ஜேகேவின் சில குறிப்புகள்: June 2009

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, June 22, 2009

ஒரு சாபம்! சில அதிர்வுகள்!

கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை மிக எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பலர் வஞ்சினத்துடன் கவிஞர் தாமரையின் கவிதையை எதிர்கொள்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அருகில் கோபக்கார சாமிகளுக்கான கோயில்கள் உள்ளன. காளி கோயில், கட்டெறும்பு அய்யனார் கோயில் என்று. ஒருவருக்கு அநீதி நேர்ந்து, எதிராளியை தட்டிக்கேட்க, அவருக்காக நீதி கேட்க, யாருமில்லை என்ற பட்சத்தில் அவர் அந்த கோயில்களுக்குச் சென்று ”படி கட்டி” அல்லது ”காசை வெட்டி” நீதி கேட்பார். இந்த சக்தி வாய்ந்த சாமிகள் மிகப் பெரிய தண்டனையை எதிரிக்கு வழங்கும் என்பது மக்களது தீவிர நம்பிக்கை. எனக்கு இறை நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தாங்க இயலாத ஆற்றாமையில், அந்த கோயிலுக்குச் சென்று ”படி கட்டினால்” தான் என்ன என்று தோன்றியது. நான் கட்டும் படி யாரிடமும் சென்று நீதியை நிலை நாட்டப்போவதில்லை என்று தெரிந்தாலும், “நான் படி கட்டிட்டேன்” என்று எல்லோரிடமும் சொல்வதற்காகவாவது அப்படிச் செய்திருக்கலாம். தெருச்சண்டையில் வீழ்த்தப்பட்ட தாய்மார்கள் மண்ணை வாரி இறைத்து “நீ நாசமாப் போவ” என்பார்களே, அது போல!

தமது சாபத்தால் உண்மையிலேயே நதிகளெல்லாம் வற்றி, கழனிகளெல்லாம் கருகி மக்கள் பசியில் மடிய வேண்டும் என்பதற்காக விடப்பட்ட சாபமல்ல அது. “தாயே” என்று பாசமுடன் அழைத்த அந்த தேசத்தை தான் எப்படி இழக்கிறேன், அந்த தேசத்தின் துரோகத்தை எப்படிச் சாடுகிறேன் என்பது தான் அக்கவிதை. தந்தையால் தொடர்ந்து பாலியல் பலவந்தம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு வளர்ந்து விவரம் தெரிய வரும் பொழுது அதுவரை அவளது தந்தை மீது வைத்திருந்து பாசமெல்லாம் வஞ்சினமாக மாறுமே அது போன்றதொரு கோபம்.

எவ்வளவு நடந்த பொழுதும் ஒரு சில தமிழரைத் தவிர பிற இந்தியர் எல்லோரும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தார்கள். இன்னும் சிலர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவர்களுக்கெல்லாம் இக்கவிதை மிக அதிர்ச்சி தரும். இது போன்று எழுதுமளவிற்கு யார் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என கர்ஜிப்பார்கள். இப்படி எழுதியவர்களை தடாவிலோ பொடாவிலோ போடவேண்டும் என்பார்கள்.ஆனால் ஒரு நொடிக்கு “எது இவளை இவ்வளவு கோபமான நிலைக்குத் தள்ளியிருக்கும்” என நினைத்தார்களென்றால் அது போதும்.

இந்தக்கவிதையை தமிழர்களைவிட பிற மொழி பேசுபவர்கள் படிக்கவேண்டும். அவர்களுக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியங்களும் தேவைப்படுகின்றனவே. அதற்காக என்னால் இயன்ற அளவிற்கு இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். முடிந்தால் தமிழ் பேசாத பிற இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels: