க முடியுமாம். சிங்கில் சாதாரணமாக ஏற்படும் நீர்ச்சுழலின் சுழல் திசை, சிங்குடைய வடிவமைப்பு மற்றும்
நீரோட்டத்தின் ஆரம்ப திசை இவற்றால்தான் தீர்மானிக்கப் படுகிறதாம்.

அது போவுது போங்க, சிங்கில் நீர் நிரப்பி விளையாட காசா பணமா? தண்ணி நான் நெனச்சமாதிரி சுத்தனதில எனக்கு ஒரு சந்தோசமே.
தென் துருவப் பகுதியில் இருக்கும் யாராவது இதுபோல சின்க்கிள் நீர் நிரப்பி சோதனை செய்து, நீர்ச்சுழல் கடிகார திசையில் இருந்ததென்று
சொன்னால் சந்த்தோசம் இரட்டிப்பாகும்.

இயற்பியல் புலிகளே, நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்
ஜேகே

பிகு.
* Chap 2 in "In Praise Of Idleness" of Bertrand Russel