இரண்டில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறது: அரசு அறிக்கை
இந்திய மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், குழந்தைகள் மீதான வன்முறையை பற்றி முதன் முறையாக ஒரு அதிகாரப் பூர்வமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் பதினைந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி எழுதப்பட்ட இந்த அறிக்கையை படிக்க கொஞ்சம் மனதில் தெம்பு வேண்டும்.
1) பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பெரும்பான்மையான குழந்தைகள் பாலியல் அல்லது உடலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் எனக்கூறுகிறது இந்த அறிக்கை.
2) இந்த அறிக்கையின் படி 76% குழந்தைகள் உடல்(Physical) வன்முறைக்கு ஆளாகின்றனர். குழந்தைகளை அடித்து கண்டிப்பது இந்தியாவில் பரவலாக உள்ள மோசமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கலாச்சாரம். அதனால் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை எனலாம். ஆனால் இது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.
3) அறிக்கையில் அதிகம் அதிர்ச்சி தருவது, பாலியல் வன்முறைகள் பற்றிய முடிவுகள். இரண்டில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகிறது என்பது திகைக்க வைக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைப் பொருத்தவரை, இந்திய சமூகத்தின் அனுகுமுறை, "இது ஒரு மேற்கத்திய நாட்டு பிரச்சனை, குடும்ப விழுமங்கள் அதிகம் மதிக்கப்படும் இங்கு இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை" என்ற போக்கிலேயே, இருந்துள்ளது. ஆனால் அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களும் இந்த பிரச்சனையின் பரிமாணமும் மலைக்க வைக்கின்றன.
4) குழந்தைகளை பாலியல் முறையில் தாக்கும் கொடும்பாவிகள் பெரும்பான்மையாக குழந்தையின் உறவினராகவோ அல்லது தெரிந்தவராகவோ இருக்கிறார்கள் என்பது பொதுவாகவே சமூகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு தமிழகத்தில் நடை பெறவில்லை. தமிழக அரசு இது போன்ற ஆய்வை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மீதான எல்லாவிதமான வன்முறைகளும் கடுமையான தண்டனைக்குறிய குற்றங்களாக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனை பற்றிய சமூக பிரக்ஞை மிக குறைவாக உள்ளது. இவ்வளவு டேமேஜிங்கான ஒரு அறிக்கை வந்தும் தமிழக பத்திரிக்கைகளிலோ வலைப்பதிவுகளிலோ இது அதிகம் விவாதிக்கப் படாதது ஒரு உதாரணம். அரசும், தன்னார்வ நிறுவனங்களும் மக்கள் விழிப்புணர்ச்சி பிரச்சாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
"Study on Child Abuse: INDIA 2007" எனத் தலைப்பிடப் பட்ட இந்த அறிக்கையை இங்கே முழுதாக காணலாம். நீங்கள் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருக்கும் பட்சத்தில, சிறிது நேரம் ஒதுக்கி இந்த அறிக்கையை கட்டாயமாக படியுங்கள்.
Labels: குழந்தை, பாலியல் வன்முறை