ஜேகேவின் சில குறிப்புகள்: March 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, March 31, 2008

திபெத் விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவின் நோஸ்கட்

சமீபத்திய திபெத் ஆதரவு போராட்டங்களில் இந்தியா சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தது. சில போராட்டங்களை தடை செய்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைது செய்திருந்தது. இருப்பினும் சீனாவிற்கு இந்தியாவின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை போலும்.

சில முக்கிய முடிவுகளின் மூலம் இந்தியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
1) புது தில்லியில் சீன தூதரகத்தின் முன் நடந்த திபெத் போராட்டங்கள் குறித்து இந்தியாவின் சீன தூதரை வரவழைத்து தமது கண்டனங்களைத் தெரிவித்தது. வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கும் நிலையில், அந்நாட்டு தூதுவர்களை இது போன்று வரவழைத்து கண்டித்ததா எனச் செய்திகள் அதிகம் வரவில்லை.
2) இந்திய-சீன வணிகத்துறை அமைச்சர்களுக்கிடையே பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த சந்திப்பை, தமது நாட்டு அமைச்சருக்கு தேதிகள் ஒத்து வரவில்லை எனக் காரணம்காட்டி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க கோரியுள்ளது. இதனால் இந்தியா லேசாக கடுப்பானது மாதிரி காட்டிக்கொண்டது.
3) திபெத் இப்பொழுது சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை பிரச்சாரம் செய்ய வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை திபெத்திற்கு சீன அரசாங்கம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியது. இதில் இந்தியா புறக்கனிக்கப்பட்டது.
4) மேலும் ஒலிம்பிக் தீபம் எடுத்துவரப்படும் பொழுது தகுந்த பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும் அப்படி பாதுகாப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் ஒலிம்பிக் தீப ஓட்ட பட்டியலில் இந்தியா ஒதுக்கி வைக்கப்படலாமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M K நாராயணனை, அவருக்கு இணையான சீன அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு "இந்தியாவின் ஆதரவை கோரியதாக" செய்திகள் தெரிவிக்கின்றன. (கோரினாரா? மிரட்டினாரா? என்பது நாராயணனுக்கே வெளிச்சம்)

ஏறக்குறைய இந்திய-சீன உறவு லேசாக ஆட்டம்காணும் அளவிற்கு வந்திருக்கிறது. தமது நெடுநாளைய கொள்கைகளை கைவிட்டு, சீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கும் பொழுதும், சீனா இவ்வளவு குதிக்கிறது. தமது பொருளாதார, இராணுவ இயந்திரத்தின் அதிவேக வளர்ச்சியால் வந்த தைரியம். தமது பாடலுக்கு இந்தியா எவ்வளவு தூரம நடணமாட வேண்டும் என சீனா நினைக்கிறதென்று தெரியவில்லை. திபெத்தியர்கள் எல்லோரையம் கைது செய்து சீனாவிடம் ஒப்படைத்தால் போதுமா? இல்லை அவர்களை நேரடியாக இங்கேயே கழுவிலேற்றிவிட வேண்டுமா? இந்திய வெளியுறவு கொள்கை மேதாவிகளுக்கே வெளிச்சம்.

Labels: ,

Friday, March 28, 2008

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.

பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை

பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை

பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

:(

- ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம்.

Labels: , ,

Sunday, March 23, 2008

சீனப் பெருஞ்சுவர் (Not that old one, the new one..the firewall)

அலுவல் காரணமாக ஷாங்ஹாய் வந்தேன். நவ சீனாவின் மாபெரும் சுவரான அவர்களின் இணைய தடுப்புச்சுவர்(Firewall) வழக்கம்போல காரியத்தில் கண்ணாக நிற்கிறது. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் தள வலைப்பதிவுகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இடுகை எழுதுவதற்கான பக்கம் திறக்கிறது.

வலைப்பதிவுகளை கொஞ்ச நாட்களுக்கு படிக்க முடியாது. அது ஒருபுறம் இருக்க, அதற்காக வருத்துப்படுவதா இல்லை மகிழ்ச்சியடைவதா என்றுதான் இப்பொழுது குழம்பிக்கொண்டிருக்கிறேன்.

Labels:

Thursday, March 20, 2008

சுதந்திர தமிழீழத்திற்கு ஒரு ஓட்டு

ஒரு அண்டை நாட்டில் நடக்கும் சுய உரிமைப்போரில் ஒரு இனம் அழிந்தொழிவதை வேறு எந்த நாடும் இவ்வளவு காலம் சும்மா பார்த்துக் கொண்டிராது. பாலஸ்தீனத்திலும், டார்ஃபூரிலும் அப்பாவிகள் வஞ்சிக்கப் படுவதை கண்டிக்கும் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை எளிதில் புறக்கணித்துவிடுகின்றன.

தமிழகத் தமிழர்களில் பலர் தமிழ் ஈழத்தில் நடக்கும் ஆயுதப் போராட்டத்தைப் பற்றி இரு வேறு நிலைப்பாடுகள் கொண்டிருந்தாலும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது எனது கருத்து. தமிழீழ விடுதலையை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் தமிழீழ விடுதலையை எதிர்ப்பவர்களாக இருப்பது மிக அரிது. ஆனாலும் இந்திய அரசாங்கம் "இலங்கையின் ஒருமைப்பாட்டையே" தமது முக்கிய நிலைப்பாடாக காலகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலைப்பாட்டை யாரும், எப்போதும் மக்கள் முன் எடுத்துச்சென்று அவர்களின் ஆதரவை பெறவில்லை. இந்த ஜனநாயகமற்ற நிலைப்பாட்டால் ஈழப்பிரச்சனை பல ஆண்டுகளாக ஒரு தீர்விழியாக இருக்கிறது. இந்திய அதிகார வர்க்கத்தாலும் ஊடகங்களாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் சாமான்யர்களின் சிந்தனையிலிருந்தும் ஈழப்பிரச்சனை ஓரங் கட்டப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள் தமக்கு ஆதாயம் இல்லாத விசயத்தில் அதிகம் தலையிடுவதில்லை, எனவே ஈழப் பிரச்சனை ஒரு ஊறுகாய் போலாகிவிட்டது. எப்பொழுதாவது கொஞ்சம் தொட்டுக்கொள்ள மட்டுமே அது பயன்படுகிறது. மக்களின் நிலைப்பாடு இவர்களின் செவிகளில் விழ வேண்டுமெனில் இன்றைய நிலையில் மக்கள் அதை மிக ஆணித்தரமாகவும் மிகச் சத்தமாகவும் இவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும். அதாவது நமது வாக்குகள்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களிலிருந்து ஓராண்டிற்குள் நடைபெறலாம். நாம் இத்தேர்தலில் சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும், அதற்கான நடவடிக்கைகளை முன்மொழியும் கூட்டணிக்கே ஆதரவு தருவதாக உறுதிமொழி எடுக்கவேண்டும். ஆர்வமுள்ளவர்களை ஒன்று சேர்த்து இதற்காக ஒரு பிரச்சாரக்குழுவை அமைக்க வேண்டும். மக்களிடம் சுதந்திர தமிழீழத்துக்கான காரணங்களை விளக்கவும், சுதந்திர தமிழீழம் பற்றிய தவறான புரிதல்களை(இந்திய இறையாண்மைக்கு குந்தகம் போன்ற) குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுதந்திர தமிழீழ தேசத்தை ஆதரிக்கும் கூட்டணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இது தொடர்பாக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

Wednesday, March 19, 2008

திபெத் போராட்டங்கள்: இந்து நாளிதழ் மீது B Raman விமர்சனம்

இராணுவம், வெளியுறவு பற்றி கருத்துப்பத்திகள் எழுதும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி பி இராமன் தனது வலைப்பதிவில் இந்து நாளிதழை பெயர் சொல்லாமல் மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய திபெத் போராட்டங்களைப் பற்றி, இந்து நாளிதழ் "சீன அரசாங்கப் பிரச்சாரத்"தனமான செய்திகளையே வெளியிட்டு வருகிறது. இந்துவின் சீன கம்யூனிச கட்சி சார்பு எல்லோரும் அறிந்ததே. தற்போதைய அதன் போக்க ஒரு சிலருக்கு மட்டுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்துவை இதற்காக பலரும் விமர்சிக்கும் நிலையிலும், பி இராமனின் விமர்சனம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. இக்கருத்தை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொன்னதற்கு அவர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்.

இன்னிலையில், இந்துவின் இலங்கை பிரச்சனை தொடர்பான செய்திகளைப்பற்றி பி இராமன் என்ன நினைக்கிறார் என்பதை அறியவும் மிக ஆவல். அக்கேள்வியை அங்கே கேட்டிருக்கிறேன்.

பி இராமனின் வலைப்பதிவு.
THE PEOPLE'S DAILY OF CHENNAI

Labels: ,

Friday, March 14, 2008

திபெத்

நம்பிக்கையே மனிதர்களின் மிக முக்கிய வாழ்வாதாரம். ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ சக்திகளுள் ஒன்றாகவும், ஒருகட்சி சர்வாதிகார அரசாகவும் உருவெடுத்துள்ள சீனாவிடம் இருந்து திபெத் விடுதலை பெறுவது என்பது எனக்கென்னவோ சாத்தியமானதாகப் படவில்லை. ஒன்றுக்கும் திறனற்ற சிங்கள அரசே தமிழர்களின் சுதந்திர தாகத்தை இவ்வளவு ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கிறது.

உலகின் மிகப்பலம் பொருந்தியதும், தொழில்நுட்பத்தில் வளர்ந்ததுமான அமெரிக்க அரசின் இராணுவம்கூட சீனாவை ஒரு சம எதிரியாகப் பார்க்கிறது. திபெத்திற்கு ஆதரவாக ஒரு துரும்பை கிள்ளி எந்த நாடாவது போட்டால்கூட உடனே தாம் தூம் என்று குதித்து, பொருளாதார/வியாபார வகைகளில் மிரட்டல் விடுத்து வருகிறது சீனா. முன் திபெத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்து வந்த இந்திய அரசாங்கம், சுதந்திர திபெத்தை வெளிப்படையாகவே எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது. காரணம் சீனாவின் இராணுவ பொருளாதார பலம்தான்.

சீனாவில் ஒலிம்பிக் நடக்கவிருப்பதை முன்னிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக திபெத்தியர்கள் உலகெங்கும் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். சீன அரசிற்கெதிராக இந்தியாவிலிருந்து போராடிய திபெத்தியரை காவல்துறையினர் கைது செய்து போராட்டத்தைத் தடுத்துள்ளனர்.(இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அகிம்சை போராட்டங்களுக்கு இந்தியாவே வழிவிடவில்லை எனில், நாமெல்லாம், காந்திக்குப் பதில் மாசேதுங்கையே தேசத்தந்தையாக சொல்லிக் கொள்ளலாமோ?) திபெத் தலைநகரான லாசாவில் புத்த துறவிகளும் பொது மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துகிறார்கள். வழக்கம் போல, சீன அரசு இராணுவ பலம் கொண்டு அமைதிப் போராட்டத்தை அடக்க முயல்கிறது. மியான்மரில் நடந்தது போல, எவ்வளவு பெரிய போராட்டமானாலும் இதை சீன இராணுவமும், அரசும் வெகு எளிதாக வெளியுலகிற்கு தெரியாமல் நசுக்கிவிடும்.

ஆனால், எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின்னரும் கொழுந்து விட்டெரியும் திபெத்தியரின் சுதந்திர வேட்கையை சீனர்கள் அவ்வளவு எளிதாக அனைத்துவிட முடியாது. எந்த நம்பிக்கைக்கும் வழியற்றபொழுதும் விடியலுக்காக நம்பிக்கை தளராமல் காத்திருப்பதுதான் மனிதனின் மகத்துவம். அதுவே திபெத்தியரின் மகத்துவமும். திபெத்திய விடுதலைப் போராளிகளே, உங்களுக்கு என்னால் முடிந்தது. "உங்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவுகள், வாழ்த்துக்கள்".

Labels: ,

Tuesday, March 04, 2008

ஜான் கிரிஷாமின் "தி அப்பீல்" & ஒபாமா - ஒரு புனைவு

சட்டத்துறை சார்ந்த விறுவிறு புதினங்களுக்குப் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் கிரிஷாமின் புத்தம் புதிய படைப்பு "தி அப்பீல்". இந்த கதை அலசும் முக்கியமான விடயம் தேர்தல் வெற்றிகள் எப்படி பணத்தினால் வாங்கப்படலாம் என்பதாகும். ஒரு பெரும் பண முதலை, தனக்கு வேண்டிய தீர்ப்பை பெருவதற்காக, ஒரு மாகாண உச்ச நீதிமன்ற தேர்தலில், அவர் தேடிக்கண்டு பிடித்த வேட்பாளரை நிறுத்தி, நிறைய பணம் செலவு செய்து அவரை வெற்றிபெறச் செய்கிறார். இந்தக் கதையையும், தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்வுகளையும் ஒப்புநோக்குவது தவிர்க்கவியலாததாகிறது. :)

அதற்கு முன் புதினத்தின் கதைச் சுருக்கம். க்ரேன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக பல டன் எடையுள்ள வேதிக்கழிவுகள் அடங்கியுள்ள பீப்பாய்களை போமோர் எனும் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் புதைக்கிறது. வேதிப்பொருள் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால் அதனை பயன்படுத்தும் அவ்வூர் மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். புற்று நோயால் பதிக்கப்பட்ட ஜெனட் பேக்கர் க்ரேன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். வழக்கின் தீர்ப்பில் ஜூரி, க்ரேன் கெமிக்கல்ஸ் ஜேனட் பேக்கருக்கு 41 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் எனத்தீர்ப்பளிக்கிறது. க்ரேன் கெமிக்கல்சின் பங்கு கனிசமாக வீழ்ச்சியடைகிறது. நிறுவனம் திவாலாகும் நிலையில், அதன் அதிபதி கார்ல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு வரும்பொழுது எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற முயல்கிறார்.

அதற்காக, மேல்முறையீடிற்கு முன் வரும் உச்ச நீதிமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கக்கூடிய ஒரு நீதிபதியை தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறார். அதற்காக, நல்ல தோற்றமும், பேச்சாற்றலும் உடைய, மக்களிடம் எடுபடக்கூடிய, இதுவரை எந்த பதவியும் வகித்திராத ஒரு வழக்கறிஞரை கண்டுபிடித்து அவரை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சம்மதிக்கவைக்கிறார். அதுவரை நீதிபதியாக இருந்தவரின் கடந்த கால தீர்ப்புகளை தமது தேவைக்கேற்ப திரித்து விமர்சனம் செய்கிறார். பணத்தை நிறைய செலவு செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து, மக்களிடையே அப்போதிருக்கும் நீதிபதியின் மீது ஒரு பய உணர்சியை ஏற்படுத்தி, தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறார். தீர்ப்பை தனக்கு சாதகமாகப் பெற்றுக்கொள்கிறார்.

இந்த கதையில் வரும் நீதிபதி வேட்பாளரின் பாத்திரத்திற்கும், ஒபாமாவிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நான்கைந்தாண்டுகளுக்கு முன்னர் ஒபாமாவை பெரும்பாலானோருக்கு தெரியாது. அதிகமான பதவிகள் வகித்தவரல்ல. அதனால் அவர் எப்படி முடிவெடுப்பார் எனத் தெரியாது. மக்களின் தற்போதை பல்ஸிற்கேற்ப நிலையெடுத்து விளாவாரியாகப்பேசலாம். எதிரிகளை விமர்சிக்கலாம். பிரச்சாரத்திற்கான பணம் எக்கச்சக்கமாய் இருக்கிறது. அருமையாகப் பேசுகிறார், நல்ல தோற்றம். இதைவைத்து மக்களை கவர்கிறார்.

ஆக, எனது இந்த சதிக்கதையின் (conspiracy theory) நீதி (அல்லது கேள்வி): இவரும் இன்னொரு "மஞ்சூரியன் வேட்பாளராக" இருப்பதற்கான சாத்தியகூறுகள் என்ன? :)

Labels: , ,

Monday, March 03, 2008

செலாமட் தடாங் க மலேசியா

ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் பொழுதும் எனது வருத்தமும் பொறாமையும் அதிகரிக்கும். அதேதான் இந்தமுறை மலேசியா சென்ற பொழுதும். இந்தியா ஒரு பின் தங்கிய நாடு(வளரும் நாடு என்பதெல்லாம் சும்மா நம்மை நாமே முதுகு சொறிந்துகொள்ளுதல்) என்பது நாம் அறியாத விசயம் அல்ல. ஆனால் எவ்வளவு பின் தங்கியது என்பதை வெறும் புள்ளிவிபரங்களைப்பார்த்தோ செய்திகளைப்படித்தோ புரிந்துகொள்ள முடிவதில்லை. மற்ற நாடுகள் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன என்பதை நேரில் பார்க்கும்பொழுதே அது மண்டையில் உறைக்கிறது. இந்தியாவைப் போலவே மலேசியாவும் பிரித்தானியரிடம் இருந்து கடந்த நூற்றாண்டின் பின்பகுதியில் சுதந்திரம் பெற்றது. ஆரம்பத்தில் இந்தியாவைபோலவே ஏழை நாடாகத்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் தற்போது அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. 2010ல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். கோலாலம்பூர், எந்த ஒரு வளர்ந்த நாட்டின் நகருக்கும் நிகராக விளங்குமென நினைக்கிறேன். வெறும் 2 கோடி மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டிற்கு, அதுவும் இந்தியாவின் தன்மைகள் பலவற்றையும் பெற்று, இந்தியாவிற்கு வெகு அருகில் இருக்கும் ஒரு நாட்டிற்கு, இப்படி அபரிமிதமாக வளர்ந்து மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய இயலுகிறது. இந்தியாதான் இன்னும் கக்கூஸ் முதல் கரண்ட் வரையிலான எந்த அடிப்படைத் தேவைகளையும் ஒழுங்காக பூர்த்தி செய்யாமல், கடைந்தெடுத்த வறுமையில் மக்களைப்போட்டு வதைக்கிறது. சாதியால், மதத்தால், வகுப்பால் சிதறுண்ட ஆண்டை-அடிமைத்தனம் நிறைந்த சமூகங்களும், சுயநலமிக்க, தீர்க்கநோக்கமற்ற, அறிவற்ற தலைவர்களும், எவ்வளவு சகதியையும் சகித்துக்கொள்ளும் உணர்வற்ற, கல்வியறிவற்ற, மூடநம்பிக்கைகளில் மூழ்கிபோன சோம்பேறி மக்களும்தான் இதற்கு காரணம். ஒவ்வொரு நிமிடமும் நமது இயலாமையை, நூற்றாண்டுத் தோல்விகளை எண்ணி நான் வெட்கித் தலை குனிகிறேன்.

மலேசியாவில் ஆச்சரியப்படத்தக்க இன்னுமொரு விசயம். பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 20ரூபாய்(1.8 வெள்ளி), CNG 10ரூபாய்(.8 வெள்ளி). பெரும்பாலான கார்கள் CNGயில் தான் ஓடுகின்றனவாம். எரிபொருள் செலவு மிகமிகக் குறைவு. அற்புதமான பல்வழிச் சாலைகளும், குறைந்த எரிபொருள் விலையும், பொதுவாக விலைவாசியை குறைவாக வைத்திருக்கின்றனவென நினைக்கிறேன். குளிரூட்டப்பட்ட நடுத்தர தமிழ் உணவகங்களில் உணவின் விலை சென்னையில் உள்ளதைவிட குறைவாக உள்ளது. சாதா தோசை 15ரூபாய்க்கும், மசால் தோசை 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

இந்த வாரத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள், முக்கியமாக தமிழர்கள். HINDRAFன் நிலைப்பாட்டை பெரும்பான்மையான தமிழர்கள் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. வாடகைகார் ஓட்டும் தமிழர்களிடம் பேசியபொழுது அவர்கள் எல்லோரும் இதை வலியுறுத்தினார்கள். நான் சென்ற நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்(ஒரு தமிழர்) மட்டுமே HINDRAFன் மீது குறை சொன்னார்.

இன்னொரு சுவையான விசயம். இந்த முறை பணியின்பொழுது நான் சந்திக்க நேர்ந்த குழு ஒரு முழுமையான் பன்னாட்டுக்குழு. மொத்தம் இருந்த ஒன்பது பேரில், ஒரு மலேசிய சீனர், இரண்டு மலேசிய தமிழர்கள், மூன்று அமெரிக்கர்கள், ஒரு மெக்சிகோக்காரர், ஒரு உக்ரேன் நாட்டவர், ஒரு செக் நாட்டவர் அடக்கம். ஒவ்வொரு மொழியிலும் எப்படி வணக்கம் சொல்வார்கள் என்பதை கேட்டு அட்டவணையாக தொகுத்துள்ளேன். :)


செலாமட் தடாங் க மலேசியா - அதாங்க "மலேசியாவுக்கு வாங்க"

Labels: , ,