ஜேகேவின் சில குறிப்புகள்: July 2006

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Saturday, July 01, 2006

சீனா: முதல் பார்வை

முதன் முதலாக சீனா செல்ல வேண்டியிருந்த பொழுது நம்மை போல (அல்லது நம்மை விட வேகமாக) வளர்ந்து வரும் நமது அண்டை நாட்டை நேரில் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. சீனாவைப்பற்றிய எனது பல அபிப்ராயங்களும், முன்-கருத்துக்களும் ஒரு குழப்பமான முறையில் நிருபிக்கவோ, உடைத்தெரியவோ பட்டன(படுகின்றன).
1) சீன மொழி தெரியாமல் இங்கு சமாளிப்பது வெகு சிரமம். உலகம் நன்கைந்து அலுவலக நண்பர்களாய் சுருங்கிவிடுகிறது.
2) மிக எரிச்சலூட்டும் விசயம் வலைத்தனிக்கை. ப்ளாக்கர் தளம் சுத்தமாக வருவதில்லை. BBC & NYT போன்ற செய்தி தளங்களும்தான். கொடுமை என்னவென்றால் GMAIL கூட ஒழுங்காக வேலை செய்வதில்லை. பெரும்பாலான கூகுள் சேவைகள் அதிமெதுவாகத்தான் வழங்கப் படுகின்றன. ப்ராக்சிகளைப் பயன்படுத்தி தனிக்கப்பட்ட தளங்களை தொடர்புகொள்ளலாம். ஆனால் அது மெதுவான கடுப்பான அனுபவம். பெரும்பாலான நேரத்தை வலையில் செலவிடும் எனக்கு சீனா இந்தவிதத்தில் ஒரு பெரிய PIA.
3) சீனாவிற்கு வரும் எல்லா இந்தியர்களும் குறிப்பிடுவது இது. உள்நாட்டு கட்டமைப்பில் சீனர்கள் எங்கோ போய்விட்டார்கள். அமெரிக்க பெருநகர கட்டமைப்பு வசதிகளைப் போன்றோ அல்லது அவற்றை மிஞ்சத்
தக்கனவாகவோ உள்ளன. இதுபோன்ற வசதிகளைப் பெற எத்தனை ஆயிரம் கோடிகள் நாம் செலவு செய்யவேண்டும் என என்னும்போது மண்டை வலிக்கிறது.
4) பொதுவாக சீனர்கள் மிக நட்புடன் பழகுகிறார்கள். அரசியல் அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஆட்சியில் இருக்கும் கட்சியையும் அரசாங்கத்தையும் அவ்வப்போது விமர்சிக்கிறார்கள்.
5) கணினி பரவல் மிக அதிகம். எல்லாமே சீனத்தில்தான். ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது எனக்கு.
6) உற்பத்தித்துறையில் சீனாவின் ஆதிக்கம் தெரிந்ததே. ஆனால் அதிநுட்ப மின்னனு கருவிகளை வடிவமைப்பதிலும், மென்பொருள் துறையிலும்கூட வெகுவான திறன் பெற்றிருக்கிறார்கள்.
7) அறிவியல், நுட்பம், வணிகம், கணினி போன்ற எல்லா துறைகளுமே சீனத்தில்தான் நடக்கின்றன. ஆங்கிலத்தில்தான் மேல் நிலைக் கல்வி இருக்கவேண்டும் எனும் நம் நாட்டுக் கொள்கையின் ஒரே சாதனை நடுத்தர கீழ்மட்ட மக்களை கல்வியின் கரங்கள் தொடாமல் வைத்திருப்பதுதான் என்பதற்கு இது ஒரு சமகால சாட்சி.
8) சீனர்கள் ஆங்கில அறியாமையை குறையாக கருதுகின்றனர் ஆனால் சீனமொழி பயன்பாடு குறைவாக மதிப்பிடப்படுவதில்லை. அதனால் நம் நாட்டைபோல ஆங்கில அறியாமை இளைஞர்களின் சுயஅபிமானத்தை, நம்பிக்கையை உடைத்தெரிவதில்லை.
9) வாழ்க்கைமுறையில் மேற்கத்திய தனம் தெரிகிறது. இது அன்மைக்கால கலாச்சார தாக்கமா அல்லது சீனர்கள் பொதுவாகவே அப்படிதானா எனத் தெரியவில்லை.
10) நான் நினைத்ததைவிட அதிகமாக புலால் உண்கிறார்கள். புலால் இல்லா உணவு அரிது. (மரக்கறி மட்டும் உண்ணும் எனக்கு இது மிகச் சிரமமாயிருக்கிறது)

இன்னும் சில நாட்களில் மறுபார்வை...