“Seek to perform your duty. Lay not claim to the fruits” - சென்னை விமான நிலையம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் முதலில் செய்ய வேண்டியது, குடியிறக்கச் சோதனைகளுக்காக வரிசையில் காத்திருத்தலாகும். அத்துடன், இந்து மதப் போதனையையும் பெறவேண்டும்.
ஆம், காத்திருக்கும் இடத்தில் இருக்கும் கவனிக்கத்தக்க ஒன்றே ஒன்று, கீதாச்சாரம். குருச்சேத்திரத்தில் பார்த்தசாரதி அர்சுனனுக்கு உபதேசிக்கும் ஒரு பெரிய ஓவியம், தேவநாகிரி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பிரபலமான கீதைச்சொற்றொடருடன், எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் சுவற்றில் பொருத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் அதைப்பார்க்கும் பொழுது. எனக்கு மூன்று விதங்களில் இது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
1) இந்தியா மதச்சார்பற்ற நாடு எனப் பலர் பெருமிதம் கொள்ளும்போது, சத்தமே இல்லாமல் சிலர் இது போன்ற மதபோதனைகளை பொது இடங்களில் அதுவும் வெளிநாட்டினர் பார்வையில் அதிகம் படும்படியான ஒரு இடத்தில் இவ்வளவு நாட்களாக வைத்திருப்பது. அதைப்பற்றி பெரும்பாலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதது(நான் அறிந்தவரை). (பத்துகட்டளைகளை பொது இடங்களில் எழுதி வைக்கக்கூடாது என்பதற்காகவும், தேசிய கீதத்தில் கடவுளைப் பற்றிய வரிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் மத்திய உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவில்.)
2) “கடமையைச் செய், பலனை எதிர் பாரதே” என்றுதான் நான் தமிழில் படித்திருக்கிறேன். அரசியல் நீக்கி முற்றிலும் தத்துவரீதியாக அனுகும் பொழுது எனக்கும் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் தோன்றும் (காசுக்காக இல்லாட்னாலும் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்வது போல). ஆனால் எல்லொருக்கும் புரியுமாறு எழுதப்பட்டிருக்கும் ஆங்கில வாசகம் “Seek to perform your duty. Lay not claim to the fruits (or benefits)” எனக்கூறுகிறது. இது மிக அபத்தமான மொழிபெயர்ப்பு. “பலனை எதிர்பார்க்கதே” என்பதற்கும் “பலனை கேட்காதே” என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றயிரக்கம். இதைப்படிக்கும் எவருக்கும் இந்தியத் தத்துவங்களைப்பற்றி ஒரு நல்ல எண்ணம் வர வாய்ப்பே இல்லை. இந்த ஓவியத்தை அங்கே வைப்பதற்கு உத்தரவிட்ட விமான நிலைய அதிகாரி, தன்னுடைய அப்பட்டமான மதச்சார்பைப்பற்றி கூச்சப்படாவிட்டாலும், இந்த அபத்த மொழி பெயர்ப்பையாவது மாற்றச்சொல்லியிருக்கலாம்.
3) “கடமையைச் செய், பலனை எதிர் பாரதே” என்றும் உன்னுடைய கர்ம வினையினால்தான் நீ கீழேயிருக்கிறாய், என்னுடைய கர்ம பலந்தான் நான் மேலேயிருக்கிறேன் என்றும் இன்னும் எத்தனை வருடங்கள்தான் ஏமாற்றுவார்கள்; மக்களும் ஏமாறுவார்கள்.
குறிப்பு : மேலே என்னுடைய செல்பேசியில் எடுத்த படம். ஓவியம் தெரிந்தாலும் நான் குறிப்பிடும் வாசகம் தெளிவாகத் தெரியவில்லை. வேறு யாரிடமாவது தெளிவான படம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்