திபெத் விவகாரம்: இந்தியாவிற்கு சீனாவின் நோஸ்கட்
சமீபத்திய திபெத் ஆதரவு போராட்டங்களில் இந்தியா சீனாவிற்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தது. சில போராட்டங்களை தடை செய்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைது செய்திருந்தது. இருப்பினும் சீனாவிற்கு இந்தியாவின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை போலும்.
சில முக்கிய முடிவுகளின் மூலம் இந்தியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
1) புது தில்லியில் சீன தூதரகத்தின் முன் நடந்த திபெத் போராட்டங்கள் குறித்து இந்தியாவின் சீன தூதரை வரவழைத்து தமது கண்டனங்களைத் தெரிவித்தது. வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கும் நிலையில், அந்நாட்டு தூதுவர்களை இது போன்று வரவழைத்து கண்டித்ததா எனச் செய்திகள் அதிகம் வரவில்லை.
2) இந்திய-சீன வணிகத்துறை அமைச்சர்களுக்கிடையே பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த சந்திப்பை, தமது நாட்டு அமைச்சருக்கு தேதிகள் ஒத்து வரவில்லை எனக் காரணம்காட்டி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க கோரியுள்ளது. இதனால் இந்தியா லேசாக கடுப்பானது மாதிரி காட்டிக்கொண்டது.
3) திபெத் இப்பொழுது சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை பிரச்சாரம் செய்ய வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை திபெத்திற்கு சீன அரசாங்கம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியது. இதில் இந்தியா புறக்கனிக்கப்பட்டது.
4) மேலும் ஒலிம்பிக் தீபம் எடுத்துவரப்படும் பொழுது தகுந்த பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும் அப்படி பாதுகாப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் ஒலிம்பிக் தீப ஓட்ட பட்டியலில் இந்தியா ஒதுக்கி வைக்கப்படலாமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M K நாராயணனை, அவருக்கு இணையான சீன அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு "இந்தியாவின் ஆதரவை கோரியதாக" செய்திகள் தெரிவிக்கின்றன. (கோரினாரா? மிரட்டினாரா? என்பது நாராயணனுக்கே வெளிச்சம்)
ஏறக்குறைய இந்திய-சீன உறவு லேசாக ஆட்டம்காணும் அளவிற்கு வந்திருக்கிறது. தமது நெடுநாளைய கொள்கைகளை கைவிட்டு, சீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கும் பொழுதும், சீனா இவ்வளவு குதிக்கிறது. தமது பொருளாதார, இராணுவ இயந்திரத்தின் அதிவேக வளர்ச்சியால் வந்த தைரியம். தமது பாடலுக்கு இந்தியா எவ்வளவு தூரம நடணமாட வேண்டும் என சீனா நினைக்கிறதென்று தெரியவில்லை. திபெத்தியர்கள் எல்லோரையம் கைது செய்து சீனாவிடம் ஒப்படைத்தால் போதுமா? இல்லை அவர்களை நேரடியாக இங்கேயே கழுவிலேற்றிவிட வேண்டுமா? இந்திய வெளியுறவு கொள்கை மேதாவிகளுக்கே வெளிச்சம்.