ச. பாலமுருகனின் இந்த நாவல் அன்மையில் படித்தவற்றில் என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. சமூக, கலாச்சார, அரசியல் ஏகாதிபத்தியத்தால் நாம் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர்களும் கூட என்பதை வருத்தத்துடன் உணரச் செய்கிறது இப்புதினம். "என் பெயராலும் இப்படி ஒரு அரச வன்முறை நிகழ்ந்திருக்கிறது" என நினைக்கும் பொழுது கூனிக் குறுக வேண்டியிருக்கிறது.
தமிழக-கர்நாடக வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சோளகர். அவர்கள் வசிக்கும் தொட்டிகளில் ஒன்றே சோளகர் தொட்டி. வனத்தை "ஜடைசாமியாகவும், மாதேஸ்வரன் சாமியாகவும்" தெய்வங்களாக வணங்கி நீதிக்கும் நியாத்திற்கும் அந்தக் கடவுள்களை மட்டுமே எதிர்ந்நோக்கியிருக்கும் ஒரு அப்பாவித்தனம் மிக்க கூட்டம். அவர்கள் "வீரப்பன் வேட்டையில்" சிக்கி எப்படி சீரழிக்கப் பட்டார்கள் என்பதை மிக எளிமையான, அதே சமயம் வலி மிகுந்த நடையில் புதினமாகத் தீட்டியிருக்கிறார் பால முருகன். புதினம் உண்மை நிகழ்வுகளின் பின்னனியில் எழுதப்படும் பொழுது அவை பல பரிமாணங்களை எடுக்கின்றன. இதுவும் அது போலவே.
முதல் பாதியில் சோளகர்களின் சமூக வாழ்க்கை முறை கதைப்போக்கில் சொல்லப் படுகிறது. சோளகர்களின் சமூக கட்டமைப்புகள் சமகால தமிழர்களினதைவிட முன்னேறியதாக உள்ளது. திருமணங்கள் புனிதமாக கருதப்பட்டாலும், விதவைகள் மறுமணம் அங்கீகரிக்கப் படுகிறது. திருமணங்களுக்கு அப்பால் உறவு ஏற்படும் பொழுது, அவையும் எல்லோருக்கும் நியாயம் கிடைக்கும்படியான தீர்வுடன் அங்கீகரிக்கப்படுகிறது. போதைப்பொருள் பழகுவதை தனிநபர்களின் விருப்புகளுக்கு விட்டுவிடுகிறார்கள். கஞ்சா புகைத்தல் கதையில் ஒரு பாத்திரமாகவே வருகிறது.
பாலப்படுகை தொட்டியில் மாதியுடன் சிவண்ணா தங்கிவிட்டது எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வாயிருந்தது. ஆனாலும், ஜவணன் அக்கறையற்றே அரசமரத்தடியில் கஞ்சா புகைத்துக் கிடந்தான். தொட்டியில் சிலர் அவனை உசுப்பிவிட, அவன் பாலப்படுகைக் கொத்தல்லியிடம் அவனது மனைவி நடத்தை பிடிக்கவில்லை. அவள் வேறு ஆடனுடன் சேர்ந்துவிட்டாள். எனவே, பரிசப்பணம் ரூபாய் ஐநூறும், தாலியும் வேண்டுமென்று நியாயம் வைத்து விட்டான்.
அந்த தொட்டியில் நியாயத்தைப் பேச தொட்டியினர் வந்திருந்த சமயம் மாதி எவ்விதத் தயக்கமுமின்றி அவளது தாலியைக் கழட்டி ஒரு வெற்றிலையில் வைத்து அவள் கணவன் ஜவணனிடம் கொடுத்துவிடும்படி பட்டக்காரனிடம் ஒப்படைத்தாள்.
ஜவணன் பரிசப்பணம் வேண்டுமென்றபோது, அவனைத் திருமண நாளிலிருந்து பராமரித்து வந்ததால் அதனைத் தர இயலாது என்று கூறினாள். அதையும் பட்டக்காரன் ஏற்றுக் கொண்டு சிவண்ணாவிடம், "மாதியையும், அவள் மகள் சித்தியையும் வைத்துக் காப்பாற்றுவாயா?” எனக் கேட்டான். சிவண்ணா அந்த தொட்டியின் மண் மீது அடித்துச் சத்தியம் செய்தான்.
அத்துடன் தொட்டியின் கூட்டம் முடிவுக்கு வந்தது.
அடுத்த நாள் மதிய வேளையில் சிவண்ணா, மாதி, சித்தி இருவருடனும், மாதி மூட்டை கட்டி வைத்திருந்த சில வீட்டுச் சாமான்களுடனும் தன் சோளக தொட்டிக்கு வந்து சேர்ந்தான். உடனடியாக தொட்டியின் கொத்தல்லிக் கிழவனைப் போய்ப் பார்த்தான். அந்த தொட்டியில் சிவண்ணாவுடன் மாதியும், சித்தியும் வாழ ஒரு படியில் ராகியை வைத்துக் கொண்டு அனுமதி கோரினான்.
கொத்தல்லி பிரச்சனை ஒரு நிலைக்கு மேல் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு வேறு ஏதுவும் பேசாமல்,
“உன் மனைவி சின்னதாயியும், மகன் ரேசண் வந்தால் என்ன சொல்வது? அதற்கு ஒரு வழி செய்திருக்கலாம்" என்றான்.
“இவளையும் இவள் மகளையும் பாலப்படுகையிலிருந்து அழைத்து வந்து விட்டேன். இவர்களுக்கு இனி என்னை விட்டால் வேறு யாருமில்லை. எனக்கும் அப்படித்தான். ஒரு வேளை இங்கே வந்து, சின்னத்தாயி இவளுடன் ஒற்றுமையாக வாழ நினைத்தால், எனக்குத் தடையில்லை. வேறு எதுவும் என்னால் முடியாது" என்றான் சிவண்ணா.
“உன் தாய் ஜோகம்மாவிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அவள் என்ன நினைக்கிறாள்...” என்று கொத்தல்லி இழுத்தான்.
“அவளுக்கு இதில் தலையிட எதுவுமில்லை. எனக்கு வேறு வழியுமில்லை. எங்களுக்கு அனுமதி கொடுங்கள்" என்றான்.
கொத்தல்லி படி ராகியைப் பெற்றுக் கொண்டு,
“யார் விருப்பத்தையும் யாரும் தடுக்க முடியாதப்பா. ஆனா ஊருக்கு ஒரு நாள் நீங்க விருந்து வச்சிடுங்க" எனக்கூறி சம்மதித்தான்.
அதே சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் நமது சமூகத்தின் ஜீன்களில் எந்த அளவிற்கு தீர்க்கமாக கலந்துவிட்டது என்பதை ஒரு சோளகப் பெண் ஒரு கீழ் நாட்டு இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவளது குடும்பத்தினரின் எடுக்கும் நிலைப்பாட்டில் ஆசிரியர் காண்பிக்கிறார்.
....ரதி கூட, ஜோகம்மாளுக்கு ஆதரவாய் இருக்க சீர்கட்டில் கூலி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். அந்த சமயம், சீர்காட்டில் உழவு டிரேக்டர் ஓட்ட கோத்தகிரியிலிருந்து வந்திருந்த சேகரன் என்பவனுடன் அவளுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பல இடங்களில் மறைவாய்ச் சந்தித்துக் கொண்டார்கள்.
....
ஜோகம்மாள் தனது மகளைப் பற்றி அறிந்து கலங்கி கொத்தல்லியிடன் சென்று, நல்ல சோளகனாய் ஒருத்தனை தனது வீட்டிற்கு சீக்கிரம் விதை தானியம் கேட்டு தன் மகளைப் பெண்பார்க்க கூட்டி வரச் சொல்லி இருந்தாள். அவன் சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். இந்த பேச்சு நடைபெற்ற அடுத்த வாரத்திலேயே அதிகாலை நேரத்தில் ரதி டிரேக்டர் ஓட்டும் சேகரனுடன் சோளகர் தொட்டியை விட்டு யாரும் அறியாமல் ஓடிப்போய் விட்டிருந்தாள்.
அதனால், ஜோகம்மாள் மிகுந்த வேதனையடைந்து தனது மகள் தன் குலத்தின் பெருமையைப் பாழ்படுத்தி விட்டதாகப் புலம்பி வந்தாள். ஆனாலும், சேகரன், ரதிக்கு ஏற்ற பையன்தான் என்றும் மனதிற்குள் கூறிக் கொண்டாள். இரண்டு வாரங்களுக்குப் பின் சேகரனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கோத்தகிரி சென்றான் ஜடையன். அங்கே சென்று சேகரன் செருப்பு தைக்கும் சாதியைச் சேர்ந்தவன் என்று அறிந்ததும், அதனை தொட்டியில் வெளிப்படுத்தினால், மற்ற சோளகர்கள் தனது குடும்பத்தை இழி பார்வை பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினான். இதையெல்லாம் மனதில் கொண்டு அவன் தங்கையிடம் அழுதும், மிரட்டியும் பலவகைகளில் எப்படியாவது அவளைப் பிரித்து தொட்டிக்கு அழைத்துக் கொண்டு போக முயற்சித்தான். ஆனால் சேகரனைப் பிரிந்து வரமுடியாது எனத் திட்டமாகக்கூறி அவனை அனுப்பினாள் ரதி.
ஜடையன் நடந்தவற்றையும் தனது மைத்துனனாக வந்தவனின் சாதியையும் ஜோகம்மாளிடம் கூறினான். அவள் அதை தொட்டிக்கு வெளிப்படுத்தி விடாதே என்று அவனை எச்சரித்தாள்.
-------
புதினத்தின் பின் பகுதியில் வீரப்பன் சந்தன கட்டை வெட்டுவதுடனும், யானைகளை வேட்டையாடுவதுடனும் கதை சூடு பிடிக்கிறது. வீரப்பனை தேடும் அதிரடிப்படையினர் வருகையால் சிறிது சிறிதாக சோளகர் வாழ்வு சீரழியத் தொடங்குகிறது. சோளகர்கள் வீரப்பனுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன் பலர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் எந்த சட்டப் பரிகாரமும் இல்லாமல் அடைத்து வைக்கப் படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள்.
கதையில் காட்டப் பட்டுள்ள சோளகர்களின் மீது, நமது அரசு, அதிரடிப்படையினர் மூலம், கட்டவிழ்த்து விட்ட வன்முறை உலகின் வேறெந்த பகுதியிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் விஞ்சி விடுவதாகவே உள்ளன. கதையின் அந்த பகுதிகளைப் படிக்கும் பொழுது சோகம் நிரம்பிய அதீதமான குற்ற உணர்வு நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
DJவின் வலைப்பதிவில் அந்த வதைமுறைகள் பற்றிய புதினத்தின் சில பகுதிகளை படிக்கலாம்.சோளகர்களை சித்திரவதைப்படுத்துவதில் அதிக பங்கு கர்நாடக அதிரடிப்படையினருக்கே இருப்பது போன்று கதையில் காண்பிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றியது.. மாதியும் அவளது மகள் சித்தியும் கர்நாடக வனப்பகுதியில் இருந்தே கைது செய்யப்படுகின்றனர். அவர்களை வைத்திருந்த முகாமில்தான் பெரும்பான்மையான் வதைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இப்படிதான் நடந்ததா அல்லது கதையில் எதேச்சையாக இப்படி அமைந்து விட்டதா எனத் தெரியவில்லை.
வீரப்பன் என்கவண்டரில் கொல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வீர தீரங்களுக்காக பல பதக்கங்கள் அளிக்கப்பட்டன. எல்லாம் சுபம். ஆனால், இந்த வேட்டையில் இடையில் மாட்டிக் கொண்டு சீரழிந்த அப்பாவிகளின் நிலைதான் இன்னும் பரிதாபமாக உள்ளது.
இந்த சமயத்தில் நடந்த பல மனித உரிமை மீறல்களை விசாரிக்க தேசிய மனித உரிமை அமைப்பு "சதாசிவம் விசாரணை கமிசன்" அமைத்தது. அந்த விசாரணைக் கமிசன் பல உரிமை மீறல்களை விசாரித்து ஆவணப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தது.
ஆனால் அதன் அறிக்கையின் மீது இதுவரை அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ( இது பற்றி அண்மைச் செய்திகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்). இது பற்றிய பாலமுருகனின் கட்டுரை -
வீரப்பன் தேடுதல் வேட்டை: அவலத்திற்குத் தீர்வு என்ன?. இன்னொரு கட்டுரை -
சாதாசிவம் கமிஷன் அறிக்கையும் காலதாமதமாகும் நிவாரணமும். தீரா நதியில் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் பிரதி, தீவு அவர்களின் பதிவில்
பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது. பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வும், உதவியும் நீதியும் பெறும் வரை நாமெல்லாம் குற்றவாளிகள்தான்.
Labels: கோபம், நூல் விமர்சனம்