ஜேகேவின் சில குறிப்புகள்: September 2007

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, September 24, 2007

காவிப்படை + மூடநம்பிக்கை = 200 கோடி இந்தியர்கள்?

பாஜக இராமர் பெயரைச் சொல்லி மீண்டும் அரசியல் இலாபம் தேடத்துடிக்கிறது. "இந்துக்களின் உணர்வுகளை" பாதுகாப்பதை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பதாக நினைத்துக்கொள்ளும் காவிப்படைகள் உண்மையிலேயே அவர்களின் நலன்களை முன்னிருத்துமானால் "இராமர் பாலம்" போன்ற மூடநம்பிக்கை பிரச்சாரங்களை துறந்துவிட்டு பகுத்தறிவை பற்றியிருப்பார்கள்.

உயர்சாதி இந்துக்களால் சொல்லப்படும் மந்திரம்கூட

"எமை பொய்யிலிருந்து மெய்யிற்கு இட்டுச்செல்,
எமை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச்செல்"

"Lead Us From Untruth To Truth
Lead Us From Darkness To Light"

என்றுதானே சொல்கிறது.

ஆனால் காவிப்படைகள் மக்களுக்கு அதையே உல்டாவாக கற்பித்து வருகின்றன போலும். அதனால் தான் வட மாநிலங்களில் இராமர் பெயரைச்சொன்னவுடன் எல்லோருக்கும் குருதி கொப்பளிக்கிறது. அவசரமான பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. காவிப்படைகளின் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மூடநம்பிக்கை பிரச்சாரங்களின்
பிடியிலிருந்து வெளி வர இயலாமல்தான் வடக்கில் தெற்கைவிட வறுமை மிகுந்தும், கல்வியறிவு குறைந்தும் இருக்கின்றன. மக்கள் தொகை வளர்ந்து கொண்டே போகிறது.
இந்த கட்டுரையின்படி(India heading for 2 billion
population.
A new assessment of India's population prospects has concluded that its numbers will almost certainly be near 1.8 billion by 2050 and could top 2 billion by the end of this century unless fertility rates decline more rapidly in India's largest and poorest states.
), இப்பொழுதைய நிலை தொடர்ந்தால், வட
மாநிலங்களின் பங்கு காரணமாக, 2100ல் இந்திய மக்கள்தொகை 200 கோடியாக இருக்கலாம். ஏற்கனவே இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள்(இருக்க இடம், உண்ண உணவு, குடிக்க நல்ல தண்ணீர்) அற்ப சொற்பமானவை. இன்னும் 50-100 ஆண்டுகளில் அவை பாதியாக குறையப்போகின்றன.

விழித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

Labels: ,

Tuesday, September 18, 2007

புவி சூடாதல் 2: வெங்காயம் / வெங்காயத் தோல் / பகுத்தறிவு

'Ignorance is bliss'. எவ்வளவு மெய்யான கூற்று. கார், மோட்டார் சைக்கிள் போன்ற பிரத்யோக வாகனங்களின் மீது பெரும்பாலானோருக்கு ஆசையிருக்கும். எனக்கும்தான். இந்தியாவில் இருக்கும் பொழுது ஸ்ப்லெண்டர் வாங்கியபோதும் வெளிநாடு சென்றபோது கார் வாங்கியபோதும் அதீத மகிழ்ச்சி. பின்விளைவுகளை பற்றி அறிந்திருக்கவில்லை. அதனால் எந்த கவலைக்கும் இடமில்லை. பின்
புவி சூடாதலைப்பற்றி படித்துக்கொண்டிருக்கும் பொழுது தோராயமாக கணக்கிட்டு பார்த்தேன். இதுவரை ஏறக்குறைய 30000 மைல்கள் காரிலும்
15000 கிமீ மோட்டார் சைக்கிளிலும் பயனித்திருப்பேன். ஏழு ஆண்டுகளில் மொத்த கரியமில வெளியீடு ஏறக்குறைய 11808 கிலோ.

இதே போல உலகத்தில் இருக்கும் அனைவரும் கரியமிலத்தை வெளியிட்டால் இந்நேரத்திற்கு உலகம் வீனசாயிறுக்கும் என்று நினனக்கிறேன். என்னைப் போன்றோர்கள் வங்கியில் இருந்து காசை மட்டுமல்ல ஏழைகளிடம் இருந்து காற்றையும் கடன்வாங்கித்தான் கார்/மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறோம் என்று உணரும்பொழுதெல்லாம் உள்மனது குத்திக்கொண்டே இருக்கிறது. Selfish Gene says "I wish you have not poked your itchy nose into this GW stuff"

சொந்தக்கதை ஒருபுறம் இருக்கட்டும். பதிவின் தலைப்பைப் பற்றி ஒருவரி. 12000 கிமி விட்டமுள்ள பூமியின் வளிமண்டலம் 100 கிமி தடிமனானது என்றால் அதற்கென்ன என்றுதான் எல்லோரும் கேட்போம். அது எவ்வளவு fragile ஆனது என்று உடன் கண்முன் வருவதில்லை. உலகம் வெங்காயம் என்றால் வெங்காயத் தோல்தான் வளிமண்டலம். அந்த வெங்காயத் தோல்தான் 50 கோடி ஆண்டுகளாக உலகில் உயிரினங்கள் இருப்பதற்கான மிக மிக மிக மிக மிக அடிப்படையான காரணி. அதைத்தான் கடந்த வெறும் 150 ஆண்டுகளில் அதிவேகமாக மனித இனம் சீர்குழைத்து வருகிறது.

பூமியில் மனிதர்கள் தோன்றி இலட்சத்திற்கும் மேலான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கடந்த 10000 ஆண்டுகளாகத்தான் தொடர்ச்சியாக
முன்னேற்றமடைந்து வருகிறோம். ஒரு முரணாகத்தோன்றினாலும் அதற்கு காரணமும் கரியமிலம் போன்ற பைங்குடில் வாயுக்கள்தான். பல
மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உறைபனிக் காலமும்(Ice Age) - வெதுப்பான காலமும்(warm periods) மாறி மாறி நிகழ்ந்து வந்திருக்கின்றன. இது மிலன்கோவிச் சைக்கிள் எனும் தேற்றத்தால் விளக்கப்படுகிறது. அதீத குளிரினால் மனித இனம் அதிகம் முன்னேற்றம் அடைய முடியவில்லை. மிலன்கோவிச் சுழற்சியின்படி சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் வரவேண்டியிருந்த உறைபனிக் காலம் வரவில்லை. அதற்கு காரணமாக இந்த கரியமிலம்தான் கூறப்படுகிறது. அதிக அளவில் ஏற்பட்ட கரியமிலத்தினால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகமாகவிருந்து உறைபனிக்காலத்தை தவிர்த்துவிட்டது. வெதுப்பான தட்பவெப்பநிலை மனிதர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட நாகரிகங்களின் வளர்ச்சியின் உச்சியில்தான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எல்லா உயிர்களின் இயக்கத்திற்கு மூலமான ஆற்றல் சூரியனிடமிருந்துதான் வருகின்றது. பச்சையங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு உணவையும்
விறகுகளையும் படைக்கின்றன. அவற்றைக் கொண்டுதான் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இயங்குகின்றன. சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் ஆற்றலுக்கான தேவை விறகுகளைத் தாண்டி அதிகரித்த பொழுது "வெளிச்சப் புதையல்(burried sunshine)" வெளியே வந்தது. 500 மில்லியன் ஆண்டுகளாக சூரிய ஆற்றலைத் தன்னுள் தேக்கிக் கொண்டு மண்ணுல் புதையுண்ட மரங்களும் கடலுயிரிகளும் நிலக்கரியாகவும் கச்சா எண்ணையாகவும் வெளிவந்து மனிதர்களின் ஆற்றல் தாகத்தை தீர்க்க முயல்கின்றன.

தனி ஒரு மனிதனின் ஆற்றலுக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே வெளையில் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 1986ம் ஆண்டு இதில் ஒரு முக்கியமானது. அந்த ஆண்டில்தான் மனித இனத்தின் மொத்த ஆற்றல் தேவை சூரியனில் இருந்து இயல்பாக கிடைக்கும் ஆற்றலை விட அதிகமானது. இன்றையளவில் நாம் கிடைப்பதைவிட 20 சதவீதம் அதிகம் உட்கொள்கிறோம். இந்த பற்றாக்குறையை சமன் செய்வது வெளிச்சப் புதையலான கரிம எரிபொருட்கள்தான். இது ஒருபுறமிருக்க, இப்போதைய அவசர பிரச்சனை என்னவென்றால் வெளிச்சப் புதையலுடன் வெளிவரும் கரியமிலம்தான். கடந்த 150 ஆண்டுகளில் மனிதர்களின் ஆற்றல் பயன்பாடு ஏறக்குறைய 224 பில்லியன் டன்கள் கரியமிலத்தை வளியில் சேர்த்திருக்கிறது. உலக மக்கள்தொகை இன்னும் 50 ஆண்டுகளில் 9.5 பில்லியன்களாகும். மக்களின் நிலக்கரி/பெட்ரோலிய பயன்பாடும் அதிகரிக்குமாயின் கரியமில வெளியீடு பலமடங்காக உயரும். அளவிற்கு மீரினால் அமிழ்தும் நஞ்சு போல வளியில் கரியமிலத்தின் பங்கு மிக அதிகமாக இருப்பதால் அடுத்த 100 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1.1 லிருந்து 6.4°C வரை அதிகரிக்கலாம். இது மிக சிறிய மாற்றமாகத் தோன்றலாம். ஆனால் இதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாமென்றும் உயிரினங்களின் மொத்த அழிவிற்கே வழிகோளலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

வெங்காயம்+வெங்காய தோல்+மனிதன் = வெங்காய சாம்பாராகிவிடுமோ?

(தொடரும்)

Labels: ,

Friday, September 14, 2007

புவி சூடாதல்: பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும்

பீகார், அசாம், வங்காளதேசம், கானா, உகாண்டா, ஓக்ளஹோமா, பிரிட்டன் ... இந்த பகுதிகள் எல்லாம் சமீபத்தில் ஒரே காரணத்திற்காக ஊடகங்களில் அடிபட்டன. அது "வெள்ளப் பெருக்கம்".

கூகுள் செய்திகளில் "flooding" ஐ தேடிப்பாருங்கள். வட இந்தியாவில் 35 இலட்சம் பேர் வெள்ளப்பெருக்கால் இடம் பெயர்ந்தனர். இலண்டனில் மக்கள் வெள்ளத்தால் கடுப்பு, நியுயார்க்கில் மக்கள் வெள்ளத்தால் எரிச்சல். வங்க தேசத்தில் 1000பேர் வெள்ளத்தில் உயிர் இழந்தனர். இதுபோல பல செய்திகள். தினசரி இதுபோல செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது. பலருள் தானாக எழும் கேள்வி இவை புவி சூடாதலால்(குளோபல் வார்மிங்) ஏற்படும் தட்பநிலை மாற்றங்களின்(Climate Change) விளைவுகளா என்பதே. புவி சூடாகுதல் மேநாடுகளில் ஒரு சூடான விவகாரம். இந்தியாவிலோ, தமிழ் தேசங்களிலோ இன்னும் இது தலைப்புச்செய்தியாகவில்லை. வெகு நாட்களாக இதைப்பற்றி விரிவாக எழுது நினைத்திருந்தேன். சமீபத்திய தொடர் வெள்ளங்கள் அதற்கான மற்றுமொரு உந்துதலைத் தருகின்றன.

புவி சூடாதல் பற்றி இனையத்தில்(பெரும்பாலும் ஆங்கிலத்தில்) மிக எளிமையானதிலிருந்து மிக தெளிவானது வரை என்னற்ற கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன. ஆனால் தமிழகத்தையும் இந்தியாவையும் மைய்யமாகக் கொண்ட தகவல்களோ, கட்டுரைகளோ விவாதங்களோ அதிகம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கட்டுரையின் நோக்கம் புவி சூடாதல் பற்றி இந்திய அரசியல்/அறிவியல்/சமூக/பொருளாதார நிலைப்பாடுகளைப்பற்றி ஒரு சில கருத்துகளை முன்வைப்பதே.

அதற்கு முன் ஒரு புவி சூடாதலைப் பற்றி ஓரு எளிமையான அறிமுகம்

பைங்குடில் விளைவு (Green House Effect) : குளிர் பிரதேசங்களில் விவசாயம் செய்ய பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பே பைங்குடில். இதன் கூறை கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்யப்பட்டிருக்கும். இந்த கூறையின் மற்றொரு பயன்பாடு, இதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியே விடாமல் தடுப்பது. இதனால் வெளியில் வெகுவாகு குளிரடித்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம். இதுபோன்று சூரிய சக்தியை தடுத்து வெப்பநிலையை அதிகரிப்பதை பைங்குடில் விளைவு என்பர்.

வளி மண்டலம்: சுமார் 12500கிமீ விட்டமுள்ள புவியைச் சுற்றி மென்மையாக படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 100 கிமீ(அதிலும் சுவாசிக்க்கத் தகுந்த வளிமண்டலத்தின் தடிமன் வெறும் 7-8 கிமீயே). இந்த வளிமண்டலத்தில் பெரும்பான்மையாக இருப்பது நைட்ரஜன்(78%), ஆக்சிஜன்(20%), நீராவி(0 to 3%), கரியமிலம்(0.038%) மற்றும் இதர வாயுக்கள். இவற்றில் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி தன்வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்ட வாயுக்கள் பைங்குடில் வாயுக்கள்(Greenhouse Gas) எனப்படும். கரியமிலம்(அல்லது கார்பன் டை ஆக்சைடு அல்லது CO2) மீத்தேன்,ஈத்தேன், நீராவி போன்றவற்றிற்கு இத்தன்மை உண்டு. இந்த வாயுக்கள் இவற்றின் பைங்குடில் விளைவை ஏற்படுத்தும் தன்மையால் புவியின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் முக்கியமானது கரியமிலம். காரணம் வளிமண்டலத்தில் இதன் பங்கு அதிகம்.

பைங்குடில் விளைவும் தட்பவெப்பநிலை மாற்றமும்(Climate Change) : புவியின் வெப்பநிலைக்கும் கரியமிலத்திற்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிபாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனிஅடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த கற்றுக்குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமிலம் இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன்/ஆக்சிஜன் isotope களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வரையப்பட்ட படம் கீழே.







எப்பொழுதெல்லாம் வளியில் கரியமிலத்தின் பங்கு மிக குறைந்திருக்கிறதோ அப்பொழுது Ice Age எனப்படும் மிகக் குளிரான வெப்பநிலைய நிலவியிருக்கிறது.

பொதுவாக இயற்கையின் மறு சுழற்சி காரணமாக வளிமண்டலத்தில் கரியமிலத்தின் பங்கு ஓரளவிற்கு சீராக இருக்கும்(சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலாவது). அதாவது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் கரியமில வாயுவை சுவாசதின்போது வெளியிடுகின்றனர். மரங்கள் கரியமிலத்தை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது போல பல முறைகளால் கரியமிலம் உட்கொள்ளப்படுகிறது. இதனால் ஒரு சமநிலை நிலவுகிறது(நிலவி வந்தது எனச் சொல்ல வேண்டும்).

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த இந்த பைங்குடில் வாயுக்களின், முக்கியமாக கரியமிலத்தின், சீர்நிலை கடந்த 150 ஆண்டுகளாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. நிலக்கரியையும், பெட்ரோலிய எண்ணைகளையும் இயந்திரங்களின் எரிபொருளாக ஏறக்குறைய 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இவை எரியும்போது அதிகம் வெளிவருவது கரியமிலமும் நீராவியும். ஒரு கிலோ(1.3 லிட்டர்)பெட்ரோலை எரிக்கும் பொழுது ஏறக்குறைய 3.17 கிலோ கரியமில வாயு வெளிவருகிறது. இந்த கரிம எரிபொருள்களின் பயன்பாடும் அதன் விளைவாக வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவும் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இயந்திரமயமாக்கலுக்கு முன் சுமார் 270ppm ஆக இருந்த கரியமில்த்தின் பங்கு 1960 ல் 313ppm ஆகவும் 2005 ல் 375ppm ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புவியின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக (0.74 ± 0.18 °C ) பெரும்பான்மையான அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.


கரியமிலத்தின் பங்கு இதேபோல தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் வரும் நூறு ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 1.1 லிருந்து 6.4 °C வரைஅதிகரிக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

இவ்வாறு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதன் பக்கவிளைவுகள் என்ன. அவற்றின் விலை என்ன. இதை தடுக்க முடியுமா அல்லது எப்படித் தடுப்பது, யார் தடுப்பது என்பதில்தான் எக்கச்சக்கமான கருத்துகளும் எதிர்கருத்துகளும் நிலவி வருகின்றன.

(தொடரும்)
படங்கள் உபயம் - http://www.globalwarmingart.com

Labels: ,