ஜேகேவின் சில குறிப்புகள்: இடையில் இரு புதிர்கள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, July 15, 2008

இடையில் இரு புதிர்கள்

புத்தம் புது காரின் கதவில் விழுந்த கீறலைப் போல வெளிர் நீல நிறம் கொண்ட மேகங்கள் இல்லாத வானத்தில் நேர் கோடுகளைக் கிழித்துக் கொண்டு சென்ற இரண்டு ஜெட் விமானங்களை அன்னாந்து பார்த்ததில் வலித்த கழுத்தை மெதுவாக கீழே திருப்பும் பொழுது கண்ணில் பட்டவை

  1. எங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தின் பசுமையான வீராப்புடன் நிமிர்ந்து நிற்கும் குருத்துகளும், காற்றின் தாலாட்டிற்கு மெல்ல தலையசைக்கும் மட்டைகளும், திரட்சியான இளநீர் காய்களும், சிறிய குரும்பைகளும்.

  2. அடுத்த வீட்டின் மொட்டை மாடியில் நடப்பட்டிருந்த கம்பங்களும், கம்பங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றில் காய்ந்த துணிகளும், துணிகளுக்கிடையே கிடந்த சில வெள்ளாடைகளும்.

  3. நடுவில் தணிந்திருந்த துணிக்கயிற்றிற்கு மேலாக முளைத்திருந்து அங்கும் இங்கும் நடந்து படித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு வானவில்லும்

  4. கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டின் பலகனியில் இருந்து வனவில்லையே பார்த்துக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மலர்வண்ணனும்

இப்படியாகத் தொடங்கிய இந்த காலை எப்படி தொடருமென்ற திடீர் பயம் மனதின் ஓரத்தில் சிறு புள்ளியாகத் தோன்றி வெகு வேகமாக என் உடல் முழுதும் பரவியது. மேற்கொண்டு என் கண்ணில் பட்டவை எதுவும் என் மனதில் பதியவில்லை. இது போன்ற சமயங்களில் எனது பயம் என்னை விழுங்கிவிடத் தொடங்கும். தன்னுணர்வு தப்பி மயக்க நிலையை அடைவேன். நினைவில் நிற்காத கொடூரமான கனவுகள் என் மனதை பாராங்கல் கொண்டு நசுக்கும். என் சுவாசத்துளைகள் நெறிக்கப்பட்டு மூச்சு முட்டி கண்கள் பிதுங்கும். அது போன்றதொரு மயக்க நிலை என்னைத் தழுவிக் கொண்டிருக்கும் பொழுதுதான் கேட்டது அந்தச் சத்தம்.

மீண்டும் அன்னாந்து பார்த்தேன். வானைக் கீறிக் கொண்டிருந்த இரண்டு விமானங்களும் தீப்பிழம்புகளாக கீழெ விழுந்து கொண்டிருந்தன. என்னை எழுப்பிய அந்தச் சத்தம் அவை மோதி வெடித்ததாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று அவதானிப்பதற்குள் விமானத்தின் சில பாகங்கள் என் தலையை நோக்கி வீழ்வதுபோலத் தோன்றியது. மிகுந்த வேகத்துடன் அதிலிருந்து தப்பிக்க நகர முயற்சித்த சில கனங்களுக்குள் அவை வானவில்லின் மாடியில் நாராசமான சத்தத்துடனும் சுட்டெரிக்கும் நெருப்புடனும் விழுந்தன. நானும் மலரும் ஏக காலத்தில் "அய்யோ" என்று கத்தினோம்.

“ஏ உனக்கு என்னாச்சு" சத்தமிட்டுக்கொண்டே வானவில்லை நோக்கி ஓடினேன்.

அதே கணத்தில் “ஏ உனக்கு என்னாச்சு" என்று வானவில்லின் குரல் சன்னமாகவும், பயங்கரமாகவும் எனக்கு கேட்டது. இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வேகமாக துடிக்க வானவில்லை நோக்கி நகர்வதை நிறுத்தி விட்டு அவதானித்த பொழுது வானவில் நலமாகத்தானிருந்தான். அவனது மாடியில், மேலிருந்து விழுந்த விமானத்தின் பாகங்கள் இல்லை, நெருப்பில்லை, புகையில்லை. அவன் மட்டும் மிகுந்த மிரட்சியுடன் என்னை நோக்கி இரண்டு கைகளை நீட்டியவாறு வாயடைத்து நின்றிருந்தான்.

“என்ன இழவு நடக்கிறது இங்கே" என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்த பொழுதே தெரிந்தது, மொட்டை மாடியிலிருந்து கீழே விழ நான் எடுத்து வைக்க வேண்டியது இன்னும் ஒரு அடி என்று. வானவில்லைப்பற்றிய கவலை போய், உயிர் பயம் என்னைக் கவ்விக்கொண்டது. உடல் நடுக்கமாகவும் சில கேவல்களுடன் கூடிய அழுகையாகவும் என் பயம் வெளிப்பட்டது. "தட்"டென்று தரையில் அமர்ந்து தவழ்ந்தபடியே நகர்ந்து சென்றேன்.

பாதுகாப்பான இடத்திற்கு வந்த நிலையில் உயிர்பயம் சற்று விலகியிருந்தாலும் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. அழுகையையும் நிறுத்த முடியவில்லை. அப்படியே உடலைச் சாய்த்து மால்லாந்து படுத்து மேலே பார்த்த பொழுது, பளிச்சென்ற நீல நிற வானம் இருந்தது, வெளிர் நிற கோடுகளைக் காணவில்லை, ஜெட் விமானங்களைக் காணவில்லை, 9ம் வகுப்பு வானவில்லைக் காணவில்லை, 11ம் வகுப்பு மலர் வண்ணனைக் காணவில்லை.

என் கண்ணில் பட்டவை அங்கே குருதியும், தசையுமாகச் சிதறிக்கிடந்த மிகுந்த அயற்சியையும் சோகத்தையும் தரும் இரண்டு கேள்விகள்.
  • காலை நடந்தவற்றில் எவை உண்மை? எவை கனவு?
  • எனக்கு இப்பொழுது உயிர் இருக்கிறதா? இல்லையா?

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Wed Jul 16, 01:15:00 PM GMT-6, Blogger அமுதா இளஞ்செழியன் சொன்னது

உன்னோட தாமரன்கோட்டை-யின் அமைதியும்... அமெரிக்க வாழ்வும், ஆங்கில நாவல் படிக்கும் அனுபவமும், எல்லாம் சேர்ந்து குழம்பி ..நிறய தூங்கின, அல்லது... தூங்காமல்.... இருந்த ஒரு நாளில் உனக்கு... இப்படி தோணி இருக்கும்-

 
At Sun Jul 20, 01:27:00 AM GMT-6, Blogger ஜேகே - JK சொன்னது

செழியன்...
//எல்லாம் சேர்ந்து குழம்பி ..நிறய தூங்கின, அல்லது... தூங்காமல்.... இருந்த ஒரு நாளில் உனக்கு//

:))

கருத்திற்கு நன்றி

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல