ஜேகேவின் சில குறிப்புகள்: January 2006

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, January 02, 2006

கிளமன்சு - Clemenceau.

பிரான்சு கடற்படையின் கிளமன்சு எனும் விமானந்தாங்கிக் கப்பல், "கப்பல் உடைத்தல்" எனும் தொழில் துறையின் அவல நிலையை மக்கள் முன் கொணர்ந்திருக்கிறது.

இக்கப்பல் 1997ம் ஆண்டில் பயன்பாடு முடிந்து படையிலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான அதன் கதை.

1997 - தௌலான்(Toulon), பிரான்சில் கப்பல் படையிலிருந்து விலக்கப் படுகிறது.
2001 - கப்பலை அப்படியே "Artificial Reef" ஆக மாற்ற முயற்சி செய்யப் பட்டது. சூழலியல் வல்லுணர்கள், கப்பலில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் போன்ற மாசுப் பொருட்களை கருத்தில் கொண்டு அம்முயற்சியை தடுத்துவிட்டனர்.
2003 - இந்தக் கப்பலை துருக்கிக்கு அனுப்பும் முயற்சி, துருக்கி ஒத்துக்கொள்ளாததால் பலனளிக்கவில்லை.
2003 - கப்பலில் உள்ள ஆஸ்பெஸ்டாசை கிரேக்க நாட்டில் நீக்க முயன்றார்கள். கிரேக்கம் ஒத்துழைக்கவில்லை.
2005 - வெளியில் தெரியக்கூடிய ஆஸ்பெஸ்டாசை நீக்க பிரான்சிலேயே முயற்சி நடந்தது ஆனால் அதுவும் தோழ்வி அடைந்தது.
2005 - கடைசியாக இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஆலாங் கப்பல் உடைக்குமிடத்திற்கு வர ஒப்பந்தமானது. சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பிரான்சில் தொடுத்த வழக்குகள் காரணமாக அம்முயற்சி தடைபட்டது. சமீபத்தில் ஒரு நீதி மன்றம் "கிளமன்சு" ஒரு இராணுவ விவகாரம் என்றும், அதன்மீது தமக்கு நீதி-அதிகாரம் இல்லையென்றும் கூறி கப்பலின் குஜராத்தை நோக்கிய கடைசி பயனத்திற்கு இருந்த முட்டுக்கட்டையை நீக்கியது.
2006 - ?

இந்த கப்பலை ஏன் மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை? இது இந்தியாவிற்கு வருவதில் என்ன பிரச்சனை?

ஏறக்குறைய 27000 டன் எடையுடைய இக்கப்பலை உடைப்பதன் மூலம் பல ஆயிரம் டன் இரும்பை மீட்களாம். ஆனால் இக்கப்பலில் இரும்பு தவிர சுமார் 150 டன்னுக்கும் மேல் (துல்லியமான அளவு யாருக்கும் தெரியவிலை) ஆஸ்பெஸ்டாஸ் உளளதாம். இதைத்தவிர காரீயம், பாதரசம் போன்ற கன உலோகங்கள், PCB ஆகிய விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களும் உள்ளனவாம். ஆஸ்பெஸ்டாஸ் ஒரு மிகப் பெரிய சூழல் மாசு காரணி. இது நுரையீரலை பாதிக்கிறது. ஆஸ்பெஸ்டாஸினால் கப்பல் உடைக்குமிடங்களில் வேலைபார்த்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என கிரீன்பீஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உள்ள( அல்ல இல்லாத) சூழல் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் குறைந்த கூலிக்கு கிடைக்கும் ஆட்கள் போன்ற காரணங்களால் கப்பல் உடைக்கும் தொழில் செழிப்பாக வளர்கிறது. உலகிலேயே மிகப் பெரிய கப்பல் உடைக்குமிடம் குஜராத்தில் உள்ள ஆலாங் தான். 3000 கோடி வருமானம் தரக்கூடிய இந்தத் தொழில் துறையின் மறுபக்கம் கொடுமையானது.

பெரும்பாலான இடங்களில் ஒழுங்கான கழிவு மேலான்மைக்கான வரைமுறைகள் இல்லை.அப்படியே இருந்தாலும் அவை பின்பற்றப் படுவதில்லை. குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பதால் பெரும்பாலான வேலைகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. தொடர்ந்து விஷப் பொருட்களில் வேலை செய்வதால் அங்கிருப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு புற்றுநோய் வருகிறது. இரும்பு பாலங்கள் விழுந்து பலர் கை கால் இழக்க நேரிடுகிறது.

இந்த பிரச்சனையில் ஒரு விசித்திரமான விசயம் என்னவென்றால், மற்ற எல்லா நாடுகளும் கை கழுவிவிட்ட இந்தக் கப்பல் இந்தியா வருவதற்கு ஆட்சேபிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல. கிரீன்பீஸ் போன்ற வெளிநாட்டு சூழல் பாதுகாப்பு அமைப்புகள்தான். இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகமோ, பத்திரிக்கைகளோ இதைப் பெரிதாக கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. குஜராத் அரசு கப்பலை எப்படியாக அங்கு கொண்டுவந்து பணம் பன்னிவிடத் துடிப்பதாகத்தான் தெரிகிறது. இங்கு அது பெரிய பிரச்சனை ஆகாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாதிக்கப் படப் போகும் கூலித் தொழிலாளிகள் இங்கு யாருக்கும் பெரிய பொருட்டல்ல. குஜராத் அரசிற்கும், கப்பல் உடைக்கும் நிறுவனங்களுக்கும் காசுதான் முக்கியம். யாருக்கோ கேன்சர் வந்தால் இவர்களுக்கென்ன.

தொழில் வளர்ச்சியின் வேறு முகங்கள் இவை.


மேலும் சில சுட்டிகள்

1) இதைப்பற்றிய கிரீன்பீஸ் அமைப்பின் கட்டுரை. கடைசியில் உள்ள படங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்
2) இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை - Norms in ship-shape?
3) கப்பல் உடைத்தல் பற்றிய பொதுவான தகவல்கள்
4) தமிழக அரசும் கப்பல உடைக்கும் துறையை உய்விக்க முயல்வது கவணிக்க வேண்டியது //..The Port Policy also promotes ship breaking/repairing industry, leisure and water sports activities in Tamil Nadu...//

இது பற்றி மேலதிகத் தகவல்களை, கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி