"The Corporation"
டாகுமெண்டரி படங்களை காசு கொடுத்து பார்ப்பவர்கள் எல்லாம் ஒன்னு கடவுளாக இருக்க வேண்டும் அல்லது கழண்ட கேசாக இருக்க வேண்டும் என்பதே வெகு நாட்கள் வரை எனது தாழ்மையான கருத்தாக இருந்தது. சமீபத்தில் வாடகை வீடியோ கடையில் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கீழே காணும் இந்தப் படத்துடன் ஒரு DVD என் கவனத்தை ஈர்த்தது.
DVDயின் பின்குறிப்பை படித்ததில் அது ஒரு ஆவணப் படம் என்றும் அதில் மைக் மூர், சோம்ஸ்கி போன்ற பெருந்தலைகள் கூட பங்கேற்றிருக்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் சரி இதைப் பார்த்தால்தான் என்ன எனத் தோன்றியது. அப்புறம் "சரி பார்த்துவிடலாம்" என முடிவெடுத்தேன். சமீபகாலத்தில் நான் எடுத்த, என்னில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்திய, முடிவுகளில் அதுவும் ஒன்று என்பதை நான் அப்போது உணரவில்லை.
இந்த படம் நிறுவனங்களின்(Corporations) சமீபகால வளர்ச்சியையும் அவை அரசாங்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் மீது மறைமுகமாகச் செலுத்தும் அதிகாரங்களையும் ஆராய்கிறது. சென்ற நூற்றாண்டில் பல நாடுகளில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தனி ஒரு குடிமகனுக்குறிய எல்லா உரிமைகளையும் நிறுவனங்களுக்கும் தந்தன. மனிதர்களைப் போலல்லாமல் "இலாபம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட "நிறுவனங்கள்" எந்த மாதிரியான "குடிமகன்களாக" உருவெடுத்திருக்கின்றன என்பதை நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்முகங்களின் மூலம் விளக்குகிறது "த கார்ப்பரேஷன்".
சோம்ஸ்கி, மூர் தவிர பல நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் CEOக்கள், நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுணர் மற்றும் "மேலாண்மை பெரியசாமி" பீட்டர் ட்ரக்கர் போன்றோருடைய பேட்டிகளையும் இப்படத்தில் காணலாம். அவை எல்லாவற்றையும் விட எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது நம்மூர் Dr வந்தனா சிவா அவர்களின் பேட்டிதான். பாசுமதி, புளி, மஞ்சள் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட பேடண்ட்களை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்காடிவரும் குழுக்களில் இவர் முக்கிய பங்காற்றியிருக்கிறாராம்.
படத்தில் சொல்லப்படும் தகவல்கள் பெரும்பாலும் முகத்தில் அறைவது போன்ற எண்ணத்தைத்தான் என்னில் ஏற்படுத்தின. மான்சாண்டோவின் பசுமாட்டிற்கான rBGH(Bovine Growth Harmone) ஊசியைப் பற்றிய தகவலை கேட்டதிலிருந்து நான் ஆர்கானிக்(Organic) பால் மற்றும் காய்கறிகளை மட்டுமே இயன்றவரை சாப்பிட முயற்சிக்கிறேன். என்னை ஓ வென
வாயைப் பிளக்கவைத்த மற்றொரு செய்தி IBM நிறுவனத்திற்கும் ஹிட்லரின் ஹோலோகாஸ்டிற்கும் உள்ள தொடர்பை விளக்கியது. இவைபோல பலப்பல செய்திகள்...
சோசலிச பொருளாதாரச் சித்தாந்தங்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கும் எனக்கு அந்த தத்துவங்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள தூரத்தைக் காண்பதில் அவ்வப்போது ஒரு மாதிரியான disillusionment ஏற்படும். நவீன-லிபரல் பொருளாதாரக் கொள்கைகளின் மனிதாபிமானற்ற வழிகளையும்,விளைவுகளையும் இந்த ஆவணப்படத்தில் காணும்போது இச்சித்தாந்தங்கள் மட்டும் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையப்போவதில்லை என்பது மட்டுமாவது தெளிவாகிறது.
நீங்கள் வலது சார்பியோ,இடது சார்பியோ அல்லது நடுநிலைவாதியோ கதை-திரைக்கதை இல்லாத ஒரு படத்தை மூன்று மணி நேரம் பார்க்க உங்களுக்கு தெம்பிருக்குமானால் இந்தப்படம் ஏதாவது ஒரு வகையில் உங்கள் பார்வையை விசாலமாக்கும் என நான் நம்புகிறேன்.
மேலதிகத்தகவல்களுக்கான சுட்டிகள்
1) http://www.thecorporation.com/
2) வந்தனா சிவாவைப் பற்றி http://www.zmag.org/bios/homepage.cfm?authorID=90
3) வந்தனா சிவாவைப் பற்றி மேலும் http://www.google.com/search?q=Dr+Vandana+shiva