ஜேகேவின் சில குறிப்புகள்: November 2005

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Saturday, November 26, 2005

பனிபெய்யும்போது காரை வெளியே எடுக்காதிங்க...ப்ளீஸ்

நேற்று நடந்தது கனவு போலிருக்கிறது...

சாலை மருங்குகளில் பனியிருந்தாலும் சாலையில் இல்லை. மெலிதாக புதுப் பனி விழுகிறது. முன்னால் யாரும் இல்லை. பின்னால் வெகு தூரத்தில் வருபவர்களின் வெளிச்சப் புள்ளிகள். 55MPHல் நிதானமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். அல்லது அப்படி தோன்றுகிறது எனக்கு. இன்னும் 3 மணி நேரம் ஓட்ட வேண்டும் நண்பனின் வீட்டைச் சென்றடைய.

"Balloons!
That was your main clue for today's Geo Quiz. We were looking for a capital city in India.
Tomorrow this city will see a major business tycoon attempt to set a new world's record for highest accent in a hot air balloon. He'll have to rise 70 - thousand feet into the sky. It's all happening in the city of Mumbai. Formerly known as Bombay.
That's the answer to today's Geo Quiz. " NPRல் த வோர்ல்ட் ஓடிக் கொண்டிருந்தது.

ஓ என்ன வழுக்குவதுபோலயிருக்....

கார் வலது புறமாய் இலுத்துக் கொண்டு போகிறது. Out of control. சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. பின்பக்கம் எதோ ஒரு மரத்தை மோதியது போல் தெரிகிறது. ஒரு 40-50 அடி இலுத்துக் கொண்டுபோய் ஒரு அரைச் சுற்று சுற்றி நிலைக்கு வருகிறது. நல்ல வேலை சீட் பெல்ட் போட்டிருந்தேன். "Air Bags" வெளியேவரவில்லை.

ஒரு வினாடிக்கு குறைந்த நேரத்தில் நிதானமாகப் போய்க்கொண்டிருந்ததாய் நினைத்தக் கொண்டிருந்த நான் சாலையோர பள்ளத்தில் உடைந்து போன கண்ணாடிகளும் நெளிந்துபோன கதவுகளுமாக இருந்த காருக்குள் "ஓ ஷிட்" என்று முனங்கிக் கொண்டு, செல்போனை தேடியெடுத்து 911ஐ அழைத்து விவரம் சொல்லத் தொடங்குகிறேன்.

எனக்குப் பின்னால் வந்தவர்களில் ஒருவர் வேனை நிறுத்தி என்ன ஆனது என்று விசாரிக்கிறார்.
"Car skidded"
"Are you ok?"
"I'm Ok. Nothing happened to me"

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு 911ஐ அழைத்திருக்கிறேன் என்றும், நின்று விசாரித்தற்கு நன்றி எனக் கூறி அவருடை பயனத்தை தொடரச் சொல்லிவிட்டு, கொட்டும் பனியில், வண்ண விளக்குகளுடன் வரும் காரை எதிர்பார்த்து ஹைவே ஓரத்தில் நிற்கிறேன். வெளியில் ஏறக்குறைய -5 டிகிரி செல்சியஸ் குளிர். இருந்தாலும் எனக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. என்னைத் தாண்டிச் சென்ற ஒரு கார் நிற்கிறது. அதன் மேல் எதிர்பார்த்ததைப் போல் வண்ண விளக்குகள் எரியத்தொடங்கின.
----------
இன்று காலை நண்பன் வீட்டிற்குப் பதிலாக என் வீட்டிலேயே கண்விழித்த உடன், மேற்கண்டவை மனதில் ஓடின.

"கனவாய் இருந்தால் தேவலாம்" போலிருக்கிறது. ஆனால், நாம் நினைப்பது போலவா எல்லாம் நடக்கிறது. சரி அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இன்ஸ்யூரன்ஸ், கார் கம்பனி என பல பேருக்குப் போன் போட வேண்டும். வேலை நிறைய இருக்கிறது. நீங்களாவது பனிபெய்யும்போது காரை வெளியே எடுக்காதிங்க...ப்ளீஸ்.

Friday, November 25, 2005

BNDer ஆகுங்கள்.. வித்தியாசமாக நன்றி சொல்லுங்கள்...

இன்று நுகர்வு கலாச்சாரத் திருவிழா. அமெரிக்கா முழுவதும் மக்கள் பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனடித் தள்ளுபடி, மடலில் தள்ளுபடியென எக்கச்சக்கமாக டீல் போட்டு வாடிக்கையாளர்களை சுண்டியிளுக்கிறார்கள் கடைகாரர்கள்.

"குறைந்த விலையில் வாங்கும் வாடிக்கையாளருக்கும் அதிக அளவில் பொருட்களை விற்கும் கடைகாரருக்கும் வரி வசூலிக்கும் அரசாங்கத்திற்கும் அதன் மூலம் பொது மக்களுக்கும் நல்லது தானே. இதிலென்ன பிரச்சனை"ன்னு நீங்கள் கேட்கலாம்(கேட்காமலும் இருக்கலாம்...உங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிந்திருக்கும் பட்சத்தில்).

இந்தியாவில் இருப்பவர்களை விட அமெரிகாவில் இருப்பவர்கள் 30 மடங்கு அதிகமாக நுகர்கிறார்களாம்(அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் 60 மடங்கு நுகர்கிறார்கள்னு பட்சி சொல்லுது..ஹி ஹி). தேவைக்கதிகமாக பொருட்களை வாங்குவதும், அவற்றை வாங்குவதற்காகவே சம்பாதிப்பதும், அப்படிச் சம்பாதிப்தற்காகவே வாழ்வதுமென பல பேர் வாழ்க்கையை வீட்டில் தொலைத்துவிட்டு மால்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தவிர, உலகில் இருக்கும் இயற்கை வளங்களுக்கு ஒரு வரம்பிருக்கிறது, ஆனால் வரம்பற்ற நுகர்வு கலாச்சாரம் இருக்கும் கொஞ்ச வளத்தையும் அதிவேகதில் உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படப் போவது நாமல்ல, நம் பிள்ளைகுட்டிகளும் அவர்களோட பிள்ளைக்குட்டிகளும் தான்.

இன்னிக்கி சீப்பா கெடைக்கிற "Electronic Gizmos"ல்லாம் வாங்கம வேற என்ன செய்யிறதுன்னு கேக்குறீங்களா...

ரொம்ப ஈசியான கேள்வி, பதிலும் ஈசிதான். "Day After Thanks Giving"க்கு பதிலா "Buy Nothing Day"ன்னு ஒன்ன புதுசா வந்திருக்கு. நீங்க செய்யவேண்டியதெல்லாம் இன்னிக்கி கடைகள்ள போய் காசு செலவுபன்னாமே, குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ ஜாலியா நேரத்த செலவு பன்னனும். அவ்ளோதான். மேலதிகத் தகவலுக்கு இங்கே கிளிக்குங்கள்.

Happy Buy Nothing Day!

Monday, November 21, 2005

எனக்கு வேண்டாங்க இந்த காலடித்தடங்கள்

வெகு நாட்களுக்கு முன் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, இந்தியா அமெரிக்கா அளவிற்கு வளரனும்னா என்னல்லாம் செய்யனும் என்பது போன்ற பாதையில் பேச்சு திரும்பியது. "இந்தியா ஒரு காலத்திலும் அமெரிக்கா அளவிற்கு வளர முடியாது ஏன்னா பூமியில அந்த அளவுக்கு வளங்கள் இல்லை"ன்னு அவர் சொன்னார். பதிலுக்கு நான் "அது எப்படி நீங்க அப்படி சொல்லலாம் வளர்ச்சிக்கும், வளத்துக்கம் சம்பந்தம் இல்லை. ஜப்பானப் பாருங்க அவங்களுக்கு எந்த வளமும் கிடையாது ஆனா எப்படி வளர்ந்துருக்காங்கன்னு.."ன்ற ரேஞ்சில் வரட்டு வாதம் புரிந்துகொண்டிருந்தேன். அந்த வாதத்தின் வரட்டுத் தன்மை பின்னர் புரியாத்தான் செய்தது.

அதை வலியுறுத்துவது போல் இன்று சௌமியாவின் ஆங்கில வலைப்பதிவின் மூலம் இந்த சோதனையைப் பற்றி அறியக் கிடைத்தது. சோதனை முடிவு, உலகில் எந்த அளவிற்கு உயிர்மவளம் இருக்கிறது, நான் இந்தியாவில் இருந்தபோது எவ்வளவு பயன்படுத்தினேன், அமெரிக்காவில் பயன்படுத்துகிறேன் என்றெல்லாம் பட்டியல் இட்டு நெத்தியில் அடித்தது.

என் சோதனை முடிவுகள்.

1) நான் இந்தியாவில் இருந்த போது
CATEGORY----------GLOBAL HECTARES
-------------------------------------------------
FOOD------------ -----0.3
MOBILITY-----------0.5
SHELTER-------------0.4
GOODS/SERVICES--0.3
TOTAL FOOTPRINT 1.5

IN COMPARISON, THE AVERAGE ECOLOGICAL FOOTPRINT IN YOUR COUNTRY IS 0.8 GLOBAL HECTARES PER PERSON. WORLDWIDE, THERE EXIST 1.8 BIOLOGICALLY PRODUCTIVE GLOBAL HECTARES PER PERSON.
IF EVERYONE LIVED LIKE YOU, WE WOULD NEED 1.0 PLANETS.

2) நான் அமெரிக்காவில் இருக்கும் இப்போது
CATEGORY------------ACRES
----------------------------------
FOOD-------------------- 2.5
MOBILITY------------- 2
SHELTER--------------- 4.4
GOODS/SERVICES---- 4.4
TOTAL FOOTPRINT-- 13

IN COMPARISON, THE AVERAGE ECOLOGICAL FOOTPRINT IN YOUR COUNTRY IS 24 ACRES PER PERSON. WORLDWIDE, THERE EXIST 4.5 BIOLOGICALLY PRODUCTIVE ACRES PER PERSON.

IF EVERYONE LIVED LIKE YOU, WE WOULD NEED 3 PLANETS

எல்லாம் தெரிந்த பருப்பு மாதிரி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இனிமே ஒவ்வொரு முறையும் எதையாவது வீணடிக்கும் முன் ஒன்றுக்கு இரண்டுதடவை யோசிக்கவேண்டும். Rediffல் வரும் "இந்தியா எப்ப அமெரிக்காவை முந்தும்" போன்ற கட்டுரைகளும், சும்மா எதுக்கெடுத்தாலும் GDP வளர்ச்சி, GNP வளர்ச்சின்னு அளக்கிறதும் விபரீதங்களாய்ப் படுகிறது. வளர்ச்சி என்பதன் பொருளை திருத்தி எழுதவேண்டும் போல.

Wednesday, November 09, 2005

மயன் கலாச்சாரம்:ஒரு பார்வை

ஐரோப்பிய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்குத் தப்பிய வட மற்றும் தென் அமெரிக்க பூர்வகுடியினங்கள் வெகு சிலவே. இம்மக்களின் கலாச்சாரமும் வரலாறும் நான்கைந்து நூற்றாண்டுகளில் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் அழிக்கப்பட்டுவிட்டன. பல இனங்களுக்கெதிரான இவ்வன்முறைகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்களோ. அந்த அழிந்துபோன கலாச்சாரத்திற்கு எமது சமர்ப்பனங்கள்.

"த மோட்டார் சைக்கிள் டையரி" எனும் படத்தில் "மயன்" அமெரிக்கப் பூர்வகுடியினரின் அழிந்துபோன பிரம்மாண்டமான நகரங்களையும் பெரும் பெரும் கட்டிடங்களையும் கண்பிப்பார்கள். மயன் இனத்தவரைப்பற்றி பின் நான் படித்த மேலதிகத் தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாதிமாலா, ஹூந்துராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கிமு 2600 வாக்கில் மயன் நாகரிகம் தோன்றியது. மயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மயன்இனத்தவரின் சிறப்பாகும். 150AD வாக்கில் மயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது.ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில்சுமார் 6 இலட்சம் மயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்திமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

மயன் கணிதம்

20 அடிமான எண் முறையை மயன்கள் பயன்படுத்தினர். மயன்களின் கணிதத்திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையை கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

கீழ்க்காணும் படத்தில் மயன் குறியீட்டு முறையில் எண்களைக் காணலாம்.



பெரிய எண்களைக் குறிப்பிடும் முறை



கூட்டல் முறை


மயன் கட்டிடக் கலை

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக் கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மயன் காலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.



மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுனுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.

மயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்ப்டுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சட்ங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மயன் நம்பிக்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மயன்கள் பல்வேறு வினோதமான மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர். இச் சடங்கின் போது அரசன் தன் ஆண்குறியை கீறி அதில் வரும் இரத்தத்தை எடுத்து கூடியிருக்கும் மக்களிடம் காணிபித்து பின் கடவுளிடம் பேசி அதன் அலோசனையை மக்களிடம் கூறுவானாம். அதன் பின் அவனது அடிமைகளில் ஒருவரை பலியிடுவார்களாம். அந்த அடிமைகள் பெரும்பாலும் போரில் தோற்ற அண்டை நாட்டு அரசர்களாக இருப்பார்களாம்.

இலக்கியம்/நூல்கள்
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகதிபத்தியத்துடன் வந்த அடிப்படை வாத கிருத்துவர்கள் பல மயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

கோடெக்ஸ் என்ற மயன் நூலில் இருந்து ஒரு பக்கம்


வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல் பூண்டில்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அருதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த் அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் நிலை நம்மூர் பழங்குடியினரைப் போலத்தானாம்.

மயனும் தமிழரும்
மயன் காலாச்சரத்தைப் பற்றி அறியத்தொடங்கிய போது இரு விசயங்கள் என்னைப் பாதித்தன. இவ்வளவு சிறந்து விளங்கிய கலாச்சாரம் ஏன் அழிந்து போனது என்ற கேள்வி அவற்றில் ஒன்று. "மெல்லத் தமிழினிச் சாகும்" என பாரதி வரிகளில் நம் காலாச்சார மொழி மார்டாலிட்டியை அடிக்கடி விவாதிக்கிறோம். அதற்கு ஒரு பாடப்புத்தக கேஸ் போல ஒரு மிகப் பெரிய வளர்ந்த கலாச்சாரமும் அதன் அழிவும் அது தரும் பாடங்களும். மயன் காலாச்சாரத்தின் அழிவிற்கான காரணங்களாகக் கருதப்படும் விசயங்களைப் படிதீர்களானால் தமிழ் அல்லது இந்தியக் கலாச்சாரங்கள் மனதிற்கு வருவதை தடுக்க முடியாது. இரண்டாவது விசயம், இவ்வளவு பெரிய கலாச்சாரத்தைப் பற்றி நான் இவ்வளவு காலம் அறியாமல் இருந்திருந்ததே. "மயன்" என்ற பெயரையே வெகு சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். நம் பள்ளி வரலாற்று பாடத்தில் இதைப்பற்றி ஒரு வரி இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சியையும் பிரஞ்சுப் புரட்சியையும் உலக வரலாற்றில் படிக்கச் சொன்னவர்கள் ஏன் மயன் கலாச்சாரங்களையெல்லாம் பாடத்திட்டதில் வைக்கவில்லை என்று எனக்குத் தெரியவும் புரியவும் இல்லை.

இந்தப் பதிவில் காணும் படங்கள், கீழ்க்காணும் இனைய தளங்களில் இருந்து காண்பிக்கப் படுகின்றன. படங்களின் காப்புரிமைகள் இத்தளங்களில் குறிப்பிட்ட படியே.
1) http://www.hanksville.org/yucatan/toc.html
2) http://www.snowcrest.net/goehring/maya/
3) http://www.spanishome.com/activities/mayas/1.htm

தகவல்களுக்காக

http://www.civilization.ca/civil/maya/mminteng.html என்ற தளத்தையும் மேலும் சிலவற்றையும் பயன்படுதினேன்.