எதிர்பார்ப்புகள் + ஏமாற்றங்கள் = பொதுமன்னிப்புகள்
மனிதர்களின் சடத்துவத்தை தாண்டி அவர்களை இயக்குவது மிக சிரமம் பிடித்த காரியம். அது நியூட்டனின் இயக்க விதிகளையும், சமன்பாடுகளையும் தாண்டியது. அவர்களுக்கு எதை செய்ய வேண்டியிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையாவது செய்வதே எளிது. அப்படிப்பட்டவர்களில் முதலில் இருப்பது நானாகத்தானிருக்கும். எழுத நினைக்கும் பொழுது ஏற்படும் ஆற்றல் பிரவாகம் எழுத யத்தனிக்கும் பொழுது காணாமல் போய்விடுகிறது. சில நாட்களுக்கு முன் தமிழ் விக்கியில் பொறியியல் கட்டுரைகளை வடிக்கவேண்டுமென "விக்கி பொறியியல் திட்டத்தை" படாடோபமாக தொடங்கினேன். ஒருகட்டுரையில் கால்வாசி எழுதுவதற்கு முன்னரே கண்ணை கட்டிவிட்டது. சில நாட்களாக விக்கி பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை,
எவ்வளவோ விடயங்களைப் பற்றி பதிவுகள் எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். அவை அத்துடனேயே முடிந்து விடுகின்றன. இதற்கிடையில் எப்படி "சில குறிப்புகளை" நட்சத்திரப் பதிவாக முன்நிறுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர் என்ற வினா எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் குழப்பத்தையும்(பேர் மாற்றி நமக்கு அனுப்பிவிட்டார்களா?) ஏற்படுத்தியது. இருப்பினும் தத்து பித்து என்று ஓரிரு பதிவுகளை தட்டி வலையேற்றி ஒரு வாரத்தை நியூட்டனின் சமன்பாடுகளின்படி இல்லா விட்டாலும், மர்பியின் விதிப்படி(If some thing can go wrong, it will) தள்ளியாயிற்று.
நட்சத்திரப் பதிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரிகிறது. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் இந்த வாரம் பெரும்பாலும் அவை ஏமாற்றங்களிலேயே முடிந்திருக்கும். எனவேதான் பொதுமன்னிப்பு கோரல் படலம்.
இருப்பினும், ஏராளமான அன்பர்கள் பதிவை படித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். மிகுந்த மகிழ்சியாய் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் நன்றி. தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு மீண்டுமொருமுறை நன்றி.
பிகு 1: நட்சத்திர வாரத்திலேயே சாதாரணமாக பதியும் "நான்"கள் ஒருபுறமிருக்க, சாதாரண நாட்களிலேயே நட்சத்திரங்களாக மின்னும் பல பதிவர்கள் எப்படி தினம் தினம் அல்லது அடிக்கடி நேர்த்தியான பதிவுகளை எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராகவும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கும்.
பிகு 2: சரி அப்படிப்பட்ட தாரகைகளை நேரிலேயே சந்தித்துவிடலாம் என்றெண்ணி இன்றைய வலைப்பதிவர் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்கள் எல்லோரிடமும் அறிமுகமும், Inspirationம் பெற்றுக்கொண்டேன். கூட்டத்தை அருமையாக ஏற்பாடு செய்திருந்த பாலபாரதி குழுவினருக்கும், வந்திருந்த சக பதிவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் நிரம்ப மகிழ்ச்சி.
பிகு 3: அடுத்த வார நட்சத்திரப்பதிவருக்கு எனது வாழ்த்துகள்.
Labels: தமிழ்மணம் நட்சத்திர வாரம், நான், வலைப்பதிவு
படித்தவர்களின் கருத்துகள் - 3
ஜேகே,
// நினைக்கும் பொழுது ஏற்படும் ஆற்றல் பிரவாகம் எழுத யத்தனிக்கும் பொழுது காணாமல் போய்விடுகிறது //.
மிகவும் உண்மைதான். ஒரு பின்னூட்டம் போடுவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. எப்படித்தான் பதிவுகள் எல்லாம் போடுகிறீர்களோ. நீங்களும் இதே வகையில் சேர முயற்சிப்பது அநியாயத்திற்கு தன்னடக்கம்.
நன்றி
வசந்த்
ஒரு பின்னூட்டம் போடுவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.
மிகச் சரி, அதனால்தான் நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை
/நட்சத்திர வாரத்திலேயே சாதாரணமாக பதியும் "நான்"கள் ஒருபுறமிருக்க, சாதாரண நாட்களிலேயே நட்சத்திரங்களாக மின்னும் பல பதிவர்கள் எப்படி தினம் தினம் அல்லது அடிக்கடி நேர்த்தியான பதிவுகளை எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராகவும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கும்./
உண்மைதான்
வாழ்த்துக்கள்
Post a Comment
<< முகப்பிற்கு செல்ல