பழி தீர்த்த சோனியா...சோரம் போன தமிழர்கள்.
தனது கணவரை கொன்றதற்காக, புலிகளை மிகச் சாதுரியமாக சோனியா பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். 40 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் பேரில் அமைந்த அரசின் மூலமே இதைச் சாதித்திருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. தமிழக மக்கள், கூட்டணி அரசியல் தலைவர்கள், ஏன் புலிகள் கூட இதை கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
அமைதிப்படை/ராஜிவ் கொலை எனும் படுதோல்வி நிகழ்வுகளுக்குப் பின்னர் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் எவர் சார்பாகவும் தலையிடாமல் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தது. அதன்பின்னர் வந்த நரசிம்ம ராவ், தேவகௌடா, குஜ்ரால், வாஜ்பாயி போன்றவர்களின் ஆட்சி காலகட்டத்தில் புலிகளும் அரசுத் தரப்பும் ஓரளவு சம பலத்துடன் யாரும் யாரையும் முற்றிலும் வெல்ல முடியாது என்ற நிலையிலேயே இருந்தனர். அதன் முடிவில் புலிகளின் கை ஓங்கியிருந்த தருணத்தில் போர்நிறுத்த ஒப்பந்தமும் அமலுக்கு வந்தது. அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்புலத்தில் அப்போதைய மத்திய அரசும் குறிப்பாக பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ராவும் முக்கிய பங்கு ஆற்றினர் என்பதை பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன. மேலும் உடன்படிக்கையை ஏற்பாடு செய்த நார்வே தூதர்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் தந்து அதன் ஆதரவை தக்க வைத்திருந்தார்கள்.
வாஜ்பாய் அரசிற்கு பின் வந்த மன்மோகன் சிங்-சோனியா ஆட்சிக் காலத்தில் தான் போர் நிறுத்த உடன்படிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இந்த சமயத்திலேயே கருணா பிளவும் இந்திய உளவுத்துறையினர் உதவியுடன் நடைபெற்றது. முன்னர் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த M K நாராயணனுக்கும், சிவ சங்கர் மேனனுக்கும், மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளில் முக்கியமான பதவிகள் அளிக்கப் பட்டன. இவர்களில் நாராயணன் சோனியாவிற்கு மிக நெருக்கமானவராம்.இவர்களது கடந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, புலிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் எனச் சொல்லலாம்.
இலங்கைப் பிரச்சனை மீதான அளவுக்கு அதிகமான கவனத்தினால்தான் மும்பை தாக்குதலை, உளவுத்துறை தகவல் இருந்தும், நாராயணன் கோட்டை விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் நினைவிருக்கலாம். அந்த சமயத்தில் மக்கள் அழுத்தம் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதல், துணை முதல் மந்திரிகளும் பதவி விலக நேரிட்டது. ஆனால், பதவி விலகல் கடிதத்தை நாராயணன் பிரதமருக்கு அனுப்பியும் அது ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவிற்கு சோனியாவிற்கு நாராயணனின் பணி தேவைப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நிறுத்தம் கோரி பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் பொழுதும், முக்கிய கூட்டணிக் கட்சிகள் ராஜினாமா மிரட்டல் விடுத்த பொழுதும், மத்திய அரசு போர்நிறுத்தத்தை கோரவேயில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்களின் நிலைப்பாட்டால் ஆட்சி கவிழலாம், தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிடலாம் என்ற ஆபத்துகள் இருந்த நிலையிலும் சோனியா ஒரு பேச்சிற்காகக் கூட போர் நிறுத்தத்தை வேண்டவில்லை. ஆரம்பத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு ஓவ்வாது என்று வாய்ப்பாட்டு பாடிவந்ததையும் மத்திய அரசு பின்னர் நிறுத்திக் கொண்டு விட்டது.
இன்று சிங்கள இராணுவத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கி புலிகளின் மீது தனது கணவரின் சாவிற்கான பழியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் சோனியா. ”தற்போதைய மத்திய அரசின் கடும் சிங்கள ஆதரவு/தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு, சோனியா காரணம் அல்ல. மற்ற காங்கிரஸ் தலைவர்களே காரணம்” என சிலர் வாதிடலாம். ஆனால் அந்த தலைவர்கள் நரசிம்மராவின் ஆட்சியின் போதும் இருந்தார்கள். அந்த அரசு இப்படி ஒரு தீவிர தமிழ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் பழ நெடுமாறன், இராமதாஸ் போன்ற முன்னணி ஈழ ஆதரவாளர்கள் கூட சோனியா அப்பாவி என்று கருதுவது விந்தையாக இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர் என்பதால் புலிகளின் மீதான சோனியாவின் தீவிர கோபத்தை புரிந்துகொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட பழியை தீர்ப்பதற்காக
1) இந்திய அரசின் இராணுவ உளவுத்துறை எந்திரங்கள் மற்றும் மக்களின் வரிப்பணத்தை பயன் படுத்துவது தேசத் துரோகம்.
2) புலிகளை அழிக்கிறேன் என்று ஒரு இனப் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மனிதத்திற்கு செய்யப் படும் துரோகம்.
3) நம்மைப் போன்ற சாதாரணத் தமிழர்களின் ஓட்டுகளைப் பெற்று வென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஆட்சி செய்துகொண்டு தமிழர்களின் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது நம்பிக்கைத் துரோகம்.