ஜேகேவின் சில குறிப்புகள்: June 2007

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, June 14, 2007

பட்டாம் பூச்சிகளைக் கொன்றவள்

நீ நகக்கண்ணில் முகம்பார்த்த போது
சிலிர்த்துக்கொண்டது ஒரு பட்டாம் பூச்சி

ஒரு கோடியில் தேடி உனைக்கண்ட
முகக்கண்ணில் மின்னலாய்த் தோன்றி பறந்தன சில

அரவமற்ற தெருவில் எதிர்கொண்ட போது
ஒரு நொடி மலர்ந்த உன் இதழ்களுக்காக
எத்தனை ஆயிரம் சிறகடித்திருக்கும்.

பொருளற்ற சொல்லெல்லாம் புரிந்துகொண்டு
சொல்லற்ற பொருளை மட்டும் மறந்துவிட்ட
நீ இவற்றை என்ன செய்யப்போகிறாய்

எதற்கும் கொஞ்சம் பொறு
என் பட்டாம் பூச்சிகளிடம் குட்பை
சொல்லி வைக்கிறேன்
நீ கொன்றுவிட்டால் சாகப்போவது
பட்டாம் பூச்சிகள் மட்டுமல்ல
நானும் தான்.

Wednesday, June 06, 2007

குற்றங்களும் நியாயங்களும்

ஒரு பியர் கோப்பைக்கு
முன் என் மன உறுத்தல்களை
தியானித்தேன்.
பியர் உட்பட.
குற்றங்கள் எல்லாம்
நியாயங்களாகவும்
நியாயங்கள் எல்லாம்
குற்றங்களாகவும்
பட்டன
குற்றங்களுக்கும்
நியாயங்களுக்கும்
தெளிவான வரையரை இல்லாமை
குழப்பமூட்டியது.
தீர்ந்துபோன
பியர் கோப்பை
நக்கலாய்
சிரித்தது.
குற்றங்களும் தான்.
தீர்ந்து போன பியர்
கோப்பையை குப்பையில்
போடாத குற்றம் உட்பட.

என் பக்க நியாயங்களை
நான் எங்கே தேடுவேன்.
என் பக்க குற்றங்கள்
மட்டும் எல்லா
புறங்களிலும் இருந்து சிரிக்கின்றன.

நியாயங்களே புரிந்தோரே
எனக்கு வழி சொல்லுங்கள்
உங்கள் குற்றங்களை
எங்கே தொலைத்தீர்.

குற்றங்களே புரிந்தோரே
எனக்கு வழி சொல்லுங்கள்.
உங்கள் நியாயங்களை
எங்கே பிடித்தீர்.