ஜேகேவின் சில குறிப்புகள்: September 2008

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, September 08, 2008

கூகிள் செய்மதி - சலுகை விலையில் உளவு பார்த்தல்

ஜியோஐ (GeoEye1) எனும் செய்மதியை ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் செப்டம்பர் 4 அன்று விண்ணில் செலுத்தியது. ஜியோஐ இப்போழுது புவிக்கு மேலே 800 கிமீ வாட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியுள்ளது. இந்த செய்மதி அமெரிக்க இராணுவ உளவு நிறுவனமொன்றின் அடுத்தப் பார்வை (NextView) என்ற திட்டத்தின் கீழ் ஜியோஐ நிறுவனத்தினரால் 2000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது பூமியை 1.5 (41 செமீ) அடி அளவிற்கு மிகத் துள்ளியமாக படமெடுக்கும் சக்தி படைத்தது.

இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால், இந்த செய்மதியால் எடுக்கப்படும் High Resolution படங்களை வாங்கும் பிரத்யோக உரிமையை கூகிள் பெற்றுள்ளது. கூகிள் 50 செமீ resolution படங்களை பெற்று தனது கூகிள் மேப் செயலியில் பயன்படுத்தும். இதற்காக கூகிள் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை. யாஹூ, மைக்ரோசாப்ட், மேப்குவெஸ்ட் என பல வரைபட செயலிகளைத் தரும் நிறுவனங்கள் இருக்கையில் கூகிள் பிரத்யோக பயன்பாட்டு உரிமையை பெற்றுள்ளதால் மிக அதிக அளவிலான தொகையோ அல்லது முழுத்தொகையோ கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. கூகிளின் பெயரை ராக்கெட்டிலேயே எழுதியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.



இதில் என்ன விசேசம் எனக் கேட்கிறீர்களா. இந்த உளவு செய்மதி அமெரிக்காவை மட்டும் படம் எடுக்கப் போவதில்லை. இந்தியா போன்ற எல்லா நாடுகளையும்தான் படம் எடுக்கும். அதாவது அமெரிக்க உளவுத்துறை வெளிநாடுகளை துள்ளியமாக விண்ணிலிருந்து படமெடுத்து உளவு பார்க்க கூகிள் உதவுகிறது.

இதைப்பற்றி குறை சொல்ல நமக்கு ஒன்றும் இல்லைதான். நிறுவனங்களும்/மக்களும் தரும் வரிப்பணத்தில் தானே எல்லா இராணுவங்களும் இயங்குகின்றன. கூகிள் ஒரு அமெரிக்க நிறுவனமாக இருந்தால் மட்டும் இந்த வாதம் பொருந்தும். ஆனால் கூகிள் ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்த பணம் நம்மைப் போன்று வெளி நாடுகளிலிருக்கும் கூகிள் மேப் பயனர்கள் அந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் வந்த வருவாயல்லவா?. நம்மிடமிருந்த வரும் இலாபத்தால் நம்மையே உளவு பார்க்க சலுகை செய்வது போலிருக்கிறது இது.

இன்னொரு விசயம். கூகிள் அந்த படங்களைப் பெறும் முன்னர், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் அந்தப் படங்களை ஆராய்ந்து தமக்கு குந்தகம் விளைவிக்கும் படங்களை துப்புரவு செய்து விடுவார்களாம். அப்படியெனில் மற்ற நாடுகளின் இரகசிய படங்கள் அல்லது குந்தகம் விளைவிக்கத்தக்க படங்கள்? நிச்சயமாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் அவை வெளியிடப்படப் போவதில்லை என்று மட்டும் ஒரு ஊகத்தின் அடிப்படையில் என்னால் சொல்ல முடியும்.

கூகிளின் கழுகுக் கண்களுக்கு நமது அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது. ஏற்கவே ஒரு முறை கலாம் இதுபற்றி கவலை தெரிவித்தது ஞாபகம் இருக்கலாம். எத்தனை நாளைக்கு நாம் IRS ரக செய்மதிகளை வைத்து படம் போடப்போகிறோம் என்று தெரியவில்லை. MapMyIndia.com போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அமெரிக்க நிலப்பரப்பை துள்ளியமாக இந்திய அரசாங்கம் படம் பிடிக்கலாமோ?

Labels: ,

Tuesday, September 02, 2008

குரோம் உலாவி

மைக்ரோசாப்ட்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியுடன் விடிந்திருக்கும் இன்றைய தினம். மோசில்லா நிறுவனத்தின் நன்மக்களும் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். குரோம் எனும் வலை உலாவியை கூகிள் இன்று வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. குரோம் பற்றிய செய்திகளை கூகிள் வித்தியாசமான முறையில் ஒரு காமிக்ஸ் கதை வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.

குரோம் காமிக்சில் சொன்னதை கூகிள் உண்மையில் செய்திருந்தால், இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும், ஃபயர்ஃபாக்ஸுக்கும் இது ஒரு பெரிய போட்டியாக அமையும். கூகிளின் பிரபலத்தினால் குரோம் வெகு எளிதில் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படலாம். வலையின் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் கூகிள் தனது வலை சார்ந்த செயலிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உலாவிகளின் துணை தேவை. தற்போது, IE மற்றும் பயர்பாக்ஸ் போன்றவற்றின் திறனைப் பொருத்துதான் கூகிள் செயலிகளின் திறன் அமையும். உதாரணமாக ஜிமெயில், கூகிள் மேப்ஸ் போன்ற வலைச் செயலிகளில் பயன்படுத்தப் படும் AJAX நுட்பம் IEயில் ஒரு மாதிரியும் பயர்பாக்சில் வேறு ஒரு மாதிரியும் செயல்படும். அதற்கு காரணம் அந்த உலாவிகள் ஜாவாஸ்கிரிப்டின் மூலம் HTTP கோரிக்கைகளை (Request) நிறைவேற்றும் முறையை வெவ்வேறுவிதமாக செய்கின்றன. அவற்றின் திறனும் அதைச்சார்ந்து வேறுபடும்.

மூன்றாம் நிறுவணங்களின் அல்லது எதிரி நிறுவணங்களின் (மைக்ரோசாப்ட்!) உலாவிகளை நம்பியிருப்பதால், கூகிள் தான் நினைக்கும் செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக கருதுகிறது. தானே ஒரு உலாவியை வெளியிடும் பட்சத்தில், தமது வலைச் செயலிகளுக்கு தேவையான செயல்திறன்களை உலாவியில் ஏற்படுத்த முடியும். அதன் மூலம் குரோம் பயனர்களுக்கு மற்ற உலாவிகளின் பயனர்களைவிட மேலும் சிறப்பான செயல்திறன்கள் கொண்ட வலைச்செயலிகளை கூகிள் வழங்கும். மைக்ரோசாப்டின் இலாபகரமான MS-Word/Excel/Power Point போன்ற செயலிகளுக்கு சமமான ஆனால் மலிவான செயலிகளை வலையின் மூலமே கூகிள் தரும். இதன் மூலம் மைக்ரோசாப்டிற்கு பல முனைகளில் சவாலை கூகிள் குரோம் மூலம் வழங்குகிறது.

குரோமின் முக்கிய அம்சங்களாக குரோம் காமிக்சில் கூறப்படுபவை

  • புத்தம் புதிய ஜாவாஸ்கிரிப்ட் விர்சுவல் மெஷின். இது மற்றவற்றைவிட வேகமும், சிறந்த நினைவக மேலாண்மையையும்(Memory management) உடையது என்கிறார்கள்.
  • இந்த புதிய ஜாவாஸ்கிரிப்ட் விர்சுவல் மெஷினை, தற்கால வலை நுட்பங்களை கருத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.
  • ஃபயர்ஃபாக்சை போல டாபுகளுக்கு முக்கியத்துவம். ஒவ்வொரு டாபிற்கும் தனி நிரல் ஓட்டம்(Separate Process for Each Tab).
  • ஒவ்வொரு நிரல் ஓட்டமும், அஷ்டாவதனிகளைப்போல, பல செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவை
  • ஓம்னிபாக்ஸ் எனப்படும் சுட்டிக்கான பொட்டி. சுட்டிகள் மட்டுமன்றி, தேடு பொறியாகவும், புக்மார்கராகவும், பல அவதாரங்களை இது எடுக்கிறதாம்.
  • இப்படி இன்னும் பலப் பல...

இன்னும் சில மணி நேரங்களில் தரவிறக்கி ஓட்டிப்பார்த்துவிட வேண்டியது தான்.

பிகு: இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை உலகிற்கும் அறிவிக்கும் பொறுப்பு நம்மூர்காரர் சுந்தர் பிச்சைக்கு கிடைத்திருக்கிறது. இவர் கூகிளில் துணைத் தலைவர் பொருப்பில் இருக்கிறார்.

Labels: ,