ஜேகேவின் சில குறிப்புகள்: September 2006

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Tuesday, September 26, 2006

சோமபானத் திருவிழா.

முயூனிக் என்றால் ஸ்பீல்பெர்க், பாலஸ்தீன தீவிரவாதிகள், ஒலிம்பிக், ஹிட்லர், உலகக்கோப்பை கால்பந்து இவற்றில் ஏதாவது ஒன்றுதான் பெரும்பாலும் நினைவிற்கு வரும். எனக்கும் அப்படித்தான். சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வரை. இனிமேல் பியர்தான் நினைவுக்கு வரும். ஜெர்மனிக்கு வரும் முன்னரே இந்த ஊரின் பியர் கலாச்சாரத்தைப்பற்றி அறிந்திருந்தாலும், ஆச்சரியங்களுக்கு ஒன்றும் குறைவேயில்லை.

பொதுவாகவே, முயுனிக்கில் எங்கு திரும்பினாலும், பியர் சம்பந்தமான ஏதாவது ஒரு விசயத்தையாவது பார்க்க வேண்டியிருக்கும். அதில், கடந்த ஒரு வாரமாக அக்டோபர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அக்டோபர் திருவிழா என்பதற்கு பதில் அக்டோ”பியர்” திருவிழா என்றுதான் அழைக்க வேண்டும். புள்ளி விவரங்கள் அந்த அளவிற்கு வியக்க வைக்கிறது. ஏறக்குறைய தமிழக கோவில் திருவிழா போலத்தான். என்ன ஒரு வித்தியாசம், திருவிழா மைதானத்தின் ஒரு புறத்தில் பத்து பதினைந்து கூடாரங்கள் போட்டிருக்கிறார்கள். கூடாரம் என்றால் எதோ குடிசை என்று நினைத்துவிடாதிர்கள். ஒவ்வொரு கூடாரத்திலும் சுமார் பத்தாயிரம் குடிமகன்கள் அமரலாம். அப்புறம் என்ன லிட்டர் கன்க்கில் பியர் குடித்துவிட்டு உய் உய்யென்று கத்திவிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். சூழ்நிலையே போதையேற்றுவதாகத்தான் இருக்கிறது.



இந்த மாதிரி கூட்டமாய் உட்கார்ந்து குடிக்கவா அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் கன்னா பின்னாவென்று செலவு செய்து கொண்டு இங்கே வருகிறார்கள் என்று கேட்டுக்கொண்டே நானும் ஒரு கூடாரத்திற்குள் நல்லபடியாகத்தான் சென்றேன். முதல் லிட்டரின்போது மேலே உள்ள படத்தை எடுக்குமளவிற்கு தெளிவாகத்தான் இருந்தது. கூட்டத்தோடு கோயிந்த போடவோ, பொதுவாகவே பியர் பிடிக்கும் என்பதாலோ, ஓசியில்(கம்பனியில் அழைத்திருந்தார்கள்) கிடைக்கிறதனாலோ, பியர் குடிப்பதில் ஜெர்மனியருக்கு தமிழர்கள் சலைத்தவர்கள் இல்லை என்பதை காண்பிக்கவோவென இன்ன காரணமென்று இல்லை, சோம பானம் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியில் போலிசீ வந்து எல்லோரையும் கிளப்பிவிடும்போது நானும் வெளியே வந்து அந்த இடத்தின் அழகை வியந்து எடுத்தப் படம்தான் கீழே. எப்படி இரண்டு இரயில் மாறி ஹோட்டல் வந்து சேர்ந்தேன் என்பதை நினைத்துப்பார்த்து ஆச்சரியப் படவெல்லாம் மறுநாள் காலையில் திராணியில்லை. கல்லடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி படுக்கையில் சுருண்டு கிடக்கும் பொழுது தோன்றியது, என்ன இழவு பிழைப்படா இது என்று.



“குடிகாரன் கண்ணில் கூடாரமெல்லாம் பாராகத்தான் தெரியும்” என்று விசயம் தெரிந்தவர்கள் பலமொழி சொல்லிவிடும் முன்… அக்டோபர் திருவிழாவென்றால் பியர் திருவிழா மட்டுமில்லை. நான் முன் மொழிந்தது போல நம்மூர் கோவில் திருவிழாக்களில் இருப்பது போன்று, சிறுவர்களுக்கான பலவிதமான இராட்டினங்களும், இசைப் பேரணிகளும் மேலும் விதவிதமான விளையாட்டுக்களும் கூட இருந்தன. ஆனால் இரண்டு வாரத்தில் அறுபது இலட்சம் பேர், நூற்றியிருபது இலட்சம் லிட்டர் பியர் குடிக்கிறார்கள் என்பதைக் கேட்கும் போது எனக்கென்னவோ, இது அக்டோ”பியர்” திருவிழா என்றே படுகிறது.

பியர் பிரியர்கள் யாரும் இப்படி ஒரு திருவிழாவிற்கு நாம் செல்லவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். கூடாரத்தில் பியர் விலையிலிருந்து வெளியில் ஹோட்டல் விலை வரை எல்லாம் மற்ற நாட்களினதை விட மூன்று மடங்கு அதிகம். முயூனிக் போகவில்லை பையில் ஒரு பெரிய ஓட்டை விழவில்லை என சந்தோசப் பட்டுக்கொள்ளுங்கள்.