அறிவு ஜீவி மரங்களுக்கு
என்னைத் தாண்டியது
அறிவு ஜீவி மரம்
என்னிடம் இல்லை
சதுரத்தின் வளைவுகளின் தீர்க்கம்
வட்டத்தின் போக்கின் நிதானம்
எமது இருத்தலை
கூட்டலும் பெருக்கலுமா நிர்ணயிக்கும்
என் கோபங்களுக்கு நிகழ்தகவு புரிவதில்லை
அவை எப்போதும் நிகழ்பவை
உன் சொற் புனிதங்களை அழிக்கத்தான்
படை திரட்டிக் கொண்டிருக்கிறேன்
என் எதிரிகள்
அணியணியாய் வகுத்து நிற்கின்றனர்
என் அணியில்
ஒரு நிரையும் ஒரு நிரலும்
நீ மனித உரிமைகள் பேசுவது விசித்திரம்
அவ்வளவு சித்திரவதைகளை
நீ மட்டுமே செய்திருக்க முடியும்
கைதட்டல்களுக்காக நான் வாசிப்பதில்லை,
எனினும்,
கொஞ்சம் சலனங்களை
வெறுக்க முடியவில்லை
எவரது வருகைக்காகவும்
நான் பரிமாறவில்லை
எவராவது வந்தாரா
என வாயிலைப் பார்க்காமலும் இல்லை
என் தியானங்கள் என் குழப்பங்களை நோக்கியே
என் குழப்பங்கள் அத்தியானங்களிலிருந்தே
எல்லோருக்கும்
எதுவாகவாவுது தெரிகிறேன்
உனக்குமட்டும்தான்
நான் மனித வடிவிலான
வெற்றிடமாகப் படுகிறேன்
கவிதைகளை யார் கட்டிப் போட்டது?
அவை சொல் வட்டங்கட் குள்ளேயே சுற்றி வருகின்றன.
விரயமாக்கப்பட்ட இன்னொரு இரவின் முடிவில்
மற்றொன்றை எதிர்நோக்கி
சோம்பலுடன் விடியும் எதேச்சையான ஒரு காலையில்தான்
என் அடிமனது கலங்கி வெளியில் வருகிறது
யாரும் செய்து வைக்காத
இந்த சூன்யம் மிகுந்த குப்பை.
Labels: மடக்கி