வேடந்தாங்கல், கரிக்கிலி - பறவைகளுடன் ஒரு நாள்
வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் ஆரம்பித்துவிட்டதும் கடந்தவாரம் நண்பருடன் அங்கு சென்றிருந்தேன். சென்னையிலிருந்து 70கிமீ தூரத்தில் இருக்கும் வேடந்தாங்கலுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்றோம். நவம்பர் மாதத்தின் தன்மையான தட்பவெப்பநிலையின் ஒத்துழைப்பால் போகும்போது பயனம் ஓரளவிற்கு இனிமையாகவே இருந்தது. சரணாலய ஏரியில் பறவைகள் நிறைந்து காணப்பட்டன. பறவைகள் பெரும்பாலும் ஏரிக்கரையிலிருந்து தொலைவிலேயே இருக்கின்றன. எங்களிடம் தொலைநோக்கியோ ஸூம் அதிகம் கொண்ட கேமராவோ இல்லை. அதனால் பறவைகளை கூர்ந்து அவதானிக்கவோ படம் எடுக்கவோ முடியவில்லை. அடுத்த முறை நல்ல தொலைநோக்கியுடன் செல்லவேண்டும்.
ஏரிக்கரையின் நடைபாதையின் இருமருங்கிலும் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளைப்பற்றிய குறிப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிவைத்திருக்கிறார்கள். மண்வெட்டி வாயன்(Spoon Bill), பாம்பு தாரா(Darter), சாம்பல் நிற கூழைகடா(Grey Pelican), நத்தை குத்தி நாரை(Openbill Stork) போன்ற பறவைகளின் தமிழ்பெயர்கள் மிக இரசிக்கத்ததாக இருந்தன. சரணாலயத்திற்கு வெளியேயும் பறவைகள் பற்றிய பல தகவல்களை ஒரு அறையினில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
வேடந்தாங்கலைச் சுற்றிவிட்டு திரும்பும் வழியில் கரிக்கிலி என்ற மற்றொரு பறவைகள் சரணாலயத்திற்கான வழி அறிவிப்பு பலகைகளை கண்டோம்(வேடந்தாங்கலில் இருந்து உத்திரமேரூர் சொல்லும் வழியில் உள்ளது கரிக்கிலி). கரிக்கிலி சரணாலயத்தைப்பற்றி கேள்விப்படுவது அதுதான் முதல் முறை. எனவே ஒரு ஆச்சரியட்துடன் அங்கேயும் சென்றோம். எதிர்பார்த்தது போல அங்கு பார்வையாளர்கள்(வனத்துறை அதிகாரிகள் கூட) யாருமே இல்லை. ஆனால் பறவைகள் ஓரளவிற்கு இருந்தன. வேடந்தாங்கலை விட மிக அமைதியான இடம்.
கரிக்கிலியிலிருந்து உத்திரமேரூர் சென்றுவிட்டு சென்னை திரும்பினோம். போகும் போது ஒத்தாசையாக இருந்த வானம், திரும்பும் போது மழையாய் பொழிந்து தொப்பலாக நனைத்துவிட்டது