உடைந்த பாலம், அடையாறு, சென்னை : விளிம்பு நிலை குறிப்புகள்
வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக ஞாயிறு அதிகாலை எழுந்து சூரிய உதயம் பார்ப்பதற்காக பெசண்ட் நகர் கடற்கரையின் வடக்கேயுள்ள உடைந்த பாலத்திற்கு சென்றோம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் சூரியன் கடைசிவரை வெளியே வரவில்லை. இருப்பினும் கடற்கரையில் காலை அருமையாகவே இருந்தது.
- பெசண்ட் நகர் ஆல்காட் குப்பம் பகுதியையும், பட்டினப் பாக்கத்தையும் இணைக்குமாறு அடையாற்றின் முகத்துவாரத்தில் ஒரு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. குறுகிய பாலம். இருவர் நடந்து அல்லது சைக்கிளில் செல்லும் அளவிற்கே அகலம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அது புயலின்பொழுது கடல் அலைகளின் சீற்றத்தால் பகுதி இடிந்து விழுந்து விட்டது. மீதமுள்ள பகுதி அடையாறின் தென் கரையிலிருந்து ஆற்றுக்குள் சென்று பாதியில் நின்று விடுகிறது. அங்கிருந்து கடலும், அடையாறின் முகத்துவாரத்தின் மருங்குகளில் காணப்படும் பசுமையும் அருமை.
- ஆல்காட் குப்பத்தை தாண்டி ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருப்பதாலும் இந்த இடத்தைப்பற்றி பலர் அறிந்திராததாலும் இங்கு நிறைய பேர் வருவதில்லை ஆனால் இப்பொழுது இவ்விடத்திலும் சுமாரான கூட்டம் காணப்படுகிறது.
- கொஞ்சம் தனிமையான பசுமையான இடம். ஆனாலும் அடையாற்று நீர் சென்னையின் சாக்கடை சூப்பாக கருத்திருந்தது. நீர் விளிம்பகள் முழுவதும் கண்ணை உருத்தும் குப்பை.
- குப்பத்தை தாண்டி, தியோசாபிகல் சொசைட்டி வரும். மிகப் பரந்த இடத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து சில கனவான்களும் சீமாட்டிகலும் கடற்கரையில் நடை பயில வந்திருந்தார்கள்.
- தியோசாபிகல் சொசைட்டியை ஒட்டிய கடற்கரையில் ஒரு ஏழ்மையான முதியவர் குப்பைகளை பொருக்கிக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சுக் கொடுத்த பொழுது "சாமி கும்பிட்ற இடம். அதனால் குப்பைய பொருக்கிறேன்" என்றார். மேற்படி கனவான்கள் தியானம் செய்வதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டேன்.
- சென்னை படகு குழாமைச் சேர்ந்தவர்கள் அடையாறில் துடுப்பு போட்டுக்கொண்டு இந்த உடைந்த பாலம் இருக்கும் இடம் வரை வந்து பயிற்சி எடுக்கிறார்கள்.
- குப்பத்தை தாண்டிச் செல்லும் போது தர்மசங்கடமான நிலை. காலை நேரம் என்பதால் ஆண்கள் கடற்கரையிலும், பெண்கள் தியோசாபிகல் சொசைட்டியின் சுற்றுச் சுவருக்கருகில் மண்டியிருக்கும் புதர்களிடத்தும் காலைக்கடன் கழிக்கிறார்கள். எனனைப்போன்ற பொழுது போக்கிற்காகவும் இயற்கையை ரசிக்கவும் செல்பவர்களுக்கு "என்னடா இது காலைக்கடன் கழிக்க வேறிடம் இல்லையா. இப்படி கூச்சமில்லாமல் திறந்து வெளியில் போய் கடுப்பேற்றுகிறார்களே" எனத் தோன்றும். அந்த குப்பத்தினருக்கோ "பொறம்போக்குப் பசங்க, பணத்திமிரு, காலங்காத்தால வண்டிய ஓட்டிகிட்டு கடலப்பாக்க வந்துர்றாய்ங்க. பொண்டு பிள்ளைகள் நிம்மதியாக வெளிய தெருவக் கூட போக முடியவில்லை" என்று திட்டிக்கொண்டிருப்பார்கள். மிக மிக அடிப்படைத் தேவைகளான "மானமோடு கடன் கழித்தல்" போன்ற வசதிகள் எப்போது எல்லோருக்கும் கிடைக்கும்?
Labels: குறிப்புகள், படங்கள், பயணம்
படித்தவர்களின் கருத்துகள் - 5
கல்லூரி படித்த போது, ஒரு ஞாயிற்றுக்கிழமை, அதிகாலையில் பெசண்ட் நகர் கடற்கரைக்குப் போய் - பட்ட அனுபவத்தை- நினைவுபடுத்துகிறது இந்த கட்டுரை.
வாழ்வின் பல்வேறு வேறுபாடுகளையும் காட்டுகிறது. :(
hmmm.... ivargaLukku udhavi, ivargaLin munnetRathiRkku udhava yendhakkatchiyum varappovathillai.. ivargalukku vidivukaalam yeppozhudhu.. :-(
//"மானமோடு கடன் கழித்தல்"//
ஏழைகளுக்கு இதுவும் ஒரு கனவுதான் போல(-:
படங்களும் பதிவும் நல்லா இருக்குங்க.
செழியன், யாத்ரீகன், துளசி கோபால்,
உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
தங்களின் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது . வாழ்த்துகிறேன்!
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல