சென்ற வார செய்திகளில் இரண்டு.
1) மாண்ட்ரியலில் காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்கா வழக்கம் போல சண்டித்தனம் செய்தது உட்பட எல்லாமே எதிர்பார்த்தது போலத்தான். வளர்ந்த நாடுகளுக்கான காரியமில வாயு வெளியேற்றத்திற்கான கட்டுப்பட்டை வளரும் நாடுகளும் பின் பற்ற வேண்டும் என அமெரிக்கா உட்பட சில நாடுகளின் கோரிக்கைகளுக்கு பதிலான இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் ஆண்டிமுத்து இராஜா "growth and the elimination of poverty must take precedence over mitigating the effects of climate change" எனவும் "Our emissions of CO2 are only 3% of the world's total, where we have 17% of the global population" எனவும் கூறிப்பிட்டதாக பிபிசி சொல்கிறது.
2) BMW சென்னையில் மறைமலை நகருக்கு அருகில் கார் தயரிக்கும் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதுவும், பில் கேட்ஸின் சென்னை விஜயமும் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தன என அரசும், பத்திரிக்கை கருத்துப் பத்திகளும் கதறுகின்றன... சாரி கருதுகின்றன.
இரண்டு செய்திகளுக்கும் உள்ள தொடர்பை அவதானிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. பூமியின் வரலாற்றிலேயே தற்போதுதான் வளிமண்டலத்தில் கரியமில வாயு மிக அதிகமாக உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட இந்த அபாயகரமான அதிகரிப்பிற்கான முக்கிய காரணி இருபதாம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பான ஆட்டோமொபில்ஸ். எந்த ஒரு தொலை நோக்குத் திட்டமும் இல்லாமல் இது போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில் துறைகளை வளர்ச்சியின் பெயரால் கட்டற்று ஊக்கப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைப்பற்றி யாரும் எதுவும் கேட்காதது ஆச்சரியம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகள் வெளியிடும் CO2 அளவினை கட்டுப்படுத்துவது வருமை ஒழிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்பது மிக களவானித்தனமான வாதம். கார் ஒட்டுவது, கார் தயாரிப்பது மற்றும் இன்னபிற சூழல் மாசுபடுத்தும் தொழில் துறைகளுக்கும் வறுமை ஒழிப்பிற்கும் "six degrees of seperation" மூலமாகக் கூட எதாவது சம்பந்தமிருக்குமா என எனக்குத்தெரியவில்லை. இவை அதிகபட்சம் நடுத்தர வர்க்கத்தை மேல் தட்டிற்கு இட்டுச் செல்லலாம் அவ்வளவுதான். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் இலாபத்தை அதிகப் படுத்துவதுதான் இதன் முதல் குறிக்கோள்.
குளோபல் வார்மிங் உலகைப் பாதிக்கும் எனத் திட்டமாகத் தெரிந்தாலும் எப்படிப் பாதிக்கும் என்பது இன்னம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழகம் உட்பட உலகெங்கும் அடித்த புயல்களுக்கும் பெய்த கடும் மழைகளுக்கும் குளோபல் வார்மிங் ஒரு காரணமாக இருக்கலாம் என பல வல்லுனர்கள் ஊகித்திருக்கிறார்கள். நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் வந்த ஒரு கட்டுரை, குளோபல் வார்மிங்கினால் இந்தியாவின் பருவ மழை மற்றும் கோடை வெம்மையின் உக்கிரங்கள் வெகுவாக அதிகமாகலாம் எனச் சொல்கிறது. பூமியின் சராசரி வெப்பநிலை ஓரிரு டிகிரி அதிகரித்தால்கூட கடல் மட்டமும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். கடல் மட்ட அதிகரிப்பு இந்தியா போன்ற மக்களடர்த்தி மிகுந்த நாட்டிற்கு விளைவிக்கும் சேதம் மிகக் கொடுமையாக இருக்கும். அப்புறம் சென்னையையும் மும்பையையும், நியூ ஓர்லியன்ஸ் போல லெவி வைத்துதான் காப்பாற்ற வேண்டும். நியூ ஓர்லியன்ஸ் லெவியை திருத்திக்கட்ட பல பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவில் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். சோற்றுக்கே லாட்டரி அடித்துக்கொண்டிருக்கும் இந்தியா 3000ம் மைல்களுக்கு மேற்பட்ட கடற்கரைக்கு லெவி கட்ட BMW கார் வைத்திருப்பவர்களிடம் சிறப்பு வரி வசூலிக்குமோ?
குளோபல் வார்மிங் போன்ற சூழல் சீர்கேடுகளால் வரும் பதிப்பு இந்தியர்கள் உட்பட எல்லோருக்கும்தான். அதுவும் உலகில் 17% பேர் இந்தியர்கள் என்பதைச் சொல்லும்போது, அரசாங்கம் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான் என்பதை உணரவேண்டாமா? BMW கார் தொழிற்சாலை மூலம் தான் நாங்கள் வறுமையை ஒழிக்கப் போகிறோம் என்று சும்மா பனமுதலைகளின் வரட்டு விவாதத்தை அரசாங்கமும் பிடித்துக்கொண்டு தொங்காமல் கொஞ்சமாவது தொலைநோக்கோடு திட்டமிடலாம். பொருளாதார அறிவு ஜீவிகளும் வெளிநாட்டு முதலை-ஈடுகள்தான் இந்தியாவின் வருமைக்கு ஒரே தீர்வு எனும் தாழ்வு மனப்பான்மையை கழைந்து அதைவிட சிறந்த தீர்வுகளும் இருக்கலாம் என்ற ரீதியிலாவது யோசிக்கவேண்டும்.
குஷ்பு, திருமா, சோ, கட்டம் கட்டுதல் மற்றும் வட்டம் போடுதல் பற்றியெல்லாம் நீங்கள் ஒரு கருத்து கொண்டிருக்கலாம் அல்லது கொள்ளாமலிருக்கலாம். எப்படியோ போகிற போக்கில் இதைப்பறியும் கொஞ்சம் யோசித்துவிட்டுப் போங்களேன், உங்களுக்காக அல்ல உங்கள் குழந்தை குட்டிகளுக்காக.