ஜேகேவின் சில குறிப்புகள்: ப்ளாட்டோவின் குடியரசும், மனுவின் ஸ்மிருதியும்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Saturday, June 14, 2008

ப்ளாட்டோவின் குடியரசும், மனுவின் ஸ்மிருதியும்

ப்ளாடோவின் உரையாடல்களின் பிரபலமானது "குடியரசு". ஒரு யுடோபியன் குடியரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கருதினாரோ அதை குடியரசில் விளக்கியிருப்பார். ப்ளாட்டோ காலத்தய கிரேக்கம் பல பெரிய பெரிய தன்னாட்சி உரிமையுடைய நகரங்களின் கூட்டமைப்பாக இருந்தது. ஏதன்ஸ், ஸ்பர்ர்டா போன்றவை சில பிரபலமான நகரங்கள். ஒவ்வொரு நகரமும் ஏதாவது ஒரு பிளாட்டோ போன்ற தத்துவ அறிஞர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பை பெற்றிருக்கும்.

இதனால் பல அரசியல் அமைப்பு முறைகளை அவர்கள் பின்பற்ற முயற்சித்தார்கள். அது போலவே ப்ளாடோ தனது குடியரசு அரசியலமைப்பை முன்வைக்கிறார். ப்ளாட்டோவின் குடியரசில் மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்படுவர். அவற்றில் அறிவாளிகளும், திறன் படைத்தவர்களும் முதலிடத்தில் இருப்பார்கள்(தங்க வகையறா). இவர்கள் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்கே குடியரசை ஆளும் தகுதி இருக்கும். இவர்களுக்கு அடுத்து நல்ல உடல் திறன் உடையவர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பார்கள்(வெள்ளி). இவர்கள் குடியரசை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் இராணுவ பொறுப்பை பெற்றிருப்பார்கள். கடைசியாக சாதாரண குடிமக்கள் இருப்பார்கள்(பித்தளைகள்). இவர்களது கடமை விவசாயம் மற்றும் பிற வேலைகளை செய்வார்கள். தமது குடியரசின் எல்லா கூறுகளையும் பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கும் ப்ளாட்டோ, மக்களை மூன்று வகுப்பாக பிரிப்பதை மட்டும் ஒரு அவசியாமான பொய் என்று ஒப்புக்கொள்கிறார். "குடியரசின் முதல் சில தலைமுறைகளை இந்த பொய்யை சற்ற சிரமத்துடன்தான் நம்பவைக்கவேண்டும். பின் வரும் தலைமுறைகள் இதையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்" என்கிறார்.

ஒரு பிரிவினில் உள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும், பெரும்பாலும் அதே பிரிவை சேர்வர். குழந்தைகள் அந்த பிரிவிற்குறியதைவிட மிக அதிகமான திறமையோ அல்லது மிக குறைவான திறமையோ பெற்றிருந்தால் அதற்கேற்ப மேல் வகுப்பிற்கோ அல்லது கீழ் வகுப்பிற்கோ அனுமதிக்கப்படுவர் (தள்ளப்படுவர்). பிளாட்டோவின் இந்த கொள்கை பிறப்பின்( அல்லது இனத்தின்) அடிப்படையிலேயே ஒருவரது திறமையும் தகுதியும் அமைகிறது என்ற கருத்தமைவில் ஏற்பட்டது.

ப்ளாட்டோவின் குடியரசு கருத்தாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது, ப்ளாட்டோவற்கு முன்புருந்த ஸ்பார்டா என்ற நகரமாகும், சுமார் 800BC-300BC வரையில் ஸ்பார்டா நகரம் நிலையாகவும், போரில் பல வெற்றிகள் பெற்றும் மற்ற கிரேக்க நகரங்களுக்கு முன்மாதிரியாய் விளங்கியது. அதன் அரசியலமைப்பை அமைத்தவர் லிகர்கஸ் எனும் அறிஞர் எனக் கருதப்படுகிறார். ஸ்பார்டாவின் அரசமைப்பிலும், மக்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர். அவை 1) ஆளும் மக்கள், 2) ஸ்பார்டாவின் குடிமக்கள் (ஸ்பார்டன் / பெரியோசி), வேலைக்காரர்கள் (ஹெலாட்). ஆட்சி புரிபவர்களின் கடமை சட்டத்திற்குட்பட்டு ஆள்வது. குடிமக்களின் ஒரே கடமை சிறந்த போர்வீரர்களாக இருப்பதுதான். விவசாயம் முதலான மற்ற எல்லா வேலைகளும் மூன்றாவது பிரிவினராலேயே செய்யப்படும். ஏனெனில் உடல் உழைப்பு கீழ்த்தரமானதாக/தேவையற்றதாக கருதப்பட்டது. ஸ்பார்டாவின் இந்த "வெற்றிகரமான" அமைப்பே ப்ளாட்டோவின் கருத்தமைவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்பார்ட்டாவும், ப்ளாட்டோவின் குடியரசும் யூஜெனிக்ஸ் எனும் போலி-அறிவியல் பிரிவிற்கும் அதன் தொடர்ச்சியாக நாஜிக்களின் சிந்தனைக்கும் அடிகோலியது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. அதைத்தவிர, இடைப்பட்ட 2000 ஆண்டுகளில் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" முறை சிந்தனை அடிப்படையில் பரவலாக இருந்தாலும் நிகழ்வில் எந்த ஐரோப்பாவின் எந்த அரசாலும் பின்பற்றப் படவில்லை.

குடி மக்களை நான்கு பிரிவாக பிரிக்கும் மனுவின் ஸ்மிருதியும், பிளாட்டோவின் குடியரசிற்கும் உள்ள ஒற்றுமைகளை தனியாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எலோருக்கும் எளிதில் புரிந்திருக்கும். எனக்கிருக்கும் ஓரிரண்டு கேள்விகள்...

1) ப்ளாட்டோவின், ஸ்பார்ட்டாவின் சிந்தனைகளும், மனுவின் வர்ண பிரிவும் ஏதாவது ஒரு பொது மூலக் கருத்தமைவில் இருந்து தோன்றியிருக்குமா. இரண்டும் ஏறக்குறைய சமகாலத்தவையாக தோன்றுகின்றன. இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு ஒரு மூல மொழியிருந்திருக்கலாம் என்ற மொழி வரலாற்றின் கூற்றுப்படியும் இது சாதகமாகவே தோன்றுகிறது.

2) 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ப்ளாட்டோவின் இந்த "பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" எனும் அநியாயமான அமைப்பை அவர்கள் எளிதில் கடந்து வந்து விட்டார்கள். இந்தியர்களுக்கு என்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்?

இணைப்புகள்

1) ஸ்பார்டா
2) ப்ளாட்டோவின் குடியரசு
3) பெரும்பாலான தகவல்கள் கருத்துகள் பெர்ட்ரந்த் ரஸ்ஸலின் History of Western Philosophyயிலிருந்த எடுத்தாளப்பட்டுள்ளன.

Labels: , , ,

படித்தவர்களின் கருத்துகள் - 8

At Sun Jun 15, 04:35:00 AM GMT-6, Blogger Sai Ram சொன்னது

வரலாறு பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் ஐரோப்பியாவில் மறைந்து போன சிந்தாந்தம் இன்னும் நம்மிடையே சாதிகள் மூலமாக வாழ்வதற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிவேன். சாதீய அமைப்பு ஒரு பிரமிட் மாதிரி. ஓர் அடிமைக்கு கீழ் இன்னொரு அடிமை இருக்கிறான். ஒரு சாதி மற்றொரு சாதியை காட்டிலும் கீழ்த்தரமானது என சொல்வார்கள். ஆனால் ஆறுதல்படுத்த அந்த சாதிக்கும் கீழே இன்னொரு சாதியை வைப்பார்கள். சாதீய கட்டுமானத்திலே வெகு கீழே இருப்பவன் தன் மனைவியை அடிமையாக வைத்திருக்கிறான். இந்து மதத்தின் இயல்பே எந்த கொள்கை புதியதாய் முளைத்தாலும் அதனை தனக்குள் உள்வாங்கி கொள்வது தான்.

 
At Sun Jun 15, 05:39:00 AM GMT-6, Blogger ஆ.கோகுலன் சொன்னது

//விவசாயம் முதலான மற்ற எல்லா வேலைகளும் மூன்றாவது பிரிவினராலேயே செய்யப்படும். ஏனெனில் உடல் உழைப்பு கீழ்த்தரமானதாக/தேவையற்றதாக கருதப்பட்டது.//
விவசாயம் மற்றும் பிற வேலைகள் முதலிரு வகுப்புக்களுடன் ஒப்பிடும்போது பின்னுரிமை அளிக்கப்பட்டிருக்கலாம். தேவையற்றது என்று ஒரு வளர்ந்த நாகரிகத்தில் கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

//"பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" எனும் அநியாயமான அமைப்பை அவர்கள் எளிதில் கடந்து வந்து விட்டார்கள். இந்தியர்களுக்கு என்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்?//

வாஸ்தவமான கேள்விதான் :)

 
At Sun Jun 15, 10:01:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

கோகுலன்,
தேவையற்றது என்ற வார்த்தை தவறான் பொருள் தரலாம். ஆனால் கிரேக்கர்கள் காலத்தில் உடல் உழைப்பு பெரும்பாலும் அடிமைகளாலேயே செய்யப்பட்டது, அதனால் பெரும்பான்மையான குடிமக்கள் உடல் வருத்தி வேலை செய்ய வேண்டியிருக்கவில்லை.
In his book Russel says
"... Plato, in common with most Greek philosophers, took the view that leisure is essential wisdom, which will therefore not be found among those who have to work for their living, but only among those who have independent means or who are relieved by the State from anxieties as to their subsistence. This point of view is essentially aristocratic."

 
At Sun Jun 15, 10:03:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

sai ram,

உங்களது கருத்களை முழுதும் ஆமோதிக்கிறேன். நம்து சமுதாயம் செல்ல வேண்டிய தூரம் நிறைய.

 
At Sun Jun 15, 12:52:00 PM GMT-6, Blogger வசந்த் சொன்னது

ஜேகே,

உங்கள் பதிவுகளை நீங்கள் நட்சத்திரமான பிறகுதான் படிக்க ஆரம்பித்தேன்.

இறுதித்தீர்வுகள் - நாசிசம், சிங்களப் பேரினவாதம் மற்றும் போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள் இரண்டும் என்னை மிகவும் கவர்ந்த பதிவுகள். இலங்கை தமிழர்களுக்காக உண்மையாக வருந்தி யோசிக்கும் மிகச்சிலரில் நீங்களும் இருப்பது மகிழ்சியே.

இந்த பதிவும் இந்திய சாதிய கட்டுமானங்களுக்கும் ஐரோப்பிய தத்துவங்களுக்குமான உறவை தோண்டுவதாக‌ ஊள்ளது.

உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி
வசந்த்

 
At Sun Jun 15, 01:09:00 PM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

வசந்த்,

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

ஈழமக்கள் தங்களது துயரங்கள் நீங்கி சீக்கிரம் அமைதியை பெறவேண்டும் என்பதே பெரும்பான்மையோரது விருப்பம்.

 
At Mon Jun 16, 09:36:00 AM GMT-6, Blogger கோவி.கண்ணன் சொன்னது

//

பிறப்பின் அடிப்படையிலான வகுப்பு" எனும் அநியாயமான அமைப்பை அவர்கள் எளிதில் கடந்து வந்து விட்டார்கள். இந்தியர்களுக்கு என்னும் எவ்வளவு காலம் பிடிக்கும்?
//

ஜே.கே,

செருப்பால் அடிக்கும் கேள்விகள்...அவற்றை சட்டை செய்யாமல் விட்டுவிட்டால் 'பிறப்பின் அடிப்படை உயர்வு / தாழ்வுகள் அவை மறைந்தே போய்விடும்.

உங்களது ஷாங்காய் பதிவுகளும் சிறப்பாக இருந்தது.

 
At Wed Jun 18, 09:30:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

கோவி.கண்ணன்,

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல