ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, July 28, 2008

உடைந்த பாலம், அடையாறு, சென்னை : விளிம்பு நிலை குறிப்புகள்

வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக ஞாயிறு அதிகாலை எழுந்து சூரிய உதயம் பார்ப்பதற்காக பெசண்ட் நகர் கடற்கரையின் வடக்கேயுள்ள உடைந்த பாலத்திற்கு சென்றோம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் சூரியன் கடைசிவரை வெளியே வரவில்லை. இருப்பினும் கடற்கரையில் காலை அருமையாகவே இருந்தது.

  • பெசண்ட் நகர் ஆல்காட் குப்பம் பகுதியையும், பட்டினப் பாக்கத்தையும் இணைக்குமாறு அடையாற்றின் முகத்துவாரத்தில் ஒரு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. குறுகிய பாலம். இருவர் நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் அளவிற்கே அகலம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அது புயலின்பொழுது கடல் அலைகளின் சீற்றத்தால் பகுதி இடிந்து விழுந்து விட்டது. மீதமுள்ள பகுதி அடையாறின் தென் கரையிலிருந்து ஆற்றுக்குள் சென்று பாதியில் நின்று விடுகிறது. அங்கிருந்து கடலும், அடையாறின் முகத்துவாரத்தின் மருங்குகளில் காணப்படும் பசுமையும் அருமை.


  • ஆல்காட் குப்பத்தை தாண்டி ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருப்பதாலும் இந்த இடத்தைப்பற்றி பலர் அறிந்திராததாலும் இங்கு நிறைய பேர் வருவதில்லை ஆனால் இப்பொழுது இவ்விடத்திலும் சுமாரான கூட்டம் காணப்படுகிறது.



  • கொஞ்சம் தனிமையான பசுமையான இடம். ஆனாலும் அடையாற்று நீர் சென்னையின் சாக்கடை சூப்பாக கருத்திருந்தது. நீர் விளிம்பகள் முழுவதும் கண்ணை உருத்தும் குப்பை.




  • குப்பத்தை தாண்டி, தியோசாபிகல் சொசைட்டி வரும். மிகப் பரந்த இடத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து சில கனவான்களும் சீமாட்டிகலும் கடற்கரையில் நடை பயில வந்திருந்தார்கள்.


  • தியோசாபிகல் சொசைட்டியை ஒட்டிய கடற்கரையில் ஒரு ஏழ்மையான முதியவர் குப்பைகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சுக் கொடுத்த பொழுது "சாமி கும்பிட்ற இடம். அதனால் குப்பைய பொருக்கிறேன்" என்றார். மேற்படி கனவான்கள் தியானம் செய்வதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டேன்.


  • சென்னை படகு குழாமைச் சேர்ந்தவர்கள் அடையாறில் துடுப்பு போட்டுக்கொண்டு இந்த உடைந்த பாலம் இருக்கும் இடம் வரை வந்து பயிற்சி எடுக்கிறார்கள்.

  • குப்பத்தை தாண்டிச் செல்லும் போது தர்மசங்கடமான நிலை. காலை நேரம் என்பதால் ஆண்கள் கடற்கரையிலும், பெண்கள் தியோசாபிகல் சொசைட்டியின் சுற்றுச் சுவருக்கருகில் மண்டியிருக்கும் புதர்களிடத்தும் காலைக்கடன் கழிக்கிறார்கள். எனனைப்போன்ற பொழுது போக்கிற்காகவும் இயற்கையை ரசிக்கவும் செல்பவர்களுக்கு "என்னடா இது காலைக்கடன் கழிக்க வேறிடம் இல்லையா. இப்படி கூச்சமில்லாமல் திறந்து வெளியில் போய் கடுப்பேற்றுகிறார்களே" எனத் தோன்றும். அந்த குப்பத்தினருக்கோ "பொறம்போக்குப் பசங்க, பணத்திமிரு, காலங்காத்தால வண்டிய ஓட்டிகிட்டு கடலப்பாக்க வந்துர்றாய்ங்க. பொண்டு பிள்ளைகள் நிம்மதியாக வெளிய தெருவக் கூட போக முடியவில்லை" என்று திட்டிக்கொண்டிருப்பார்கள். மிக மிக அடிப்படைத் தேவைகளான "மானமோடு கடன் கழித்தல்" போன்ற வசதிகள் எப்போது எல்லோருக்கும் கிடைக்கும்?


Labels: , ,

Monday, March 03, 2008

செலாமட் தடாங் க மலேசியா

ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் பொழுதும் எனது வருத்தமும் பொறாமையும் அதிகரிக்கும். அதேதான் இந்தமுறை மலேசியா சென்ற பொழுதும். இந்தியா ஒரு பின் தங்கிய நாடு(வளரும் நாடு என்பதெல்லாம் சும்மா நம்மை நாமே முதுகு சொறிந்துகொள்ளுதல்) என்பது நாம் அறியாத விசயம் அல்ல. ஆனால் எவ்வளவு பின் தங்கியது என்பதை வெறும் புள்ளிவிபரங்களைப்பார்த்தோ செய்திகளைப்படித்தோ புரிந்துகொள்ள முடிவதில்லை. மற்ற நாடுகள் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன என்பதை நேரில் பார்க்கும்பொழுதே அது மண்டையில் உறைக்கிறது. இந்தியாவைப் போலவே மலேசியாவும் பிரித்தானியரிடம் இருந்து கடந்த நூற்றாண்டின் பின்பகுதியில் சுதந்திரம் பெற்றது. ஆரம்பத்தில் இந்தியாவைபோலவே ஏழை நாடாகத்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் தற்போது அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. 2010ல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். கோலாலம்பூர், எந்த ஒரு வளர்ந்த நாட்டின் நகருக்கும் நிகராக விளங்குமென நினைக்கிறேன். வெறும் 2 கோடி மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டிற்கு, அதுவும் இந்தியாவின் தன்மைகள் பலவற்றையும் பெற்று, இந்தியாவிற்கு வெகு அருகில் இருக்கும் ஒரு நாட்டிற்கு, இப்படி அபரிமிதமாக வளர்ந்து மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய இயலுகிறது. இந்தியாதான் இன்னும் கக்கூஸ் முதல் கரண்ட் வரையிலான எந்த அடிப்படைத் தேவைகளையும் ஒழுங்காக பூர்த்தி செய்யாமல், கடைந்தெடுத்த வறுமையில் மக்களைப்போட்டு வதைக்கிறது. சாதியால், மதத்தால், வகுப்பால் சிதறுண்ட ஆண்டை-அடிமைத்தனம் நிறைந்த சமூகங்களும், சுயநலமிக்க, தீர்க்கநோக்கமற்ற, அறிவற்ற தலைவர்களும், எவ்வளவு சகதியையும் சகித்துக்கொள்ளும் உணர்வற்ற, கல்வியறிவற்ற, மூடநம்பிக்கைகளில் மூழ்கிபோன சோம்பேறி மக்களும்தான் இதற்கு காரணம். ஒவ்வொரு நிமிடமும் நமது இயலாமையை, நூற்றாண்டுத் தோல்விகளை எண்ணி நான் வெட்கித் தலை குனிகிறேன்.

மலேசியாவில் ஆச்சரியப்படத்தக்க இன்னுமொரு விசயம். பொருட்கள் எவ்வளவு விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 20ரூபாய்(1.8 வெள்ளி), CNG 10ரூபாய்(.8 வெள்ளி). பெரும்பாலான கார்கள் CNGயில் தான் ஓடுகின்றனவாம். எரிபொருள் செலவு மிகமிகக் குறைவு. அற்புதமான பல்வழிச் சாலைகளும், குறைந்த எரிபொருள் விலையும், பொதுவாக விலைவாசியை குறைவாக வைத்திருக்கின்றனவென நினைக்கிறேன். குளிரூட்டப்பட்ட நடுத்தர தமிழ் உணவகங்களில் உணவின் விலை சென்னையில் உள்ளதைவிட குறைவாக உள்ளது. சாதா தோசை 15ரூபாய்க்கும், மசால் தோசை 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

இந்த வாரத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள், முக்கியமாக தமிழர்கள். HINDRAFன் நிலைப்பாட்டை பெரும்பான்மையான தமிழர்கள் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. வாடகைகார் ஓட்டும் தமிழர்களிடம் பேசியபொழுது அவர்கள் எல்லோரும் இதை வலியுறுத்தினார்கள். நான் சென்ற நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்(ஒரு தமிழர்) மட்டுமே HINDRAFன் மீது குறை சொன்னார்.

இன்னொரு சுவையான விசயம். இந்த முறை பணியின்பொழுது நான் சந்திக்க நேர்ந்த குழு ஒரு முழுமையான் பன்னாட்டுக்குழு. மொத்தம் இருந்த ஒன்பது பேரில், ஒரு மலேசிய சீனர், இரண்டு மலேசிய தமிழர்கள், மூன்று அமெரிக்கர்கள், ஒரு மெக்சிகோக்காரர், ஒரு உக்ரேன் நாட்டவர், ஒரு செக் நாட்டவர் அடக்கம். ஒவ்வொரு மொழியிலும் எப்படி வணக்கம் சொல்வார்கள் என்பதை கேட்டு அட்டவணையாக தொகுத்துள்ளேன். :)


செலாமட் தடாங் க மலேசியா - அதாங்க "மலேசியாவுக்கு வாங்க"

Labels: , ,

Friday, February 08, 2008

புதிய இந்திய வரைபடம்

இப்படியும் இருக்கலாம் அல்லவா.


தொடர்புடைய இன்னொரு பதிவு.

Labels: