ஜேகேவின் சில குறிப்புகள்: March 2009

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, March 29, 2009

அதே கேள்வி... அதே பதில்...

ஆனந்த விகடன் 1-ஏப்ரல்-2009 இதழில் ’டீன் கொஸ்டீன்’ என்ற பகுதியில் ஒரு கேள்வியும் அதற்கு ஒரு ’நிபுணரின்’ பதிலும்...

கேள்வி: ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி கற்றுக்கொள்ள ஆசை. இந்தி, பிரெஞ்சு, ஜாப்பனீஸ், மலாய் என்று ஆளாளுக்கு சாய்ஸ் சொல்லி குழப்புகிறார்கள். எனக்கு பார்மசி கம்பெனியில் மார்க்கெட்டிங் பணி. எந்த மொழி கற்றுக்கொள்ளலாம் என்று வழிகாட்டுவீர்களா? - எம். ஆறுமுகம், சென்னை-45


பதில்: சித்ரா கிருஷ்ணன், தலைவர், School of English and Foreign Languages, சென்னைப் பல்கலைக்கழகம்.

சர்வதேச அளவில் ஆங்கிலம் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். இந்தியாவில் இந்தி மொழிதான் பெருவாரியான மக்கள் பேசும் மொழி. எனவே அதைக் கற்றுக்கொண்டால் இந்தியாவில் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம். உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். ஆனால் அதற்கு இங்கு டிமாண்ட் கிடையாது. எனவே, அதைக் கற்றுக் கொள்வதால் புதிய மொழியைத் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி மட்டுமே.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளி நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டால், இந்தி மொழியைக் கற்றுக் கொள்வது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Labels:

Tuesday, March 03, 2009

ஈழ ஆதரவு முன்னணி : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம்

எமது மரியாதைக்குரிய தலைவர்களே,

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க தமிழகம் ஏதாவது செய்யும் என்று உலகில் வாழும் எல்லாத் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா கதவுகளையும் தட்டிவிட்டோம், மனிதச் சங்கிலி அமைத்து மழையில் நனைந்தோம், உண்ணாதிருந்தோம், இரயில் மறித்தோம், கடையடைத்தோம், பேரணி சென்றோம், தீக் குளித்துச் செத்தும் போனோம். ஆனால் இனவெறிப்போரை நடத்துபவர்களையும், அதற்குத் துணை நிற்பவர்களையும் எங்கள் குரல் சென்றடையவேயில்லை. காரணம் தமிழனின் குரல் ஒன்றாக ஒலிக்கவில்லை. ஒரு கோடியாக ஒலித்தது. இப்போது எமது கடைசி நம்பிக்கையாக நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஆதரவு பரவலானது, ஆழமானது. இதை தொடர்ந்து வந்த பல நடுநிலைப் பத்திரிக்கைகளின் கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் காட்டியுள்ளன. ஆனால் உள்ளூர் அரசியலில் துண்டு துண்டாகச் சிதறிப்போன தமிழரின் தலைமை வெவ்வேறு கூட்டணிகளில் சேர்ந்ததன் மூலம், தமிழர்களின் ஈழ ஆதரவுக் குரல் அதிகார வர்க்கத்தை எதுவும் செய்வதில்லை.

நாஜிக்களின் பிடியில் யூதர்கள் பட்ட அவலத்திற்கும் மேலான அவலத்தை ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இன்னிலை தொடர்ந்தால், ஈழத்தில் இன்னும் சில நாட்களில் தமிழன் இருக்கமாட்டன். இந்த இன அழிப்பு நமது காலத்தில் நடைபெறுகிறது என்பதை மறவாதீர்கள். நாளைய வரலாறு இன அழிப்பு செய்தவர்களை மட்டும் தூற்றாது.அதற்குத் துணை போனவர்களையும், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தவறியவர்களையும் சேர்த்தே குற்றாவளிக் கூண்டில் நிறுத்தும். எனவே, எல்லா சுயநலன்களையும் களைந்து ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பை நிறுத்தவும், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை. அந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது உங்களின் கடமை.

தமிழர்களின் குரல் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகளின் சபைகளிலும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் நலன் கோரி எதிரொலிக்க வேண்டுமெனில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையை சிந்தாமல் சிதறாமல் தமிழர்களின் வெற்றியாக மாற்ற வேண்டும். அதற்காக உங்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஈழ ஆதரவு முன்னணியை அமைத்து போட்டியிட வேண்டுமென உரிமையுடன் வலியுறுத்துகிறோம். அம்முன்னணியின் முக்கிய வாக்குறுதிகளாக பின் வருபவை இருக்க வேண்டும்


மத்திய அரசில் பங்கேற்றால் அல்லது ஆதரவு தந்தால்,

1) இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோருவோம். இலங்கை அதற்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம். விமான, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை துண்டிப்போம். இந்தியாவின் நேச நாடுகளையும் அவ்வாறு செய்யக் கோருவோம். ஐக்கிய நாடுகள் சபையில், காமன் வெல்த் சபையில் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வருவோம்.
2) நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களின் எல்லா மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவோம்.
3) இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு “ஒருங்கிணைந்த இலங்கை” என்ற வரையறைக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவோம். தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகியோரது விருப்பத்தைக் கோரி தேர்தல் நடத்தி அதன் படியான தீர்வை முதன்மைப் படுத்துவோம்.

எதிர்க் கட்சியாக இருக்கும் பட்சத்தில்

1) ஈழத்தில் போர் நிறுத்தம் அமலாகி ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.


இவ்வாறு ஒரு தெளிவான ஈழ நிலைப்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு அலையில் உங்களது முன்னணி நாற்பது இடங்களையும் பிடிக்கும் என்பது உறுதி. அதற்காக சாமான்யர்களான நாங்கள் துணை நிற்போம். எங்களது வேலைக்கு விடுப்பு போட்டு விட்டு உங்களது வெற்றிக்கு வாக்குகள் சேகரிப்போம். இந்த இக்கட்டான நிலையில் நல்ல தலைமையை பரிதாபத்துடன் எதிர் நோக்கியிருக்கும் தமிழர்களைக் கைவிட்டு விடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
அனாதைத் தமிழன்

Labels: , , ,

ஈழ ஆதரவு முன்னணி கோரி ஆயிரம் வலைப் பதிவுகள்

அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களே,

உலகின் எந்த மனிதாபிமானக் குரலும் ஈழத்தமிழருக்காக ஒலிக்காத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைத்தான் நம்மில் பலரும் நம்பியிருந்தோம். நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும் எனவே நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்ட இன்னிலையில் ஈழ ஆதரவுக் குரல் கொடுத்த சில கட்சிகள் கூட தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழின எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயாராகிவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களின் தலையில் கொல்லி வைத்த தற்போதைய அரசிற்கு முட்டுக் கொடுத்த அதே கூட்டணியையும், இந்த அரசின் ஈழக் கொள்கையுடன் தமக்கு உடன்பாடுதான் என்று சொன்ன எதிர்க்கட்சியின் கூட்டணியையுமா மீண்டும் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

அரசியல் கட்சிகள்தான் என்ன செய்வார்கள்? ஈழத்தமிழர் நலன் முன்னிறுத்தி தேர்தல் களம் இறங்கினால் டெபாசிட் மிஞ்சாது என்பதே அவர்களது கருத்து. அதனால் கொஞ்சமேனும் குறுகுறுக்கும் மனச்சாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காலம் இதுவல்ல. இத்தருணத்தில் ஈழ ஆதரவு நிலை எடுக்காத கட்சிகள்தான் டெபாசிட் இழக்கப் போகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். அல்லது நாம் அவர்களை உணரச்செய்யவேண்டும்.

ஆனால், தலைவர்களின் தவறான கூட்டணி முடிவுகளால், ஈழ ஆதரவு வாக்குகள் பிளவு பட்டு எதிரிகளுக்கு நன்மையாகிவிடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக நம்மாலான ஒரு முயற்சியாக நாம் தமிழக அரசியல் கட்சிகளை ஈழ ஆதரவு முன்னனி அமைக்கக் கோரி ஆயிரம் வலைப்பதிவுகள் எழுதுவோம் என உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில், மற்றும் நமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் எழுதுவோம். இந்தத் தேர்தலில் வலையுலகமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய உரிமையுடன் அழைக்கிறேன்.

சுருதி குறையாமல் குரல் கொடுப்போம், உறுதி குறையாமல் போராடுவோம். தமிழீழ சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காத எந்த அரசியல் கட்சியையும் புறக்கணிப்போம்.

Labels: , , ,